எங்க ஊரு காதல பத்தி…

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

அ. முஹம்மது இஸ்மாயில்.


அஸ்லம் இப்போது விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான். இன்று அவன் அவனது தந்தையுடன் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறான். அவன் இந்த வெளிநாட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது. இந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக வேண்டி அவன் இடையில் ஊருக்கே செல்லாமல் தங்க வேண்டியதாக போய் விட்டது..

சாமான்கள் எல்லாம் சரி பார்த்து போட்டு(check-in) விட்டு குடிநுழைவு துறை(immigiration) பகுதிக்கு சென்று கடவுச்சீட்டில் அச்சு(பாஸ்போர்டில் chop) வாங்கி விட்டு கதவு(gate) எண்ணை பார்த்து உள்ளே சென்று விமானத்தின் உள்ளே நுழைந்து இருக்கையை பார்த்து அமர்ந்ததும் அஸ்லம் தஸ்பீஹ்(ஜெபமணி)

எடுத்து கையில் வைத்துக் கொண்டு, ‘ஃபீயமானில்லா.. தவக்கல்து அலல்லாஹ்.. ‘என்று கண்களை மூடிக் கொண்டு தஸ்பீஹில் உள்ள ஒவ்வொரு மணியாக உருட்டிக் கொண்டே வந்தான்..

அவன் இந்தியாவில் அவனது ஊரில் இருக்கும் போது நடந்த சம்பவங்கள் இப்போது நம் கண்களுக்கு முன்னால்….

அஸ்லத்தை பற்றி நான் சொல்வதற்கு முன்னால் அஸ்லத்தின் வாப்பாவை பற்றி சில வரிகளில் சொல்லி விட ஆசைப்படுகிறேன்..

அவர் பெயர் காதர் சுல்தான். காதர் சுல்தானுக்கு ஐசா நாச்சியார் என்பவருடன் திருமணம் முடிந்து அஸ்லம் என்ற குழந்தையும் இருந்தது.

அவர் தனது தந்தையின் கடையில் வேலை செய்ய வெளிநாட்டிற்கு சென்றார்.

‘பயணம் போவதற்கு முன்னாடியே கல்யாணத்தை முடிச்சிடணும் அப்ப தான் புள்ள ஒழுங்கா இருப்பான் ‘ என்று சொல்லி பெரியவர்கள் நிகாஹ் முடித்து தான் அனுப்பினார்கள்(இத்தனைக்கும் அவர் தந்தையுடன் தான் செல்கிறார்.. அப்படியிருந்தும் பயம்.. என்ன செய்வது ?).

கல்யாணம் முடிந்தால் என்ன ? இன்னொரு கல்யாணம் முடிக்க கூடாது என்றா இருக்கிறது ? அது அவர்களுக்கு தெரியவில்லை.. பாவம்..

அவர் வேலை பார்த்து வந்த நாட்டின் குடியுரிமையும் கிடைத்தது.

மனைவிக்கு கடிதம் போட்டார், ‘நீங்க இங்கே வந்துடறீங்களா புள்ள ? ‘ என்று கேட்டு.

ஆனால் ஐசாவோ, ‘நல்ல விதி.. இந்த ஊர வுட்டுட்டு நா எங்கேயும் வர்லம்மா.. ‘ என்று கூறி விட..

‘இது சரிபட்டு வராது ‘ என்று அந்த வெளிநாட்டிலேயே.. ஆமாமா.. இன்னொரு நிகாஹ் தான்.. பண்ணிக் கொண்டார்(அவரின் தந்தையின் மறைவிற்கு பிறகு).

இந்த திருமண விஷயம் ஐசாவிற்கு தெரிந்தும் அவர் ‘இது தெரிஞ்சிருந்தா நானும் அஹ கூப்டப்பவே வெளிநாட்டுக்கு போயிருந்திருப்பேனே ? ‘ என்று நாம் நினைப்பது போல் பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யவே இல்லை.

அது ஏதோ மூணாவது வீட்டில் நடந்த சம்பவம் போல் எப்பவும் போல் சாதாரணமாகத் தான் இருந்தார்.

பிசாது(புறம் பேசுதல்) சங்கத்தின் தலைவியும் ஐசாவின் தோழியுமான முத்துகனி என்பவர் ஐசாவிடம் வந்து, ‘ஏன் தோழி.. நான் கேள்விப்பட்டது நெசமா.. ? ‘ என்று கேட்டதும்..

ஐசா, ‘என்ன கேள்விப்பட்டே ? ஒன் வாயாலே தான் சொல்லேன்.. கொஞ்சம் கேப்போம்.. ‘ என்றார்..

முத்துகனி, ‘மச்சான்(ஐசாவின் கணவர்) வெளிநாட்டுல ஒரு குட்டிய பாத்தியா ஓதி சேர்த்துகிட்டாஹலாம்ல.. ஏன் தோழி நீ சும்மாவா வுட்டே.. ‘ என்றார்.

ஐசா, ‘ஒன் மச்சான்(ஐசாவின் கணவர்) கணக்குல இன்னும் ரெண்டு இருக்கு புள்ள..(அதாவது இஸ்லாமிய சட்டப்படி நான்கு திருமணம் வரை செல்லும்) மத்த மாப்புள்ள மாதுரி எஹ(காதர் சுல்தான்) ரயிலடி(மானக்கேடான செயல்கள் நடக்குமிடம்) பக்கம் ஒதுங்காம தைரியமா நிகாஹ் தானே செஞ்சுக்கிட்டாஹா.. என் மாப்புள்ள.. அதான் ஒன் மச்சான்..” என்றதும்..

முத்துகனியே மறு பேச்சு பேசாமல் வாயடைத்து போனார்..

இப்ப அஸ்லத்திடம் வந்து விடுவோம். அஸ்லம் அணிகிற வெளிநாட்டு சட்டையும், அவன் பூசுகிற ஆல்கஹால் கலந்த வாசனை திரவியமும் அவன் பணக்கார வீட்டு பிள்ளை என்று சான்றிதழ் வழங்கின. அஸ்லத்தின் கூட்டாளி மார்கள் எல்லாரும் மார்டின் சட்டை போட்ட போதே அஸ்லம் லூகி பட்டாணியும் டிம்பர் லேண்டும் போட்டு அசத்தியவன்.

அவனுக்கு பெரிய வேலை என்று ஒன்று இருந்தது. பள்ளி வகுப்பு முடிந்ததும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு போகிறவர்களையும் வருகிறவர்களையும் கிண்டலடிப்பது தான் அது.. வேறென்ன.. ?

மிதிவண்டியில் அவசரமாக யாராவது சென்றால் அவனுக்கு பிடிக்காது போலும், இதோ ஒருவர் வருகிறார்.. கவனியுங்கள் என்ன நடக்கிறது என்று ?.. அவசரமாக வரும் அவர் பெயர் மாலிம் காகா.

அஸ்லம் பதட்டத்துடன், ‘பெடல்ல காத்து இல்ல.. பெடல்ல காத்து இல்ல.. ‘ என்று கத்தினான்.

மிதிவண்டியை நிறுத்தி விட்டு அவர் சக்கரத்தை பிடித்து பார்த்து விட்டு, ‘அதானே இப்ப தானே காத்து அடிச்சேன்.. ‘ என்று கூறி விட்டு அஸ்லத்திடம் திரும்பி ‘ஏம்ப்பா.. என்ன ஒளறிக்கிட்டு இக்கிறே.. எல்லாம் காத்துலாம் ஒழுங்கா தானே இக்கிது ‘ என்றார்.

அஸ்லம், ‘நான் பெடல்ல தானே காத்து இல்லேண்டேன் வீல்லயா காத்து இல்லேண்டேன்.. ‘ என்று சொல்லி விட்டு கேலியாக சிரித்தான்.

அவ்வளவு தான் ஏதோ அவசர வேலையாக சென்று கொண்டிருந்த மாலிம் காகாவிற்கு சூடு ஏறியது..

எல்லாரும் காதை பொத்திக் கொள்ளுங்கள்.. மாலிம் காகா அந்த ஊரின் மாமுலான கேட்க கூடாத வார்த்தைகளில் ஏசுகிறார் பாருங்கள்..

‘.. .. .. .. ‘

சரி போதும், காதிலிருந்து கையை எடுத்து விடுங்கள். அவர் போய் விட்டார். இனி அவர் திரும்ப வரும் போது பார்த்துக் கொள்ளலாம்..

அதோ அவர் அதுக்குள்ள திரும்ப வருகிறாரே..!.

இப்பொழுது அஸ்லம், ‘வீல் சுத்துது.. வீல் சுத்துது.. ‘ என்றான்.

வேகமாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த அவர் வண்டியை நிறுத்தி, ‘எங்கே ? எங்கே ? ‘ என்றார்.

அஸ்லம், ‘ஏன் காகா வீல் தானே சுத்துதுண்டேன்.. வீல் சுத்தாம எப்படி சைக்கிள் ஓடுமாம்.. ? ‘ என்று மறுபடியும் அதே கேலியுடன் சிரித்தான்.

அவனை சுற்றியுள்ள சின்ன ஹராத்துகளும் கெக்கேபெக்கே என்று கேலியாக சிரித்தார்கள்.

அவன் அப்படித்தான்.. நாம என்ன செய்ய முடியும் ? மறுபடியும் காதை பொத்திக் கொள்ளவதை தவிர..

யாரையாவது பார்த்தால் ‘சவுரியமா ? ‘ என்று கேட்பது சாதாரணமாக அந்த ஊரில் வழக்கத்தில் உள்ளது தான்.

ஆனால் அஸ்லம் என்ன சொல்வான் தெரியுமா ?,

‘என்னாங்கணி.. ‘சாவு ‘ரியமா ? ‘ என்று தான் கேட்பான்.

அழகான பெண்ணை பார்த்தால் யாருக்குத் தான் பிடிக்காது ? யாரை பற்றி சொல்கிறேன் என்று தெரிகிறதா ?

நிசாமாவை பற்றித் தான்..

கண்களை விற்று கூட அந்த அழகிய ஓவியத்தை வாங்கி விட தோன்றும். அப்படி ஒரு அழகு.

நிசாமா மதரஸாவிற்கு(அரபி பாட சாலை) ஓத போகிறது என்று தான் இந்த பயலும் ஓதவே செல்வான். நிசாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான். ஆனால், நிசாமா நல்ல சாலிஹான(ஒழுக்கமான, குணவதியான) பெண். ஏழை குடும்பம் மட்டுமல்ல நல்ல ஒழுக்கமான, கட்டுபாடான இஸ்லாமிய நெறிமுறைகளை பேணி நடக்கும் நல்ல குடும்பம்.

நிசாமாவை நிறைய பேர் கல்யாணம் முடிக்க கணக்கில் வைத்து இருந்தார்கள்.

எல்லா பணக்கார பொடி பசங்களும் விளையாட்டாக பேசும் போது கூட, ‘பெரியவனான ஒடனே நிசாமவ தான் கல்யாணம் பண்ணிக்குவேன் ‘ என்பார்கள்.

‘பாப்போம்.. யாருக்கு கொடுத்து வச்சிருக்குன்னு.. ‘ என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு.

‘நிசாமா டியூஷன் போயிட்டு வரும் போது.. நீம்பர் ஏதோ நோட் புக் கொடுக்குற சாக்குல தைரியமா பேசிடுங்கணி.. ‘

‘நிசாமாவிடம் போய் நேரடியாக ‘நான் உங்களை காதலிக்கிறேன் ‘ ன்னு

சொல்லிடுங்கனி மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்.. ‘

இப்படியெல்லாம் யோசனைகள் சொல்லிக் கொடுத்தது வேறு யாருமில்லை.. நிசாமாவின் தூரத்து உறவுக்காரனும் அஸ்லத்தின் நெருங்கிய நண்பனுமான இக்பால் என்பவன் தான்.

இந்த யோசனையின் பேரில் நிசாமாவின் வருகைக்காக அஸ்லம் நண்பன் இக்பாலுடன் காத்திருந்தான்..

(இக்பால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். அவனது தந்தை தர்ஹா மார்க்கெட்டில் கடை வைத்து இருந்தார்.)

நேரம் போக்குவரத்தில் மாட்டிக் கொண்ட நகரப் பேருந்து போல் நகர்ந்து கொண்டிருந்தது..

நிசாமா வரவில்லை. மறுபடியும் மாலிம் காகா தான் வந்தார். அஸ்லத்தையும் இக்பாலையும் பார்த்ததும் மிதிவண்டியை நிறுத்தினார். இருவருக்கும் கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்து விட்டது.

‘என்ன இங்க நிக்கிறீங்க ரெண்டு பேரும்.. ? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா ஒலகம் அழிஞ்சிடுமே.. ‘ என்றார் மாலிம் காகா.

இருவரும் தடுமாறினர்.. இக்பால் சமாளித்தான், ‘இல்ல காகா.. சம்சுதீன் இல்ல.. அவன் இங்கே ஒரு சொந்தகாரஹ வூட்டுக்கு வந்தான்.. அவன பார்க்கலாம்னு தான்.. ‘ என்றான்.

‘சரி.. சரி.. இங்க ரொம்ப நேரம் நிக்காம சீக்கிரம் பாத்துட்டு போங்க.. ‘ என்று சொல்லி விட்டு சென்றார்.

‘அப்பாடா தப்பிச்சோம் ஒரு வழியாக ‘ என்று பெருமூச்சு விட்ட வேலையில்..

நிசாமா தனது தோழி ஜமிலாவுடன் வந்தாள்..

(ஜமிலா அஸ்லத்தை போலவே நல்ல பணக்கார வீட்டுப் பெண் தான்.)

அஸ்லம் மிதிவண்டியை எடுத்து ‘இக்பால் உட்காருடா ‘ என்றான்.

இக்பால் பின்னாடி உட்கார்ந்ததும் நேராக நிசாமாவை மோதுவது போல் மிதி வண்டியை கொண்டு போய் நிறுத்தினான்.

நிசாமாவும் ஜமிலாவும் பயந்து விட்டனர்.

ஜமிலா, ‘ஓய்.. பாத்து வரக் கூடாது.. உம்பர் மொஹர கட்ட பின்னாடியா இக்குது ? ‘ என்று கேட்டாள்.

நிசாமா ஒன்றும் பேசவே இல்லை..

இக்பால், ‘சொல்லுங்கணி ‘ என்றான்.

அஸ்லம் நிசாமாவிடம் சட்டென்று, ‘நிசாமா.. ஐ லவ் யூ.. ‘ என்றான்.

பொறுமை கடலான நிசாமாவிற்கே ஆத்திரம் வந்து விட்டது.., ‘என்னது.. செருப்பால அடிப்பேன்.. ‘ என்று சீறினாள்.

ஜமிலா, ‘ஏங்கணி.. என்னா சொன்னீயோம்.. இரியூம் இரியூம் ஒம்பர் ஊட்ல வந்து சொல்லி கொடுக்குறேன்.. ‘ என்று பாய்ந்தாள்.

இக்பால், ‘ஆஹா.. பாத்தீங்கல்ல.. அதெல்லாம் சொல்ல கூடாது.. இது நமக்குள்ள.. ‘ என்று பதுங்கினான்.

நிசாமாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.

அஸ்லம், ‘சரி.. சரி.. யார்ட்டயும் சொல்ல வாணாம்.. நாங்க போயிடறோம்.. ‘ என்று சொல்லி விட்டு மிதிவண்டியில் பறந்து மறைந்தான்.

ஜமிலா, ‘போய் தொலைங்க ஹயாத் அலிய்வான்வோலா..(ஆயுள் குறையட்டும் என்று திட்டுவது) ‘ என்று சொல்லி விட்டு நிசாமாவிடம் திரும்பி, ‘நீ ஏன் அழுவுறே.. அவன்வோ கெடக்குறான்வோ நாசமத்து போவான்வோ.. ‘ என்றாள்.

மறூநாள் மதரஸாவிற்கு ஓத வந்த நிசாமா அன்று அஸ்லம் வராததை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டாள். அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பானோ என்று பயந்தவளுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

தாமதமாக வந்த ஜமிலா நிசாமாவிடம் கிசுகிசுத்தாள்.

‘மேப்டியான்வோ(மேற்படி ஆட்கள்) ஊர விட்டே ஓடிட்டான்வோலாம்.. தெரியுமா சேதி ? ‘ என்றாள்.

நிசாமாவிற்கு புரியவில்லை, ‘நீ யாரை சொல்றே ? ‘ என்றாள்.

ஜமிலா, ‘அதான்.. அந்த சைக்கில்ல வந்த ஷைத்தான்வொல தான் சொல்றேன்.. ‘ என்றாள்.

‘அல்லாவே.. என்ன சொல்றே ஜமிலா.. நெசமாவா ? இக்பால் மச்சானுமா ? எங்க வூட்டுக்கு எதுவுமே தெரியாதே.. ‘ என்று ஆச்சர்யப்பட்டாள்.

‘நான் ஏன் பொய் சொல்றேன்.. எங்கே தேடியும் கண்ணு மாசியா காணுமாம்.. சரி அத விடு.. நமக்கு என்ன ?.. தொலைறான்வோ.. சரி பாடத்த கவனிப்போம்.. யாசீன்(திருக்குரானில் உள்ள ஓர் அத்தியாயம்) மனப்பாடம் பண்ணிட்டாயா ? இன்னைக்கி சாபு பாடம் கேப்பாஹா.. ‘ என்று பாடத்தில் கவனமானார்கள்.

தஞ்சாவூர்..

அடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்த அஸ்லமும் இக்பாலும் சாந்தி கொட்டகையில் ‘முதல் மரியாதை ‘ படம் பார்த்து விட்டு ஓர் உணவகத்தில் புகுந்து சாப்பாட்டை கட்டு கட்டென்று கட்டி விட்டு கடைசியாக இருந்த காசுக்கு பீடா வாங்கி போட்டு விட்டு கையில் சல்லி காசு கூட இல்லாமல் பேருந்து நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

அஸ்லம், ‘ஏங்கணி.. நீம்பர் சொன்னத கேட்டு வூட்ட வுட்டு ஓடி வந்துட்டோம் இப்ப கைல காசு இல்லயே.. என்ன செய்றது ? ‘ என்றான்.

இக்பால், ‘நிசாமா வாயில்லா பூச்சி அவ வூட்டுல போய் சொல்லிலாம் கொடுக்க மாட்டா.. ஆனா இந்த ஜமீலா இருக்காலே.. அவளுக்கு ஒடம்ப விட நாக்கு பெருசு.. அவ இன்னேரம் போய் அவ வாப்பாட்ட சொல்லிருப்பா.. ஒடனே நிசாமா வூட்டுக்கு செய்தி போவும்.. நிசாமா வூட்டுக்கு செய்தி போனா எங்க வூட்டுக்கு போன மாதிரி தான்.. அவ்வளவு தான்.. நம்ம ம்மாக்கு தெரிஞ்சிச்சா.. வீடு ரெண்டாயிடும் செவர் எடுக்காமலே.. அதோட நம்ம தொலைஞ்சோமா.. அதான் அடி வாங்காமலே தொலைஞ்சுடலாம்னு சொன்னேன்.. ‘ என்றான்.

அஸ்லம், ‘நம்ம தப்பு பண்ணிட்டோங்கணி.. நம்ம போய் சொல்லியிருக்க கூடாது.. ‘ என்றான்.

இக்பால், ‘நம்ம ஒண்ணும் தப்பு பண்ணல.. ஜமிலா நிசாமா கூட வந்தது தான் தப்பு.. ‘ என்றான்.

அஸ்லம், ‘சரிங்கணி.. இப்ப என்ன பண்றது.. அல்லாஹூம்ம சல்லி(சல்லி காசு, பணத்தை குறிக்கும்) இல்லையே ‘ என்றான்.

இக்பால், ‘என்ன பண்ணலாம் ? ‘ என்றான்.

அஸ்லம், ‘போய் அந்த கடைல ஒருத்தர் நிக்கிறார்ல அவர்ட்ட போய் காசு கேளும்.. ‘ என்றான்.

இக்பால், ‘ஓய்.. உம்பருக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. ‘ என்றான்.

அஸ்லம், ‘ஓய்.. போங்கணி.. நான் சொல்றேன்ல.. ‘ என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.

இக்பால், ஒரு கடையில் நின்று ‘பீடு கட்டு ‘ வாங்கி கொண்டிருந்த அவரின் முதுகுக்கு பின்னால் நின்று, ‘சார்.. ஹலோ.. ‘ என்றான்.

அவர் சட்டென்று திரும்பினார்.

இருவரும் அதிர்ந்தார்கள்.

அவர் வேறு யாருமல்ல..

(யெஸ்.. கரெக்டா கண்டு புடிச்சீட்டாங்களே!)

மாலிம் காகாவே தான்.

மாலிம் காகா கேட்டார், ‘அட.. நீ எங்கே இங்கே ?.. அது சரி.. என்ன சாருங்கறே.. ஹலோங்கறே.. என்ன இதெல்லாம்.. ஆமா.. யார் கூட வந்தே ?.. ‘ என்று படபடவென்று கேட்டார்..

இக்பால் எச்சில் விழுங்கினான்..

பின்னால் திரும்பி அஸ்லத்தை பார்த்தான்..

மாலிம் காகா, ‘ஏன்பா.. என்ன மய்யித்த(இறந்த சடலம்) பார்க்குற மாதிரி பாக்குறே.. அட.. அங்கே யார திரும்பி திரும்பி பார்க்குறே.. கொஞ்சம் நவரு நானும் பார்க்குறேன்.. ‘ என்று உற்று பார்த்தார்.

அங்கே அஸ்லம் தொடை நடுங்க நின்று கொண்டிருந்தான்..

அவ்வளவு தான்..

அடி என்றால் என்ன அடி என்கிறீர்கள்.. உங்க வீட்டு அடியா ? எங்க வீட்டு அடியா ? அல்ல.. அல்ல.. அது உண்மையில் அடியே அல்ல.. விழுந்த ஒவ்வொரு அடியும் சரியான சரவெடி என்று தான் சொல்ல வேண்டும்..

‘இனிமே இக்பால் கூட சேர்ந்தே.. கெணத்துல கட்டி எறக்கி வுட்டுடுவேன் ‘ என்று அஸ்லம் வீட்டிலும்..

‘இனிமே அஸ்லம் கூட சேர்ந்தே கடல்ல புடிச்சு தள்ளி வுட்டுடுவேன் ‘ என்று இக்பால் வீட்டிலும்..

மிரட்டல் விடப்பட்ட அன்று இரவே அஸ்லமும் இக்பாலும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள்..

