என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

தாஜ்


என் பெயரை நான் மறந்து.
—————————————

ஏகத்திற்கும் இருள்
காலம் தவறி
இடம் பெயர்ந்து
மாட்டிக் கொண்டேன்.
வந்தவழியும் மறைய
போகும் வழியுமற்று
குன்று குழிகளின்
இடிபாடுகளில்
விழுந்தெழுந்து
குறுக்கும்
நெடுக்குமாய்
ரணம் கொண்டு விரைய
சாலை வெளிச்சத்தில்
அந்நொடிவரை
மறந்துபோயிருந்த
என் பெயர்
நினைவுக்கு வந்தது.

*****

பெயர் அழகு.
——————–

எனக்கான பெயர்களை
மறைத்து
கண் விழித்தபோது
சுற்றம் கொண்டாடிய
செல்லப் பெயரையும்
தொலைத்து
பெற்றோரும் உற்றோரும்
திருவாய் சூட்டிய சொந்தப்
பெயரையும் விடுத்து
பாட்டன் வழிவந்த பட்டப்
பெயரிலும் முகம் சுழிக்க
தலையெடுத்த நாளாய்
புனைப் பெயரில்தான்
பேருலாப் புறப்பாடு நடக்கிறது.


போதி மரம்.
——————

நடைகளினூடே
கரைந்த காலத்திற்குப்பின்
ஞான விழிப்பின் தகிப்பு.
இன்றைய இருப்பு
நேற்றைய கனவல்ல
நிகழும் பயணமும்
ஆத்ம வழியல்ல
இடையிடையே கூசிடும்
பிரகாசத்தில்
கண்கள் பூத்துவிடுகிறது.
விதைத்து காத்து
பூத்தவை நுகரும் ஆசை
பாலையில் மாய்ந்தென்ன லாபம்!
புத்தனுக்கு போதிமரம்
எனக்கு இந்த வாழ்க்கை!

******
satajdeen@gmail
www.tamilpukkal.blogspot.com

Series Navigation