எழுத்துப்பட்டறை – மும்பையில்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

கே ஆர் மணி


அ) ஒரு குட்டு
ஆ) ஒரு கதை
இ) தகவல் மற்றும் பூச்செண்டு

அ) ஒரு குட்டு

படிக்கிற சுவாரஸ்யம் மட்டுமேயான இண்டர்நெட் எழுத்து 😕
[ஞானியின் எழுத்துப்பட்டறை கருத்துக்கு எதிர்வினை. அவர் பாணியில் கொட்டு ]

பிலிப்ஸ் நிறுவனம் முதலில் ஓளிவிளக்கு போட்டவுடன் அந்த கிராமத்திலிருந்த எல்லாரும்
ஓடிப்போனார்கள். தொட்டால் செத்துபோவோம் என்று பயப்பட்டார்களாம்.*
பழைய ஊடகக்காரர்களுக்கும் அப்படிப்பட்ட மதிப்பீடுதான் இணையத்தை பற்றி.

இது ஒரு புது ஊடகத்தை பயந்துபோன பழைய ஊடக பிரகஸ்பதிகள் பார்க்கும் பார்வை.
கருத்துச்சுகந்திரம் என்பது ஏறத்தாழ முழு அளவில் இருக்கிற (தேவைக்கதிகமான
அளவு என்று கூட சிலசமயம் நினைக்கதோன்றுகிறது) மிகபிரமாண்டமாய் வளரும்
ஊடகம்தான் இணையமும், இணையம் சார்ந்த ஊடகமும். Social networking
என்று சொல்லப்படுகிற மானுட சந்திப்பு தளங்களையும் இணைய ஊடகம் என்றே
வகைப்படுத்த விரும்புகிறேன். அதிக வாசகப்பரப்பும், குறைந்த விலையில் வர்த்தக
அழுத்தமின்றி, வணிகசக்திகளின் பற்களுக்கு அதிகமாக அகப்படாமல் கருத்துக்களை
தெளிக்க, பரப்ப சிறந்த ஊடகமாக இதைத்தவிர வேறென்றுமிருப்பதாக தெரியவில்லை.
சுவாரச்சியம் உள்ளேயிழுக்க உதவினாலும் – content – எனப்படுகிற கருப்பொருளே
காலத்தை கடந்தும் வாசகனை கண்ணுன்றி படிக்க, சிந்திக்க, உறவாட, பின்னூட்ட
உதவும். இங்கு பார்வையாளர்களே பங்கேற்பாளர்கள்.

பத்திரிக்கையை விட தொலைக்காட்சிக்கு ரீச் அதிகம்.அதில் பார்வையாளர்கள் –
பார்வையாளர்களாக மட்டுமே பங்குபெற முடியும். இன்னொருவர் கருத்தை நுகர்வதோடு சரி,
என்னால் அதில் எதிர்வினையாற்றவோ, எனக்கான இடத்தை உருவாக்கு கொள்ளுதல்
என்பது இயலாத ஓன்று. ஆகவே எல்லா நமக்குத்தெரிந்த ஊடகங்களும் ஒருவிதமான
வளர்ச்சிக்குப்பிறகு தேக்கநிலையையே அடைந்துவிடுகின்றன. It can get only incremental
growth not exponential growth. சீரான மிதமான வளர்ச்சியை பார்த்தே பழக்கப்பட்ட
ஊடகங்கள் இணையத்தின் குண்டக்க மண்டக்க வளர்ச்சி முன் வாயடைத்தே நிற்கின்றன.
அதன் மிகப்பெரிய காரணமாக நான் கருதுவது Scale.

எந்த ஊடகத்தையும் அவ்வளவு வேகமாக Scale up செய்துவிடமுடியாது, இணையத்தை தவிர.
ஒரு செய்தித்தாளோ, வாராந்திரியோ தனக்கான சந்தையை தயாரித்துகொள்ள, பெருக்க எடுக்கும்
நேரத்தைவிட இணைய ஊடகத்தின் வளர்ச்சி மிகப்பெரியதாய் அமையும். அதற்கான காரணங்கள்
வெகு எளிதானவை. வணிக நோக்கமின்றி அமைக்கப்பட்டிருக்கும் Backend Infrastructure
மற்றும் வாசகர்/ இணைய மேய்பவரின் பங்கு. இதை யார் கட்டியமைக்கிறார்கள், இதற்கு பின்னான
அரசு சக்தியோ, வணிக சக்தியோ எது என்று ஆராய்ந்தால், இப்போது மற்ற ஊடகங்களைவிட
இணைய ஊடகம் கொடுத்துவைத்ததுதான் என்பது இலகுவாய் புலனாகும்.

இதன் மீது அராஜகத்தை செலுத்துவதோ, திரிப்பதோ, மறைமுகமாய் கையகப்படுத்துவதோ,
தனக்கான ஊதுகுழலாய் மாற்றுவதோ கிட்டத்தட்ட முடியாத காரியம். அது மேலும் வளர, வளர
அது பொதுத்தளமாய் மாற வாய்ப்புகள் உள்ளதே தவிர, மாற்றுவழியில் தனியுடமையாகும்
வாய்ப்புகள் குறைவு. அத்தகைய சமதளத்தில் கருத்துரிமைகள் வணிகசக்தியாலும், நிறுவனமக்காப்பட்ட
சுயநலமான அரசு சக்தியாலும் அதிகமாக பாதிப்படையாமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும்
வலிமையை அது அதன் எண்ணிக்கை பலத்தாலும், எல்லைகள் கடந்து எல்லாருக்கும் பொதுவான,
முரண்பட்ட போதிலும் மையப்புள்ளியை நோக்கி நகர்ந்தாகவேண்டிய வளரும் தலைமுறையாலும்
செழிப்படையும்.

அதுசரி, வெங்காயம் இதெல்லாம் எத்தனை நாளுக்கு, என்று பழைய ஊடக பிரகஸ்பதிகள்
முணுமுணுக்கலாம். தலை தடவிலாம். கூகுள் என்கிற வலைதளத்தின் மீது சில நிறுவனங்கள்
தங்களைப்பற்றி தவறாக தகவலை மற்றவர் போட அநுமதித்ததாக ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
இது இந்தியாவின் இணையதள சட்டத்தை உருவாக்கும் என்று இணைய வாசகர்களே
ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தாக்கரே வகையறாக்கள் சிவாஜீயை (வீர-மராட்டிய)
அவதூறாக எழுதியதாக, சித்தரித்ததாக ஓர்கூட்டின் மீதான வன்முறையை காட்டியது.
இவையெல்லாம் தாண்டியும் எவராலும் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தமுடியாத வண்ணம்,
பிரம்மராட்சனாய் வளர்ந்து வியாபித்து, நம் கருத்துக்களில் தனது பைட்களை பதிக்கும்
இந்த இணைய ஊடகம்.

* கேள்விமட்டுமேபட்டது.

**************************************

ஆ) ஒரு கதை

* நிகேதா, ஹார்சா – கருக்கலைப்புக்காக நீதிமன்ற படியேறிவர்கள். அவர்களது கரு 24வது
வாரத்தில் இதயத்தில் ஓட்டையிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்திய சட்டத்தின்படி
20வாரத்திற்குபிறகான கருக்கலைப்பு மாபெரும் குற்றம். கருக்கலைக்கும் உரிமை
பெற்றோர்களுக்கு உண்டா, இல்லையா என்கிற விவாதத்தை தொடர்ந்து எழுத்துப்பட்டறையில்
உடனே அரைமணி நேரத்தில் எழுதப்பட்ட – பதிவு. இரண்டு நிமிட நூடுல்ஸ் மாதிரி.
[ எல்லோரும் இப்படியோரு பதிவை எழுதி வாசித்தோம்.]

கரு -1 :

“சார். 44 DNAல கொஞ்சம் சிப் சேஞ்ச் பண்ணி பிட் பண்ணனும்.”
“சார். அதுல சின்ன ப்ராப்ளம் .. அதோச மிரர் DNA எத்தியோப்பியாலதான் இருக்கு”
“ஓகே.. கனெக்ட் பண்ணுங்க..”
திரை மிளிர்ந்தது. மும்பை டாக்டர் குழாம் அந்த ஜேம்ஜீன் முகம் பார்த்தது.
எத்தியோப்பியாமுகம். கறுப்பு ஆனாலும் களை.
“ஜேம்ஸ். உனக்கு எல்லாம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுவிட்டதல்லவா..
ஏதாவது பிரச்சனை உண்டா..”
“எனக்கென்ன சார்.. பிரச்சனை. என் ஓரு DNA கொடுப்பதில். என் உலகத்தோழனுக்கு
உயிர்கொடுக்க இது கூட செய்யமாட்டேனா என்ன ” யாதும் ஊரே யாவரும் கேளிர்.”
தமிழை கடித்து துப்பினான். ஆனாலும் அவன் சொல்ல சப்டைட்டில் ஆங்கிலத்தில்
ஓளிர்ந்தது.
“ஹாய்.. ஜேம்ஸ் இதெல்லாம் எப்படி படித்தாய் ” டாக்டர் மணியம்மை ஆச்சரியப்பட்டார்.
“நேற்றுதான் யூனிகோடில் ராமனுஜம் பக்கங்களை மேய்ந்துகொண்டிருந்தேன்..”
“வெரிகுட்.. நாளை நீ தூங்கும்போது DNA எடுத்துக்கொள்வோம்.. மறக்காமல் குறியில்
தங்கபஸ்பம் தடவிக்கொள். அங்கு கிடைக்குமில்லையா..”
‘Ebayல் கிடைக்கிறது. எங்களைப்போன்ற வளரும் நாடுகளின் DNAக்களுக்கு இப்போது
அதிக டிமெண்டு போல..”
மும்பை டாக்டர் குழாம் சிரித்தது. நிகேதா, ஹார்சா கொஞ்சம் ரிலாக்டாகயிருந்தார்கள்.
ஜேம்ஸ் பேண்ட் திறந்து சின்னவயர் மாட்டிக்கொண்டான்.
“பணத்தை எப்படி அனுப்ப.. ஜேம்ஸ்.. ” ஒரு டாக்டர் கேட்டார்.
“நான் இந்த உதவியை பணத்துக்காக செய்யவில்லை.. போர்களமான இலங்கைக்கோ
பாலஸ்தீனத்திற்கோ அனுப்பிவிடுங்கள் நிகேதாவையும் ஹர்சாவையும் கேட்டதாக சொல்லுங்கள் ”
திரை அணைந்தது. வயரின் மறுமுனையில் வாய்திறந்து நாளை வரப்போகும் DNAக்காக
சின்ன கண்ணாடிக்குழாய் தன்னை சூடுபடுத்திக்கொண்டது.

கரு -2 :
ச்சே. இது அநியாயம், இப்படி எல்லாமே நல்லபடியாய் அமைந்தால். நமக்கு வேலையில்லாமல்
போகலாம்..
“நாம் அதிகமாய் ஆடிவிட்டோமோ.. நமக்கான உரிமைகள் எல்லாம் பறித்து, நம்மை மறந்து..
அவர்களே அவர்களை ஆண்டுகொண்டு.. what is happening ?

கடவுளும், சாத்தானும் ‘கட்டிங் சாய்’ குடித்துக்கொண்டு மெரிண்டிரைவில் தனியாக நடந்து
போய்க்கொண்டிருந்தனர்.

கரு – 3:
“தமிழ்ச்சமூகத்திலே இது ஓன்றும் புதிதல்ல.. உலகத்தில் தோன்றிய முதல் குழந்தையை
கொன்றவனே.. தமிழந்தான். நமது இனம்பதிவுபோல எல்லாவற்றிலும் இதிலும் முன்னனியில்
நிற்கும் என்பதை பதிவுசெய்வதே நமது நோக்கம்.. இதை புறநானூற்றிலும், அகநானுற்றிலும்
தோண்டிப்பார்க்கலாம்.. நடிகைகளைத்தவிர யார் கருவழித்தாலும் அதை நாங்கள் கலாச்சாரா
அழிப்பாக பார்க்கமாட்டோம்.. உறுதியில்லா குழந்தை எப்படி அலங்காநல்லூரிலே தமிழரின்
தன்மானத்தை, வீரத்தை காட்டுவான் ? நம்மை நசுக்கி வந்த வடவரும், நம்மை பின்பற்றுகிறார்கள்
என்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறான் – தமிழன்.. ஆகவே வரும் தேர்தலிலே….

கரு -4 :
ஒரு மெளனத்தின் அலறல்
புரிகிறது உங்கள் பொருளாதாரம்
ஒரு சொட்டு மோர்-பாத்திரம்
எப்படி தயிரை எறியமுடியும் ?

உங்களின் புகைப்படங்கள்,
குவியும் வாழ்த்து அட்டைகள்
“ஸாரி” எஸ்எம்க்கள் இதையும்தாண்டி
யாருக்கு கேட்கப்போகிறது
என் மெளனத்தில் அலறல்கள்

கருவறை வரை பாயும் சட்டவரிகள்
அபிமன்யு நான்.
இந்த கருவறை குருசேத்திரத்திலே
அலைக்கழிக்கப்படுகிறேன்.

படக்கென எழுந்தான் ஹார்சா.