‘ஓய்.. சும்மா சொல்ல கூடாதுங்கணி.. தர்மடி.. அப்பா.. ஹயாத்(உயிர்) போய்டிச்சு.. பிச்சு எடுத்துப்டாஹா.. அது சரி.. அங்கே எப்படி ? ‘ என்றான் அஸ்லம்.

‘ம்..ம்.. அத ஏன் கேக்குறீயோம்.. எங்க ம்மா என் ஒடம்பு பூரா பைத்(இந்த இடத்தில் ‘தர்ம அடியை ‘ குறிக்கும்) ஓதிட்டாஹாங்கணி.. ‘ என்றான் இக்பால்.

அஸ்லம், ‘ஒரு முக்கியமான் விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு தான் போன் போட்டேன் ‘ என்றான்.

இக்பால், ‘என்னங்கனி அது ? சீக்கிரம் சொல்லும்.. ம்மா எந்திரிச்சிட போறாஹா ? ‘ என்றான்.

அஸ்லம், ‘இல்ல.. நிசாமா மேட்டர ஜமிலா சொல்லிடுச்சா.. இல்லைல.. ? ‘ என்று நம்பிக்கையுடன் கேட்டான்.

இக்பால், ‘இன்னும் தெரியாதுங்கணி.. இப்ப அடி வாங்குனது வூட்ட வுட்டு ஓடி போனதுக்கு தான்.. இனிமே அது வேறே தெரிஞ்சுச்சுன்னா.. அல்லா வச்சு காப்பாத்தணும்.. அதுக்கு வேற தனியா அடி வாங்க வேண்டியது இருக்கும்.. ‘ என்றான்.

‘சரி.. யாரோ வர்ர மாதிரி தெரியுது.. நா அப்பறமா பேசுறேன்.. ‘ என்று அஸ்லம் வைத்து விட்டான்.

மறுநாள்..

மதரஸாவிற்கு செல்ல அஸ்லமும் இக்பாலும் சேர்ந்து வராமல் அவர்களது தாயாருக்கு தெரிந்தால் அடிப்பார்கள் என்று பயந்து ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து கொண்டிருந்தனர்..

மாலிம் காகா மிதிவண்டியில் வந்தார்..

அஸ்லத்தையும் இக்பாலையும் பார்த்ததும் மிதிவண்டியை நிறுத்தி விட்டு கிண்டலடித்தார்,

‘தஞ்சாவூர்.. ம்.. என்னா படம் அது.. முதல் மரியாதை.. ரொம்ப முக்கியம்.. நேத்து உங்கள்வோ வூட்டுல உங்க ம்மா முதல் மரியாதை காட்டுனாஹலாம்ல..(சிரிப்பு)

ஏங்கணி.. ம்.. அதெல்லாம் என்ன மாதுரி பெரியவங்கட்ட பேசும் போது மரியாதையா என்னா மாமா.. நல்லா இக்கிறீங்களா ? தேத்தணி குடிக்கிறீங்களா ? இப்படி மரியாதயா பேசணும்.. கொள்ளணும்.. அத வுட்டுட்டு நல்ல ஹராங்குட்டியல்வோ(பொறுக்கி) மாதுரி பெடல்ல காத்து இல்ல.. ….ல காத்து இல்ல.. ‘

என்று தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவர்.. ‘புஸ்.. ‘ என்ற சத்தம் திடாரென்று வருவதை கேட்டு

‘என்ன ‘புஸ் ‘ன்னு ஏதோ சத்தம் கேக்குது ? ‘ என்று கீழே பார்த்தார்..

அவரது மிதிவண்டியின் சக்கரம் முள்ளில் பட்டு ஏற்பட்ட துவாரத்தில் காற்று வெளியாவதை கண்டு.. ‘அல்லா அல்லா.. ‘ என்றார்.

அஸ்லமும் இக்பாலும் சிரித்தனர்..

‘இப்ப நெசமாவே வீல்ல காத்து இல்ல மாமா.. ‘ என்று அஸ்லம் சிரிப்பை அடக்காமல் சொல்லி முடித்தான்.

மாலிம் காகா அஸ்லத்தையும் இக்பாலையும் மாறி மாறி பார்த்து முறைத்து, ‘இதெல்லாம் எங்கேந்து உறுப்படறது… ‘ என்றார்.

மதரஸா..

அஸ்லமும் இக்பாலையும் பிரித்து வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக உட்கார வைக்கும் படி சாபு கேட்டுக் கொள்ளப் பட்டார்.

ஷம்ஸ் சாபு, ‘சரி.. சரி.. போனது போவுது.. இனிமேயாவது ஒழுங்கா ஓதி படிச்சு முன்னுக்கு வரப் பாருங்க.. என்னா ? ‘ என்றார்.

அஸ்லமும் இக்பாலும் தலையை ஆட்டினர்.

ஷம்ஸ் சாபு, ‘வாய தொறந்து தான் சொல்லுங்களேன்.. ‘ என்றார்.

அஸ்லமும் இக்பாலும் ‘சரி சாபு ‘ என்றனர்.

நிசாமா ஓதி முடித்து விட்டு வெளியே வரும் போது வாசலில் அவளது காலணியை காணாமல் பதறினாள்..

‘அல்லாவே.. நேத்து தானே வாப்பா வாங்கி கொடுத்தாஹா.. யார் எடுத்தான்னு தெரியலையே.. ? ‘ என்று-

சாபுவிடம் சொன்னதற்கு ‘இருங்க.. இருங்க.. யார் எடுத்தான்னு கேப்போம் ‘ என்றவர் பிள்ளைகளிடம் திரும்பி ‘யாராவது எடுத்தீங்களா ? யாராவது பார்த்தீங்களா ? என்று கேட்டார்.

எல்லோரும் ‘நான் பார்க்கலை.. நீ பார்க்கலை.. ‘ என்று ஆளாளுக்கு கையை விரித்து விட்டார்கள்.

‘இது என்னா பெரிய அதாபா(தொந்தரவா) இக்கிது. எவன்னு தெரிஞ்சிச்சுன்னா.. அவன் யாராயிருந்தாலும் கட்டி வைச்சு.. தோலை உரிக்கிறேனா இல்லையான்னு பாருங்க.. ‘ என்று ஷம்ஸ் சாபு கோபமாக கத்தினார்.

நிசாமா சொன்னாள், ‘சாபு.. அஸ்லம் தான் எடுத்திருக்கணும் சாபு.. அஸ்லத்தை விசாரிங்க சாபு.. ‘ என்று

அதைக் கேட்டவுடன் அஸ்லம், ‘இல்ல சாபு.. நான் எடுக்கல.. நான் ஏன் எடுக்குறேன்.. எம்மேல ஏன் புள்ள பழிய போடுறீங்க.. ‘ என்று கூறினான்.

ஷம்ஸ் சாபு நிசாமாவிடம், ‘நிசாமா.. பார்க்காம எதையும் சொல்ல கூடாது.. தெரியுதா ? ‘ என்றார்..

நிசாமா, ‘இல்ல சாபு எல்லாரும் ஓதிக்கிட்டு இருக்கும் போது இவர் மட்டும் வெளியே போயிட்டு வந்தாரு சாபு.. அதான் சாபு சொன்னேன்.. ‘ என்றாள்.

சாபு திரும்பி அஸ்லத்தை பார்த்தார்.

அஸ்லம், ‘நான் குரான்ல வேணும்னாலும் அடிச்சு சத்தியம் செய்றேன் சாபு நா எடுக்கவே இல்ல.. அல்லாக்கு மேல சொல்றேன்.. ‘ என்று அடித்து கூறினான்.

மீண்டும் ஒரு நாள்..

