இருளிலிருந்து பேரிருளுக்கு

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

கே ரவி ஸ்ரீனிவாஸ்


தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் பரிசுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தின் ஒரு வெளிப்பாடுதான் வெ.சா

கடிதமும், அதன் மீதான எதிர்வினையும். காலச்சுவடு இதழில் பரிசுகள் பெற லாபி செய்வது குறித்து கண்ணன் குறிப்பிடுவது இங்கு நிலவும் விழுமியங்கள், மதிப்பீடுகள் எத்தகையவை என்பதை தெளிவாக்குகின்றன(1). பல பரிசுகளில் பரிந்துரைத்தவர்(கள்) பெயர் கூட வெளியிடப்படுவதில்லை என்பதும், பரிசு பெற்றவருக்கு யார் யார் அவர் பெயரை

சிபாரிசு செய்தார்கள் என்பது கூட சொல்லப்படுவதில்லை என்பதையெல்லாம் அவருக்குத் தெரியாது போதும். பல

சமயங்களில் ஒருவர் பரிந்துரைப்பதைக் வெளியில் கூறக் கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. லாபி

செய்வதை அவர் நியாயப்படுத்துவது லஞ்சம் வாங்குவதை, கொடுப்பதை நியாயப்படுத்துவதற்கு ஒப்பானது.லாபி செய்வது எதிர்மறையாக, கேவலமான ஒரு செயலாகத்தான் கருதப்படுகிறது, கருதப்படவேண்டும். பல அறக்கட்டளைகள் தாங்கள் வழங்கும் ஆராய்ச்சி தொகைகள், விருதுகள் போன்றவற்றிற்கு ‘lobbying or trying to influence the selection process in any way will be a disqualification ‘ என்பதை நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ தெரிவித்துவிடுகின்றன.

சில சர்வதேச விருதுகளுக்கு பொருத்தமான நபர்களை / அமைப்புகளை பரிந்துரைக்க எனக்கு வாய்ப்புகள் கிட்டியுள்ளன.அதற்காக நான் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்க முடியாது, இப்படி பரிந்துரைக்கிறேன் என்பதையும் வெளியில் கூறக் கூடாது. மேலும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் தெரிவிக்கப்படுவதில்லை. முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு பேராசிரியர் ஒரு சர்வதேச கலைகளஞ்சியத்தில் இந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுகிறீர்களாரா எனக்கு எழுதினார். அவர் ஏன் எனக்கு எழுதினார் என்பதை நான் கேட்கவில்லை, ஏனெனில் யாரோ என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிந்தது. நான் எழுதியதை யாரோ கவனித்து நான் இது குறித்து எழுதப் பொருத்தமானவர் என்று பரிந்துரைத்துள்ளார். அது யார் என்பதை நானறியேன். இது போல் சர்வதேச அமைப்புகள் வெள்ியிடும் சில அறிக்கைகளை, அல்லது சில பகுதிகளை peer review செய்ய வாய்ப்புக் கிடைத்து. இது எப்படி என்பது எனக்குத் தெரியாது. யாரோ பரிந்துரைத்துள்ளார்கள் அல்லது யாரோ நான் பொருத்தமான நபர் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். என் நண்பர் ஒருவருக்கு அவர் விண்ணப்பம் அனுப்பாமாலே ஒரு வாய்ப்பு தேடி வந்தது.அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைகழகம் ஒன்றில் பாடம் கற்பிக்க விருப்பமா என்று அப்பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். என் நண்பருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது அங்கு காலியாக இருந்த ஒரு இடத்திற்கு இவர் பொருத்தமானவர் என்று சர்வதேச அளவில் அறியப்பட்ட இரண்டு புகழ்பெற்ற பேராசிரியர்கள் இவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். என் நண்பர் பல பேராசியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர் அல்ல.எப்போதாவது சந்திப்பது அல்லது கட்டுரைகள் குறித்து கடிதத் தொடர்பு இவைதான் உண்டு. எனவே தன்னை இரண்டு பேர் பரிந்துரைத்தார்கள் என்பது பின்னரே தெரிய வந்தது. அவராக யாருக்கும் என்னை பரிந்துரையுங்கள் என்று எழுதவில்லை, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவுமில்லை. காற்றினிலே வரும் கீதங்களை மட்டுமே கேட்பவர்களுக்கும், லாபி செய்வதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கும் என்பது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஒருவர் சக ஆய்வாளர்களால், peer களால் எப்படி கருதப்படுகிறார் என்பது முக்கியம், தொடர்புகள், லாபி செய்வதல்ல. ஆனால் இங்கு பலருக்கு தனக்கு இணையாக யாரும் கிடையாது, அதாவது peer என்று யாரையும் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு உச்சத்தில் இருக்கிறோம் என்ற நினைப்புதான் இருக்கிறது. எனவே விருதுகளும், பரிசுகளும் ஆய்வாளர்கள் பலருக்கு இன்ப அதிர்ச்சிகளாக இருக்கின்றன, லாபி செய்வது என்பது இழி செயலாக கருதப்படுகிறது. இங்கோ இது தலை கீழ் என்பதை கண்னன் கூறியுள்ளது காட்டுகிறது.

வெ.சா கட்டுரையில் பாருங்கள் ஏகப்பட்ட புலம்பல்கள் நான் ஒரு விருது வாங்கியிருக்கிறேன் ஒரு பத்து பேர் கூட நேரில் வாழ்த்தவில்லை அது மட்டும்ல்ல எனக்கு பரிசு கொடுத்ததை விமர்சிக்கிறார்கள். ஒரிடத்திலாவது எனக்குப் பரிசுகள்,விருதுகள் ஒரு பொருட்டல்ல என்று குறிப்பிடவில்லை. தமிழக அரசு பரிசு தந்தால் கூட நிராகரித்திருப்ே0பன் என்று எழுதவில்லை. மாறாக அது கிடைக்காமல் போன மர்மம் குறித்துத்தான் அவர் கவலை கொள்கிறார். நோபல் பரிசு கிடைத்தும் நிராகரித்த ?ீன் பால் சார்த் நம் நினைவிற்கு வருகிறார். லாபி செய்வதை ஒருவர் நியாயப்படுத்துகிறார்.அவரவர் தார்மீக நியாயங்கள் அப்படி.

கிருஷ்ண ராஜ் 1967 முதல் 2004 ல் மரணமடையும் வரை Economic & Political Weeklyன் ஆசிரியராக இருந்தவர். அவருக்கு பத்திரிகையாளர்களுக்கு தரப்படும் கோயாங்கா விருது கிடைத்தது.எனக்குத் தெரிந்து அது குறித்து EPWல் செய்தியோ, பாராட்டுக்கடிதமோ வரவில்லை.அதே சமயம் EPWல் பல விவாதங்கள் நடந்துள்ளன,EPW குறித்தும் கூட ஒரு கட்டத்தில் விவாதம் எழுந்தது, அதற்கும் இடம் அளித்து EPW ஒரு பொதுவான களம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார். (மறைந்த) தர்மா குமார் குறித்து அசோக் மித்ரா தர்மா குமார் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் போது எழுதிய கட்டுரையை விமர்சித்து EPWல் கடிதங்கள் வெளியியாயின. மித்ரா EPWவுடன் நெருங்கிய தொடர்புயையவர்.EPW வை வெளியிடும் சமீக்ஷா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் பல ஆண்டுகள் இருந்தவர் (இப்போதும் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது). அதற்காக அவர் எழுதியதை விமர்சிக்கக் கூடாது என்று ராஜ் கருதவில்லை. மாறாக EPW வில் அறிவார்ந்த விவாதங்கள் நடைபெற வேண்டும், பல்வேறு கருத்துகளுக்கு இடம் தர வேண்டும் என விரும்பினார். அதை ஊக்குவித்தார். இதை என் அனுபவத்தின் அடிப்படையில் என்னால் உறுதியாகக் கூற முடியும். சர்வ தேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு பேராசிரியர் எழுதியதை விமர்சித்து ஒரு சாதாரண வாசகர் அல்லது ஒரு மாணவர் எழுதினால் அதில் பொருள் இருக்குமானால் அதை ஒரு வார்த்தைக் கூட குறைக்காது வெளியிடும் EPW.அங்கு அறிவார்ந்த விவாதம்தான் முக்கியம், ஆளுமைகளின் ego அல்ல. எத்தனை தமிழ் சிறுபத்திரிகைகள் குறித்து நாம் அவ்வாறு கூற முடியும்.தன் புகைப்படம் கூட பத்திரிகைகளில்,நாளிதழ்களில் வெளியாவதை அவர் விரும்பவில்லை.அவர் மரணமுற்ற பின்தான் அவரது புகைப்படம் நாளிதழ்களில் வெளியானது. (தன் புகைப்படம் வெளியாவதை, தன்னைப் பற்றி எழுதுவதை விரும்பாத இன்னொருவர் குமுதத்தின் நிறுவனர்-ஆசிரியர். அவர் மரணமடைந்த பின் தான் அவர் புகைப்படம் குமுதத்தில் வெளியானது. அதே சமயம் குமுதத்தின் கெளரவ ஆசிரியராக இருந்த டாக்டர்.அழகப்ப செட்டியார் குறித்து ஆண்டுதோறும் ஒரு அஞ்சலிக் கட்டுரை வெளியாக வேண்டும் என்பதை அவர் கடைப்பிடித்தார்).

பல ஜர்னல்களின் ஆசிரியர்கள் தத்தம் துறையில் விற்பன்னர்களாக இருப்பார்கள்.அவர்கள் பெறும் பரிசுகள், விருதுகள் குறித்த செய்திகள், ஜர்னல்களில் வெளியாவது அத்துறை தொடர்புடைய விருதுகள் குறித்து அறிவிப்புகளுடன் வெளியாகும், அவ்வளவுதான். பலரின் சாதனைகள்,பெற்ற விருதுகள் குறித்த முழுமையான தகவல்கள் அவர்கள் மரணமடைந்த பின், அல்லது பதவி விலகிய பின் வெளியாகும் குறிப்புகள் மூலம்தான் தெரிய வரும்.ஏனெனில் ஜர்னல்களின் நோக்கம் தனி நபரை முன்னிறுத்துவது அல்ல. மடங்கள் அமைப்பது அல்ல. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கள் ஆண்டு தோறும் இளம் விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. விருது பெற்றோர் பற்றிய குறிப்பும், பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய குறிப்பையும் ஆங்கில நாளேடுகளில் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாரட்டி யாரும் விளம்பரம் கொடுத்தோ அல்லது போ ?டர் ஒட்டியோ பார்த்ததில்லை. இது போல் பலதுறைகளில் பல்வேறு பரிசுகள்,விருதுகள் உள்ளன. பல சமயங்களில் பரிசு பெற்றவர்கள் தங்கள் ஆய்வு நிலையங்களில் இதற்கென்று ஒரு சிறு விருந்து கொடுத்து கொண்டாடுவதுடன் முடித்துக் கொள்வார்கள்.அடுத்த வீட்டுக்கார்களிடமும், சொந்தக்கார்களிடமும் கூட தாங்கள் பெறும் பரிசு குறித்து குறிப்பிடத் தயங்கும் பலர் இருக்கிறார்கள். பல்கலைக்கழக செய்திக் குறிப்புகள் அல்லது இணையதளத்தில் பல்கலைகழகங்கள் அல்லது ஆய்வு மையங்கள் தரும் தகவல்கள் மூலம்தான் பல சமயங்களில் இன்னாருக்கு இந்தப் பரிசும் விருதும் கிடைத்திருக்கிறது என்பதே தெரியவரும். சம்பந்தப்பட்ட நபர் அது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செயதிருக்கமாட்டார் அல்லது ஊடகங்களுக்கு தகவல் தந்திருக்கமாட்டார். ஏனெனில் பலருக்கு பரிசுகளும்,விருதுகள் முக்கியமே அல்ல. தாங்கள் என்ன செய்கிறோம், செய்யப் போகிறோம் என்பதும், தங்கள் பங்களிப்பு அத்துறையில்லுள்ள பிறரால் எப்படி மதிப்பிடப்படுகிறது என்பவையே முக்கியம். ஆனால் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் பரிசுகள், விருதுகள் குறித்த சர்ச்சைகள், பரிசுகளுக்கும்,விருதுகளுக்கும் தரும் முக்கியத்துவம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.சகிக்க முடியாத ஆபாசம் இது.

சுஜாதாவிற்கு வாஷ்விக் விருது கிடைத்திருப்பதை அவர் விகடனில் எழுதிய பின்னரே பலருக்குத் தெரிந்திருக்கும்.

இந்த விருது குறித்து எத்தனை தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. ஹிந்துவில் செய்தி

வெளியாயிருக்கும் நான் கவனிக்கவில்லை என்று தேடினால் இணயதளம் ஹைதராபாத் பதிப்பில் ஒரு செய்தியை

காட்டுகிறது , அங்கு உள்ள ஒரு விஞ்ஞானி இப்பரிசு பெற்றதை. அதில் பரிசு பெற்ற பிறர் பற்றி தகவல் இல்லை.

பரிசு தரும் அமைப்பின் இணையதளமும் முழுத்தகவல்களை தரவில்லை. இவ்வளவிற்கும் இப்பரிசு 1970 களிலிருந்து

வழங்கப்படுகிறது. அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்ற செய்தி வெளியான போது தமிழில் ஒரு வார இதழின் அட்டையை அலங்கரித்தது அப்போது டோக்கியோவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் (இரண்டாம் ?) பரிசு பெற்றிருந்த ஸ்வேதா (ஜெய்சங்கர்). அமர்த்தியா சென் குறித்தும், அவரது பங்களிப்பு குறித்தும் தமிழில் எத்தனை பக்கங்கள் , சிறு பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளன. தி.க.சிக்கு சாகித்ய அகாதமி பரிசு தரப்பட்ட போது அதற்கு காலச்சுவடு எத்தனைப் பக்கங்களை அதை விமர்சிக்க ஒதுக்கியது. இது தேவைதானா என்று வெ.சா கேட்டிருக்கிறாரா ?. அல்லது

ஜெயமோகன் கேட்டிருக்கிறாரா ? அன்று தி.க.சிக்கு விருது கொடுத்ததற்கு கூட்டாக ஒப்பாரிதானே வைத்தார்கள். தமிழில் ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி பரிசுகளை குறித்து சர்ச்சை எழாவிட்டால்தான் ஆச்சரியம் என்ற நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பிற மொழிகளில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதை விட தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு விருது கிடைத்துவிட்டால் அதை விமர்சிக்கவே சிறு பத்திரிகைகள் அதிக பக்கங்களை ஒதுக்குகின்றன. அந்த விமர்சனங்கள் கூட பல சமயங்களில் சரியாக எழுதப்படுவதில்லை. வைரமுத்துவிற்கு விருது கிடைத்த போது அது குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கூட அவரால் வைக்க முடியாது என்பதைக் காட்டியது.

அதே சமயம் வெ.சா விற்கு இன்னொன்று புரியவில்லை என்று தோன்றுகிறது. பரிசு தரும் அமைப்புகள் பரிசு குறித்த விபரம்,பரிசு பெற்றோர் குறித்த தகவல்கள், பரிசு வழங்கப்படும் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பரவலாக தெரியப்படுத்த முயற்சி எடுக்கும். புகைப்படத்துடன் பத்திரிகைகளுக்கு செய்தி அறிக்கை அனுப்பும், மேல் விபரங்களுக்கு யாரை அணுக வேண்டும் என்பதையும் தெரியபடுத்தும். இந்த விருதினை வழங்கியவர்கள் அவ்வாறு செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. பொதுவாக பிரபலமாகாத ஒரு அமைப்பின் பெயரில் வெளியாகும் பரிசு அறிக்கையை விட ஒரு பல்கலைகழகத்தின் பெயரில் ஒரு பரிசு அறிக்கை வெளியானால் அது அதிக கவனம் பெறும். இங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.எத்தனயோ விருதுகளும், பரிசுகளும் தரப்படும் உலகில் ஒரு சிலவே கவனம் பெறுவதில் வியப்பில்லை. எனவே வெ.சா வின் புலம்பல்கள் ஐயோ பாவம் அவர் என்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள முழுக்கடிதத்தை நான் படிக்கவில்லை.இணையத்தில் வெளியான ஒரு பகுதியைப் படித்தேன். வெ.சா அந்தப் பரிசுக்குத் தகுதியவற்றவர் என்ற அளவில் அவர் தன் கருத்தினை எழுதியிருக்கலாம். அதற்கு அப்பால் பரிசின் புனிதம் குறித்தெல்லாம் எழுதியிருக்கத் தேவையில்லை. பரிசுகளுக்கென்று புனிதத்தைத் கற்பித்து, சிலரை புனிதர்களாகவும், சிலரை பாவிகளாக்கவும் சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.இந்தப் பரிசு விவகாரம் இவ்வளவு பெரிதுபடுத்தப்பட வேண்டிய ஒன்றே அல்ல. இது ஒரு விருது அல்லது பரிசு அவ்வளவுதான். வெ.சா வைப் பற்றி எழுதும் போது ஒரு வரி அல்லது இரண்டு வரி எழுத இது பயன்படலாம். இதை வைத்துத்தான் வெ.சாவை மதிப்பிடுவார்கள் என்று கருதத்தேவையில்லை. எனவே கோழி பிடிப்பது ஆனை பிடிப்பது என்று எழுதிக்கொள்வது அவரவர் மன நிலையையும், பரிசுகளுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. இதைப் பெற்றதால் அவர் சிறந்த விமர்சகர் அல்லது பரிசு எதையும் பெறாததால் அவர் விமர்சகரே அல்ல என்றா கருதமுடியும்.வெ.சா எழுதியுள்ளதை வைத்துத்தான் அவரை மதிப்பிட முடியும், விருதுகளை வைத்து அல்ல. இந்தப் புரிதல் இருந்தால் வெ.சா இதை இவ்வளவு பெரிதுபடுத்தி இருக்கமாட்டார். இங்கு வெளிப்படுவது தார்மீக கோபமல்ல, காயமடைந்த ஒரு ego வின் ஆத்திரம். இது இணையத்தில் மூன்று வெளியீடுகளில் வருவது தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது என்பதைக் காட்டுகிறது.

வெ.சா இப்படி ஒரு நீண்ட கட்டுரை எழுதியதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

‘எனக்கு பரிசு கொடுத்தது குறித்து சிலர் கண்டனம்,விமர்சனம் தெரிவித்துள்ளனர்.நான் இந்தப் பரிசினைப் பெற முயல்வில்லை, அவர்களாக தெரிவு செய்து கொடுத்தது. இப்பரிசிற்கு நான் தகுதியுடயவனா இல்லையா என்பதை நான் இத்தனை ஆண்டுகளாக எழுதியுள்ளதை காய்தல் உவர்த்தலின்றி படிக்கும் எவரும் முடிவு செய்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை பரிசுகள்,விருதுகள் முக்கியமானவை அல்ல.நான் என்ன எழுதுகிறேன் என்பதே முக்கியம். அதன் அடிப்படையில்தான் காலம் என்னை மதிப்பிடும், பரிசுகளின் அடிப்படையில் அல்ல என்று நான் உறுதியாக கருதுகிறேன் ‘.

நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிஸ் ஒரு கட்டுரையை சயன்சில் எழுதினால், அதற்கு பதிலாக அதை விமர்சித்து ஒருவர் கட்டுரை எழுதினால் அதில் பொருள் இருப்பின் சயன் ? வெளியிடும், வெளியிட்டுள்ளது. நோபல் பரிசு பெற்றவர்கள்களை விமர்சிக்கக் கூடாது என்று எனக்குத் தெரிந்து ஒரு ?ர்னலும் விதிகளை வகுக்கவில்லை. சில வாரங்கள் முன்பு நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியலாளர் பங்கேற்ற ஒரு பயிலரங்கில் பங்கேற்றேன்.அமர்வு முடிந்ததும் அவரும் பிறர் போல் வரிசையில் நின்று காபி பெற்றுக்கொண்டார். பிறருடன் எந்த பந்தாவும் இல்லாமல் உரையாடினார். கூட பாதுகாப்புப் படையில்லை, அமர்வில் அவருக்கென்று தரப்பட்டிருந்த இருக்கை பிறருக்கு தரப்பட்டிருந்த இருக்கைக்கு சமமானதே.அவர் சர் பட்டம் பெற்றவர்.ஆனால் பலர் அவரை பெயர் சொல்லியே விளித்தார்கள், கேள்விகள் கேட்டார்கள்.அவர் கருத்தும் விமர்சிக்கப்பட்டது. இதற்காக நான் நோபல் பரிசு பெற்றவன், நான் சொல்வதை எப்படி விமர்சிக்கலாம் என்றெல்லாம் அவர் பேசவில்லை. இதெல்லாம் வெ.சா, ெ ?யமோகன் போன்றவர்களுக்கு புரியாது.

அதே பயிலரங்கில் ரிச்சர்ட் ஸ்டால்மென் உட்பட தத்தம் துறைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதப்படும் சிலரை சந்தித்தேன். இவர்களிடம் நான் யார் தெரியுமா, நான் எத்தனை விருதுகள் பெற்றிருக்கிறேன் தெரியுமா என்ற தொனியில்லை. கடந்த ஆண்டு என் மனைவி தான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியலாளரைப் பற்றிக் குறிப்பிட்டார். கருத்தரங்கு நடந்த இடம் ஒரு கல்லூரி – மிக சாதாரண வசதிகள் கொண்டது ஐந்து நட்சத்திர வசதிகளோ அல்லது கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெறும் பிரத்தியேக இடமோ அல்ல. அந்த அறிவியலாளர் எளிமையாக பழகியது குறித்தும். உரையாற்றிய அல்லது போ ?டர் சமர்ப்பித்திருந்த பலரை அவராகவே சந்தித்து பேசியதையும், அவர்கள் செய்யும் ஆய்வுகள் குறித்தும் விசாரித்ததையும் என் மனைவி குறிப்பிட்டார். இவை விதிவிலக்குகள் அல்ல. தன் பெட்டியை தானே தூக்கிக் கொண்டு அல்லது ஒரு மாணவருடன் காபி குடித்துக் கொண்டு மிக சக ?மாகப் பழகும் பல சாதனையாளர்களை, உலகெங்கும் மதிக்கப்படுபவர்களை பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில், கருத்தரங்குகளில், பயிலரங்குகளில் சந்திக்க முடியும். இவர்களில் பலர் தாங்கள் பெற்ற பரிசுகள் குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நாம் பாரட்டினால் கூட நன்றி கூறிவிட்டு அடுத்து வேறு எதையாவது பற்றி பேசத்துவங்கி விடுவார்கள். அவர்கள் எழுதியதை விமர்சித்து எழுதினால் நான் யார் தெரியுமா, என்னை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை உண்டு என்றெல்லாம் எழுதமாட்டார்கள். தான் பெரிதும் மதிக்கும் ஒரு பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் முன்வைத்திருந்த நிலைப்பாடுகளை விமர்சித்து எழுதிய கட்டுரையை ஒரு வார்த்தைக் கூட நீக்காமல் அல்லது மாற்றாமல் பிரசுரித்தது EPW. அது உன் கருத்து , கருத்து முரண்பாட்டில் வியப்பில்லை என்றுதான் இவை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் ஒருவர் தன் கருத்துக்களை நிராகரிக்கிறார், விமர்சிக்கிறார் என்பதைக் கூட ஏற்க இயலாமல் கூசாமல் பொய் சொல்லும் ெ ?யமோகன் போன்றவர்கள்தான் தார்மீகம், அறம் பற்றியெல்லாம் பேசும் அவல நிலைதான் இங்குள்ளது.(2). சொல் புதிதில் ஜெயமோகன் எழுதியதை விமர்சித்து எத்தனை கட்டுரைகள், கடிதங்கள் வந்துள்ளன என்பதை வெ.சா கண்டறிந்து சொல்வாரா.

எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியரிடம் உங்கள் பெயர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாமே என்று சில மாணவர்கள் கேட்ட போது அப்படித்தான் சொல்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டார். அதற்கு மேல் அது குறித்து அவர் பேச விரும்பவில்லை.ஏனெனில் அவரது அக்கறை அதுவல்ல. பரிசு தரப்படலாம், தரப்படாமலும் போகலாம், அதற்காக அவர் லாபி செய்ய மாட்டார். எல்லாத்துறைகளிலும் ஆளுமைகள் சார்ந்த மோதல்கள், சர்ச்சைகள், குழு அரசியல்கள் உண்டு.அவை விதிவிலக்குகள் என்றுதான் கருதப்பட வேண்டும். தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அவைதான் விதிகளாக, வித நியாயங்களாக உள்ளன.இங்கு நிலவும் அறிவார்ந்த வறுமையின் ஒரு வெளிப்பாடு இது.

இத்தகையவர்களையும் தமிழ்ச் சூழலில் நடக்கும் விவாதங்களையும் ஒப்பிட்டால் ஒன்று புலனாகிறது. இங்கு விருதுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இங்கு நிலவும் சீரழிந்த நெறிகள், விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஆளுமை சார்ந்த அரசியலுக்கு உதாரணமாகவே இவற்றைக் கொள்ள முடியும். இருளிலிருந்து

பேரிருளுக்கு செல்லும் பயணத்தின் வெளிப்பாடு இது. வெ.சா முன்பு ஒரு கட்டுரை எழுதினார் – அதன் தலைப்பு தர்சனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள் (இதை என் நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன்). அது இப்போது அவர்

எழுதியுள்ளதற்கும், அவருக்கு ஆதரவாக ெ ?யமோகன் எழுதியுள்ளதற்கும் நன்றாகப் பொருந்தும்.

வாசகர்கள் இந்த கீழ்த்தரமான இலக்கிய அரசியலை, ஆளுமை சார்ந்த அரசியலை எதிர்த்துக் குரல் கொடுக்காதவரை, இப்படியே நீங்கள் செயல்பட்டால் உங்களை நிராகரிப்போம் என்று கூறாதவரை இவை தொடரும்.

(1) http://tamil.sify.com/kalachuvadu/oct04/fullstory.php ?id=13585699

2, ‘ரவி சீனிவாஸ் என் கருத்துக்களையோ தரப்பையோ மறுக்கவில்லை, நான் ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே என நிறுவ ஒயாது முயல்கிறார் ‘ http://www.maraththadi.com/article.asp ?id=1082

Series Navigation