இலையுதிர் காலம்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

வெ. அனந்த நாராயணன்


பெய்து ஓய்ந்த மழையில்
உதிர்ந்து விழுந்த
இலைகள் மேல்
மரங்களின் கண்ணீர்

நாற்பத்தியெட்டு
வருடங்களுக்குமுன்
இதேபோலொரு
மாலையில்
என் அம்மா
என் வருகைக்காகக்
காத்திருந்திருப்பார்

நானில்லாத அந்த
உலகம்
எப்பவும்போல்
அப்பவும்
இயங்கிக்கொண்டுதான்
இருந்திருக்கும்

இந்த ஈரக்காற்றில்
இன்று நான்
என் அப்பாவையும்
தாத்தாவையும்
தேடுவது போல்

நூறு வருடங்களுக்குப் பிறகு
என் கொள்ளுப் பேரன்
இதைப் படித்துவிட்டு
இன்னொரு
நானில்லாத உலகில்
என்னைத் தேடக்கூடும்

அப்பவும்
நானில்லாத அந்த
உலகம்
எப்பவும் போல்
இயங்கிக்கொண்டுதான்
இருக்கும்

— வெ. அனந்த நாராயணன்

Series Navigation

இலையுதிர் காலம்

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

பசுபதி


வேகமான நடைக்குப்பின்
மேல்மூச்சு, கீழ்மூச்சு.
‘மேப்பிள் ‘ மரத்தடிப் பெஞ்சில்
வியர்த்தபடி விழுந்தேன்.

வழக்கமாய் வம்பளக்க வரும்
வயோதிக நண்பர் இன்றும்
வரவில்லை. அவரைப் பார்த்து
வாரம் ஒன்றாச்சே ?

பச்சோந்தி போல் நிறமாறிப்
பழுப்புச் சிவப்புப் படர்ந்த
பச்சையிலை எந்தலை மேல்
‘பாரசூட் ‘ செய்தது.

நண்பரின் நகைப்பு
நினைவில் துளிர்த்தது.

‘பச்சையிலை சிவப்பாவது வெறும்
பருவத்தின் சேட்டை!
சிவப்பு பச்சையாவதோ
சிருஷ்டியில் அபூர்வம்!
சேர்ந்தேன் முதலில்
சிவப்புக் கட்சி !
அஞ்சுவருடமாய்ப் ‘பசுமை
அமைதி ‘க் கட்சி ! ‘

நகைப்பு நிற்கும்.
நரைமுடி சூடேறும்.

‘பரந்த மரத்தடியில்
பச்சையிலையும் விழும்.
பறவை எச்சமும் விழும் !
எந்த எச்சம் தெரியுமா ? ‘

கண்கள் சிவக்கும்.
கைத்தடி ஆடும்.

‘பரிதியை மறைத்துப்
பறக்கும் பேய்ப்பறவை.
காலனை மடியில் கட்டிக்
கனலுமிழும் கழுகு.
பொத்தானை அமுத்தினால்
சைத்தானை எச்சமிடும்
போர்விமானப் பருந்து.
பச்சிளம் சிறாரைச்
சிவப்புச் சேற்றில்
புதைக்கும் எச்சம். ‘

நண்பரின் வீட்டுப் பக்கம்
நடையைக் கட்டினேன்.

கதவைத் திறந்த பெண்மணியின்
கனத்த முகம் பொட்டில் அறைந்தது.

இலையுதிர் காலம்.
பழமுதிர்க்கும் காலன்.
பசுமைப் பழம்
அமைதி அடைந்துவிட்டது.

‘காரணமதாக வந்து புவிமீதே
காலன் அணுகா திசைந்து
கதி காண…. ‘
பழமுதிர் சோலை. ஆறாம்
படைவீட்டுத் திருப்புகழ்.
பாடியே நாடினேன்
வீடு.

*********
பசுமை அமைதி = Green Peace

Series Navigation

author

பசுபதி

பசுபதி

Similar Posts