எல்லொரும் ஓதி கொண்டிருக்கும் போது அந்த திருடன் மறுபடியும் செருப்பு திருட வந்தான். செருப்பில் கையை வைத்தது தான் தாமதம், மதரஸாவிற்கு வராமல் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த அஸ்லம் ஓடி வந்து திருடனின் காலை கெட்டியமாக பிடித்து ‘சாபு வாங்க.. சாபு வாங்க.. திருடன்.. திருடன்.. மாட்டி கிட்டான்.. திருடன் மாட்டிக் கிட்டான்.. ‘ என்று கத்தினான்.

சாபு ஓடி வந்து பிரியாணி சாப்பிடற கையை தூக்கி காட்டினாரு பாருங்க..

அந்த செருப்பு திருடன் அலறி விட்டான்..

‘கடைசில பார்த்தா தர்ஹால நெறய செருப்பு காணாம போனதுக்கும் ஹொத்துவா பள்ளில நெறய செருப்பு காணாம போனதுக்கும் அந்த பய தான் காரணம்.. அந்த கழிசல்ல போயிடுவான் பாருங்க.. ஒரு தடவ மைத்தாங் கொல்லைலேயே செருப்ப திருடி யிருக்கான்.. ‘ இது எல்லாம் அந்த மதுரஸா இருக்கும் தெருவின் முனையில் கடை வைத்திருக்கும் நம்ம மாலிம் காகா அவசரம் அவசரமாக போய்க் கொண்டிருந்த என்னிடம் அநியாயத்துக்கு நிறுத்தி சொல்லிக் கொண்டிருந்த செய்தி தான்..

நிசாமா ஜமிலாவிடம் சொன்னாள், ‘நான் ஏன் தான் அப்படி அவசரப் பட்டேனோ.. இப்ப பாரு மனசுக்கு ஹராரத்தா(நெருடலா) இருக்கு.. ‘ என்று வருத்தப் பட்டாள்.

ஜமிலா, ‘நீ நாளைக்கு பள்ளில பார்த்து தெரியாம சொல்லிட்டேன்னு சொல்லிடு.. ‘ என்றாள்.

நிசாமா, ‘நீ சொல்லி கொடேன்.. எப்படி சொல்ல ? ‘ என்றாள்.

ஜமிலா, ‘என்ன எப்படி சொல்ல.. ?, இதுல சொல்லி கொடுக்க என்னா இக்கிது.. சொல்ல வேண்டியது தானே.. இந்த மாரி.. தெரியாம சொல்லிட்டேன்.. அல்லாவுக்காக என்ன மன்னிச்சுடுங்கன்னு சொல்லு.. அவ்வளவு தான்.. ‘ என்றாள்.

அஸ்லம் மதரஸாவிற்கு காலையில் சீக்கிரமே வந்து விட்டான்.

வாசலில் காத்திருந்தான்.

ஜமிலா வந்தாள், ‘என்ன இன்னைக்கி ஊருக்கு முன்னாடி வந்துட்டாங்க.. ? ‘ என்று அஸ்லத்திடம் கேட்டாள்.

அஸ்லம், ‘ஆமா வந்துட்டேன்.. ‘ என்றான்.

ஜமிலா சுற்றியும் முற்றியும் பார்த்து விட்டு, ‘நிசாமா உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு சொல்லிக் கிட்டிருந்தா.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘ஏன்.. ? ‘ என்றான்.

ஜமிலா, ‘அதான்.. அந்த செருப்பு விஷயம் தான்.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘நாங்க கூட உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.. நீங்க ரெண்டு பேரும் எங்கள பத்தி எங்க வீட்ல சொல்லாம இருந்ததுக்கு ‘ என்றான்.

ஜமிலா, ‘அதுக்கு நீங்க நிசாமாக்கு தான் நன்றி சொல்லணும்.. நான் சொல்லிடல்லாம்னு தான் சொன்னேன்.. நிசாமா தான் வேணாம்னு தடுத்துட்டா.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘நிசாமா உங்க கூட வரலயா ? ‘ என்றான்.

ஜமிலா வெட்கப்பட்டாள்.

அஸ்லம், ‘ஏன்.. ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க.. ? ‘ என்றான் அந்த வெட்கத்தின் அர்த்தம் தெரியாமல்..

ஜமிலா கீழே பார்த்துக் கொண்டே சொன்னாள், ‘இல்ல.. அவ இன்னைலேருந்து ஒரு வாரத்துக்கு இந்த பள்ளி பக்கமே வரமாட்டா.. ‘ என்று.

அஸ்லம், ‘ஏன் ? ‘ என்றான்.

ஜமிலா, ‘ஆமா.. ‘ என்றாள்..

அஸ்லம் புரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டு இக்பாலிடம் கேட்கலாமா என்று யோசித்தான். இக்பாலும் அவனுமே ஏதோ கள்ளக் காதலர்கள் போல் தான் பேசிக்க வேண்டியிருந்தது..

இக்பால், ‘உம்பருக்கு அது வெளங்கலயா ? நான் தான் உம்பர் கூட இப்பல்லாம் பேசவே முடியறதில்லையே.. அது வேற ஒண்ணுமில்லைங்கணி.. நிசாமா சடங்காயிடுச்சு அதான்.. ‘ என்று சொன்னான்.

அஸ்லத்திற்கு நிசாமாவை பார்க்காமல் ஒரு நாள் போவதே ஒரு வருஷம் போவது போல் இருந்தது..

இது வரை அப்படி ஒரு அவஸ்தையை அஸ்லம் அடைந்ததே இல்லை..

காலண்டருக்கு என்ன

கால் உடைந்து விட்டதா ?

நகரவே மாட்டேங்கிறதே..

அட்டவணைக்கு மட்டும்

தானே ஆணி-

நாட்களுக்குமா என்ன.. ?

என்று காகிதத்தில் ‘கவிதை மாதிரி ‘ என்று சொல்லலாம் அதை எழுத ஆரம்பித்து விட்டான்.

இப்படியாக ஒரு வாரம் கழிந்தது..

நிசாமா பர்தா அணிந்த வாறு மதரஸாவிற்கு வந்தாள்.

அஸ்லம் நிசாமாவை நேரடியாக பார்ப்பதை தவிர்த்துக் கொண்டான்..

நிசாமா நம்மை பார்ப்பாள் அல்லது நிசாமா இருக்கும் அதே இடத்தில் நாமும் இருக்கிறோம் என்ற எண்ணம்(காதல்) அவனை சந்தோஷப் படுத்தியது.

ஷம்ஸ் சாபு சொன்னார், ‘மீலாது விழா(திருநபி பிறந்த திருநாள்) வருது.. தர்ஹால கிராத்(திருக்குரானை ராகத்துடன் ஓதுவது) போட்டி, பேச்சு போட்டி எல்லாம் நடத்தறாஹா.. ஊர்ல இக்கிற எல்லா மதரஸா புள்ளைங்களும் கலந்துக்குறாஹல்வோ.. நம்ம மதரஸா சார்பா நீங்க யார்யாரு கலந்துக்குறீங்க.. ? ‘ என்றார்.

ஜமிலாவும் மற்றும் சிலரும், ‘சாபு.. நாங்க கிராஅத் போட்டில கலந்துக்கறோம் ‘ என்றார்கள்.

சாபு, ‘ஹைர்(நல்லது).. பேச்சு போட்டிக்கு யாராவது பேர் கொடுக்குறீங்களா ? ‘ என்றார்.

அஸ்லம், ‘சாபு.. என்னா தலைப்புல சாபு பேசணும் ? ‘ என்றான்.

ஷம்ஸ் சாபு, ‘பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களது செறப்பை பத்தி.. வாழ்க்கைய பத்தி பேசணும்.. ஆமா நீ ஏன் கேக்குறே.. ? நீ பேசப்போறீயா ? ‘ என்றார்.

அஸ்லம், ‘ஆமா சாபு.. பெருமானார பத்தி நான் பேசறேன்.. ‘ என்றான்.

இக்பால் உள்பட எல்லோரும் சிரித்து விட்டனர்..

ஷம்ஸ் சாபு, ‘யாரும் சிரிக்க கூடாது.. ‘ என்று சொல்லிவிட்டு அஸ்லம் பக்கம் திரும்பி, ‘வெளையாட்டில்ல இது.. ஒழுங்கா பேசுவியா ? ரசூலுல்லாவ பத்திப்பா.. ‘ என்றார்.

அஸ்லம், ‘தெரியும் சாபு.. நம்ம உயிர விட மேலான ஹஜ்ரத் முஹம்மத்(ஸல்) அவங்கள பத்தி தான்.. எனக்கு தெரியும்.. நான் பேசறேன்.. என் பேர எழுதிக்குங்க.. ‘ என்றான்.

தர்ஹா..

மீலாது விழா..

பேச்சு போட்டி..

அஸ்லம் வந்து தைரியமாக நின்று ஏதோ ரொம்ப பேசி பழகியவன் போல் அச்சமின்றி கூச்சமின்றி பேசினான்..

இதோ அவனது பேச்சின் சுருக்கம்..

‘அஸ்ஸலாமு அலைக்கும்..

நாம் பெருமான் முஹம்மது நபி(ஸல்) அவர்களை ஒவ்வொரு நிமிஷமும் நினைக்க வேண்டும் என்றாலும் இது போன்ற நல்ல நாட்களில் நம்மை கருத்து பரிமாறிக் கொள்ள அனுமதித்த நம் உலமாக்களுக்கு நன்றி..

பெருமானார் அவர்களின் வாழ்க்கையை சொல்வது என்பது நாவை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போலாகும்..

நாம் எங்கே இருக்கிறோம் ?

பெருமானாரை பின்பற்றும் நல்ல முஸ்லீமா நாம் அனைவரும் ?

பெருமானாரின் எந்த குணம் நம்மிடம் உள்ளது ?

நெஞ்சில் கை வைத்து கூறுங்கள் ?..

திருட்டு, ஏமாற்று வேலை, பழிக்கு பழி, பொய், குடிப் பழக்கம், காமம், கள்ள தொடர்பு, வட்டி, சொத்துச் சண்டை, எல்லாத்துக்கும் மேலா பிசாது பேசுறது இப்படி எத்தனையோ தீய பழக்கத்தை வைத்துக் கொண்டு பெருமானாரின் சமுதாயம் என்று பேரைக் கெடுத்தது போதும்..

மீண்டும் ஒரு முறை நாம் அனைவரும் கலிமா சொல்லி புதிதாக இஸ்லாத்தில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..

மேலான எம்பெருமானை போற்றி இந்த இனிய நாளில் மனம் மாறுவோம்.. மதம் சேருவோம்.. ‘

இப்படியாக அவன் பேசிய பேச்சை பாராட்டாதவர்களே இல்லை.

ஷம்ஸ் சாபு, ‘எப்படிப்பா.. இப்படி பேசினே.. அசத்திட்டாயேப்பா.. ‘ என்றார்..

நிசாமா ஜமிலாவிடம், ‘எப்படி இஹ இவ்வளவு அருமையா பேசினாஹா.. என்னால நம்பவே முடியல.. ‘ என்று அஸ்லத்தை பாராட்டினாள்.

ஜமிலா, ‘என்னாலயும் தான் நம்ப முடியல.. ‘ என்றாள்.

நிசாமா தயங்கியபடி, ‘எத ?.. ‘ என்றாள்

ஜமிலா, ‘நீ அஸ்லத்தை அஹ எஹன்னு மரியாதையா கூப்புடறத.. ‘ என்றாள்.

‘அஸ்லம் போன் அடிக்குது எடுத்து யாருன்னு கேளு.. ‘ என்று அஸ்லத்தின் தாயார் ஐசா சொன்னதும் ‘இந்த எடுக்குறேன்.. ‘ என்று வேகமாக வந்து எடுத்து, ‘ஹலோ.. அஸ்ஸலாமு அலைக்கும்.. யாரு.. ? ‘ என்றான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு, ‘அலைக்கும் ஸலாம்.. நான் நிசாமா பேசறேன் ‘ என்றாள்.

அஸ்லத்திற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. அவனையே அவனால் நம்ப முடியவில்லை..

நிசாமா, ‘ஹலோ.. ‘ என்றாள்.

ஐசா, ‘அஸ்லம்.. யாரு போன்ல.. ‘ என்றார்.

அஸ்லம் நிசாமாவிடம், ‘கொஞ்சம் இருங்க.. தயவுசெஞ்சு வச்சுடாதீங்க.. ‘ என்று மெதுவாக சொல்லி விட்டு தனது தாயிடம், ‘என் பிரண்டு தான்ம்மா.. சம்சுதீன்.. ‘ என்றான்.

ஐசா, ‘சம்சுதீன் பரவாயில்ல.. இக்பால் கூட பேசுனீங்க.. கைய கால முறிச்சு தொங்க போட்டுடுவேன் ஆமா.. ‘ என்று சொல்ல

அதை பொருட்படுத்தாமல் நிசாமாவிடம், ‘என்னால நம்பவே முடியல.. எங்கேந்து பேசறீங்க.. ? ‘ என்றான்.

நிசாமா, ‘ஜமிலா வீட்லேந்து தான்.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘என்ன.. சேதி.. ? ‘ என்றான்.

நிசாமா, ‘உங்கள்ட்ட அந்த செருப்பு விஷயத்துக்கு மன்னிப்பு கேக்கணும்னு தோணுச்சு.. சந்தர்ப்பமே கெடைக்கலே.. அப்புறம் மீலாது நபியப்போ தர்ஹால உங்க பேச்சு ரொம்ப அருமையா இருந்துச்சு.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘நெசமா சொல்லுங்க.. நல்லாவா இருந்துச்சு.. ? ‘ என்றான்.

நிசாமா, ‘அல்லாவே.. நெசமா தான் சொல்றேன்.. எனக்கு ரொம்ப புடிச்சு இருந்திச்சு.. நீங்க பேசுனத டேப்புல ரெகார்ட் பண்ணியிருக்காஹா போலிருக்கு எனக்கு முடிஞ்சா ஒரு காப்பி போட்டு தரமுடியுமா ? ‘ என்றாள்.

அஸ்லம், ‘கண்டிப்பா.. உங்களுக்கு இல்லாமையா ? ‘ என்றான்.

நிசாமா, ‘சரி.. அப்ப.. நான் போன வச்சுடவா ? ‘ என்றாள்.

அஸ்லம், ‘ம்.. ‘ என்றவன் வைக்க மனமில்லாமல், ‘ஜமிலா இல்லையா ? ‘ என்றான்.

நிசாமா, ‘இதோ இங்க தான் இருக்கா.. பேசறீங்களா ? ‘ என்றாள்.

அஸ்லம், ‘இல்ல இல்ல அதெல்லாம் வாணாம்.. மறுபடியும் எப்போ போன் பண்ணுவீங்க.. ‘ என்றான்.

நிசாமா, ‘ஏன் ? ‘ என்றாள்.

அஸ்லம், ‘இல்ல.. உங்க கூட பேசணும்.. அதான்.. ‘ என்றான்.

நிசாமா சிரித்து விட்டு, ‘நாளைக்கி.. ‘ என்றாள்.

அஸ்லம், ‘இன்ஷா அல்லா அப்ப நாளைக்கி.. சரியா.. இதே நேரம்.. ‘ என்று கூறி விட்டு வைத்து விட்டான்.

அஸ்லம் ‘ம்மா எங்கே ? ‘ என்று அவனுக்குள் சொல்லி விட்டு திரும்பி பார்த்தான் அவனது ம்மா தூங்கி கொண்டிருந்தார்.

இக்பால் வீட்டிற்கு தொலை பேசி எண்களை சுழற்றினான்..

மறுமுனையில் மணி அடித்தது-

எடுத்து, ‘ஹலோ.. ‘ என்றான் இக்பால்.

அஸ்லம் ‘அப்பாடா.. ‘ என்று சொல்லிக் கொண்டு, ‘அஸ்ஸலாமு அலைக்கும்.. ‘ என்றான்.

இக்பால், ‘அலைக்கும் ஸலாம்.. என்னாங்கணி.. என்னா சேதி.. ? ‘ என்றான்.

அஸ்லம் செய்தியை சொன்னவுடன் இக்பால், ‘நல்ல செய்தி தான்.. அல்ஹம்துலில்லாஹ்.. ‘ என்றான்.

அஸ்லமும் நிசாமுவும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள்.

தொலைபேசியில் பேசி பேசியே நெருக்கமாகி விட்டார்கள்.

அஸ்லம், தனது தாயார் எங்கேயாவது செல்ல வேண்டியது தான்.. உடனே ஜமிலா வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து ஜமிலாவிடம் ‘நிசாமா.. ‘ என்பான். நிசாமா, ஜமிலாவின் வீடு பக்கத்து வீடு தான் என்பதால் உடனே ஆஜர் ஆகி விடுவாள். மணி கணக்கில்லாமல் பேசி கொள்வார்கள். கதை இப்படி போய்க் கொண்டிருக்க கதி என்னாகுமோ தெரியவில்லை ?..

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்.. ஒரு நல்ல நாளும் பெருநாளுமா பார்த்து அஸ்லத்தின் வாப்பா காதர் சுல்தான் ஊருக்கு வந்திறங்கினார் அஸ்லத்திற்கும் விசா எடுத்துக் கொண்டு..

ஐசாவிற்கு அவர் வெளிநாட்டிற்கு போவது தான் பிடிக்காதே தவிர தன் மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்வதை தான் விரும்பினார் ஆதலால் அவரும் அஸ்லம் வெளிநாடு செல்வதற்கு சம்மதித்து விட்டார், ‘..ஆமா.. ஆமா.. இங்கே இருந்தா இக்பால் அவன் இவன்னு கண்ட பயலோட சுத்திக் கிட்டு இருப்பான்.. நல்ல வேல செஞ்சீங்க.. ‘ என்று கணவனிடம் சொன்னார்.

காதர் சுல்தான் வந்ததிலிருந்து அஸ்லம் நிசாமாவிடம் முன்னை போல் பேச முடிவதில்லை.. இக்பாலிடமும் பேச முடியவில்லை..

பயணம் போவதற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நிசாமாவிடம் பேச ஒரு அறிய வாய்ப்பு கிடைத்தது..

‘என்னய மறந்துடுவீங்க தானே.. ? ‘ என்றாள் நிசாமா.

‘ஏன் இப்படி பேசறீங்க.. உங்கள எப்படி மறப்பேன்.. ‘ என்றான் அஸ்லம்.

‘இனிமே உங்க கூட பேசவே முடியாதுல்ல.. ‘ என்றாள் நிசாமா.

‘நிச்சயமா நான் பேசுவேன்.. ‘ என்றான் அஸ்லம்.

‘நான் உங்க போனுக்காக காத்துகிட்டிருப்பேன்.. ‘ என்று அழுதாள் நிசாமா.

அஸ்லமும் அழுதான்..

சிறிது நிமிஷங்கள் கழித்து..

‘சரி.. பரக்கத்தா போயிட்டு வாங்க.. நா உங்க ஹக்குல ரொம்ப துஆ செஞ்சுகிட்டு இருப்பேன்.. ‘ என்றாள் நிசாமா.

‘ம்.. நானும் தான்.. ‘ என்றான் அஸ்லம்.

‘ஃபீயமானல்லா.. தொழுகைய விட்டுடாதீங்க.. படுக்கும் போது ஆயத்துல் குர்ஸி ஓதிக்கிங்க.. ‘ என்றாள் நிசாமா.

‘பிளேன்ல பறக்கும் போது ஏதாவது ஓதிக்கனுமா.. ‘ என்றான் அஸ்லம்.

‘ம்.. கட்டாயமா ஓதணும்.. ஃபீயமானில்லா.. தவக்கல்து அலல்லாஹ்.. இதையே நீங்க தொடர்ந்து தஸ்பீஹ் மாதிரி ஓதிக்கிட்டே இரிங்க.. உங்களுக்கு ஒரு கொறையும் வராது.. அல்லா போதுமானவன்.. ‘ என்றாள் நிசாமா.

‘அப்ப நா வக்கிறேன்.. போன வக்கவே மனசில்ல.. ‘ என்றான் அஸ்லம்.

‘எனக்கும் தான்.. ‘ என்றாள் நிசாமா….

அஸ்லம் இப்போது விமானத்தில் ‘ஃபீயமானில்லா.. தவக்கல்து அலல்லாஹ்.. ‘ என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.. (flashback முடிந்து விட்டது)

இந்த இடைப்பட்ட காலத்தில் நிசாமாவிடமும் இக்பாலிடமும் சில பல காரணங்களால் அவன் பேசவில்லையே தவிர அவன் யாரையும் எதையும் மறக்கவுமில்லை…

இந்தியா..

அவனது சொந்த ஊர்..

ஊர் வந்திறங்கி பழைய ஆளாகி இருந்தார்கள்..

அஸ்லம் அதிர்ந்தான், ‘என்னம்மா சொல்றீங்க.. இக்பாலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சா.. ? என்ன சொல்றீங்கம்மா.. ? எப்போ.. ? எனக்கு ரோக்கா(திருமண அழைப்பிதழ்) கூட அனுப்பல.. ‘ என்றான்.

ஐசா, ‘ஆமா.. ஒன் அட்ரஸ் கூட கேட்டான்.. நான் வெலயா இருந்ததால எடுத்து தர முடியாம போயிடுச்சு.. எல்லாம் திடார்ன்னு தான் முடிவாயிடுச்சு.. அவன் வீட்ல எல்லாரும் வந்து அழைச்சாஹா.. நான் கூட போயிட்டு வந்தேன்.. ‘ என்றார்.

அஸ்லம், ‘ஏம்மா.. அப்ப நீங்களாவது சொல்லியிருக்கலாம்லம்மா.. சரி.. சரி.. பொண்ணு யாரு.. ? ‘ என்றான்.

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

‘பொண்ணு யாருன்னா.. நிசாமா தான்.. உன் கூட பள்ளில ஓதுனிச்சுல்ல.. ‘ என்றார் ஐசா.

உடம்பு பூரா வெடிய கட்டி வெடிக்க வச்சது மாதுரி இருந்துச்சு அவனுக்கு, ‘என்னம்மா சொல்றீங்க.. நிசாமாவா.. ? ‘ என்றான்.

ஐசா, ‘அதுக்கு ஏன் நீ இப்படி ஆச்சர்யப்படுறே.. யார் யாருக்கு ஜோடு எங்கே இருக்கோ அங்கே தான் முடியும்.. நிசாமாட வாப்பா திடார்ன்னு மெளத்தா போயிட்டாஹா.. வூட்ல ஒடனே நிசாமாட கல்யாணத்த நிச்சயம் பண்ணிட்டாஹல்வோ.. ‘ என்றவர் காதர் சுல்தான் இருக்கும் பக்கம் திரும்பி, ‘ஏங்க.. நம்ம அஸ்லத்துக்கு ஒரு எடத்துல பொண்ணு பேசி வந்திருக்குன்னு சொல்லியிருந்தேன்ல.. அந்த பொண்ணு பேரு ஜமிலா.. நல்ல பொண்ணு.. நம்ம அஸ்லத்துகூட பள்ளில ஓதுன புள்ள தான்.. ஏன் அஸ்லம்.. ஒனக்கு தெரியும்ல.. ஜமிலாவ.. ‘ என்றார்..

