இது பின்நவீனத்துமல்ல

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

கே.பாலமுருகன்


காலனித்துவக் காலக்கட்டத்தில் நம் சமூகத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறைகள் மிகவும் நேர்த்தியான அரசியல் மேலாதிக்க சிந்தனைவாதிகளாலும் பொருளியல் முதலாளித்துவத்தின் ஐரோப்பா மையவாத ஆட்சியாளர்களாலும் கையாளப்பட்டது என்றே சொல்லலாம். நம்முடைய காலனித்துவ சமூகத்தையும் காலனித்துவத்தின் பிந்தைய (பின்காலனித்துவ) சமூகத்தையும் கல்வியறிவில்லாதவர்கள் பின்னடைந்த வெறும் உடலுழைப்பு தொழிலாளிகள் என்று வகைப்படுத்துவதற்கு முன் அதன் வரலாற்றுப் பின்னனி தெரிந்த்திருக்க வேண்டும்.
நான் முன்பே கூறியது போல வரலாறு என்பது “வெற்றிப் பெற்றவனின்” வாழ்க்கைக் குறிப்புகள் என்றே ஒரு மாயை இருக்கிறது. இந்த கதாநாயக பிம்ப அரசியலை தகர்த்து கடந்து வரலாற்றின் துயரங்களையும் போர்க்கால மனோநிலைகளையும் அவதானிக்க நேர்ந்தால், வரலாறு முழுக்க காம வெறிகளின் உச்சங்களும் படுகொலைகளும், சிதைவுகளும் நிறைந்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். காலனித்துவ சமூகம் சந்தித்த மோசமான விளிம்பு சிதறல்களே அதிகார மையத்தைச் சுற்றி அவர்களின் கால்களில் மிதிக்கப்பட்ட மனிதநேயமும் உள்ளார்ந்த அரசியல் கட்டமைப்புகளும்தான்.
அப்படிப்பட்ட மையவாத அரசியலாலும் வர்த்தக பெரும் நிறுவனத்தின் உற்பத்தி சக்திகளாகவும் ஆட்டு மந்தைகள் போல கொண்டு வரப்பட்ட நம் முன்னோர்களான காலனித்துவ சமூகத்தை வெறும் “சஞ்சி கூலிகள்” என்றும் கல்வியறிவில்லாதவர்கள் என்றும் சொன்னால், அவர்களை வரலாற்றுப் பார்வையற்ற குருடர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வன்முறை ஆட்சி காலத்தில் சயாம் பர்மா இரயில் பாதையை நிறுவதற்காக தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நம்மவர்களை இழுத்துக் கொண்டு போன போதே காலனித்துவ சமூகத்தின் குடும்பங்கள் சிறுக சிறுக உடைய துவங்கின என்றே சொல்லலாம். நேரில் சிலரைச் சந்தித்து கேட்ட போது அந்த மரண இரயில் கட்டுமானத்திற்காக இழுத்துக் கொண்ட போனவர்கள் பலர் திரும்பி வராததன் விழைவுகளை, ஒரு அடக்குமுறையின் மனோபாவம் என்று மட்டும் பார்க்காமல், அதற்குப் பிறகு சிதைந்து போன குடும்ப அமைப்புகளையும் மதிப்பீட வேண்டும் என்பது புரிந்தது.
குடும்ப அரசியலின் மிகப்பெரிய பிம்பமே குடும்ப தலைவன் அல்லது கணவன், குடும்பத்தாரின் ஒட்டு மொத்த விருப்பும் வெறுப்பும் அவனைச் சார்ந்ததகவே நிறுவப்பட்டிருக்கும். அந்தக் குடும்ப அமைப்பின் புனிதங்களையும் மதம் ஏற்படுத்திய ஒழுக்க மதிப்பீடுகளும் அவன் நிர்ணயிக்கக்கூடியதாகவே இருந்தது. அப்படியிருக்க அந்தக் காலனித்துவ குடும்ப அமைப்பிலிருந்து அதிகார வர்க்கத்தினரால் நீக்கப்படுவதன் மூலம் அந்தக் குடும்பத் தலைவன் என்கிற இடம் காலியாகிவிடுகிறது. அந்த இல்லாமையின் விளைவுகளைப் பண்பாட்டுத் தளத்தில் வைத்து விமர்சிக்க நேர்ந்தால் அதன் உள்கட்டுடைப்புகள் அப்பொழுதே நம் கலாச்சார வேலிகளைக் கடந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆகையால் காலனித்துவ காலக்கட்டம் உருவாக்கிய மனோபாவங்கள் அனைத்தும் வெறுப்பும் அடிமைத்தனமும் நிரம்பிய ஒரு சூழலும் புரிதலும் மட்டுமே.
முதல் சிதைவு, கள்ள உறவுகள் வலுக்கத் துவங்கின. இல்லாமைகளையும் குடும்ப அரசியலின் காலியான இடங்களையும் நிரப்புவதற்காக மாற்றுப் பிம்பம் தேவைப்பட்டது. அதன் விளைவாக குடும்ப அமைப்பின் கற்பிதங்கள் மீறப்பட்டன. தகாத உறவுகள், முதலாளித்துவ சந்தர்ப்பவாதங்கள், வறுமையைக் காட்டி அச்சுறுத்தல், என்று இதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த குடும்ப அமைப்பின் மீதான எல்லாம்விதமான புனிதங்களும் கட்டுடைக்கப்படுகின்றன. இது மிகச் சாதரணமாக மையவாத அல்லது ஐரோப்பா சிந்தனைகள் கொண்டு வந்து திணித்த வர்த்தக அடிமைகளின் குடும்ப சிதைவிலிருந்து உருவாகும் ஒரு மீறல் அல்லது கட்டுடைப்புகள். இதை நிகழ்த்தியது நம் மலேசிய நிலப்பரப்பில் வாழ்ந்த காலனித்துவ சமூகத்தின் மக்கள்.

