உரையாடும் கலை

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

கோமதி நடராஜன்.


மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் பூர்த்தியடைந்த பின்,அவனது நான்காவது தேடல்,பணம்.பணம் கையில் வந்து, ஒரு அந்தஸ்தான இடம் பிடித்தபின்,கேளிக்கைகள்,பொழுதுபோக்கு அம்சங்கள் என்று, கலைகள் சம்பந்தப்பட்டவைகளாக வரிசையில் நிற்கும்.

கலைகள் அறுபத்து நான்கு என்பது அனைவருக்கும் தெரியும்.அவைகள் அத்தனையையும் என்னவென்று தெரிந்து வைத்திருப்பதும் ஒரு கலைதான்.எல்லா கலைகளையும் எல்லோரும் கற்றுவிட முடியாது.வயது, வாய்ப்பு, நேரம்,விருப்பம் இவைகளை பொறுத்து,சில கலைகளை நாம் கற்றுக் கொள்கிறோம்,அவ்வாறு கற்ற கலைகள் ஏதோ ஒரு சில காரணங்களால் ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு ஒதுங்கி விடுகின்றன,அல்லது நாமே ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.அந்த இழப்பால் பாதிக்க படுவது நாம் மட்டும்தான்.

இசையும் ,ஓவியமும் கற்றிருந்தால் சந்தோஷம்,இல்லையென்றால் பாதகமில்லை.ஆனால் ஒரே ஒரு கலை மட்டும் ,அடுத்தவரை சந்தோஷப் படுத்தமட்டுமே நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அமைந்திருக்கிறது. அதுதான் உரையாடும் கலை. அன்றாட வாழ்க்கையில் நம் கூடவே இருக்கவேண்டிய மிகச் சிறந்த கலை.அத்தியாவசியமானதும் கூட.இதை நிறைய பேர் உதாசீனப் படுத்தி விடுகின்றனர்.

வாத்தியக்கருவிகளும் வாய்ப்பாட்டும் ஓவியமும் சிற்பமும் கற்றிருந்தால்தான் கலைஞன் என்று தவறாகக் கணித்துக் கொள்கின்றனர்.பலர் மனதைக் கவரும் வண்ணம் பேசுவதும் ஒரு கலைதான்.வீணையின் தந்தியை மீட்டும் விதத்தில் மீட்டினால்தானே நாதம் கிளம்புகிறது ,மத்தளத்தை லயத்தோடு தட்டினால்தானே ஓசை இசையாகிறது ?ஏழு ஸ்வரங்களையும் இழை மாறாமல் இசைக்கும் பொழுதுதானே ராகம் நம்மை மெய் மறக்கச் செய்கிறது ?

அதே போல்தான் மனிதனும் உரையாடும் பொழுது,இதமாக மீட்டி,லயத்தோடு தட்டி ,ஸ்வரங்களைக் கோர்த்து உரையாடினால் அதுவும் ஒரு சங்கீதம்தான்.

சங்கீதம் ஓவியம் இவைகள், செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாகி மனதையும் ஈர்க்கும் கலைகள் என்றால்,மனதை குளிர வைத்து,உறவையும்,நட்பையும் பலப்படுத்தும் ஒரே கலை அது உரையாடும் கலையென்று உறுதியாய் சொல்ல முடியும்.இசையும் ஓவியமும் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்,குறையிருந்தால், யாரையும் காயப்படுத்தாது.ஆனால் நம் நா வழி வந்த சொல் கொஞ்சம் பிசகினாலும் எதிராளியை காலங்காலமாய் புண்ணாக்கி விடும்.

நாவினால் சுட்ட வடு,ஆறவே ஆறாது என்று அனுபவித்துச் சொன்னாரோ அல்லது அடுத்தவரைப் பார்த்துச் சொன்னாரோ தெரியவில்லை, ஆழமான இந்த விஷயத்தை மிக அழகாகவே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.வாயிலிருந்து வெளிப்படும் சொல் நுனிநாக்கைத் தாண்டும் முன்பே,அது பூவாய் வருடுமா,முள்ளாய் குத்துமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வோம்.விஷ அம்பாய் வெளிப்படும் என்றால்,தடுக்கப் பார்ப்போம். பன்னீராய் குளிர வைக்கும் என்றால்,தாமதப் படுத்தாமல் அள்ளித் தெளிப்போம்.

