இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

பாரதி மகேந்திரன்


சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை

தேவைப்படும் பொருள்கள்

பச்சரிசி – 250 கிராம்
புழுங்கல் அரிசி – 250 கிராம்
துவரம் பருப்பு – 250 கிராம்
கடலைப் பருப்பு – 250 கிராம்
பயத்தம் பருப்பு – 50 கிராம்
உடைத்த உளுத்தம் பருப்பு – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 12 (அல்லது தேவைப்படி)
பச்சை மிளகாய் – 5 (அல்லது தேவைப்படி – தவிர்க்கவும் செய்யலாம்)
பெருங்காயம் – 1 மே. க.
கறிவேப்பிலை – 3 / 4 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 4 / 5 கைப்பிடிகள் (ஆய்ந்து கழுவியது)
உப்பு – 2 மே.க. (அல்லது தேவைப்படி)

பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகிய இரண்டையும் தனித் தனியாகத் தண்ணீரில் களைந்த பின் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்த பின் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாய்க் களைந்து ஊற வைக்கவும். இவை யாவும் நசுங்குகிற பதத்துக்கு நன்றாக ஊறியதும் முதலில் மிளகாய்வற்றலுடன் புழுங்கல் அரிசியை மின் அம்மியில் போட்டு நான்கைந்து முறை சுற்றிய பின் பச்சரிசியைஅதன் மீது போட்டு அரைக்கவும். மாவு நன்றாய் மசியக் கூடாது. கர கரவென்று இட்டிலி ரவைப் பதத்துக்கு அரைபட வேண்டும். இவ்வாறு அரைத்த மாவை வழித்து வைத்தபின் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றையும் மின் அம்மியில் ஒன்றாய்ப் போட்டு முன்பு போலவே கரகரப்பாக அரைக்கவும். இவற்றை யெல்லாம் அரைக்கும் போது போதுமான தண்ணீர் விடவும். மாவுகள் கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கு அரைப்பது போல் அதிகமாய்த் தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது.அரைத்து முடித்த மாவுகளைப் பெருங்காயம், உப்புப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லி ஆகியவற்றுடன் நன்கு ஒன்றாய்க் கலக்கவும். இவ்வாறு தயாரித்த மாவை அரை அல்லது ஒரு மணி நேரம் போல் அப்படியே ஊற விடவும். பிறகு கெட்டியான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும்.

அடிக்கடி அடை தட்டிய வீடு தொடை தட்டுமென்பார்கள். (அதாவது காசு அதிகமாய்ச் செலவாகிச் சாப்பாட்டுக்குத் தாளம் போடுவார்களாம்.) எண்ணெய் குடிக்கும் பதார்த்தம் இது. அதனால் இப் பழ மொழி ஏற்பட்டு இருக்கலாம். அடைக்குத் தொட்டுக்கொள்ளச் சிலர் அவியல் செய்வார்கள். சிலருக்குத் தேன் அல்லது வெல்லம் பிடிக்கும். சிலர் இட்டிலிப் பொடி அல்ல்து தேங்காய்ச் சட்டினியையைத் தொட்டுக்
கொள்ளூவார்கள். வேறு சிலர் எதையும் தொட்டுக்கொள்ளாமல் அதன் தனிச்சுவையை ரசித்து உண்பார்கள். எல்லாமே அவரவர் விருப்பம்தான்.

mahendranbhaarathi@yahoo.com பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்