1. பின்நவீனத்துவத்தின் ஒரு கூறு: புனித பிம்பங்களைக் கட்டுடைத்தல். அதாவது இதுவரை கேள்வியெழுப்ப முடியாத கலாச்சார இறுக்கங்களால் புனிதமென கட்டமைக்கப்பட்ட ஒன்றை சமூகத்தின் பெரும்பான்மை ஆக்கிரப்பின் விளைவாக புனிதமென கற்பிக்கப்பட்ட ஒன்றின் மீது கேள்வி எழுப்புவதன் மூலம் அதன் பிம்பங்களைக் கட்டுடைத்து போடுவது.
இந்தக் கட்டுடைப்புகள் மலேசிய நிலப்பரப்பில் பின்நவீனத்துவத்தின் கூறுகளையும் தத்துவங்களையும் அறியாத காலனித்துவ காலக்கட்டத்திலேயே “கல்வியறிவு இல்லாதவர்கள்” என்று சிலரால் அடையாளப்படுத்தப்படும் நம் முன்னோர்கள் நிகழ்த்திவிட்டார்கள். இது பின்நவீனத்துவமல்ல, அல்லது பின்நவீனத்துவத்தின் பாதிப்பும் அல்ல. நிதர்சனத்தில் அவர்கள் அனுபவித்த அரசியல் அடக்குமுறைகளின் பக்க விளைவுகளாலும் மேலாதிக்க சிந்தனையாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளாலும், இயல்பாக எழுந்தவை. ஆகையால் பின்நவீனத்துவம் வெறும் மேற்கத்திய இறக்குமதி என்று சொல்வதை இப்படியும் பார்க்கக்கூடும். அதை நிறுபவித்து காட்டவும் பல சான்றுகள் உள்ளன.
மண் புழுக்கள் போன்ற மலேசிய நாவல், அந்தக் கள்ள உறவுகளையும் குடும்ப கலாச்சார மீறல்களையும் மிக துணிவாக வெளிப்படுத்தியுள்ளது. மேற்கத்திய பின்நவீனத்துவத்தின் எந்த மேற்கோளும் புரிதலும் தேவையே அற்ற ஒன்று. நம் கண் முன்பே பின்நவீனத்துவம் என்று சொல்லக்கூடிய ஒன்றின் கூறுகளை வாழ்வாகவே வாழ்ந்து மடிந்து போன நம் காலனித்துவ மக்களின், நம் மண்ணின் மைந்தர்களின் வரலாறு போதுமே. மேற்கத்திய பின்நவீனத்துவங்களை ஒரு பாடமாக கல்வியாக பயின்றுவிட்டு எல்லாவற்றையும் இறக்குமதியென்று புலம்பி கொண்டிருப்பவர்கள் பார்வை இன்னும் வரலாறு நோக்கி விரியவே இல்லை.
– – – –
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.co

Series Navigation