சிலருக்கு,அடுத்தவரை ஏளனப்படுத்திப் பார்ப்பதில் அலாதியான சந்தோஷம் இருப்பதாக நினைத்து,வார்த்தைகளுக்கு நடுவே குத்தலும் கேலியும் விதைத்துஉரையாடுவர்.பட்டாம் பூச்சியின் சிறகைக் கிள்ளி எறிந்து துடிக்க விடும் சிறுவனைப் போல், சிலர், எதிராளியை நாலு பேர் நடுவே பரிகசித்துப் பார்ப்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைவர்.

அப்படிப்பட்டவர்கள், உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை உணராதவர்களாகத்தான் இருக்கமுடியும்.மற்ற கலைகளை பயில,ஆர்வத்துடன் சேர்த்து நாட்பட்ட பயிற்சியும் தேவையென்றால்,கனிவாய் உரையாட,மனித நேயத்தின் பெருமையை உணர்ந்திருந்தாலே போதும்.

சிலருடைய நாக்கில் தேள் இருக்குமோ,தீட்டிய அம்பு இருக்குமோ தெரியாது.அப்படி ஒரு கூர்மையும் விஷமும் கலந்து அடுத்தவர் மனதைக் காயப்படுத்தும் தன்மையுடன் தாக்கும். ஒரு புண் என்பது ஆறக் கூடியது,வடு என்பது மாறாது மறையாது, மனதில் காலம் காலமாய் நிலைத்து நின்று நெருடிக் கொண்டே இருக்கும் அம்பை எய்தவன் மறந்து விடுவான்,காயம் பட்டவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

உரையாடும் கலையை வளர்க்க நீங்கள் மெத்தப் படித்த மேதாவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.அடுத்தவர் மனம் பூ போன்றது அதைக் கசக்கி நுகறக் கூடாது கையில் இதமாய்ப் பிடித்து அழகு பார்க்க வேண்டும் என்ற உண்மை தெரிந்தால் போதும் .

வருடக் கணக்கில் பழகிய நண்பர்தானே நம்மை விட்டு ஓட மாட்டார் என்ற தைரியத்தில் நாலு பேர் நடுவே அவர்கள் முகம் வாடும் வண்ணம் அவரது குறைகளை இல்லாமையை இயலாமையைச் சுட்டிக் காட்டி விளையாடாதீர்கள்.பல ஆண்டுகள் பத்திரமாக இருக்கிறதே என்ற எண்ணத்தில் கண்ணாடிப் பாத்திரத்தைக் கீழே போடுவோமா ?

இந்த விஷயத்தில் பெண்கள், தங்களுக்கு ஒரு வடிகாலாக இன்னொரு பெண்ணை,இடறி விட்டு வேடிக்கை பார்ப்பதில் மிகவும் பூரிப்படைகின்றனர்.

சிலர் ஜடப் பொருளுக்குத் தரும் கவனிப்பையும் கரிசனத்தையும் கண்ணில் எதிரே நடமாடும் மனிதர்களுக்குத் தருவதில்லை.பல வருடங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று பொருட்கள் மேல்காட்டும் அக்கரையை முயற்சியை,தன்னைச் சுற்றி வரும் சொந்தங்கள் மீதோ,அண்டி வரும் நண்பர்கள் மீதோ காட்டுவதில்லை.பொருட்களை இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்,உறவையும் நட்பையும் இழந்த பின் மீட்பது இயலாத காரியம்.

எந்த வகையிலெல்லாம், வார்த்தைகள், வேடிக்கை என்ற போர்வைக்குள் மறைத்து விஷ அம்பாக சிலர் வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஓரிரு உதாரணங்களுடன் சொல்லப் படவில்லையென்றால் இக்கட்டுரையின் நோக்கம் பூர்த்தியடையாது.

திருமண விழாக்கள் போன்ற கூட்டங்களுக்கு வரும் பெண்கள்,தங்களை ஆடை அலங்காரங்களில் அழகு படுத்தி பட்டும் வைரமாக வர நினைப்பதில் தவறே இல்லை.அனுபவிக்கத்தானே இறைவன் தருகிறான்.ஆனால்,எளிமையை விரும்புபவர்களும்,இல்லாதவர்களும் ,இயலாதவர்களும் அதே அக்கூட்டத்தில் வளைய வருவார்கள்.ஆடம்பரம்தான் அழகு என்று கணித்து வைத்திருப்பவர்கள் கண்ணில் அவர்கள் பட்டால் போதும்,பன்னீரும் புஷ்பங்களுமாக மணம் பரவி இருக்கும் அந்த ரம்யமான சூழ்நிலையில் ,கழிவு நீர் தெளித்தாற் போல் வார்த்தைகளை வீசுவார்கள்.உதாரணத்துக்கு ஒன்றிரண்டு பார்க்கலாமா ? ‘நினைத்தேன் நீ இந்த புடவையில்தான் வருவாய் என்று ‘; ‘உனக்கு இதை விட்டால் வேறு சாரியே கிடையாதா ? ‘; ‘இன்னும் எத்தனை நாளைக்கு இதையே கட்டிக் கொண்டு வருவாய் ? ‘