அஸ்லம் திணறி விட்டான்.. ‘தெ.. தெரியும்.. ‘ என்றான்.

‘நா போய் பார்த்து பேசிட்டு தான் வந்தேன்.. எனக்கு புடிச்சிருக்கு.. உங்களுக்கும் புடிச்சிருந்தா.. கல்யாணத்த பேசி முடிச்சுடலாம்.. ‘ என்றார் ஐசா.

‘என்ன திடுதிப்புன்னு சொல்றே.. யாரு ஏற்பாடெல்லாம் பண்றது.. ? கல்யாணம்னா என்ன லேசான காரியமா ? ‘ என்றார் காதர் சுல்தான்.

‘அதையெல்லாம் நீங்க ஏன் போட்டு ஒலப்பிக்கறீங்க.. அத நான்ல பார்த்துக்குறேங்கறேன்.. ‘ என்றார் ஐசா.

இக்பால் வீடு..

அஸ்லம் வாசலில் நின்று அழைப்பு மணியை அடித்தான்..

‘யாரு ? ‘ என்று கேட்டு வந்த இக்பால் அஸ்லத்தை பார்த்ததும்.. ‘அஸ்லம்.. ‘ என்று ஆச்சர்யப்ப்ட்டு கட்டி பிடித்து ‘ஸலாம் ‘ கொடுத்து கொண்டனர்.

‘உள்ளே வா.. நீ வர்ர செய்தி தெரியும்.. ஆனா வேற எதுவும் தெரியாது.. ‘ என்று அழைத்து போய் உட்கார வைத்தார்.

‘நிசாமா.. அஸ்லம் வந்திருக்கார்.. ‘ என்றார் இக்பால்.

திரை மறைவிற்கு பின்னாலிலிருந்து நிசாமா குரல் மட்டும் கொடுத்தார், ‘வாங்க.. நல்லா இக்கிறீங்களா ? ‘ என்று..

அஸ்லத்திற்கு தர்ம சங்கடமாக தான் இருந்தது.. ‘ம்.. வர்ரேன்.. ‘ என்று மட்டும் சொல்லி வைத்தான்.

நிசாமா, ‘கல்யாணமாம்ல.. ஜமிலா சொன்னா.. கல்யாணம் முடிச்சு ஜமிலாவயும் கையோட கூட்டிட்டு போயிடுவீங்க தானே.. ? ‘ என்றார்.

அஸ்லம், ‘அது.. பார்க்கணும்.. இன்னும் சரியா தெரியல.. ‘ என்றான்.

இக்பால், ‘ஏன்.. கூட்டிட்டு போறதுல ஒண்ணும் பிரச்சினைலாம் இல்லைல.. ‘ என்றார்.

அப்பொழுது தொலைபேசி மணி அழைத்தது..

நிசாமா எடுத்து பேசி விட்டு அஸ்லத்திடம், ‘உங்க பொண்ணு தான்.. பேசறீங்களா ?.. ‘ என்றவர் ‘என்னங்க.. ? ‘ என்று இக்பாலை அழைத்து ‘இத கொடுங்க.. ‘ என்றார்..

இக்பால் எழுந்து போய் தொலைபேசியை வாங்கி வந்து அஸ்லத்திடம் கொடுத்தார்.

அஸ்லம் தொலைபேசியை காதில் வைத்து, ‘ஹலோ.. ‘ என்றான்.

மறுமுனையில் ஜமிலா, ‘அஸ்ஸலாமு அலைக்கும் ‘ என்றார்.

அஸ்லம், ‘அலைக்கும் ஸலாம்.. ‘ என்றான்.

ஜமிலா, ‘நல்லா இருக்குறீங்களா ? பேசி எவ்வளவு நாளாச்சு.. ? ‘ என்றார்.

அஸ்லம், ‘நா நல்லா இருக்கேன்.. நீங்க.. ? ‘ என்றான்.

ஜமிலா, ‘அல்ஹம்துலில்லாஹ்.. இருக்கேன்.. நிசாமாவ.. இக்பால் நானாவ எல்லாத்தயும் கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்டுங்க.. ‘ என்றார்.

அஸ்லம், ‘ம்.. கூப்டறேன்.. ‘ என்று கூறி விட்டு ‘இதோ கொடுக்குறேன்.. ‘ என்று தொலைபேசியை இக்பாலிடம் கொடுத்து ‘அங்க கொடுத்துடு.. ‘ என்றான்.

இக்பால் தொலைபேசியை வாங்கி நிசாமாவிடம் கொடுத்தார்..

நிசாமா பேசுவது தெளிவாக கேட்டது..

‘நான் சரியா பார்க்கல.. மரப்பு வுட்டுருக்குல்ல.. அஹ உள்ளக்க உட்காந்து இக்கிறாஹா.. சத போட்டு தான் இருக்கும்.. அதான் கல்யாணத்துக்கு அப்புறம் நீ பார்த்துக்கிட்டே தானே இக்க போறே.. ‘ என்றார் நிசாமா.

.. .. .. ..

‘நீ வேற.. என் புள்ள வயித்துல இருந்துகிட்டு ஒதைக்கிறான்.. ஒரு வேலை செய்ய வுட மாட்டேங்குறான்.. எஹலுக்கு ஒரு தேத்தணி போட்டு கொடுக்க கூட முடியல.. பாரேன்.. ‘ என்றார் நிசாமா.

அப்புறம் சத்தம் குறைந்து விட்டது..

அஸ்லம் ‘அப்ப நா கிளம்புறேன்.. ‘ என்றான்.

இக்பால், ‘அட.. இருப்பா.. என்ன ஒண்ணுமே சாப்டாமே போறே.. நல்லா இருக்குதே கத.. ‘ என்றவன், ‘நிசாமா.. ‘ என்று கத்தினார்.

நிசாமா, ‘இந்தல.. வர்ரேன்.. ‘ என்றவர் அஸ்லத்திடம், ‘இருங்க.. சாப்டுட்டு போலாம்.. ‘ என்றார்.

‘இல்ல இன்னொரு நாளைக்கி சாப்டறேன்.. ‘ என்றான் அஸ்லம்.

இக்பால், ‘ஆமா.. ஜமிலாவோட சேந்து வந்து.. ‘ என்று சிரித்தார்.

அஸ்லாம், ‘கல்யாணத்துக்கு நீங்க அவசியம் வந்திருந்து எல்லாம் முன்னிருந்து செய்யணும்.. ‘ என்றான்.

(பின்குறிப்பு1: இக்பாலும் நிசாமாவும் கல்யாணத்தில் ஜமிலா வீட்டு சார்பாக தான் கலந்து கொண்டார்கள். இக்பாலை ஏனோ ஐசாவிற்கு பிடிக்காத காரணத்தினால்.

பின்குறிப்பு 2: கல்யாண சாப்பாட்டு சஹனில்(4 பேராக உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு உள்ள பெரிய தட்டு) என்னுடன், ஷம்ஸ் சாபு, மாலிம் காகா அப்புறம் மாலிம் காகா மவன்.. நாங்க நாலு பேரும் தான் உட்கார்ந்து சாப்பிடோம்..)

துவா

ஸலாமுடன்

அ. முஹம்மது இஸ்மாயில்.

—-

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation