இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ரவி நடராஜன்


சென்னை ஐஐடி மணவன் என்றாலே சில இடங்களில் சென்னையில் தனி மரியாதை உண்டு. அடையார் பஸ் டிப்போவில், “ஏய் கெய்வி, தள்ளி நில்லு. நீங்க வாங்க சார்” –இப்படிப்பட்ட தனி உபசரிப்பு. அண்ணா சாலை புத்தகக் கடைகளில், “நீங்க ஐஐடியா சார். உங்க ஐடி கார்டை காட்டுங்க, 15% தள்ளுபடி தருகிறோம்”, என்று சலுகைகள். 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எங்கு சென்றாலும் 25 பைசாவுக்கு பல்லவன் ஏற்றிச் செல்லுவான். ஏனோ தெரியவில்லை, என்னுடைய கஸினுக்கு மட்டும் ஐஐடி மாணவர்கள் என்றால் கிண்டல். அவன் பார்வையில், ஷேவ் செய்யாமல், ஜோல்னா பையுடன், பாத்ரூம் செருப்பு அணிந்து யாராவது அடையார் பகுதியில் மர இலைகளை எண்ணிக் கொண்டு நடப்பதைப் போல இருந்தால், அது ஐஐடி மாணவன்!
”ஐஐடி யில் படித்துவிட்டு அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறார்” –இது மத்திய தர குடும்பங்களின் மிகப் பெரிய கனவு. ஏன், பிரணவ மந்திரம் என்று கூட சொல்லலாம். போதாத குறைக்கு அஷ்ட லட்சுமியின் வடிவமான (!) பில் கேட்ஸ் வேறு ஐஐடி யில் படித்தவர்களின் திறமையை பாராட்டித் தள்ளிவிட்டார். எரியும் நம் சமூக குறிக்கோளுக்கு அவர் பெட்ரோல் வேறு கொட்டிவிட்டு சைனாவில் இன்னும் கொஞ்சம் புகழாரம் சூட்டிவிட்டு சொந்த ஜெட்டில் ஸியாட்டில் போய் அடுத்த ஆட்டத்திற்கு போய்விட்டார். நாம் அவர் சொன்ன வார்த்தைகளிலேயே குளிர் காய்ந்து கொண்டிருக்கிறோம்.
சற்று யோசித்துப் பாருங்கள். முகேஷ் அம்பானிக்கு பெட்ரோலிய ரசாயன தொழில்நுட்பத்தில் டாக்ட்ரேட் படித்துவிட்டு, மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கு சம்பளத்திற்கு, ஆங்கிலமும், குஜராத்தியும் பேசும் டான்ஸனியா நாட்டுக்காரர்கள் கிடைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். கசக்குமா அம்பானிக்கு? டான்ஸனியா போய் அவர்கள் படித்த பலகலைக் கழகத்தை புகழ்ந்து தள்ளுவது இயற்கைதானே? உள்ளூர் டாக்ட்ரேட் பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் 30,000 சம்பளம் என்றால், டான்ஸனியாகாரர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்து பயனடைவது வியாபார தந்திரம். இதைத் தான் பில் கேட்ஸ் செய்கிறார். ஆனால், நாம் இதை ஒரு பெரிய சாதனையாக நினைக்கிறோம்.
ஐஐடி என்பது இந்திய முன்னேற்றத்திற்காக 1950 களில் உருவாக்கப்பட்டது. முதலில் 5 ஐஐடி கள் கரக்பூர், கான்பூர், டில்லி, மும்பய் மற்றும் சென்னையில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் என்னவோ இந்த அமைப்பு சரியாகத்தான் வேலை செய்தது. அங்கு படித்து, வெளிவந்த பொறியாளர்கள் இந்திய கட்டமைப்பு, ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு உதவியது உண்மை. ஆனால், 1960 களின் கடைசியில் உயர் கல்வி மோகம் பல பொறியாளர்களை அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க வைத்தது. மேலை நாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர் இந்தியா திரும்பி வந்து இந்திய முன்னேற்றத்திற்கு 1970 கள் வரை உதவி வந்தனர். இதன் பிறகு, ஐஐடி என்பது சமூக சூழலில், மேல்நாட்டிற்கு செல்ல கிடைக்கும் ஒரு லைசன்ஸாக மாறியது. ஒரு 7 வருட லாட்டரியாக மாறியது. எப்படி 7 வருடம்? நுழைவு பரீட்சைக்காக 2 வருடம் உழைப்பு, 5 வருட கடின படிப்பு, அப்புறம் அமெரிக்கா. 90 சதவீதத்தினர் இந்தியா திரும்புவதில்லை.
