இந்த வாரம் இப்படி சூலை 4, 2001

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

(ஜெயலலிதா புதுவழக்கு, யூடிஐ வீழ்ச்சி, வாஜ்பாயி ராஜினாமா, வன்முறைச்சுழல்) சின்னக்கருப்பன்


***

ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு

ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், அரசாங்கப் பதவியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்றும், அவர் மேலே அப்பீல் செய்திருந்தாலும், அவர் மேல் நீதி மன்றத்தில் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்படும் வரை அவர் பதவியில் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இது சரியான தீர்ப்பு என்பது என் கருத்து.

இதனை மேற்கோள் காட்டி, ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு உடமே தடை விதிக்க வேண்டும் எனக்கோரி கபூர் என்ற தில்லி வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

நம் நீதிமன்றங்க்கள் எந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது, எதனை தள்ளிப்போட்டே காலம் கடத்தும், என்பது பரவலாக தெரிந்திருக்கிறது.

சோனியா காந்தி மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடாது என்று போட்ட வழக்கு அவரது பிரதிநிதிக்காலம் முடிந்த பின்னர் வந்தால் என்ன பிரயோசனம் ? அப்படித்தான் நம் நீதிமன்றங்கள் செயல் புரிகின்றன.

சரியான தீர்ப்பு முக்கியம் என்பது போல சரியான தீர்ப்புதான் சொல்லப்படுகிறது என்ற உணர்வும் முக்கியம். அதே போல சரியான காலத்துக்குள் சொல்லப்படும் தீர்ப்பும் முக்கியம்.

Stich in time saves nine.

***

யூடிஐ வீழ்ச்சி

யூடிஐ வீழ்ச்சிக்கும் பிரதம மந்திரி அலுவலகத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆச்சரியமாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட நெறிமுறைகளே இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று யஸ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டி இருக்கிறார். யஸ்வந்த் சின்ஹா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. யஸ்வந்த் சின்ஹா பதவி விலகப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

இதற்கு நடுவில் தேசீய முன்னணியை அதிர்ச்சி வைத்தியம் செய்ய வாஜ்பாயியின் ராஜிநாமா நாடகம் வேறு.

யூடிஐ மேலாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

யூடிஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள், யூடிஐ எந்த பங்குகளில் பணம் முதலீடு செய்கிறது என்பதை அறிந்துகொண்டு அந்தப்பங்குகளை தனியான முறையில் வாங்குவதும் விற்பதும் செய்து பணம் பண்ணி இருக்கிறார்கள் (Insider Trading) என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இவ்வாறு உள்ளே உள்ளவர் செய்யும் விற்பனைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் பங்கு ஆய்வாளர்கள் (stock analysts) இணையப்பங்குகளை மிகவும் முன்னிருத்தி பேசி அவைகளை விலை அதிகப்படுத்தி தானும் பங்குகளை வாங்கி விற்று பெரும் பணம் பண்ணி விட்டார்கள், பங்குகள் வீழ்வதற்கு முன் அவைகளை விற்று சாதாரண முதலீட்டாளர்களை மோசடி செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலான இந்தியாவின் இணையப்பங்குகளில் யூடிஐ முதலீடு செய்து பின்னர் அந்தப்பங்குகள் வீழ்ந்ததும் யூடிஐயும் பாதிக்கப்படுவது எதிர்பார்க்கப்படக் கூடியதுதான். ஆனால் இவ்வாறு நடந்ததில் ஏதாவது முறைக்கு மாறாக யூடிஐ நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் நடந்திருக்கிறார்களா என ஆராய்வது முக்கியம்.

ஆராய்ந்து அது போல பின்னர் நடக்காதவாறு சட்டங்களை மாற்றுவதும் முக்கியம்.

நமது சட்டங்கள் எல்லா எதிர்காலச்சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இருக்கப்போவதில்லை. காலத்துக்குத் தகுந்தாற்போல பிரச்னைகளைக் குறைப்பதற்காக நெறிமுறைகளை ஏற்படுத்தவே நமக்கு ஒரு பாராளுமன்றம் இருக்கிறது.

அதனை சரியான முறையில் பயன்படுத்துவதுதான் இன்றைய வேலை.

***

வாஜ்பாயி ராஜிநாமா நாடகம்

ராஜிநாமா நாடகத்துக்கு பல காரணம் சொல்லப்பட்டாலும், தான்தோன்றித்தனமாக ஜார்ஜ் ஃபெர்னாண்டசும், வாஜ்பாயியும் மட்டு முடிவெடுத்து பாமகவை தேசிய முன்னணியில் இணைத்துக்கொண்டது, பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியையும், கருணாநிதியையும் கோபப்பட வைத்து அவர்கள் வெளிப்படையாகக் கடுப்படித்ததும் காரணம் என்று சில பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன.

