உருமாறும் உறவுகள்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார்


காலம் தன் கோலங்களைக்
காட்சிப் பொருட்களாய்க் கண்முன்னே
காட்டிச் செல்லும் போதெல்லாம்
கலங்கிக் கொள்ளும் என்கண்கள்.

தந்தையின் இழப்பு
தாயின் இயலாமை!
தங்கையின் எதிர்காலம்
தம்பியின் மேற்படிப்பு!!

இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது
இலேசாக என் இதையம்
இத்தனை தடைகளையும் தாண்டி
இமயம்போல் நிற்பதை யெண்ணி.

உறவுகளும் ஒரு நாள்
உருமாறு மென நினைத்ததுண்டு – ஆனால்
சொந்தங்களே உருமாறி எங்கள்
பந்தங்களை அழிக்குமென நினைத்ததில்லை.

மாமா மச்சான் என
மயக்கும் சொந்தங்களைக் காட்டி
மங்கை யெனும் மதுவூட்டி
மதிமயங்கச் செய்துவிட்டனர் ஓருறவை.

இளங் கன்றும் பயமறியாது
இடித்து விட்டது இதயமதில்
அடிதாங்கிப் பழகிப்போன இதயம்
இடிதாங்கச் சிறிது சிரமப்பட்டது.

புரண்டு புரண்டு படுத்தநான்
வரண்டு போன நாவினை
ஈரமாக்க எண்ணி இதமாக
இரண்டு மிட்டாய்களை உட்கொள்கிறேன்.

இதயமும் நசுங்கி உள்ளேயிருந்து
உதிரத்தை வெளியேற்றுவதுபோல் ஓருணர்வு
உணர்ச்சியற்ற நாவினை மெதுவாக
உரசிப்பார்க்கிறேன் விரல் நுனிகளால்.

நா இரத்தம் கசிந்ததுபோல்
நாலா பக்கமும் பரவிக்கிடக்கிறது
இதயத்தின் உதிரமா மிட்டாய்களின்
கசிவா எனத் தெரியவில்லை!

—-

abdulgaffar9@yahoo.com

Series Navigation