இல்லம்…

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்)


சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே
சேர்த்துக் கட்டியதெல்லம்
கட்டடமாகுமே தவிர
இல்லமாவது இல்லை… அது

உறவுகளின் உணர்வும்
அன்பின் அந்யோன்யமும்
இதயங்களின் ஈடுபாடும்
இணைந்து எழுப்பப்படுவது.

கதவு திறக்கப்படும் போது
ஓங்கி ஒலிக்கிறது
மழலைகளின் கூக்குரல்…

பணிப்பெண்களின் கவனிப்பால்
பாரமரிக்கப்பட்டாலும்
உள்ளறையிலிருந்து
அவ்வப்போது இரும்புகிற தாத்தா…

சுமங்கலியாய் போய்ச்சேர்ந்தால்
சுவற்றில் கண்ணாடிக்குள் தொங்கும்
கண்ணாடிப் போட்ட பாட்டி…

அடுத்த புளோக்கிலிருந்து
அவ்வப்போது வந்துபோகும்
அப்பா… அம்மா…

இன்னும் இது போன்ற
உடைந்து போகாத
உறவுகளின்
உறவுமட்டுமே
என் குடியிருப்பை
நிச்சயமாக்குகின்றன…
“இல்லம்” என்று.

sathiyamozhi@yahoo.com

Series Navigation

இல்லம்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


‘அப்பா சூரியனுக்கு
அன்றாடம் இரவு வேலை!
எப்போது போவாரென்று
இரவு வரக் காத்திருந்து
‘ஆகாயப் புல்வெளியில் ‘
அம்மா நிலாவையும்
அழைத்து வந்து விளையாடும்
நட்சத்திரப் பிள்ளைகள்!

விரைந்தோடும் நிலவைச்சுற்றி
‘வெள்ளைவட்டம் ‘ போடுவதும்
மறைந்து கொண்டும்
‘காற்றுக் கையால் ‘
திறந்து முகம் மூடுவதுமாய்
‘கருப்புமேகப் போர்வைக்குள் ‘
கண்ணாமூச்சி ஆட்டம்!

அதிகாலை வேலை முடிந்து
அப்பா சூரியன் திரும்பி வர
ஒளியிழந்து நிலவுத்தாய்
ஒடுங்கி நிற்க…

துள்ளாட்டம் போட்ட விண்மீன்கள்
துளிர்த்த ‘வியர்வைப் பனித்துளியை ‘
துடைத்தெறிந்து விட்டு
அப்பா அடிப்பாரெனத்
தப்பியோடி மறைகிறதோ!“

ஏவுகணை வீச்சால் – கூரை
இடிந்த வீட்டில் பெற்றோர்
வருந்தியிருக்க….
வானை வியந்து ரசிக்கிறது…
குழந்தை!

– —- –
( feenix75@yahoo.co.in)

Series Navigation

இல்லம்…

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர்


இந்த உலகம்
இங்குதான் விடிகிறது.

எங்களின் உயிர்கள்
உயிர்ப்பதெல்லாம்
இங்குதான்.

மூழ்கி முத்தள்ளினாலும்
மூச்சு விடுவது
இங்குதான்.

கடலையே வளைத்தாலும்
இந்தக்
கரைக்கு வந்துதான்
வலைகளை இழுக்க வேண்டும்.

ஓடியாடிய உழைப்புக்கு
உடன் பெறும் ஊதியம் இங்குதான்.
அசதியிலேந்தும்
அன்பின் மடி இங்குதான்.

வெற்றியின் முதல் படி
இங்கிருந்துதான்.

தேடிப் பாடித் திரிந்தப் பறவை
திரும்பும் கூடு இதுதான்.

கட்டியாடும் ஊஞ்சல்
உட்கார வைக்கும் நாற்காலி
நடக்க வைக்கும் நடைவண்டி
கதவோரம்
காத்திருக்கும் அழைப்புமணி
இன்னும்
எல்லா உறவுகளோடு

நிம்மதியான நித்திரையிலிருந்து
நிசமாகவே எழுப்புகிற
எழுப்புமணி தீண்டல்
இங்கேதான்.

எங்கலைந்தாலும் எங்கும் கிடைக்காத
உறக்கம் மட்டுமல்ல…
எங்கோ இருக்கும் எதையும் எட்ட
எழுதலும் இங்குதான்.

இந்த உலகம்
இங்குதான் விடிகிறது.

ஒவ்வொருவருக்கும்
இந்த
உலகத்துக்குள் ஒரு உலகம்
இந்த இல்லம்.
(சிங்கப்பூரில் மாதாமாதம் நடக்கும் “கவிமாலை” நிகழ்வின் மேமாத கவிதைத்தலைப்பு “இல்லம்”)

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்.
thamilmathi@yahoo.com

Series Navigation