இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

நாக இளங்கோவன்


====

ஒளிரிக் கொண்டிருந்த இந்தியர்கள் ஏனோ தற்போது வெளிரிப் போயிருக்கிறார்கள். பலருக்கு உணவு கூட செல்ல மறுக்கும். முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி ‘எங்களுக்கு சாதகமாக ஏதாவது நடக்கும் ‘ என்று சொன்னதை எண்ணி சிலர் வாக்குகள் எண்ணி முடிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் கூட நம்பிக்கையுடன் இருக்கக் கூடும். ஆனால் யார் என்ன செய்யக் கூடும் ?

பாரதிய சனதாக் கட்சி, தேர்தல் அறிக்கை என்ற பெயரில், தொலைனோக்குப் பார்வை என்ற பெயரில் தனது உள்முகங்களையும் ஓரளவு மறைத்துக் கொண்டு, உமியை விற்பனைக்கு வைத்த போது காற்று அடித்து விட்டதே! அந்த உமிக்கு வண்ண வண்ண ஒளிவீசி கடந்த மூன்று மாதங்களாக மகிழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு திடாரெனக் காரிருள் சூழ்ந்தாற்போன்ற ஒரு உணர்வு.

தேர்தல் ஆணையம்:

—-

தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கவனத்துடன் நடத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தலைமை ஆணையர் கிருட்டிண மூர்த்தி, தமிழகத்தில் சைதை, சாத்தான்குளம் தொகுதிகளில் இடைத்தேர்தல் முறைதவறிப் போனபோது கண்டுகொள்ளாமல் ‘ஆசி ‘ வழங்கியது போல நடந்து கொண்டார் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும், எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் செயல்பட்டிருப்பதற்குப் பாராட்ட வேண்டும்.

நாடுமுழுதும் உள்ள 150,000 வாக்குச் சாவடிகளிலும் கணி மூலம் (மின்னனு வாக்கு எந்திரம் – EVM; அதுவும் ஒரு கணிதானே) வாக்குப் பதிவை நடத்தி, (மிகச் சிறு குறைபாடுகள் இருந்த போதிலும்), திறமையாக நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பதையும் பாராட்ட வேண்டும்.

அரசியல் கட்சிகள், பள்ளிப் பிள்ளைகள் ‘சிலேட்டை எடுத்துட்டான், பலப்பத்தைக் காணோம், சட்டையிலே கிறுக்கி விட்டுட்டாள், சடையைப் பிடித்து இழுக்கிறான் சார்! ‘ என்று ஆசிரியரிடம் குறைகள் சொல்வது

போல, அடுக்கடுக்காக, கட்டு கட்டாக குற்றச் சாட்டுகளை கட்சி வேறுபாடின்றி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது, மற்றும் அனுப்ப வேண்டிய நிலையில் இருந்தது, பார்ப்பதற்கு வெட்கமாகக் கூட சமயத்தில் இருந்தது பொதுமக்களுக்கு.

கணிகளை மிகப் பரவலாகக் கொண்டு சென்றவர்கள் என்றால் அது தேர்தல் ஆணையம்தான். கணிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை வேலையை ஒரு நாளுக்கும் குறைவாக ஆக்கிவிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் காலத்தை மட்டும் 21 நாள்கள் நடத்தி முரண்பாடாக நடந்து கொண்டு விட்டது.

தொலைக்காட்சிகளில் வரும் ‘மாதொடர் ‘ (Mega Serial) போன்று தேர்தலை அமைத்து விட்ட தேர்தல் ஆணையம் வரும் காலத்தில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏப்ரல்-20 ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவிற்கும், மே-10 ஆம் தேதியன்று நடந்த கடைசி கட்ட வாக்குப் பதிவிற்கும் 21 நாள்கள் இடைவெளி என்பது ஏற்கத் தக்கதல்ல.