“கோர்ட் ஓகே சொன்னாலும் வேணாம் நிகேதா..”
“ஹாய்.. சும்மா படு.. நிறைய பேசியாச்சு..மிடியாக்கெல்லாம் யாரு பதில் சொல்றது”
தந்தைமையோடு கண்ணீர்விட்டான் ஹார்சா..

கரு – 5 :
SMS ” No problem Child is saved..Doctor”

கரு -6 :
“நிகி.. நீ சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லா.. நமக்கிருக்கிறது ஓரே பையன் ”
” பட்.. ஹார்சா. யோசிச்சு பாரு. இரண்டு தடவை ஜஜடி ட்ரை பண்ணிட்டான்.
அப்படியும்.. க்ளிக் ஆகலை.”
“அதக்காக இவ்வளவு வளர்ந்த பையனை கொல்றது. கமான்.. நிகி..”
“கவர்மெண்ட்தான் இருபதுவயது வரைக்கும் சட்டத்தை மாத்திருக்கே ”
“ஆனாலும்… நிகி.. எனக்குன்னு கொள்ளிபோடறதுக்கு..”
“டோண்ட்.. ஓர்ரி.. நான் இருக்கேன் ”
பேசிக்கொண்டே டாக்டருக்கு கிளினிக்கல் கொலை செய்ய மின்னஞ்சல் அனுப்பினாள்.
ஜேம்ஸீன் DNA மறுபடியும் எடுக்கப்பட்டது.

*************

அன்றோடு கதை முடியவில்லை. என் கதைப்படியும் கதை முடியவில்லை. அதற்கெல்லாம் தேவையில்லாமல்
இன்று பேப்பரில் குழந்தை அபார்ஸனான செய்தியை படித்தபோது, கோர்ட் கொல்லாது, தெய்வம் உடனே
கொல்லும்.. ?? கமல் தசாவதாரத்தில் சொல்வது போல் க்யாஸ் தியரி எல்லாத்துக்கும் ஏதோ ஒரு காரணம்.
ச்சை.. வாட் rubbish..

இ) ஒரு பூச்செண்டு

சுருக்கமாய் – எனது ஞாபகக் குறிப்பேட்டிலிருந்து :

கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு தனது சுயசரிதை மூலம் சில நிகழ்ச்சிகள் பகிரப்பட்டது.

அ) நான் எதற்காக எழுதுகிறேன் ?
ஆ) யாருக்காக எழுதுகிறேன் ?
இ) எந்த மதிப்பீடுகளை முன்னுறுத்தி ?
ஈ) எனது USP (Unique selling proposition) எது ?
உ) அடிப்படை விழுமியங்கள் மாறுவதேயில்லை. [இதில் விவாதத்திற்குரிய பொருளாகியது]

படம்:

எழுத்தாளன் —–> பத்திரிக்கை ( உரிமையாளர்) —— வாசகன்

ஆசிரியர் குழு விளம்பரம்

அரசு சக்தி + வணிக சக்தியும் –? கருத்து சுகந்திரத்தை பெரிதும் பாதிப்பவை.

1) கருத்துசுகந்திரமென்பது பத்திர்க்கை உரிமையாளரின் சுகந்திரமாகத்தான் பெரும்பாலுமிருக்கிறது.
2) பத்திரிக்கை துறையிலிருக்கிற சுகந்திரம் கூட தொலைக்காட்சி துறையில் இருப்பதில்லை.
வாரவாரம் வெள்ளிக்கிழமை TRP ரேட்டிங்கின் ஆப்பை தொடர்ந்து பாத்திரங்கள் சாகின்றன. பிழைக்கின்றன.
3) 90களுக்கு பிறகு பத்திரிக்கை துறை மற்றதுறை போல வெறும் வணிகத்துறைதான். இதன் விழுமியங்கள்
இறந்துவிட்டன.
4) பத்திரிக்கை எல்லா வாசகத்தளங்களையும், எதிர்த்துருவங்களையும் முன்னிறுத்துவது ?

மும்பை எழுத்தாளார்களுக்கு பட்டறையும், கலந்துரையாடலும் புது அநுபவம். நிறைய
பூச்செண்டுகளோடும், சந்தோசங்களோடும், இன்னும் நிறைய செய்யாமல் இருக்கிறோமே என்கிற
கவலையோடும், நிறைய படிக்க வேண்டும் என்கிற குற்ற உணர்வோடும் எழுத்தாளர்களை
அடுத்த தளத்திற்கு தள்ளிய ஞானிக்கு “ஓ” “ஓ”.


mani@techopt.com

Series Navigation