நம்மவர் அறிவு மேல் நாட்டிற்கு நம் கண் முன்னே வடிந்து (brain drain) வீணாகிறது என்று சில காலம் அழுதுவிட்டு, மீண்டும் அடுத்த ஊழல் விஷயத்திற்கு சென்று விடுவோம். எனக்கு தெரிந்து எந்த ஒரு அரசாங்கமும் இதைப் பற்றி உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இன்றைய நிலையில் ஐஐடி க்கு இந்திய அரசாங்கம் செய்யும் செலவு அதிகமாக தோன்றாது. ஆனால், 1990 கள் வரை ஒரு பிராந்திய தொழில்நுட்ப கல்லூரியைவிட 7 மடங்கு அதிகச் செலவு. ஒரு உள்ளூர் தொழில்நுட்ப கல்லூரியைவிட 10 மடங்கு செலவு என்றிருந்தது. இந்திய மக்களின் வரிப்பணம் நல்ல நோக்கத்துடன் செலவிடப்பட்டாலும், நாட்டிற்கு என்ன பலன் கிடைக்கிறது என்று யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.
பில் கேட்ஸ் புண்ணியத்தில், தாஜ் மகாலுக்கு அடுத்தபடி அதிகம் தெரிந்த இந்திய பெயர் ஐஐடி என்கிறது ஒரு அமெரிக்க இதழ். உடனே துடித்து எழுந்தது இந்திய அரசு. 50 கோடி மக்கள் வாழ்ந்த பொழுது 5 ஐஐடி கள் என்று இருந்த்து. இன்று 120 கோடி இந்தியர்களின் அமெரிக்க கனவை எப்படி பூர்த்தி செய்வது? 2008 ல் இன்னும் 8 ஐஐடி க்கள் திறக்கப் போவதாக அறிவித்தது. ராஜஸ்தான், பீஹார், பஞ்சாப், ஆந்திரா, ஹிமாசல், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா என்று 8 புதிய ஐஐடி கள். முதல் இருந்த 5 ஐஐடி கள் 8 டாக இடைக்காலத்தில் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதைப் போன்ற அபத்தம் உலகில் எங்கும் கிடையாது என்பது என் கருத்து. 5 லாட்டரி சீட்டுகள் மட்டுமே இருந்த நாட்டில் இன்று 16 லாட்டரி சீட்டுகள் – அருமையான முன்னேற்றம்! இந்தியக் கனவு – மூச்!
ஐஐடி களால் இந்தியாவுக்கு எந்த பயனுமே இல்லை என்பதல்ல என் வாதம். இந்தியாவைவிட மேலை நாடுகள் அதிகம் பயனடைகின்றன என்பதே என் வாதம். இந்த தாஜ் மஹால் உள்ளே போய் சற்று பார்த்தால் சில விஷயங்கள் திடுக்கிட வைக்கும். முதலில், ஐஐடிகளில் பல சொல்லிக் கொடுக்கும் பதவிகள் நிறப்பப்படாமலே உள்ளன. இது வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இரண்டாவது, புதிய ஐஐடிகளில் அவசர சுறுட்டல் அமைச்சர் ஆரம்பித்த பொறியியல் கல்லூரி போல ஆய்வு வசதிகளே இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். மூன்றாவது, ஐஐடி க்கள் மற்றும் இந்திய உயர் கல்வி அமைப்புகளிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சி வெளியீடுகள் குறைந்து வருகின்றது.
இந்த மூன்று பிரச்சனைக்கும் காரணம் ஜனரஞ்சக அரசியல் மற்றும் நம் சமூக வழக்கங்கள் என்பது என் கருத்து. இவை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் ஐஐடி போன்ற உயர் கல்வி அமைப்புகளையும் பாதிக்க தொடங்கிவிட்டது. இந்த மூன்று பிரச்சனைகளையும் விரிவாகப் பார்ப்போம்.
