காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

லதா ராமகிருஷ்ணன்


சமீபத்தில் காரைக்கால் போக நேர்ந்த போது உலகையே உலுக்கி எடுத்த சுனாமியின் சுவடுகளை அங்கே காணக்கிடைத்து மனம் கனத்தது. புதுவையின் அடியொற்றி திருத்தமாகக் கட்டமைக்கப்பட்ட தெருக்களும்,பழம்பெருமை மிக்க கோயில்களும்,புன்சிரிப்போடு புதியவர்களை வரவேற்கும் மக்களும்,அமைதியே உருவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த கடலுமாய் கண்களையும்,மனதையும் நிறைத்த காரைக்காலைச் சேர்ந்த மூன்று சிறுகிராமங்கள் ‘கிளிஞ்சல்மேடு’, காரைக்கால்மேடு,கோட்டுச்சேரி ஆகியவை. அங்கே இன்னமும் முடிக்கப்படாத நிலையில் காணப்பட்டன சுனாமி நிவாரண வீடுகள். ‘சுனாமிப் பேரழிவிற்குப் பிறகு இரண்டு வருடங்களாகியும் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லையா…? போர்க்கால நடவடிக்கை என்று அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோமே- அது வெறும் வார்த்தை தானா…?’

சமீபத்தில் தான் நாகையில் ‘மாதா அமிர்தானந்தமாயி’ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சுனாமி நிவாரணவீடுகளைப் பயனாளிகளுக்குத் தரும் விழா நடந்தேறியது. காரைக்காலில் கண்ட இந்த மூன்று கிராமங்களில் வீடுகட்டும் பணிகள் துரிதமாக நடந்தேறி வருவதைக் காண முடிந்தது. டூதற்குபொறுப்பேற்றிருக்கும் Development Alternatives என்ற,தில்லியைத் தலைநகரமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் தரத்திற்குப் பெயர் போனது என்று கேள்வி.ப்பட்டிருக்கிறேன். என்றாலு,இந்த அளவுக்குக்காலதாமதம் ஏன்’என்ற கேள்வியும் கூடவே வந்தது. தவிர, அந்த வீடுகளின் நடுப்பகுதியிலிருந்துமுதுகெலும்பாய்த் துருத்தி நீண்டிருக்கும் இரும்புக் கம்பிகளால் முழுவீட்டையும் எப்படித் தாங்க முடியும் என்ற கேள்வியும் குடைந்தெடுத்தது.அது குறித்து அங்கே கட்டுமானப் பணியை மேற்கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள்,குறிப்பாகபெண்கள் முதலியோரிடம் கலந்துரையாடியதில் அப்பகுதிகளில் சுனாமி நிவாரண வீடுகளைக் கட்டி முடிப்பதில் ஏற்பட்டிருக்கும் காலதாமதத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடிந்ததோடு அங்கே கட்டப்பட்டு வரும் வீடுகளின் தனித்துவத்தையும், சுனாமி பாதுகாப்புத் தன்மையையும்தெரிந்து கொள்ள முடிந்தது.

மாற்று வீடுகள் இனி வரலாகும் இயற்கைச்சீற்றங்களைத் தாங்க வல்ல அளவில் அமைய வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு வழக்கமான ‘framed structures’ க்கு பதிலாக ‘load-bearing structures’ என்ற புதிய, தற்போது நிலநடுக்கம், சுநாமி முதலான இயற்கைச் சீற்ற அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய பகுதிகளில் பாதுகாப்பான கட்டுமானத் தொழில்நுட்பமாக வேகமாகப் பிரபலமாகி வரு புதிய வகை கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று கிராமங்களிலும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. நிலநடுக்கம்,சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களில் முதலில் இடிந்து நொறுங்கி சேதமுண்டாக்குவது பரண்கள் தான் என்பதால் இவ்வகை வீடுகளில் பரண்களோ,சமையலறை மேடைகளோ இல்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து பெறப்படும் ‘fly-ash blocks’ என்ற புதுவகைக் கற்களையும் இடையிடையே, தொடர்ந்த ரீதியில் தரப்பரிசோதனைக்குட்படுத்தப்படும்,உயர் ரகச் செங்கற்களையும் பயன்படுத்தி இந்தக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் பங்கேற்பு அசியம் எனத் திட்டவட்டமாகக் கருதப்பட்டு உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்டறியப்படும்அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கட்டுமானப் பணி சார்பான சில வேலை வாய்ப்புகளும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டன. ‘அறியாத தேவதையை விட அறிந்த சாத்தானே மேல்’ என்பதற்கேற்ப ‘load-bearing’ கட்டமைப்பு குறித்து மக்கள் சந்தேகங்கள் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால், இந்தக் கட்டுமானத்தின் பயன்கள், பாதுகாப்புத் தன்மை குறித்தெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்தரீதியில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதில் அவர்களுடைய சந்தேகங்கள் இன்று பெருமளவு தீர்ந்து விட்டது. என்றாலும் ஒரு சிலர் சில உள்நோக்கங்களோடு இந்த வீடுகள் குறித்த ஆதாரமற்ற புதிய புதிய சந்தேகங்களை உருவாக்கப் பிரயத்தனப்படுவதாய் வருத்தத்தோடு தெரிவித்தார்கள் தொண்டு நிறுவன ஊழியர்கள்.

‘பயனாளிகள் பட்டியல் குறித்தும் ஒரு சில வருத்தங்கள் மக்கள் மத்தியிலே நிலவுகின்றன. ஆனால், பயனாளிகள் பட்டியல் அரசாங்கத்தால் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒன்று என்று தெரிவிக்கும் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் இப்பொழுது அந்தப் பட்டியல் தொடர்பாகவும் சில முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில் இருந்த காண்ட்ராக்டர் உரிய முறையில் பணியாற்றாததும் இந்த வீடுகளின் கட்டுமானப் பணியைத் தாமதப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.இடைப்பட்ட காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. Fly-ash blocksஐக் கொண்டு கட்டப்படும் வீடுகளின் உறுதித்தன்மை பல இடங்களில் கண்கூடாகக் காணக் கிடைப்பதில் அவற்றிற்கான தேவையும் அதிகரித்து விட்டது. என்றபோதும், இன்று புதிய தலைமையின் கீழ் மேற்குறிப்பிட்ட மூன்று கிராமங்களிலும் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்தேறி வருவதைக் காண முடிந்தது. “இந்த வீடுகளின் அருமையை காலம் பறைசாற்றும்” என்று உறுதியோடு கூறுகிறார்கள் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர்களும், அதிகாரிகளும்.

  • இந்த வீடுகளின் படங்கள்

  • ramakrishnanlatha@yahoo.com

    Series Navigation

    லதா ராமகிருஷ்ணன்

    லதா ராமகிருஷ்ணன்