ஈன்ற பொழுதில்….

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஈழநாதன்


மகனே…!
அன்றொருநாள்
எனக்கு,
உனையீன்ற பொழுதிலும்
பெரிதும் வலித்தது!

ஊரு விட்டு
ஊரு வந்து,
தங்கியிருந்த ஓர் நாளில்,
என் கண்முன்னே
உன்னுடலம்,
கண்டும் காணாமலும் நான்.!

சந்தை செல்லும் வழியில்
சுட்டுப் போட்டிருந்தார்கள்.
உடம்பெங்கும் துளைபட,
திறந்த விழி வெறிக்க,
பெற்றவென் வயிறு வலிக்க,

இரவுச் சுற்றிவளைப்போடு
அதுவாகிப்போன!
நீ கிடந்தாய்.

உன்னுடலில் மொய்த்திருந்த
இலையான்களிலும் பார்க்க
உன்னை மொய்த்திருந்த
இராணுவம் அதிகம்!!

‘யார் பெத்த பிள்ளையோ ‘
இரக்கப்படவெனவே
பிறந்திருக்கும் சிலர்
உச்சுக் கொட்டினார்கள்.

எனக்குத் தெரியும்!
உனக்கும் தெரியும்!!
நீ…
நான் பெத்த பிள்ளை.

ஐயிரண்டு திங்கள்
அங்கமெல்லாம் நொந்து,
நான் சுமந்து பெத்த
பிள்ளை!

கர்ணன் பெத்த குந்தி போல
குந்தியிருந்து,
குமுறியழ
எனக்கும் ஆசைதான்.

உனக்காக
அழும் அழுகை
உன்னோடை தங்கச்சிக்கு
எமனாக மாறிவிடும்!

நீ என் மகனென்று
தெரியவரும்
இப்பொழுதில்,
என் வீடு…
சுத்திவளைக்கப்படும்.

கட்டிய துணியுடன்,
இராணுவமுகாமுக்கு
இழுபடுவாள்
உன் தங்கை!

வாய் வரைக்கும்
வந்துவிட்ட
ஒப்பார,ி
தொண்டைக்குழியோடு
காணமற் போனது.

ஐயோ என் மகனே..!
பெற்ற மகனையே,
பேரு சொல்லி
அழமுடியாப்
பாவியாப் போனேனே!.

உன்னை
ஈன்ற பொழுதிலும்….
பெரிதும் வலிக்கிறதே!
—-
eelanathan@hotmail.com

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்