பல காரணங்களைச் சொல்லக் கூடினும், இதை சுருக்கி ஒருவாரம் அல்லது 10 நாள்களில் முடித்திருந்திருக்கக் கூடியதே. தொலைக்காட்சி மாதொடரில் அதன் இயக்குனருக்கு ஒவ்வொரு நாள் காட்சியிலும், ஒரு உச்ச கட்ட காட்சி (climax) அமைத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும், அடுத்த நாளில் கதையை சவ்வு மாதிரி இழுக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். அதே போல இத்தேர்தலில் எல்லா அரசியல்க் கட்சிகளுக்கும் ஒவ்வொரு கட்டத் தேர்தலின் போதும் பிரச்சார திட்டம், சொல்லிய கதைகளை மீண்டும் சொல்வது போன்று கட்டாயங்கள் ஏற்பட்டு பொதுமக்களை நிறைய வாட வைத்து விட்டது தேர்தல் ஆணையம். இந்தக் குறையை வருங்காலத்தில் களைதல் வேண்டும்.

கருத்துக் கணிப்புகள்:

—-

இந்தக் கருத்துக் கணிப்புகளைக் குற்றம் சொல்லாத அரசியல் கட்சியினர் மிகக் குறைவு. கலைஞர் உள்ளிட்ட நிறைய தலைவர்கள் ‘கருத்துக் கணிப்புகள் தவிர்க்கப் படவேண்டும் ‘ என்று சொன்னது தங்கள் ‘கட்சிகளின் நலத்தை ‘ கருத்தில் கொண்டுதான் இருக்க வேண்டும். பா.ச.க ஒரு படி மேலே போய், அடுத்து ஆட்சிக்குவந்தால் ‘கருத்துக் கணிப்புகளை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் ‘ என்று சொன்னது.

ஆளுங்கட்சியாகட்டும், எதிர்க்கட்சியாகட்டும், தேர்தலுக்கு முன்னால், தங்கள் உளவுத்துறைகளின் மூலம் ஒரு கணிப்பை செய்து பார்த்தே தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், தேர்தல் சமயத்தில் கணிப்புகள் வெளியிடுவோரை சாடுவதும், அதைத் தடை செய்ய வேண்டும் என்பதும் அரசியலாரின் முரண்பாட்டையே காட்டுகிறது.

மின்னனு வளர்ச்சி, செய்தித்துறை வளர்ச்சி, மாற்றம் முதலானவற்றை ஏற்றுக் கொள்பவர்கள், கருத்துக் கணிப்புகளுக்கு மட்டும் முகஞ்சுழிப்பது

பார்க்க நன்றாக இல்லை.

கருத்துக் கணிப்புகள் சொன்ன முக்கிய சேதியான ‘எந்தக் கட்சிக்கும்

பெரும்பான்மை கிடைக்காது ‘ என்பது மட்டும் உண்மையானாலும், ஏறத்தாழ, பா.ச.கவிற்கு சொன்ன அளவு பேராயக் கட்சிக்கும் (Congress), பேராயக் கட்சிக்கு சொன்ன அளவு பா.ச.கவிற்கும் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதோடு, எல்லாக் கணிப்புகளும், பேராயக்கட்சிக் கூட்டணி, பா.ச.க கூட்டணி அல்லாத ‘பிறருக்கு ‘ 100 இடங்கள் மட்டுமே கொடுத்தன. அதில் நிறைய பிழை ஏற்பட்டிருக்கிறது என்று கருத வாய்ப்பிருக்கிறது. ‘பிறர் ‘ என்ற வகையினர் மேல் கவனத்தை செலுத்தாமல் இருந்து விட்டார்கள் என்று எண்ண வைக்கிறது அவர்கள் 130 இடங்களுக்கும் மேல்பெற்றிருக்கும் தற்போதைய நிலை.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘நெற்றிக்கண் ‘ என்ற ஏடு மட்டுமே அனைத்து 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று உறுதியாகச் சொன்னது. ‘நக்கீரன் ‘ ஏடு 40 இடங்களைப் பெறும் என்று சொன்னாலும் அதில் சற்று நம்பிக்கைக் குறைவாக இருந்தது. சூனியர் விகடன் 3 இடங்களை பா.ச.க+அதிமுக கூட்டணிக்கு வழங்கியது. இந்து, பிரணாய் ராய் போன்றவர்கள் 6 முதல் 9 இடங்கள் வரை அதிமுக கூட்டணிக்கு வழங்கினார்கள். நெற்றிக்கண் கணிப்பு மற்றும் லயோலாக் கல்லூரி மாணவர்களின் கணிப்பும் சரியாகவும், பெருமளவு உறுதியாகவும் இருந்தன.

தமிழகம்:

—-

‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் ‘ என்பார்கள். செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க என்ற பானைச்சோற்றின் பதத்தை 1991-96 ஆட்சியில் கண்ட தமிழக மக்கள், மீண்டும் 2001ல் அதே சோறை வேண்டி விரும்பி உண்டுவிட்டு தற்போது வாந்தி, மயக்கத்தில் இருப்பின் அதற்கு யார் பொறுப்பேற்க முடியும் ?

1996-2001க்கு இடைப்பட்ட தி.மு.க அரசில் தமிழகம் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்று ஆகாவிடிலும், பெரிய குறைகள் ஏதும் இன்றிதானே இருந்தது ? தி.மு.கவிற்கு மாற்று வேண்டுமெனின் வேறு எவருக்காவது வாய்ப்பு அளித்திருக்கலாம்; பேராயக் கட்சிக்குக் கூட வாய்ப்பளித்திருக்கலாம். ஆனால், விசச்சோறு என்று தெரிந்தும், ‘கலைஞர் நல்லாதான் ஆட்சி பண்ணினாரு – ஆனாலும் இந்த வாட்டி இலைக்குப் போடறேன் ‘ என்று சொல்லி வாக்களித்தவர்கள் ஏராளம். இன்று அவர்களின் இலையில் எலிக்கறியும், தொட்டிக் கஞ்சியும்தான் இருக்கிறது.

இன்று தமிழகத்திலே, பாராளுமன்றத் தேர்தலிலே, 40 இடங்களிலும் அதிமுக, பாசக கூட்டணி தோற்றுப் போயிருக்கும் இந்தக் காலச் சூழலில் உண்மையாக, பொதுமக்கள் மகிழ்வடைவதும், குமுகாயத்தின் பால் அக்கறை கொண்ட சிந்தனையாளர்கள் மகிழ்வடைவதும் ஆன சூழல் ஒரு தற்காலிகமானதுதானா, அல்லது நிலையானதுதானா என்ற அய்யப்பாடு இருந்து கொண்டேதான் இருக்கும்.

எம்சியார் மறைவுக்குப் பின்னர், 91ல் திமுக அரசைக் கலைத்த காலத்தைய ஆட்டங்களையும், அதற்குப் பின்னர் செயலலிதாவின் ஆட்சிக் காலத்தைய ஆட்டங்களையும், அதற்குப் பின்னர் அமைந்த மத்திய பா.ச.க ஆட்சியை ஆடவைத்த ஆட்டங்களையும் பார்த்த பின்னர், மீண்டும் 2001ல் செயலலிதாவை தமிழக மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றி வைப்பார்களே ஆனால், இந்த 2004ம் ஆண்டில் அவருக்குக் கொடுத்திருக்கும் தோல்வியும் வெறும் ‘வறட்டு மற்றும் முரட்டு சினம்தான் ‘ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதது.

எல்லா தொகுதிகளிலும் தோல்வியேயாயினும், அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. முழுமையான விவரங்கள் தற்போழுது இல்லாவிடிலும், ஏறத்தாழ, அதிமுகவின் வாக்கு வங்கியான 30 விழுக்காடு வாக்குகள் அதற்கு சென்று சேர்ந்தேயுள்ளன.

தினகரனால் பணமழை பொழிந்த பெரியகுளம் தொகுதியில் வெறும் 25000 வாக்குகளில்தான் அவரைத் தோற்கடிக்க முடிந்துள்ளது. ஆக ஆயிரம் கொடுமைகள் செய்யப்பட்டாலும் தேர்தல் நேரத்தில் தரப்படும் 100 உருவா காசுக்கு தன் சினத்தையெலாம், உரிமையெலாம் அடகு வைக்கக் கூடிய மன நிலையில் பெரிய மாற்றம் தெரியவில்லை. தினகரனைப் போல பல தொகுதிகளிலும் 10/15 கோடிகள் செலவு செய்ய முடிந்த ஆள்களைப் போட்டால் வெற்றி பெற்று விடலாம் என்ற பாடத்தை அ.தி.மு.க கற்றுக் கொள்ள ஏதுவாக இது அமையலாம்.

‘மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு ‘ என்பது போல மக்கள் தீர்ப்பு மட்டுமே உயர்ந்தது. ஆனால், இப்பொழுது அளித்திருக்கும் தீர்ப்பைப் பெற்ற திமுகவும் அதன் கூட்டணியினரும், அவ்வப்போது தங்கள் விரல்களால் தங்கள் கண்களைக் குத்திக் கொள்ளக் கூடிய தமிழக மக்களுக்கு உண்மையாகவே பயன் அளிக்க எண்ணினால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு 15 ஆண்டுகளுக்கு, தங்கள் பேதங்களை மறந்து, தேவைப்படின் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி செய்ய விட்டுக் கொடுத்து, தமிழர்கள் கட்சிகளுக்குள்ளாகவே ஆட்சியை வைத்துக் கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். அதுதான் நாகரிகமற்ற அதிமுக, பாசக அரசுகள் இம்மண்ணில் மேலும் காலூன்றாமல் மக்கிப் போவதற்கு வழி வகுக்கும். இல்லாவிடில், பார்த்தீனியம் செடி வளர்ந்து நாட்டைப் பாழ் செய்வது போல, செயலலிதா தலைமையில் அதிமுகவும் பாசகவும் தமிழகம் முழுவதும் பரவி தமிழகத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள்.

இந்தத் தேர்தலில் மக்கள் அளித்திருக்கிற இந்த முடிவு, கலைஞரின் கூர்மையான அரசியல் அறிவுக்கும், மற்ற கட்சியினரின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றிதானே தவிர, மக்கள் விழித்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சியினரை, தமிழ்ப் பகைவர்களை எதிர்த்து விட்டார்கள் என்று பொருளல்ல.

உண்மையான, கொண்டாடப் பட வேண்டிய வெற்றி என்றால், குறைந்தது

10 இடங்களிலாவது அதிமுக/பாசகவினர் தேர்தல் வைப்புத் தொகையை(deposit) இழந்திருக்க வேண்டும். வாக்குகளின் விழுக்காடும் குறைந்திருக்க வேண்டும்.

எவ்வளவோ கேடுகளை இந்த 3 ஆண்டுகளில் தமிழகம் இந்த அரசால் சந்தித்திருப்பினும் அப்படி எதுவும் நடக்காதது தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் காட்டவில்லை. 1991ல் இராசீவ் காந்தி மறைவை, திமுகவின் மேல் பழியாகத் தூக்கிப் போட்டபோது திமுகவிற்கு இதேத் தோல்வி நிலைதான் ஏற்பட்டது. ஒரு பொய்க் காரணத்தினை நம்பி,

திமுகவிற்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பில் திமுகவின் வாக்கு வங்கியே ஆட்டம் கண்டது.

ஆனால், இன்றைய அதிமுகவின் தோல்வியில் வாக்கு வங்கி ஏறத்தாழ அப்படியேயுள்ளது. ஆகையால், இந்த வெற்றிக்காக மகிழ்பவர்களின் மகிழ்ச்சியை ‘நீர்க்குமிழி ‘ போல ஆக்கிவிடக் கூடியவர்கள் தமிழக வாக்காள பெருமக்கள் என்பதனை உணர்ந்து மகிழ்வோர் மகிழ வேண்டும். அல்லது இப்போது மகிழ்ச்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு, வரும் 15 ஆண்டுகளில் நடைபெற இருக்கின்ற தேர்தல்களிலும் இதே நிலையை அதிமுக+பாசக விற்கு அளிப்பதற்கான சிந்தனையில் ஆழவேண்டும்; குறிப்பாக

தற்போதைய வெற்றியாளர்கள். அல்லாவிடில், இவர்கள் கூட்டு சேர்வதும் கூடிக் குலாவுவதும் பயனற்றவையே.

—-

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்