இது போன்ற கேள்விகள்,எதிராளி ,ஏழ்மையில் இருப்பவர்களானால் அவர்களை எத்தனை வேதனைக்கு உள்ளாக்கும் என்பதையும்,இயலாதவர்களானால் எத்தனை இக்கட்டான மன உளைச்சலை அவர்களுக்குள் உருவாக்கும் என்பதையும் ,சிலரை எத்தனைக் கோபத்துக்குள்ளாக்கும் என்பதையும் சிந்தித்து வார்த்தைகளைச் சிந்தினால் நல்லது.இக்கேள்வி என்ற திராவகம் எத்தனை குடும்பங்களில் குழப்பங்களை உண்டு பண்ணும் என்பதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை ,அவர்களுடைய அப்போதைய அற்ப சந்தோஷம் பூர்த்தியாகி விட்டது அவ்வளவே,அதன் பாதிப்புகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு அனாவசியம்.

இதே போல் பல சந்தர்ப்பங்களில்,பல விஷயங்களில் தங்கள் மேன்மையைப் பறை சாற்ற,பலர் கழுகளாய் வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

எப்படியெல்லாம் அடுத்தவரைப் புண்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் ,இது போல் பல விஷங்களில்,பல சந்தர்ப்பங்களில் பலர் அடுத்தவர் மனதைப் புண் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.எல்லாவற்றையும் எழுதினால் என் எழுத்தின் இதம் குறைந்து போகுமோ என்று அஞ்சி, கடுமை கலந்து விடுமோ என்று கருதி எழுதாமல் விடுகிறேன்.

மனித நேயம் என்பதன் முழு அர்த்தம் புரியாவிட்டாலும் பாதகமில்லை,ஒரு சதவிகிதம் அறிந்தால் கூட போதுமே!பேசும்பொழுது நாவைக் கொஞ்சமாவது அடக்க இயலும்,இல்லையென்றால் ஒரங்குல நாக்கு ஒன்பதடி நாகத்துக்கு சமமாக விஷத்தை உமிழுந்து யாரையும் ஒட்ட விடாமல் ஓட்டி விடும்.

ஆறாவது அறிவை ஆண்டவன் எதற்காகத் தந்திருக்கிறான் என்பதை,ஆடை அணிகலன்களுக்குப் பின்னே ஓடும் நேரத்தின் ரு பகுதியை ஒதுக்கி வைத்து யோசித்துப் பார்க்கலாம் இல்லையா ?

கண்ணீரோடு வருபவர்களின் கவலைக்குக் காது கொடுங்கள்,மன உழைச்சலோடு வருபவர்களின் உள்ளத்துக்கு உரமூட்டுங்கள், ய்ந்து வருபவர்களை உற்சாகப் படுத்துங்கள்.இதற்காக எந்த பயிற்சி நிலையமும் போகத்தேவையில்லை.நாம் அடுத்தவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைத்தான் அடுத்தவருக்கும் நாம் தர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றால் போதும் ,வார்த்தைகள்,மணமுள்ள மலராகவும் ,குளிர்ந்த பன்னீராகவும்,வருடும் மயிலிரகாகவும்,இனிய தேனாகவும் வந்து விழும்.

‘உடையில் எளிமை,எண்ணத்தில் ஏற்றம் ‘ என்று விவேகாநந்தர்,காந்தி, காமராசர் என்று எத்தனையோ மகான்கள் பரியவர்கள் வாழ்க்கைக்கு வழி காட்டி வாழ்ந்து மறைந்தாலும் நாம் இன்னும் பொய்யான போலியான வாழ்க்கைதான் உகந்தது என்றே இருக்கிறோம்.கொஞ்சம் மாறுவோமே!நாலு பேர் சந்தோஷப் படும் விதமாக உரையாடலில் கொஞ்சம் பட்டு இழைகளை நுழைப்போமே,ஜரிகையின் பிராகாசத்தை ஏற்றுவோமே,மேனியில் மட்டும் அழகு போர்த்தினால் போதாது, தானியிலும் மெருகேற்றுவோமே.

கோமதி நடராஜன்.

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்