இறுதியாய் ஒரு கேள்வி…!

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

புஹாரி, கனடா


இரத்த நயாகராவில்
மீண்டும் மீண்டும்
மனித உயிர்த் தாகத்தோடு
மதர்ப்பாய் நீராடும்
மத மங்கையரே…

உங்கள்
மோகனப் பார்வைகளின்
பூரண ஈர்ப்பில்
மேலும் மேலும்
சுண்டி இழுக்கப்பட்டுச்
சுருண்டுவிழும்
பாமர ஆத்மாக்கள்…
பக்திப் பெருக்கெடுத்து
கண்கள் மூடி
கைகள் கூப்பி
தங்கள் தலைகளிலேயே
கொள்ளி வைத்துக்கொள்கிறார்கள்…

வாருங்கள்..
வந்து உங்கள் கூந்தலை
உலர்த்திக்கொள்ளுங்கள்…

O

கீதை அழுகிறது…
குர்ன் தேம்புகிறது…
பைபிள் கண்ணீர் வடிக்கிறது…

வாழ்க்கையைத்தானே
வரையறுத்துச் சொன்னோம்…!
இறைவனைத்தானே
கண்டு பிடித்துத்தந்தோம்!

இந்த
மத வாகனங்களோ
இவர்களை
வாழ்க்கைச் சொர்க்கத்திற்கு
இட்டுச் செல்லாமல்…
இப்படி
மூர்க்கமாய் முட்டிக்கொண்டு
சடல தாகம்கொண்ட
சுடுகாட்டையல்லவா
தங்களின்
வெற்றிமேடையாக்கிவிட்டன… ?

O

இப்படி
மாண்டு தீர்ந்தால்…

இந்த
மதங்கள் யாருக்கு… ?

அந்த
இறைவன்தான் யாருக்கு… ?

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா