இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 2002

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

மஞ்சுளா நவநீதன்


குஜராத்தில் அப்துல் கலாம்

குஜராத்தில் அப்துல் கலாம் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். போகுமிடங்களில் எல்லாம் இவர் குழந்தைகளைச் சந்திப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம். வளர்ந்தவர்கள் இந்தியாவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் போது, இனி வரும் மாறுதல்களுக்கான விதைகளைக் குழந்தைகள் மனதில் தான் ஊன்ற வேண்டும்.

ஆனால் குஜராத்தில் அப்துல் கலாம் சுற்றுப் பயணத்தில் ஏதும் பெரிய மாறுதல்கள் நிகழும் என்று தோன்றவில்லை. இதுமரியாதை நிமித்தமான பயணமாய்த் தான் இருக்க முடியுமே தவிர ஆய்வுகளும், முஸ்லீம்களிடையே நல்லெண்ணம் ஏற்படுத்துவதும் இதனால் பெரிதாய் ஒன்றும் நிகழ்ந்துவிடாது.

அரசியல் மற்றும் மதங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஏற்பட்ட பிரசினை குஜராத் கலவரம். மதச்சார்பற்ற, அரசியல் சார்பற்ற அப்துல் கலாம் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. முரண்பட்ட அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களும், மாறுபட்ட மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டால் தான் இது அரசியல் கடந்த ஒரு நல்லிணக்க முயற்சியாய் இனங்காணப் படும். சோனியாவும், வாஜ்பாயியும் இதற்காக இணைந்து நிற்காவிடில் இந்தப் பிரசினை தொடரத்தான் செய்யும்.

*****

அமெரிக்கா -ஈராக் யுத்தம்

அமெரிக்காவில் புஷ் பதவியேற்றதிலிருந்து ஈராக் மீதான அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது. அப்பாவிற்காக மகன் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள். இது எண்ணெய் யுத்தம் தான் என்பதும் வெளிப்படையான பேச்சு. ஐரோப்பிய நாடுகளும் இதற்கு ஆதரவில்லை. சவூதி அரேபியா தான் இந்த யுத்தத்தில் துணை நிற்கமுடியாது என்று கூறிவிட்டது. ஈராக் எண்ணெய் விற்பனைமீது விதித்த கட்டுப்பாடுகளினால், மிகவும் பயன் பெற்ற நாடு சவூதி அரேபியா. ஆனால் ஈராக் போருக்கு ஆதரவு அளிப்பது, அதன் அண்டைநாடுகள் மேலும் அரேபியா மீது வெறுப்புக் கொள்ளக் காரணம் ஆகிவிடும் என்பது சவூதி அரேபியாவின் கணிப்பு.

ஈராக்கில் சத்தாம் ஹ்உசேனின் செல்வாக்குக் குறைவதாகவும் தெரியவில்லை. ஈரானில் ஷாவை மன்னராக்கையது போல் ஒரு பொம்மை அரசை நிறுவ அமெரிக்கா முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இது வெற்றி பெறும்போல் தோன்றவில்லை. மற்ற இஸ்லாமிய நாடுகளைக் காட்டிலும் முற்போக்கான நாடு ஈராக். குவைத் மீது போர் தொடங்கியிராவிட்டால், ஈராக் வெகுவாக முன்னேறி இருக்கும். அமெரிக்காவிற்கு யாரும் ஆதரவு தராவிட்டாலும், அமெரிக்கா போர்க்குரலை நிறுத்தவில்லை,

உள்நாட்டிலும் பெரும் ஆதரவு இந்தப் போருக்கு இல்லை. ஈராக் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு ஆதரவு தந்ததாய் அமெரிக்காவே கூடச் சொல்லவில்லை. பின் ஏன் ஈராக் மீது தாக்குதல் என்று மக்கள் கேட்கிறார்கள்.

*********

பெட்ரோல் வினியோகமும்

பா ஜ க அரசின் கீழ் ராம் நாயக் பெட்ரோல் கடைகளுக்கு உரிமை வழங்கியதில் நிகழ்ந்துள்ள ஊழல், பெட்ரோலை விட அதிகமாய் நாறுகிறது. ஆனால் நான் ரொம்ப ஒழுங்கு என்று யாரும் தலை நிமிர்த்திச் சொல்லமுடியாதபடி எல்லாக் கட்சிகளும் இந்த ஊழலில் பங்கு கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டின் பா ம கவும், வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சியும் கூட இதில் பங்கு போட்டுள்ளன. தோண்டினால் எல்லாக் கட்சிகளும் இதில் ஈடுபட்டது தெரியவரும். ஜனவரி 2000-லிருந்து வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்தது நல்லதே. ஆனால் விசாரணைகளை நடத்திட வேண்டும். காலவரையறையும் கூடாது . எல்லா உரிமங்களுக்கும் ரிஷிமூலம், நதிமூலம் தேடிக் காணவேண்டும்.

இப்படிப்பட்ட ஊழல்களைத் தவிர்க்க வழி பெருமளவில் , பெட்ரோல் கடைகளுக்கு அனுமதி வழங்குவது தான்.

இந்தக் கடைகள் பெரும்பாலும், கலப்படம் மற்றும் , குறைத்து வழங்குதல் முறையில் தான் பெரும் லாபம் ஈட்டுகின்றன என்று சொல்கிறார்கள் . இதுவும் ஆராயப்படவேண்டும்.

***********

சித்த மருத்துவம் – எப்படி வளர்ச்சி பெறும் ?

தினமணி நாளிதழில் எஸ் பிரேமா என்பவர் சித்த மருத்துவம் சிறப்புற சில யோசனைகளை வழங்கியுள்ளார். சித்த மருத்துவம் என்றாலே வெறும் தலைக்குத் தடவும் எண்ணெய் என்பது தான் பெரும்பாலோரின் புரிவு. சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ மரபுகளை , இன்றைய ஆய்வு மற்றும் நிரூபணங்களுடன் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சித்த மருத்துவம் பரவலான கவனிப்பையும், முக்கியத்துவத்தையும் பெறுவதற்கு சில முக்கியமான ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

சித்த மருத்துவர்கள் சிட்டுக்குருவி லேகியம் விற்பதாய் விளம்பரம் செய்வதைத் தடுக்கவேண்டும், மானியங்களை அதிகரிக்க வேண்டும், வெளி மானிலங்களிலும் சித்தமருத்துவமனைகளை நிறுவ உதவி புரியவேண்டும். தொலைதூரக் கல்வியையும் பெற வழி வகை செய்ய வேண்டும். ஆய்வுகளை முறைப்படுத்தி, வீணாக ஒரே ஆய்வு வேறு வேறுநபர்களால் செய்யப் படுவதைத் தடுக்க வேண்டும், சித்தமருத்துவக் கல்வியையும் ஒரு நெறிப்படுத்திய முறையில் சீரான பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்று பல முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

சித்த மருத்துவர்களுக்கும் பொறுப்பு இதில் உண்டு. ஆய்வுகளை மருத்துவ இதழ்களில் வெளியிட முன்வரவேண்டும். ஆய்வு நெறிகளும் முறைப்படுத்தப்பட வேண்டும். எப்படி ஆய்வு மேற்கொள்ளப் படுகிரது என்பதை அலோபதி மருத்துவ நிபுணர்களுக்கு விளக்கி அவர்கள் ஒத்துழைப்பையும் பெற முயலவேண்டும்.

******

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்