தேசீய முன்னணியில் இணைவதற்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கும் பணியில் முரசொலி மாறனும், இன்னும் மூன்று கட்சி பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற பாஜக அரசிலிருந்து, கூட்டணியில் இணைய கட்டுப்பாடுகளை விதிக்கும் தேசீய முன்னணி வரை வெகு தொலைவுக்கு வந்துவிட்டாரகள் போலிருக்கிறது.

தோற்கும் நிலை வந்து விட்டால், அவசர அவசரமாக இவைகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.

***

பேரணியில் காஷ்மீர முஸ்லீம் சிறுவன் கொலை, காஷ்மீர இந்து மாடு மேய்ப்பவர்கள் கொலை.

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவத்தினர் சுட்டு ஒரு காஷ்மீர முஸ்லீம் சிறுவன் இறந்திருக்கிறான்.

அடுத்த நாள் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், லாஷ்கர் ஈ தோய்பா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எல்லா இந்திய மாநிலங்களிலும் குண்டுகள் வெடிக்கும், இந்திய அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று எல்லோருக்கும் முன்னால் அறிவிக்கிறார்.

அடுத்த நாள் காஷ்மீரின் 15 இந்து மாடு மேய்ப்பவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

காஷ்மீரின் ஹஉரியத் மாநாட்டுத்தலைவர்கள் இதனை மனிதகுலத்தின் மீதான தாக்குதலாகப் பேசுகிறார்கள். இதனை செய்தது சமாதானத்தை விரும்பாத இந்திய படையினரே என்றும் பேசுகிறார்கள் வழக்கம்போல.

தில்லிக்கு வந்த காஷ்மீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஷ்மீர முஸ்லீம் என்பதற்காக தில்லிப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.

இதுதான் மாயச்சுழல். பாகிஸ்தானில் ஆரம்பித்த சுழல் சுற்றிச்சுற்றி எல்லோரையும் இழுத்துக் கொண்டு போய்கிறது.

காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என கேட்பவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாகவே இருக்கிறார்கள். எல்லா இந்துக்களும், எல்லா பெளத்தர்களும் நிர்தாச்சண்யமாக பாகிஸ்தானுடன் சேர விருப்பப்படவில்லை. ஆனால் இருக்கும் இந்தியச்சார்பு முஸ்லீம்களுக்கும் ‘பாகிஸ்தானிய ஆதரவாளர் ‘ முத்திரை மற்றவர்களால் குத்தப்பட்டு விடுகிறது. ( தவறுதான். ஆனால், பாகிஸ்தான் இந்தப் மனப்போரில் தோற்கும் வரை, இந்த முத்திரையை நிறுத்த முடியாது.)

இவ்வாறு மக்களை மன ரீதியில் பிரிப்பதையே எல்லா வன்முறைக்கும்பல்களும் விரும்புகின்றன.

முதலில் முக்கியமானவர்களைக் கொன்று போலீஸையும் மக்களையும் நுனிக்குக் கொண்டுவருவது. பின்னர் போலீஸாலோ, நீதிமன்றத்தாலோ தண்டனை பெற்று சிலர் ‘தியாகிகளான ‘ பின்னால், அதனைக் கொண்டே தொடர்ந்து வன்முறையையும், வன்முறைக்கு எதிர் வன்முறையையும், போலீஸையும் மக்களையும் மாயச்சுழலுக்குக் கொண்டு செல்வது. அதனாலேயே கோயம்புத்தூரில் குண்டுகள் வெடிக்கின்றன. பம்பாயில் குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் வெடித்து அப்பாவிகள் இறந்ததும், போலீஸ் குற்றவாளிகளைத் தேடுகிறேன் என்று வழக்கம்போல தனது அராஜகத்தை தொடர்கிறது. அந்த அராஜகம் இன்னும் பல தீவிரவாதிகளைத் தோற்றுவிக்கிறது.

இந்த வன்முறையின் விளைநிலமும், அதன் வேர்களும், அந்த வேர்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் கொள்கைகளுமே சமாதானம் விரும்பும் மனிதனின் எதிரி.

கொள்கைகள் தவறு என்று தீர்க்கப்படாத வரை வன்முறைக்கான விளைநிலம் வளமாகவே இருக்கும்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்