இரவுக் காட்சிகள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

சேவியர்.


எப்போதும்
பரபரப்பாய் இருக்கும்
அந்தத் தெருவை
இப்போது தான்
இரவில் பார்க்கிறேன்.

அத்தனை சத்தங்களும்
கத்திக் கத்தி
தொண்டை வறண்டதில்
மூலைக்கு மூலை
சுருண்டு கிடக்கின்றன.

கடைகளின் வாசல்களில்
யாராரோ
கோணிக்குள்
வெப்பம் இரந்தும்
கொசுவுக்குப் பயந்தும்
வளைந்து கிடக்கின்றனர்.

தெருநாய்கள் சில
எதையோ துரத்தி
எதற்கோ மோப்பம் பிடித்து,
ஆங்காங்கே
பேரணி நடத்துகின்றன.

காலையில்
கோழிகளை கொன்று குவித்த
அந்த
கசாப்புக் கடை
மரத்துண்டு,
பிசுபிசுப்பு மாறாமல்
நினைவுச் சின்னமாய்
நிற்கிறது.

கிழிந்த கூரைக் குடிசை
தாழ்வாரங்களில்,
ஆமை மார்க்
கொசுவர்த்திகளின் துணையுடன்,
கைலிக் கால்கள்
இந்திய வரைபடம் போன்ற
பாய்களை தேய்த்து
படுத்துக் கிடக்கின்றன.

புழுதி முதுகுகளுடன்
முந்தானை முனை கடித்து
நடக்கும்
சோிக் குழந்தைகள்
குடிசைகளுக்குள்
விரல் கடித்துக் கிடக்கக் கூடும்.

திரையரங்க
இரவுக் காட்சி முடிந்து
வரும் வழியில்,
பகலைப் புரட்டிப் போட்ட
நிஜ இரவுக் காட்சி !
உறங்கிய பின்னும்
விலகும் என்று தோன்றவில்லை.

தவிர்த்திருக்கலாம்
இரு
இரவுக் காட்சிகளையும்.

Series Navigation