எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

சின்னக்கருப்பன்


காஷ்மீர் தீவிரவாதிகளான ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதிகளால் 23ஆம் தேதி மே மாதம் 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அவரது குடும்பத்தினரான பெண்களும் குழந்தைகளும் வெடி வைத்துக் கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்கு என் அஞ்சலி.

அவர்களது தியாகத்தாலும் அவர்களது வீரத்தாலுமே நான் என் குடும்பம் என் சுற்றார் என் ஊரார் என் நாடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து ஒரு முறை கூட முஃப்டி முகமது சையத் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரோடு கூட்டணி ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அமைச்சர்களும் இதுவரை ஒரு முறை கூட கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை.

இன்று மத்திய அரசாங்கத்திலும் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி செலுத்துகின்றன. இவர்கள் உயிரைக்காக்கும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் மீது என்ன அக்கறை இருக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கு ? இவர்களுக்கு நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் கலந்துகொள்ளவில்லை.

பாரதிய ஜனதா கட்சியினர் தேசப்பற்று என்று பேசினால், patriotism is the last refuge of the scoundrel என்று பேசி அவர்களை scoundrelகளாகக் காண்பிக்க நம் அறிவுஜீவிகள் தயார்.

தி ஹிந்துவும் தற்காலிகமாக ஒரே ஒரு கட்டுரையில் ‘இந்துத்வா பாஸிஸ்டாக ‘ மாறி பிரவீண் சுவாமி கட்டுரையை பிரசுரித்திருக்கிறது. வழக்கம்போல பி ராமன் இந்திய அரசியல்வாதிகள் ராணுவத்தை துச்சமாகக் கருதுவதையும் அவ்வாறு இதுவரை கருணாநிதி, வி பி சிங், குஜ்ரால் ஆகியோர் எப்படி இந்திய காவல்துறையையும் ராணுவத்தையும் அவமதித்திருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டிருக்கிறார்.

ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அமைச்சரானவுடன் தான் பாதுகாப்புப் படையினருக்கு அங்கீகாரம் தருவதில் அக்கறை காட்டினார்.

இந்தியாவின் ஜனநாயகப் பண்பைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்தியர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் ஒரு சுதந்திர அமைப்பாகவும் அதே சமயம், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் அரசியல் மற்றும் , நிர்வாக அமைப்புகளின் தலையின் கீழ் முரண்பாடில்லாமல் இயங்கிவரும் இந்திய ராணுவம் பற்றி எல்லா இந்தியர்களும் நியாயமான பெருமை கொள்ள வேண்டும்.

ஓர் அமைப்பு என்ற முறையில் சிறப்பான பணி புரிந்துவரும் ராணுவம் இந்தியாவின் பெருமைமிக்க அமைப்புகளில் ஒன்று.

இந்திய ராணுவம் சுதந்திரமடைந்த நாள் முதலாக எந்த வித அரசியல் ஆர்வங்களும் இல்லாமல், தொழில் முனைப்போடும் கடமை உணர்வோடும் எந்த அரசியல் தலைமை தனக்கு கட்டளை இட்டாலும் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதாகவும் இருந்துவருகிறது. ஆனால் இந்திய அரசியல்வாதிகளோ, தங்களுக்கு முன்னால் தவறாக ராணுவத்தைப்பயன்படுத்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்காமல், ராணுவத்தை பலிகடாவாக பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.

இந்திய ராணுவம் கூலிப்படை அல்ல. இந்தியாவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் பணியை அவர்கள் செவ்வனே செய்யாவிட்டால், நம் நாடு ஜனநாயகமும், சுதந்திரமும் பெற்ற நாடாக இருக்க முடியாது. அதற்கான உரிய மரியாதையைத் தாருங்கள். நீங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல்கோட்பாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பெருமை மிக்க இந்திய ராணுவம் நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதாலேயே நாம் இப்படி வாய்ச்சவடால் அடிக்க முடிகிறது என்பதைச் சற்றே கருத்தில் வையுங்கள்.

இந்திய ராணுவத்தினருக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்