முதல் பிரச்சனை, நிறப்பப்படாமல் இருக்கும் சொல்லிக் கொடுக்கும் பதவிகள். இன்று இந்த அவல நிலைக்கு காரணம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களுக்கு போதிய சம்பளம் இல்லை. மேலும், இந்த லாட்டரி வியாபாரத்தில், ஐஐடி டுடோரியல் என்ற தொழில் ஓஹோ என்று நடக்கிறது. உடனே லாபம் என்று இயங்கும் இந்த டுடோரியல் கல்லூரிகள் நகரங்களில் நடுத்தர வருமான குடும்பத்தினர் அமெரிக்க கனவை பூர்த்தி செய்யக் கிளம்பியுள்ள அமைப்புகள். இரண்டு அல்லது மூன்று வருட கடும் பயிற்சி. லட்சக் கணக்கில் கட்டணம். சொல்லிக் கொடுப்பவர்கள் யார்? முன்னாள் ஐஐடி பேராசிரியர்கள்! நான் கேள்வி பட்டதில், மிகச் சிறந்த பேராசிரியர்களுக்கு 80 லட்சம் வரை வருட சம்பளம். ஐஐடியின் டைரக்டருக்கே அவ்வளவு சம்பளம் இருக்காது. எல்லாம் இந்த லாட்டரி உபயம். இதில் என்ன தவறு? அந்த பேராசிரியருக்கு திறமை இருக்கிறது. அதனால் சம்பாதிக்கிறார், என்று தோணலாம். அவர் பேராசிரியர் ஆனது மாணவர்களை நுழைவுத் தேர்வில் பிரசாசிக்க வைக்கவா? அல்லது, நாட்டிற்கு உருப்படியான ஆய்வுகள் நடத்தவா? இப்படி எளிதான வழியில் சம்பாதிக்க வழி இருந்தால், யார் ஐஐடியில் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி போன்ற கடினமான வழிகளில் உழைப்பார்கள்? இப்பொழுது புரிந்திருக்கும் ஏன் இவ்வளவு சொல்லிக் கொடுக்கும் பதவிகள் தகுதியான ஆட்களுக்காக ஏங்கிக் கிடக்கின்றன என்று?
இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரச்சனைகளின் அடிப்படை ஒன்றுதான். உடனே சம்பாதிக்கத் துடிக்கும் நம் சமூக அமைப்பு, மற்றும் அடுத்த தேர்தலை மனதில் கொண்ட ஜனரஞ்சக அரசியல். லட்சுமி சரஸ்வதிக்கு அடுத்தபடியாக நாம் வணங்கும் தெய்வம் பில் கேட்ஸ். அவர் சொல்லிவிட்டால் கேள்வியே கிடையாது. அவருக்கு ஐஐடி மாணவர்கள் வேண்டுமாம், அதனால் நாங்கள் எப்படியோ அங்கு படித்துவிட்டு மைக்ரோசாஃப்டில் குப்பை கொட்டத் தயார். முதலில் அவருக்கு ஐஐடி என்பது பல இந்திய நகரங்களில் இருக்கின்ற ஒரு பொறியியல் அமைப்பு என்பதே தெரியாது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். அவரது நிறுவனத்தில் மனித வள இலாகா ஐஐடியில் படித்த மாணவர்கள் திறமைசாலிகளாய் இருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லியுள்ளது. அதை பில் நாசூக்காய் இந்தியர்கள் இருக்கும் அமைப்புகளில், கூட்டங்களில் பயன் படுத்திக் கொண்டுள்ளார். அவ்வளவே. மேலும், என்னுடன் வேலை செய்த பல திறமைசாலி மென்பொருள் பொறியாளர்கள் ஐஐடியில் படிக்காமல் மைரோசாஃப்டில் வேலை செய்து அலுத்துப் போய் வெளியே சென்றுள்ளார்கள். தேவை ஒரு தொழிலில் திறமை. ஐஐடியில் மட்டும்தான் அது கிடைக்கும் என்பது ஒரு கண்மூடித்தனமான சமூக நம்பிக்கை.
சரி, எப்படித்தான் இயங்க வேண்டும் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஐஐடி? எனக்கு பட்டதை இங்கு சொல்லிவிடுகிறேன். இது ஒரு நிபுணத்துவம் கொண்ட ஆய்வு அல்ல. ஆனால் நாட்டு நலன் கருத்தில் கொண்ட ஒரு தீர்வு என்று கருதுகிறேன். 1950 களில் இந்தியாவில் அதிகம் பொறியியல் கல்வி வாய்ப்புகள் இல்லை. அதனால்ஐஐடி போன்ற அமைப்புகள் தேவைப்பட்ட்து. இன்று இந்தியாவில் 3,500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன (http://www.indicareer.com/engineering-colleges-in-india.html). என்னதான் கல்வித்தரம் என்று பார்த்தாலும், கல்விச் சந்தையில் ஐஐடியிடம் ஒன்றும் புதிதாக கொடுக்க எதுவும் இல்லை. மேலும் ஐஐடியில் படித்தவர்கள் மேலை நாட்டிற்கு செல்கிறார்கள் இல்லையேல் பன்னாட்டு நிறுவனங்களில் சோப்பு விற்கிறார்கள். இந்திய குடிமகனின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த தரமான அமைப்புகளை தொலைநோக்குடன் மாற்றி அமைக்கும் வாய்ப்பை நாம் 2008 ல் விட்டு விட்டோம் என்று தோன்றுகிறது. என் பார்வையில், இப்படி திருத்தி அமைத்திருந்தால், நம் சமூகப் போக்கையே மாற்றும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கலாம்:
1. ஐஐடியில் இளநிலை கல்வியை முற்றிலும் நிறுத்தியிருக்கலாம். 2012 க்கு (2008 ல் சேர்ந்த மாணவர்கள் பட்டம் பெறும் வரை தொடர வேண்டும்) பிறகு முதுநிலை பொறியியல் கல்விக்கு மட்டுமே ஐஐடி என்ற நிலயை உண்டாக்கலாம்.
2. சமூக தேவை உயர் பொறியியல் ஆராய்ச்சி என்று கொண்டால், 2012 முதல் ஆராய்ச்சியை மையமாக கொண்ட படிப்பை ஐஐடி களில் உருவாக்கியிருக்கலாம். உயர் பொறியியல் ஆராய்ச்சியில் நாட்டம் கொண்டவர்கள் மட்டுமே ஐஐடியில் படிக்கலாம். மற்றவர்கள் வெளியில் படித்துக் கொள்ளட்டும்.3,500 கல்லூரிகளில் ஐஐடி போன்ற தரமான பொறியியல் கல்வி இல்லை என்ற வாதம் அபத்தமானது. 120 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், 64 ஆண்டுகளில் தரமான ஒரே ஒரு அமைப்பைதான் உருவாக்க முடிந்தது என்றால், அது வேறு பெரிய பிரச்சனை!
3. இளநிலை நுழைவுத் தேர்வான JEE யை முற்றிலும் நிறுத்தியிருக்கலாம். டுடோரியல் லாட்டரி சமாச்சாரத்தை முடிவு கட்டலாம்.
4. முதுநிலை நுழைவுத் தேர்வான GATE என்பதை ஆராய்ச்சி பூர்வமான தேர்வாக மாற்ற 4 வருடங்கள் போதுமானது.
5. எட்டு புதிய ஐஐடிக்கள் தேவையே இல்லை.
6. முதுநிலை பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவிப் பணம் கொடுக்கலாம் (scholarships). அதிகம் செலவாகுமே என்று அழ வேண்டாம். அடுத்து நாம் சொல்லும் ஐடியாவில் அதைச் சரி செய்துவிடலாம்.
7. முதுநிலை படிப்புக்கு சேர்ந்தவர்கள் அனைவரும் கட்டாயமாக ஒரு வருடம் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர்களது உதவிப்பணம் அந்த ஒரு வருடமும் தொடரும். இப்படிக் கட்டாய ஆராய்ச்சி செய்தால்தான் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.
8. ஒவ்வொரு ஐஐடிக்கும் இத்தனை ஆராய்ச்சி வெளியீடுகள், இத்தனை பேடண்டுகள் என்று ஒரு குறிக்கோள் வைத்து பேராசிரியர்களின் சம்பளமும் அதற்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு செய்திருந்தால், என் பார்வையில் தாஜ் மகாலை விட ஐஐடிக்களை இன்னும் பிரசித்தி பெறச் செய்யலாம். வெறும் ஆதாயம் பெற்ற வியாபாரிகள் புகழாரத்தில் குளிர்காய வேண்டியதில்லை.
இக்கட்டுரையில் நான் ஐஐடியைப் பற்றி அதிகம் விவாதித்துள்ளேன். இது வெறும் ஐஐடி பிரச்சனை அல்ல. இது ஒரு நிறுவகப் பிரச்சனை (institutional problem). சுதந்திரம் அடைந்த புதிய இந்தியாவில் பட்நாகர், பாபா போன்ற விஞ்ஞானிகள் அருமையான நிறுவகங்களை உண்டாக்கினார்கள். அவற்றை நாம் எவ்வளவு சீரழிய விட்டு விட்டோம் என்பதற்கு ஐஐடி ஒரு எடுத்துக்காட்டு. அத்துடன் எனக்கு ஐஐடி தொடர்பு தொடர்ந்து உள்ளதால் அதன் சில பிரச்சனைகளைப் பற்றி அறிவேன். இது போன்ற பிரச்சனைகள் நம் பொது நிறுவகங்கள் அனைத்திலும் பரவி நம் சமூகத்திற்கு உதவாமல் சீரழிந்து வருகின்றன என்பது என் கணிப்பு. அரசாங்கம் மக்களின் அடுத்த தேர்தல் ஓட்டை நினைத்தே செயல்பட்டால் இவற்றை சரி செய்ய முடியாது. இந்திய வளர்ச்சி சிக்கலானது. ஆனால், மனித வளம் என்பது நம்மிடத்தில் ஏராளம். சரி செய்ய முடியாத பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. நம்மில் பலருக்கு நிறுவக வளர்ச்சியில் (institution building) நாட்டமில்லாமல் போனதுதான் துரதிஷ்டம். நாட்டின் ஏராளமான ஜனத்தொகை வளர்ச்சியைக் காரணம் காட்டி, நம் நிறுவக தரத்தை (institutional quality) கோட்டை விடத் தயாராகிவிட்டோமோ என்ற அச்சம் எழுகிறது. மனித சக்தி அதிகமாக உள்ள நம் நாட்டில் நல்ல மனித அமைப்புகளின் தரம் கெடாமல் பாதுகாப்பது அவசியம்.
அமெரிக்காவில் புஷ் போன்ற அசம்பாவிதங்கள் அவ்வப்போது நேர்ந்தாலும் நிறுவக ஒருமைப்பாட்டில் (institutional integrity) குறியாக இருக்கிறார்கள். புஷ் ஆட்சியில் பல பொருளாதார, சட்ட மற்றும் அரசாங்க நிறுவகப் பிரச்சனைகள் இன்னும் சிக்கலில் மாட்டி வெளிவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அமெரிக்க கல்வி அமைப்புகள் மற்றும் இதர ஆராய்ச்சி அமைப்புகள் எப்படியோ சமாளித்து வந்துள்ளன. அதைப் போன்ற அரசியல் அதிர்ச்சிகளை தாண்டி நிலைக்கும் நிறுவகங்களே வளர்ந்த ஒரு நாட்டின் அடையாளம். என் பார்வையில் இந்தியர்கள் சற்று இதைப் போன்ற வளர்ச்சி பிரச்சனைகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவுகோல், அதன் நிறுவகங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இன்று இங்கிலாந்தின் உலக பொறுளாதார வீச்சு மிகக் குறைவுதான்; ஒரு காலத்தில் (18 முதல் 19 நூற்றாண்டுகள் வரை) பெரும் வீச்சு இருந்த நாடு அது. ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் உருவாக்கிய சில நிறுவகங்கள் இன்றும் பல பொருளாதார சரிவுகளையும் தாண்டி நிற்கின்றன. உதாரணத்திற்கு, இன்றும் உலகில் எங்கிருந்து கப்பல் மூலம் சரக்கு ஏற்றிச் சென்றாலும் அதன் காப்புரிமை லண்டனில் தீர்மானிக்கப் படுகிறது. அதே போல கச்சா எண்ணெயின் விலையையும் லண்டன் நிர்ணயிக்கிறது. சீறான அமைப்பு மற்றும் உயர்தர நிறுவகங்கள் பொருளாதார ஏற்ற இறக்கங்களைத் தாண்டி ஒரு நாட்டின் பலமாக விளங்கும் தன்மை கொண்டவை.
அவசரமாக சைனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு வளர வேண்டும் என்று நிறுவக சமரசங்கள் செய்தால், அது எதிர்காலத்தில் உதவாது. இந்த சீரழிவு மிக மெதுவாக (glacial pace) நடப்பதால், அது உடனே தெரிவதில்லை. கவனிக்காமல் விட்டு விட்டால், சரி செய்வது மிகவும் கடினம். அதுவும், குறுகிய நோக்கோடு அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அவசர கோலமாய் ஏதாவது செய்தால், விளைவுகள் நாட்டுக்கு பாதகமாகி விடும்.
நல்ல நிறுவகங்கள் என்றால் இந்திய ராணுவம், இந்திய விண்வெளிக் கழகம், இந்திய அணு ஆராய்ச்சி கழகம் போன்றவை நினைவுக்கு வருகிறது. இது போல பல நல்ல நிறுவகங்கள் நம் நாட்டில் இன்றும் உள்ளது. நிறுவக ஒருமைப்பாட்டை வளர்ச்சிக்காக விட்டுக் கொடுப்பது விவேகமான செயலல்ல. ஏனென்றால், வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், வளர்ச்சியைத் தாண்டி ஒரு நாட்டின் பெருமையாக விளங்கக்கூடியவை நிறுவகங்கள்.

Series Navigation

ரவி நடராஜன்

ரவி நடராஜன்