இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

சின்னக்கருப்பன்


***

மதிய உணவுக் கூடங்களில் விவசாயிகளுக்கு உணவு

தமிழ்நாட்டுக்கே சோறு போட்ட தஞ்சையில் சில விவசாயிகளின் தற்கொலைக்குப் பின்னர், தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை விவசாயிகளுக்கு நீட்டிக்கிற செய்தி கேட்டு இரண்டு விஷயம் தோன்றியது.

முதலாவது, இந்தப் பிரசினை ஏற்படாமல் முதன்மையாகத் தவிர்த்திருக்க வேண்டும் என்பது ஒன்று. ஆனால் இது ஜெயலலிதாவின் தவறு மட்டுமே என்று பார்க்க முடியாது. விவசாயம் உலகு முழுதும் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிற தருணம் இது. காவிரிப் பிரசினை ஒரு புறமும், இலவச மின்சாரம் போன்ற மானியங்களுக்கு எதிராக உலக வங்கியின் அழுத்தம் இன்னொரு புறமும் இப்படிப்பட்ட பிரசினைகளுக்குக் காரணமாய் உள்ளன. ஆனால் வருமுன் காக்கும் முயற்சியை ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை என்று சொல்லலாம்.

இரண்டாவது, இப்படிப் பட்ட பிரசினைகளுக்குத் தற்காலிகத் தீர்வாக விவசாயிகளுக்கு உணவு அளிப்பது வரவேற்கத் தக்கதே. இதில் உள்ள மக்களை மையப் படுத்திய ஜனநாயக அம்சம் ஒன்றைப் பலர் தவற விட்டு விடுகின்றனர். மக்களின் பிரதிநிதிகள் தான் மக்களின் பிரச்னையை அனுதாபத்துடன் அணுக முடியும். கடந்த நூற்றாண்டில், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்த போது, பஞ்சத்தின் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் மடிந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கம் வேடிக்கைப் பார்த்தது. அப்போது, ஜாதி மத பேதம் பார்க்காமல், மக்களுக்கு கஞ்சி ஊற்றியவர்கள் இந்திய சமஸ்தான ராஜாக்கள்தாம்.

***

பிரவாசி பாரதிய திவஸ்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நாள் என்ற பெயரில் தலைநகரத்தில் நடந்த விழா வரவேற்கத்தக்கது. இது போன்ற ஒன்று இதுவரை கொண்டாடப்படாமல் இருந்ததே தவறு. உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவழியினருக்கும் இந்தியாவே நினைவுத் தாயகமாகவும், கலாச்சார ஊற்றாகவும் இருக்கிறது. ஆனால் பல நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு, வெறும் ஞாபகத்தலமாக மட்டுமே இருந்துவந்த இந்தியா, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யும் விதத்தில் இல்லை. பல நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர்கள் ஒடுக்கப்பட்டபோதும், உரிமைகள் மறுக்கப்பட்டபோதும், வாய் மூடி மெளனியாக, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பிரச்னையாக அணுகி, எதுவும் செய்யாமல் இருந்திருக்கிறது. இதன் பலன், பல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் எனச் சொல்லிக்கொள்வது அவமானம் என்ற அளவுக்குச் சென்றிருந்தது. ஜாதி மதம் ஆகியவை இல்லாமல் இருந்திருந்தால், இந்திய வம்சாவழி என்ற சுமையையும் வெகுகாலத்துக்கு முன்னரே விட்டிருப்பார்கள் இவர்கள்.

இந்திய வம்சாவழியினரின் வெளிநாட்டுச் சாதனைகள் அந்தந்த நாடுகளின் சாதனையே தவிர அந்த இந்திய வம்சாவழியினரின் சாதனை அல்ல. இந்திய வம்சாவழியினர் பெரும் சாதனை செய்திருக்கிறார்கள் என்று பேசுவது ஒரு விழாவுக்கு வேண்டுமானால் பேசவும் கேட்கவும் இனியதாக இருக்கலாம். ஒரு மஹாதீர் முகம்மது இல்லாமல் இருந்திருந்தால் டத்தோ சாமிவேலு இருந்திருக்கமாட்டார். ஒரு லீ குவான் யூ இல்லாமல் இருந்திருந்தால் நாதன் இருந்திருக்கமாட்டார். இது தவிரவும், இந்திய வம்சாவழியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளான மொரீசியஸ் , டிரினிடாட், குயானா போன்ற நாடுகள் ஜனநாயக நாடுகளாகவே தொடர்ந்து இருந்து வந்திருப்பதும் இவர்களின் அடிப்படை ஜனநாயக உணர்வுக்கு ஒரு சாட்சி.

ஆனால் இதில் உறுத்தும் விஷயங்கள் இல்லாமலில்லை. சிங்கப்பூர் தமிழர்களையும் மலேசியத்தமிழர்களையும் கொண்டாடிய இந்திய அரசு, இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்ததா என்று கூடத் தெரியவில்லை. அது பற்றி கேட்கவோ பேசவோ மத்திய அரசாங்கத்தில் தமிழ் ஆட்கள் இல்லையா என்ன ? ஏன், தமிழகத்தில் வரும் பத்திரிக்கைகள் கூட இதனைப் பேசவில்லை, கேட்கவில்லை. ஏனென்றும் புரியவில்லை. இது நடந்திருக்கலாம். இனி நடக்கப்போகும் இது போன்ற விழாவில் கடினமான கேள்விகளுக்கு அஞ்சாமல் எல்லா தரப்பு இந்திய வம்சாவழியினருக்குமான மாநாடாக இது இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

***

அக்னிப் பரிட்சை

இந்தியா ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்ட அக்னி ஏவுகணையை மீண்டும் பரிசோதித்திருக்கிறது. இந்தியா சந்திரனுக்கு ஆள் கொண்ட விண்கலத்தை அனுப்பபோவதாக தெரிவித்திருக்கிறது. 3000 கிலோ மீட்டர் தாக்கும் வசதி கொண்ட அக்னி ஏவுகணை பரிசோதிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறது. பிபிஸியில் கருத்து எழுதிய வெளிநாட்டினர் அனைவரும், இந்தியா தன்னுடைய ஏழைகளை முதலில் கவனிக்கட்டும் என்று வழக்கம் போல கருத்து எழுதியிருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்றவை கண்டனம் தெரிவிக்கின்றன. பார்த்த செய்தி, கேட்ட கருத்து என மீண்டும் நடக்கிறது.

இந்தியாவால் உலகம் அறிந்த ஒரு படுகொலைக்காரனைக் கூட இக்கணூண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. கேட்டால், அதற்கும் உங்கள் ஊர் கொலைகாரர்களை எல்லாம் பிடித்து முடித்துவிட்டு துபாய் வாருங்கள் என்று இந்த ஆட்கள் கருத்துச் சொன்னாலும் சொல்வார்கள். இந்தியாவுக்கு வலிமை இல்லை என்பதும், அதற்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்பதும், இந்தியர்கள் இறந்தால், கொலையுண்டால், அந்த கொலைகாரர்கள் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டால் எப்போதுமே தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதும் உலகம் அறியும் விஷயமாகிறது.

என்பிலதனை வெயில் காயும் (நைபால் சொல்லாதே என்று சொன்னாலும்)

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation