ஊகங்களும் ஊடகங்களும்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

பி.ஏ. ஷேக் தாவூத்


கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கத்தில் பார்வையாளராகக் கலந்துகொள்வதற்காக வேண்டி அங்கு சென்று பெயர் பதிவு செய்பவரிடம் என்னுடைய பெயரைச் சொல்ல அவரோ பெயரைக் கேட்டுவிட்டு ‘பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். பின்னர் அவர் என்னைப் பார்க்க, அவருடைய வார்த்தைகளினால் என்னில் ஏற்பட்ட முகமாற்றத்தை உடனே கண்டுகொண்டவராக ‘நகைச்சுவைக்காக சொன்னேன்’ என்று சொல்லி பெயரைப் பதிவு செய்தார்.

நடைபெற்ற கருத்தரங்கு தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்டது. அதில் கலந்துகொள்பவர்கள் அனைவருமே குறைந்தது, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். பெயர் பதிவு செய்பவரும் குறைந்தபட்சம் கல்லூரிப் படிப்பை முடித்தவராகவே இருக்கக் கூடும். ஆனால் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் அடிமனதில் முஸ்லிம்களின் மீது அவர் கொண்டுள்ள கருத்தையே பிரதிபலிக்கிறது. அவர் மீது எனக்கு மனவருத்தம் உண்டாகியது என்றாலும் இதற்கு அடிப்படையான காரணங்கள், பல ஊடகங்கள் செய்திகள் என்ற போர்வையில் விதைக்கின்ற விஷ விதைகளே. தங்களுடைய கற்பனையில் உதித்த ஊகங்களை எல்லாம் செய்திகளாகக் கொடுக்கின்ற ஊடகங்களே இத்தகைய வெறுப்புணர்வு வளர்வதற்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. சர்வதேசம், தேசியம் மற்றும் பிராந்தியம் போன்ற அனைத்து நிலை ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.(சில ஊடகங்கள் மட்டும் உறுதி செய்த நிகழ்வுகளையே செய்திகளாக்குகின்றன என்பது மட்டும் சற்று ஆறுதலான விடயம்.)

இந்த மாதத்தின் தொடக்கத்தில் (ஜூலை முதல் தேதி) ஜெர்மனியின் ‘ட்ரெஸ்டன்’ நகரில் நீதிமன்றத்தின் உள்ளேயே நீதிபதிகள், காவலர்கள் முன்னிலையில் அலெக்ஸ் என்ற இனவெறி பிடித்த ஒருவனால் 18 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட “மர்வா அல் செர்பினி” என்ற முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தை சர்வதேச ஊடகங்கள் அணுகிய முறை மிகவும் அறுவருக்கத்தக்கதாகவே அமைந்திருந்தது. பல சர்வதேச ஊடகங்கள் இந்த நிகழ்வையே இருட்டடிப்பு செய்துவிட்டன. ஒருவகையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கொலைக்கு மறைமுகமான காரணமும், அந்த ஊடகங்களே. ஹிஜாப் (முகம் மட்டும் தெரிந்து மற்ற அவயங்களை மறைக்கின்ற ஒரு உடை) அணிதலும், தாடி வைத்திருத்தலும் தீவிரவாதிகளின் அடையாளமாக உருவகப்படுத்தி வைத்திருக்கும் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் விளைவே கணவர் மற்றும் அவருடைய 3 வயது மகன் முன்னாலேயே நடைபெற்ற இவ்விதமான இரக்கமற்ற கொலை.

சர்வதேச ஊடகங்கள்தான் இத்தகைய தவறான போக்கை கையாளுகின்றன. நமது தேசிய ஊடகங்கள் அவ்வாறிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் மதசார்பற்ற தன்மையை உலகிற்கு பறை சாற்றும் தேசமல்லவா நம் தேசம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். தேசிய ஊடகங்களிலும் பல ஊடகங்கள், விஷ விதைகளை சமுதாயத்தில் செய்திகள், ஆய்வுகள் என்ற போர்வையில் விதைப்பவையாகவே இருக்கின்றன. உதாரணமாக இத் தேசத்தில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்திடினும் உடனே எத்தகைய ஆதாரமும் இல்லாமல் ஏதாவது சில இஸ்லாமியர்களையோ அல்லது ஏதாவது சில இஸ்லாமிய இயக்கத்தைச் சம்பந்தப்படுத்தியோ பல புனைவுக் கட்டுரைகளும் செய்திகளும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவந்துவிடும். அவை மசூதிகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளாக இருந்தாலும் சரியே. (மலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சங்கபரிவார்கள் என்பதை ஒரு சில ஆங்கில ஊடகங்கள் வெளிக்கொணர்ந்ததை நன்றியுடன் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம்).

பெரியாரும் அண்ணாவும் பண்படுத்திய பூமி, சமூக நீதியின் பிறப்பிடம் என்றெல்லாம் நம்மால் கற்பிதம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பல ஊடகங்கள் பரபரப்பிற்காகவும், ஒரு சில ஊடகங்கள் திட்டமிட்டும் இத்தகைய நச்சுக் கருத்துக்களை மக்களிடையே விதைத்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் ஒரு பாலத்திற்கு அடியில் சில தூக்குவாளி குண்டுகள் (டிபன் பாக்ஸ் குண்டுகள்) காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டவுடன், இந்த தூக்குவாளி குண்டுகளனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தகர்க்க, தீவிரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் என ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கி தமிழகத்தையே பரபரப்படைய வைத்தன. பிறகு பார்த்தால் குண்டுகளுக்குச் சொந்தக்காரர்கள் உள்ளூர் தாதாக்கள் என காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஏற்றியிருக்கிறது.

கோவிலைத் தகர்க்க வைத்திருந்த குண்டுகள் கண்டுபிடிப்பு என்று செய்தி வந்தால் சாதாரண இந்து பக்தர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும், அவர்களுடைய ஆழ்மனதில் எத்தகைய எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்பதை அறியாதவைகளா ஊடகங்கள் இல்லை இவர்கள் வெளியிட்ட செய்திகளில் துளியளவாவது உண்மை இருந்ததா? இத்தகைய ஊகங்களால் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் வெறுப்புணர்வு அதிகரிக்கும் என்பதை தெரியாமலா இருக்கின்றன இந்த ஊடகங்கள்? இந்த குண்டுகளை பதுக்கி வைத்தவர்களைப் பற்றிய செய்திகளையாவது ஒழுங்காக வெளியிட்டனவா இந்த ஊடகங்கள்?

தீவிரவாதிகள் வைக்கும் குண்டுகளில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மரணத்தை தழுவுகின்றன. ஆனால் இந்த ஊடகங்கள் விதைக்கும் இத்தகைய கருத்தியல் பயங்கரவாதத்தினால் மனிதநேயமே பல இடங்களில் மடிந்துபோவதை உணர்ந்து கொள்ளுமா இத்தகைய ஊடகங்கள்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ செய்திகளை வாசிப்பவர்களுக்கோ அல்லது காட்சி ஊடகம் வழியாக செய்திகளைப் பார்ப்பவர்களுக்கோ மட்டுமல்ல. இந்த ஊடகங்களுக்கும் சேர்த்துதான்.

Series Navigation