எட்டு நூல்கள்.

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

ருத்ரா.


எட்டு நூல்
வெளியீட்டு விழாவில்
ஏதோ
எட்டாத உயரத்து
சாளரத்தில் நின்றுகொண்டு
காக்காய் குருவிகளை
எட்டி பார்ப்பது போல்
ஏற்புரை அருளியிருக்கிறார்
ஜெயமோகன்.
எழுத்து நாகரிகத்தை
எட்டாதவை அவை.
அவரது எட்டு நூல்
ஒன்றும் எட்டுத்தொகை அல்ல.
கொஞ்சம் விட்டால்
சங்க இலக்கியத்தைக் கூட
சாக்கடையில்
வீசிவிடலாம் என்று
ஒன்பதாய்
ஒரு நூல் எழுதிவிடுவார்.
எட்டுத்தொகையை
இவரது ‘துட்டுத்தொகையாக்கி ‘
பரபரப்பாய்
இப்படி ஏதாவது எழுதினால் தான்
அகாடமிக் காரர்களின்
அங்கவஸ்திரம்
இவர்மீது விழும்.
ஏனெனில்
தமிழை இன்னும்
உயர் தனிச்செம்மொழி என்று
ஏற்றுக்கொள்ளாத தேசம்
அல்லவா இது.
சங்கப்பாடல் பற்றி
இவர் எழுதிய
சில கட்டுரைகள்
இப்படித்தான்
அவசரகோலத்தில்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன.
இன்று இவர் எழுதியதை
அவர்கள்
அன்றே ‘காப்பி யடித்து ‘
எழுதியதைப்போல் தான்
மிக முறுக்கலோடு
எழுதியிருந்தார்.
அதனால்
கலைஞர் எழுத்துக்களை
காயப்படுத்தி
காச்சு மூச்சு என்று
இவர் எழுதியதில்
ஒன்றும் வியப்பில்லை.
‘நாச்சார் மட ‘ விவகாரத்தில்
ஏதோ ஒரு தருமிக்கு
பாட்டு எழுதி கொடுத்தது போல்
யாரோ ஒருவருடைய
பேனாவுக்கு
மை ஊற்றிக் கொடுத்து
தன் முகத்தில்
மை ஊற்றிக்கொண்டவர் தானே
இவர்.
இலக்கிய மேதை ஜெயகாந்தன்
பாராட்டு பத்திரத்தில்
இவருக்கு
குடை பிடித்த போதும்,
அந்த குடையும்
கொஞ்சம் கந்தலாகத்தான்
இருந்தது.
‘விஷ்ணுபுரத்தில் ‘
அந்த இறுக்கமான
அதிரடியான
அடாவடிக் கற்பனையான
எழுத்துக்கொத்துகளில்
கதவு திறக்கப்பட முடியாமல்
சிக்கித்தான் கிடந்தது
ஜெயகாந்தன் சொன்னதைப்போல.
சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர்
ராஜேஷ் குமார் பாலகுமாரன்
என்று எல்லோரையும் வைத்து
அரைத்து பண்ணிய அவியல் அது.
எழுத்துக்கு எழுத்து
இடையே உள்ள
இடைவெளிக்குள்
ஒரு ‘உருவெளி ‘ மயக்கத்தின்
(ஹேலூசினேஷன்)
கூட்டுப்புழு தான்
அடைந்து கிடந்தது.
சன்னல் தேடிக்கொண்டிருக்கும்
அவரது மனப்புழுக்கம்
அங்கே மத்தாப்பு கொளுத்தியது.
அதனால்
அவ்வளவும் அங்கே
வெறும் இருட்டு தான்.
அவருக்குள்ளே
தான் ஒரு குமரிக்காரர்
என்ற பெருமிதம்
இருப்பதில் தப்பில்லை.
அதற்காக
மற்ற இலக்கியவாதிகள் மீது
குமுறிப்பாய்ந்து
கூர் நகம் பாய்ச்சி
பச்சை ரத்தம்
பருகத்துடிப்பது
விமரிசன நாகரிகமே இல்லை.
தனக்குள்ளே
ஒரு காழ்ப்புணர்ச்சியுள்ள
மலையாளிக்காரரை
புதைத்து
வைத்துக்கெண்டிருப்பவர் போல்
அல்லவா
புகை கக்குகிறார்.
சங்கீதக்கடல்களான
செம்மங்குடிகளும்
அரியக்குடிகளும்
நிறைகுடமாய்
நின்றிருக்க
கர்நாடக சங்கீதத்தை
வார்த்தையின்
கழைக்கூத்தாடித்தனத்தில்
வெறும் கொட்டாங்கச்சியாக்கி
அதில் நீந்திகளித்த
சுப்புடுகளின் அவதாரத்தில்
கடுப்படிக்க வந்த
இந்த
‘கடுப்புடுகளின் ‘
கர்ண கடூரத்தை
நாம் கவனிக்கத்தேவையில்லை.
இவர் எழுதிக்கொண்டிருக்கும்
‘குமரி உலா ‘
உண்மையில்
ஆச்சரியமான இடங்களின்
நிழற்பட தொகுப்பு என்பதில்
சந்தேகமேயில்லை.
பாவம்
ஃபோட்டோக்கக்களின்
அந்த ஆல்பம்
என்ன செய்யும்.
அதன் மீதும்
இவர் எழுத்துக்கள்
எச்சில் தான் துப்பியிருந்தன.
‘ஆன்மீகத்தேடல் ‘ என்று
எதையோ தேடி
மண்டை காய்ந்து
மல்யுத்தம் செய்திருந்தார்.
அவர் தீட்டிய வர்ணம்
நன்றாகவே அதில் தெரிகிறது.
அவர் யாருடைய தூரிகை
என்று நன்றாகவே புரிகிறது.
நாஞ்சில்காரர்களுக்கு தெரியும்
சர்.சி.பி
எப்படிப்பட்டவர் என்று.
சுதந்திர தீயை
அணைத்துக்காட்ட வந்த
ஒரு சிறந்த ராஜ விசுவாசி அவர்.
ஆனால்
அவர் போட்ட ‘கான்கிரீட் ‘
ரோட்டுக்காக
அந்த ‘சர் ‘ டர்பனுக்கு மேலும்
இவரும்
இன்னொரு கிரீடம்
சூட்டுகின்றார்.
அரசியலுக்காக இலக்கியம்
செய்தவர்களை
இலக்கியவாதிகள் இல்லை
என்று
காலில் போட்டு மிதிக்கும்
இவர்
சுதந்திர உணர்ச்சி எனும்
அரசியலை ஊட்டிய
மகாகவி பாரதியையும்
குப்பைத்தொட்டியில்
எறிவது தானே!
கலைஞருக்கு
துதி பாடியதாக
அந்த சிறந்த எழுத்தாளர்கள் மீது
அதிர்ச்சி அடைந்ததாய்
மூர்க்கத்தனமாய் விமர்சிக்கும்
இந்த முற்றிய எழுத்தாளர்
யாருக்கோ
துதி பாடுவது
நன்கு புலப்படுகிறது.
ஆபாசம் என்ற வார்த்தை
வெறும் ‘பாலியலை ‘ மட்டும்
குறிப்பதல்ல.
ஒரு மொழியின் உயிர்ப்பை
அதன் துடிப்பை
கொச்சைப்படுத்துவது கூட
‘மொழியியல் ஆபாசம் ‘ தான்.
புள்ளி ராஜா விளம்பரத்தில்
அந்த நோய் மறந்து போனது.
உறை மட்டுமே
ஊதப்பட்டு பூதம் ஆனது.
ஜெயமோகன் அவர்களே
உங்கள் ஏற்புரை மூலம்
நீங்களும்
‘தமிழை ஆபாசபடுத்துவது ‘
எனும் அந்த பலூனை
பெரிதாய் ஊதியிருக்கிறீர்கள்.
அறிவுஜ ‘விகள்
என்று தங்களுக்குள்
முத்திரை குத்திக்கொண்ட
நாலைந்து ஜோல்னாப்பைகளின்
தூக்காணாங் குருவிக்கூடுகளில்
தூங்குவதற்கு மட்டுமே
நூல்களை அச்சிட்டுவிட்டு
ஏதோ எரிமலைகளை
விரலிடுக்கின் சிகரெட்டுகளில்
பற்ற வைத்துவிட்டதாய்
நினைக்கும்
உங்கள்மயக்கத்தை
கலைத்துக்கொள்ளுங்கள்.
அவர் குறிப்பிடுகிற
ஆத்மீக தேடலின்
பின்னே
தொடர்ந்து தொடர்ந்து சென்றால்
அதனுடைய
கடைசி மைல்கல்
ராமகோபாலனாய்த்தான்
இருக்கும்.
இவர் எழுத்துகள்
சிந்தனைபூர்வமான நாத்திகத்தை
கொப்பளிக்கலாம்.
புத்தன் தந்த
நாத்திக வாதத்தை வைத்தே
பிரம்ம சூத்திர பாஷ்யங்களை
சங்கராச்சார்யர்கள்
முழக்கம் இடவில்லயா ?
அரசின் செங்கோல்களை யெல்லாம்
துணைக்கு
அருகில் வைத்துக்கொண்டு
எதிர்வாதங்கள் எல்லாம்
துண்டு துண்டாய் வெட்டப்பட்டு
கழுகுக்கு இரையாக
வீசப்படவில்லையா ?
விஞ்ஞான வேடமிட்ட
இவருடைய யதார்த்தமும்
தத்துவார்த்த
ஆத்மீக யாத்திரைகளும்
அப்படிப்பட்டது தான்.
சங்க இலக்கியங்களை
சித்திரம் ஆக்கினாலும்
தமிழைச் சித்திரவதை செய்து
ரகசியமாய்
அதை கழுகில் ஏற்ற
அவர் பேனாவை
கூர் தீட்டிக்கொண்டிருப்பது
தமிழுக்கே
பெரும் அபாயம் தான்.
தமிழிலக்கியம்
வெறும் சடலம் என்று
தானே வெட்டியானாகி
மண்வெட்டி
தூக்கிய படலம் தான்
இந்த எட்டு நூல்
அரங்கேற்ற விழா,
மற்றும் பேச்சாளர்களின்
இந்த ஆரோகணம்
அவரோகணம் எல்லாம்.
லா.சா.ரா புடை சூழ
கந்தர்வன் கவரிவீச
இவர் நடத்திய
நூல் வெளியீட்டு விழா
ஒரு சாதனை தான்.
பிச்சமூர்த்திகளையும்
புதுமைப்பித்தன்களையும்
வெற்றிலை போட்டு
குதப்பிக்கொண்டு
அவர்கள் மீதே
காறி உமிழவும்
தயங்காத எழுத்து வித்தகர்.
அவர்
தன்னுடைய
பன்மொழி பாண்டித்தியத்துக்கு
கட்டியம் கூறி
எச்சில் துப்ப
தமிழ் தானா கிடைத்தது.
சில தமிழ் எழுத்தாளர்களை
அவர் விமர்சித்தது
இந்த பாணியில் தான்.
வண்ண நிலவன்களும்
மேலாண்மை பொன்னுச்சாமிகளும்
தொப்பில் முகமது மீரான்களும்
தி.ஜானகிராமன்களும்
கி.ராஜநாராயணன்களும்
சு.சமுத்திரங்களும்
நுழைந்து பார்க்காத
எழுத்தின்
ருசியையும் ஆத்மாவையுமா
இவர் காட்டியிருக்கிறார் ?
எழுத்தாளர்களின்
கர்வம்
அவர்களது
சொந்தக் கிரீடம்.
அதில் நிறைய
காக்காய் இறகுகளை
சொருகிக்கொள்ளட்டும்
நமக்கு கவலைஇல்லை.
விமரிசன எழுத்தாளர்
என்றால்
அந்த கிரீடத்திற்கு அடியில்
கொம்புமா
முளைத்திருக்க வேண்டும் ?
சக எழுத்தாளர்களை
நொண்டி நாய்
வெள்ளை நாய் என்று
குரூரமாய்
உருவகப்படுத்தியதில்
அவர் இன்னமும்
‘கற் காலத்தில் ‘ தான்
இருக்கிறார்
என்பதை நன்கு காட்டுகிறது.
தன்னிடம்
ஊனமுற்ற சிந்தனையை
வைத்துக்கொண்டு
மற்றவர்களின்
மரக்கால்களைப்பிறாண்டி
இரத்தம் சுவைக்க நினைக்கும்
இந்த பூனைகளா
தமிழ் எழுத்துக்களை
உருத்திராட்சக் கொட்டைகளாக்கி
உருட்ட வந்திருப்பது ?
உள்ளத்தின்
உள்ளுக்குள்
இரண்டாய் பிளந்திருக்கும்
‘ஸ்கிசோ ஃபெர்னிய ‘ வெறியில்
உள்ளுக்குள்
தமிழைத் தாக்க வந்தவர்
வெளியே
தமிழைக் காக்க வந்தவர்போல்
தோரணங்கள் கட்டித்
தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.
மனத்தளவில்
அவர் ஒரு சக்கரநாற்காலியில்
உட்கார்ந்துகொண்டு
ஒரு சக்கரவர்த்தியின்
வேடம் போட்டுக்கொண்டிருக்கிறார்.
குலேபகாவலி காட்டுவாசிகள்
எலும்புகளை
பிடித்துக்கொண்டு
ஆடுவதைப்போல்
பேனாவை பிடித்துக்கொண்டு
ஆடுவதைத்தான்
அவரது
ஏற்புரை காட்டுகிறது.
இது பொறாமையல்ல.
அவர் குறிப்பிட்டது போல்.
‘புலமைக்காய்ச்சல் ‘ தான்.
ஆனால்
இந்தக் காய்ச்சலின்
வைரஸ் கிருமிகள்
அவரே தான்.
எட்டுக்குழந்தைகள்
ஒரே பிரசவத்தில் வந்ததைப்போல்
எட்டு நூல்கள் ஆச்சரியம் தான்.
எட்டு குழந்தைகளும்
ஒரே தலையில் அல்லவா
ஒட்டிப்பிறந்திருக்கின்றன.
வெறும் தலைக்கனம் மட்டுமே
அந்த எழுத்துக்களின்
கன பரிமாணம்.
தமிழிலக்கிய சிந்தனையாளர்களே!
உங்கள் அறிவாயுதத்தின்
மூலம் தான்
அறுவை சிகிச்சை நடக்கவேண்டும்.
அந்த குழந்தைகளும்
பிழைத்திட வேண்டும்.
‘ப்ரிக்லி பியர் ப்ரிக்லி பியர்
ஹியர் வி கோ ரவுண்ட் தி ப்ரிக்லி பியர் ‘
டி.எஸ் எலியட் தான்
இப்படி கவிதை எழுதியிருக்கிறார்.
ஜெயமோகன் அவர்களே !
கள்ளிக்காட்டுக்குள் திரியும்
‘உள்ளீடு அற்ற மனிதனாய் ‘
உலா வருவதற்கா
இந்த ஏற்புரை ஏற்பாடு.
எட்டு நூல்கள் எனும்
அந்த காகிதக்காடு
நிச்சயம் கள்ளிக்காடாக
இருக்கக்கூடாது என்று
மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.
இருப்பினும்
அடைமொழிகளை
முன்னால்
சேர்த்துக்கொள்வதால் மட்டுமே
‘ஜெய ‘மோகன்கள்
ஜெயகாந்தன்கள்
ஆகிவிட முடியாது.
***
ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation