இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

கற்பக விநாயகம்


****

கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் தாலுகாவில் நட்டாலம் எனும் ஊரில் இருந்த வாசுதேவ நம்பூதிரிக்கும், தேவகி எனும் நாயர் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலகண்ட பிள்ளை. (வாசு தேவ நம்பூதிரி, வீட்டுக்கு தலைச்சன் பிள்ளையாய்ப் பிறக்காததால், அவருக்கு, மூத்தவரைப்போல் நம்பூதிரிப் பெண்ணை மணக்க உரிமை இல்லை)

நீலகண்ட பிள்ளை, தமிழ், சமஸ்கிருதம், மலையாள மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அவரின் காலத்தில் குமரி மாவட்டத்தின் ஆளுகை திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. இவ்வரசின் கீழ் இருந்த உதயகிரிக்கோட்டையில் இருந்த நிலைப்படை வீரர்களின் சம்பளத்தைப் பட்டுவாடா செய்யும் அரசு வேலையில் நீலகண்டபிள்ளை இருந்து வந்தார். அப்படையில் இருந்த டச்சு வீரர் டிலனாயுடன் பிள்ளைக்கு நட்பு உருவானது.

(திருவிதாங்கூரில் டச்சுப் படை வீரனா ? எனச் சிலருக்கு சந்தேகம் எழலாம். டிலனாயின் முழுப்பெயர் யுஸ்தேசியுஸ் பெனடிக் டிலனாய் (Esthachius Benedict De Lennoy) இவர் பெல்ஜியத்து வீரர். கத்தோலிக்கரான இவர் டச்சுப் படையில் பயிற்சி பெற்றவர். கடல் வழியாக வந்து திருவிதாங்கூர் படையுடன் இவர் குளச்சலில் 1741 ஜூன் 10ல் போரிட்டார்.போரின் முடிவில் திருவிதாங்கூர் படையிடம் இவரும் இவரின் சகாக்களும் பிடிபட்டனர். இவரின் சகாக்கள் பலரும் மார்த்தாண்ட வர்மாவின் வீரர்களால் கொல்லப்பட்டனர். சிலர் பத்மநாபபுரம் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிலனாயினை அரசர் மரியாதையுடன் நடத்தினார். அப்போது டிலனாய்க்கு வயது 27. அதில் இருந்து தாம் இறப்பது வரை அரசருக்கு ஏறத்தாழ 37 ஆண்டுகள் நம்பிக்கைக்குரிய வீரராகப் பணி புரிந்தார். உதயகிரிக் கோட்டையில்தான் இவரின் கல்லறை உள்ளது. டிலனாயின் மகன் களக்காட்டுப் போரில் மாண்டான். டிலனாயின் மகளை புலியூர்க்குறிச்சி வேளாளர் மணம் செய்தார் என்பது செவி வழிச் செய்தி. டிலனாயின் கொடி வழியினர் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதுச்சேரிக்குக் குடி பெயர்ந்தனர்.)

பிள்ளை, தமது 33ஆம் வயது வரை பெருந்தெய்வ வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்தான். பத்திரகாளியையும், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலையும் வழிபட்டவர்தான்.

அவரின் வாழ்வில் அடுத்தடுத்து துயரங்கள் நிகழ ஆரம்பித்தன. அவரின் நெருங்கிய உறவினர்கள், எதிரிகளால் தாக்கப்பட்டனர். சிலர் மரித்துப் போயினர். அவரின் ஆடு, மாடுகள் காரணம் தெரியாமலே இறந்தன. மருமக்கள் வழிக் காரணவரான அவர் பராமரித்து வந்த சொத்துக்களால், அவரின் குடும்பத்தில் பல சிக்கல்கள் வந்தன.

மனம் வருந்தி அலைக்கழிக்கப்பட்ட நீலகண்டபிள்ளை, டிலனாயுடன் தனது மன உழைச்சல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். டிலனாய், அவருக்கு பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில கருத்துக்களை வாசித்துக் காட்டி, அவரை சாந்தப்படுத்த முயன்றார். பைபிள் நூல் ஒன்றையும் அவருக்குத் தந்தார். (அக்காலத்திலேயே பைபிளின் சுருக்கமான மலையாள, தமிழ் மொழிபெயர்ப்புகள் இருந்தன).

சில நாட்களில் பிள்ளை, கிறிஸ்துவத்தின் தாக்கத்துக்கு ஆளாகி, தமது மதத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார். டிலனாயிடம் தம் விருப்பத்தை சொன்னார். அன்னாரின் ஆலோசனையின் பேரில் , நெல்லை மாவட்டம், வடக்கன் குளத்தில் உள்ள சர்ச்சில் ஞானஸ்நானம் பெற முயன்றார். பிள்ளையோ திருவாங்கூர் அரசு அலுவலர். நாயர் சாதிக்காரர் வேறு. எனவே இவரை மதம் மாற்றினால் தமக்கு சிக்கல்கள் வரக்கூடும் என வடக்கன் குளம் பங்குத் தந்தை பரஞ்சோதி நாதர் எனப்படும் பாப் தீஸ்க் புட்டாரி மிகவும் தயங்கினார்.

வடக்கன்குளம் தேவாலயத்தை நிர்மாணம் செய்த ஜான் பிரிட்டோ (1685ல் கட்டினார்), அதற்கு சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புதான், மறவர் சீமையில், அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு ஞானஸ்நானம் செய்துவித்ததால், சேதுபதியால் கொல்லப்பட்டார்.

இந்தப் பயம் இருந்தாலும், நீலகண்டபிள்ளையின் பிடி சாதனை காரணமாய் பரஞ்சோதி நாதர், அவரை லாசரஸ் ஆக மாற்றி ஞானஸ்நானம் செய்து வைத்தார். லாசரஸ் சின் தமிழ்ப்பெயர் தேவசகாயம். பிள்ளையின் பெஞ்சாதியின் பெயரும் த்ரேசா என்று மாறியது. மதம் மாறினாலும் பிள்ளை எனும் வால் ஒட்டியேதான் இருந்தது. நீலகண்டபிள்ளை, இவ்வாறு ஞான நீராட்டு பெற்று தேவ சகாயம் பிள்ளையாக மாறிய நாள் மே 17, 1745.

தமது சொந்த ஊரான நட்டாலத்தில் உள்ள பத்ரகாளி கோவில் திருவிழாவைப் புறக்கணித்தார். அவ்விழாவிற்கு வந்த தம் உறவினர்களிடம் கிறிஸ்தவம் பற்றி விவாதித்தார். இதெல்லாம் வைதீகத்தில் ஊறிப்போயிருந்த நாயர்களுக்கும், பிராமணருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியது.

பத்மநாபபுரம் அரண்மணையில் நடக்கும் திரு ஓண விழாவிற்கு நாயர் குடும்பங்கள் தயிர்,பால், காய்கறிகளை விலை ஏதும் பெறாமல் தரவேண்டும் என்பது விதி. அதற்குக் கட்டுப்பட்ட குடும்பங்களில், பிள்ளையின் குடும்பமும் ஒன்று. மதம் மாறிவிட்டபடியால், இவ்வழக்கத்தை, தேவ சகாயம் பிள்ளை நிறுத்தினார்.

ஒடுக்கப்பட்ட சாதியினர், இந்துக் கோவில்களுக்கு விழாக்கள், சடங்குகளின்போது வாழை, காய்கறி, மூங்கில் கழி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். பல மக்கள், கிறிஸ்தவம் போன பிறகும் இதைத் தொடர்ந்தனர். பிள்ளை, அவர்களிடம் இவ்வழக்கத்தைக் கைவிடப் பிரச்சாரம் செய்தார்.

தேவ சகாயம் பிள்ளையின் வரலாறு 1858ல் ‘வேத சாட்சியான தேவ சகாயம் பிள்ளை சரித்திரம் ‘ எனும் நூலாக வெளி வந்து பின்னர் மறைந்து விட்டது. இந்நூலை அ.கா.பெருமாள் தேடிக் கண்டெடுத்து பதிப்பித்துள்ளார்.

அதில் கண்ட பின்வரும் செய்தி, பிள்ளைக்கும், பிராமணருக்கும் இடையே மூண்ட பகைமையைப் பேசுகிறது.

யாசகத்துக்கு வந்த ஒரு பிராமணர், தம் மதக் கடவுளரைப் பல்வேறு கேள்விகளால் தேவசகாயம் பிள்ளை துழைத்தெடுப்பதைக் கண்டு விசனமுற்றார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. ‘உங்கள் வேதம் (அதாவது பைபிள்) இந்நாட்டில் இல்லாதபடிக்கு செய்யாவிட்டால் நான் பிராமணனே அல்லன்; என் நெஞ்சில் அணிந்த பூணூலும் பூணூல் அல்ல ‘ என வீர சபதம் எடுக்கிறார். பிள்ளையும், ‘நீர் அப்படிச் செய்ய முடியாவிட்டால் உமது பூணூல் என் அரைஞாண்கொடிக்கு சமம் ‘ என்று பதிலுக்கு சீண்டி இருக்கிறார். இச்சம்பவமே பிள்ளைவாளுக்கும், பிராமணாளுக்கும் கடும் பகையை ஊன்றியது எனலாம்.

அ.கா. பெருமாள், தம் நூலில், பிள்ளை, அரசாங்க வரி விதிப்பில் கிறிஸ்துவர்களுக்கு சலுகை தந்ததாகவும், அடிமைகளாய் விற்கப்பட்ட மக்களின் துயரங்களுக்காக தேவனைப் பிரார்த்தித்ததாகவும் சொல்கிறார்.

வடக்கன்குளம் பங்குத் தந்தை பரஞ்சோதி நாதர், சர்ச் கட்ட தேக்கு மரம் வேண்டியபோது, இவர் யாருக்கும் தெரியாமல் கடுக்கரை மலையில் தேக்கு வெட்ட உதவினார்.

பிள்ளையின் மீது இவ்வாறான பல புகார்கள், தளவாய் ராமய்யனுக்கு வந்து கொண்டிருந்தன.

பிரதானி மார்த்தாண்ட வர்மாவிடம் ‘உமது கட்டளைக்கு அடிபணியாதவர்களும், நமது தெய்வங்களைப் பழித்தவர்களும் உயிரோடிருப்பது இயலாது எனும் நீதி இருக்கையில் இப்போது நீலகண்ட பிள்ளை புது மார்க்கத்தில் சேர்ந்து நம் கடவுளரைப் பழித்தும், பிராமணர்களின் பூணூலை அறுத்து அரைஞாண் கொடியாய்க் கட்டுவேன் என்றும் திரிகிறான். அவனைத் தண்டிக்காது போனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் நம் வேத புராணங்களை அழித்து, பிராமணரைக் கெடுத்து, எங்கும் அவர்களின் புது வேதத்தை உண்டு பண்ணிக் கடைசியில் ராச்சியத்தையும் கலகப்படுத்துவார்கள் ‘ என எச்சரிக்கை செய்தார்.

வெகுண்டெழுந்த மன்னனின் கட்டளைப்படி, 1749 பெப்ரவரி 23ல் அவர் கைது செய்யப்பட்டார்.

காலில் விலங்கு மாட்டி சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.

முதலில், அவர் தம் தாய் மதத்திற்கு திரும்பும்படி அச்சுறுத்தப்பட்டார். அவர் சம்மதிக்கவில்லை. அவரின் மாமியார் மூலம் நிர்ப்பந்தம் தந்தனர்.

அதுவும் பலிக்கவில்லை. அவர் விசாரணைக் கைதியாக இருந்தபோது ஏசு சபைப் பாதிரிகள் ‘பரீயஸ் ‘ சுவாமி மூலம் தந்த வேண்டுகோள்கள் ஏற்கப்படவில்லை.

மார்த்தாண்ட வர்மா, பிரதானியை அழைத்து, வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்) சகலரும் அஞ்சி நடுங்கும்படி, முரசறைந்து, தேவ சகாயம்பிள்ளைக்கு எருக்கம்பூமாலை அணிவித்து நடத்திக் கொண்டு போய்த் தலையைச் சீவி விடும்படியும், அவரைப்போன்று கிறிஸ்தவம் சேர்ந்த மற்ற சூத்திரர்களையும் தக்கபடி தண்டிக்கவும் ஆணை பிறப்பித்தான்.

அவ்வாறு அவரைக் கொலைக்களம் கொண்டு செல்லும்போது இடையிலேயே மார்த்தாண்ட வர்மா, மனம் மாறி, அவரைக் கொல்லாமல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினசரி முப்பது கசையடிகளும், கசையடிபட்ட காயத்தில் மிளகுப் பொடியைத் தேய்க்கவும், குடிப்பதற்கு, தென்னை மட்டை அழுகப் போட்ட நாறின தண்ணீரும் தரச் சொல்லி உத்தரவானது.

அப்படியே அவரை எருமைக்கடாவில் ஏற்றிப் பட்டணத்து வீதி எங்கும் நடத்திக் காயம் பட அடித்து மிளகுப் பொடியைத் தேய்க்கும் தண்டனையினை சேவகர்கள் செவ்வனே செய்தனர். பட்டிக்காடெங்கும் இவ்வாறு அவரை ஊர்வலமாய்ச் சவுக்கடி கொடுத்து வருகையில் சில இடங்களில் பிள்ளை மயங்கிச் சரிகின்றார். அப்போது சேவகர்கள் அவரை அகோரமாய் அடித்துத் திரும்பத் தூக்கி கடாயின் மேல் போட்டுக் கொண்டு சென்றார்கள்.

ஒருநாள், சேவகர்கள் மிளகுப் பொடி தேய்க்க மறந்து போயினராம். அவர்களைப் பிள்ளை அழைத்து ‘சினேகிதரே! எப்போதும் செய்கிற மருந்தை இன்று நீர் எமக்கு செய்யாததால், எனக்கு சுகமாய் இல்லை இப்போது ‘ என்றாராம். அப்போது சேவகருக்கு அதிக கோபம் மூண்டு அவரை எருமைக்கிடாவில் ஏற்றி, சூரைக்கொடி பிரம்பினாலே ரத்தம் வடிய அடித்து மிளகுப் பொடி பூசி, கூடுதலாக உக்கிர வெய்யிலில் அவரை நிறுத்தினராம். அப்போது அவர் தாகமாயிருக்கிறதென்றார். அவர் குடிக்க, அரசனின் கட்டளைப்படி அழுகிய தென்னம் மட்டைகள் ஊறிய நாற்றம் அடித்த நீரைக் குடிக்கத் தந்தார்கள்.

தேவசகாயம் பிள்ளை செய்தவற்றில், பொருட்படுத்த வேண்டிய குற்றங்கள் என்று பார்த்தால், வரி விதிப்பில் சலுகை காட்டியதும், மரம் வெட்டியதுமே எனலாம்.

இவற்றிற்குத்தான் இத்தனை பெரிய தண்டனையா ?

உண்மையான காரணம் அவர் மதம் மாறியதுதான். அவருக்குத் தரப்படும் இத்தண்டனை முறைகளால் மற்றவர்கள், தம் மதத்தை மாற்றும் முன், வருவன பற்றி எண்ணி நடுங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இதற்கிடையே, தேவசகாயம் பிள்ளைக்குத் தினசரி தரப்படும் தண்டனை முறைகள், பொது மக்களிடையே அவர் மீது ஒரு வித அனுதாபத்தை உண்டு பண்ணி வந்தது.

அவருக்கு சாப்பாடு கொண்டு போனவர்கள் முதலான பேர்களெல்லாம் அவரிடம் மரியாதை செலுத்தி வந்தனர்.

இச்செய்தி அறிந்த மன்னனோ, ‘சனங்களுக்கு இவர் பேரில் அனுதாபம் வந்ததென்ன! ‘ எனக் கோபமடைந்து அவருக்கு இனி ‘அன்னந்தண்ணி கொடாமல் ‘ விலங்கோடு போடுங்கள். கிடந்து சாகட்டும் ‘ எனக் கட்டளை இட்டான்.

அத்துடன் தேவசகாயம்பிள்ளையை ஒத்த கிறிஸ்தவர்களைப் பிடித்து அடித்து, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் பிரதானிக்கு உத்தரவானது. பல கிறிஸ்தவர்கள் இதற்குப் பயந்து, திருநெல்வேலிச் சீமைக்கு ஓடிப்போனார்கள்.

தளவாயாக இருந்த ராமய்யனுக்கும், டிலனாய்க்கும் அப்போது சுமூகமான உறவில்லை. இச்சூழலில், டிலனாய், தேவசகாயம்பிள்ளையை சிறையில் சந்தித்தார். இச்செய்தி தளவாயை எட்டியது.

ராமய்யன், மார்த்தாண்ட வர்மாவிடம் சென்று எடுத்து ஓதினார். ‘நீர் இவனுக்கு இப்போது ஆக்கினை செய்யாதே போனால், தேசமெல்லாம் பரம்பிப்போகும் ‘ என எச்சரிக்கை செய்ததும், மார்த்தாண்ட வர்மா, கொலை ஆணை பிறப்பித்தார்.

அந்தப்படிக்கு, தேவ சகாயம்பிள்ளை ஆரல்வாய் மொழியில் இருக்கும் காத்தாடி மலையில் 1752 ஆம் ஆண்டு ஜூன் 14ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் உடம்பில் பாய்ந்த குண்டுகள் மொத்தம் ஐந்து. ஆறாவது, ஏழாவது குண்டை அவர் மீது செலுத்த அடுத்தவாரம், தக்கலையில் இருந்து அரவிந்தன் வரக்கூடும்.

பலதார மணத்தைக் கண்டித்துப் பெரும் குழப்பத்தை உண்டுபண்ணிய பிரிட்டோவும், தேக்கு மரம் வெட்டி சர்ச் கட்ட உதவிய தேவசகாயமும் செய்த இக்கொடூரக் குற்றங்கள் மன்னிக்க முடியாதவைதானே!!

ஆதார நூல்: வேத சாட்சி தேவ சகாயம் பிள்ளை வரலாறு – அ.கா.பெருமாள் , யுனைட்டெட் ரைட்டர்ஸ் வெளியீடு, டிசம்பர் 2004

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்