இடமாற்றம்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கார் போய்க்கொண்டிருந்தது. இப்பவும் கூட அப்பாவுக்கு நெடுஞ்சாலை குறுக்கே ஊருக்குள் நுழைய எங்கே காரைத் திருப்ப வேண்டும் என்பதில் திணறல்தான். அரசியல்வாதி ஒருவர் பற்றிய தெரு விளம்பரம், ஒவ்வொரு எழுத்தாய் உயர உயரமாய் அரையாள் அளவு பேர் எழுதியிருக்கும். எங்கள் ஆருயிர் அண்ணனே வருக வருக… இடப்பக்கம் ஒரு சின்ன டீக்கடை ஆருயிர் அண்ணன் வந்தால் டீ சாப்பிடுக, என்று தருவார்களா யிருக்கும். சுவருக்கும் டீக்கடைக்கும் நடுப்புற சின்னச் சந்தில் காரை வலப்பக்கம் ஒடித்து நெடுகப்போனால் ரயில்வே கேட் தாண்டி, சாலையை ஒட்டி, ஆட்டுக்கிடை போட்டமாதிரி, சிறு கும்பல்வீடுகள் தாண்டி வயல்வெளி. உயரம் பண்ணிய மேட்டுப் பாதை. ரெண்டு பக்கமும் வெள்ளாமையில்லாமல் கரடுதட்டிக் கிடக்கிறது. படித்துறை வைத்துக் கட்டிய ஒரு வறண்ட குளம்… ஆலமரத்தடியில் உயர்த்திப் பிடித்த அரிவாளுடன், முகம் மழுங்கிய விக்கிரகம். சருகுமாலை. டாய், நான் யார்னு பார்த்தே, என்று குடிபோதையில் வீராப்பு பேசுகிறாப் போல…
ஒரு பஸ் போகிறஅளவு சரளை ரஸ்தா. மழை பெய்தால் தெருவே கசகசவென்று கனலாய்ச் சிவந்து கிடக்கும். நடக்க இயலாது. வழுக்கும். குண்டும் குழியும் பெயர்ந்து அமுங்கிக் கிடக்கும்.
”எப்பிடி இங்கபாத்து இடம் வாங்கினே அப்பா…” என்று வழக்கம்போல சவிதா சலித்துக்கொண்டாள். என்றாலும் அவளுக்குத் தெரியும் அப்பாவின் கனவு இல்லம் இது. சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்து துவங்கி, தந்தை தவறிப்போக, கடன்வாங்கி, சகோதரி ஒருத்திக்குத் திருமணம் முடித்துக்கொடுத்து நிமிர்ந்தபோது, முன்தலைமயிர் பின்வாங்க ஆரம்பித்திருந்தது. தனக்கு கல்யாணமே ஆகாது என நினைத்திருந்தார். கல்யாணமும் ஆகி சவிதாவும் பிறந்து இப்போது… ஆ, சொந்தமாய் வீடு!
”எல்லாம் நீ பொறந்த அதிர்ஷ்டந் தாண்டி… செல்லம்” என்று அவளைக் கொஞ்சுவார். வெளியே எங்கே போனாலும் வரும்போது சவிதாவுக்கு என்று எதும் வாங்கிவருவார். வங்கியில் கல்விக்கடன் தருகிறான் என்று அசராமல் அவளை இன்ஜினியரிங் படிக்க அனுப்பியிருக்கிறார்.
அப்பாவிடம் இப்போது ஒரு நிமிர்வு கண்டிருக்கிறது. பேச்சில் ஒரு உறுதி வந்திருக்கிறது. அலுவலகத்தில் பதவியும் கௌரவமும் உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் செலவு தருகிறார்கள் என்றதும் காரோட்ட கற்றுக்கொண்டு பழைய கார் ஒன்றை வாங்கினார். முதல் காரியமாக பின் கண்ணாடியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் சின்னம்… விரித்த தாமரை இதழடுக்குகளை மேலிருந்து பார்க்கிறாப் போன்ற லச்சினையை ஸ்டிக்கர் பதித்தார். தெருவில் நிற்கிறது கார் என்றதும்தான் அப்பாவுக்கு சொந்தமாய் இடம் வாங்கும் உந்துதல் கிளம்பியிருக்க வேண்டும். அதுவரை நகரத்தின் மையத்தில் வீடு என்பது வசதியாய்ப் பட்டிருந்தது போலும்.
”எங்க போனாலும் ராத்திரி இருட்டறதுக்குள்ள இங்க வந்து அடைஞ்சாகணும்…” என்றாள் பார்வதி. கூடைக்கோழி போல உணர்ந்தாளோ என்னவோ.
என்னதான் பணத்தேவை இருந்தாலும் அப்பாவுக்கு மனைவி சம்பாதித்துக் கொண்டுவர வேண்டும் என்று யோசனை இல்லை. பணம் என்பது குதிரைமுன் நீட்டப்பட்ட கொள்ளாய் எப்பவும் நம்மை நுரைதள்ள ஓடவைத்து விடுகிறது.
பணமா முக்கியம், நல்ல குணவானா, புத்திசாலியா இருக்கணும்… என்பது அவர்அப்பா வாக்கு. பணம் சம்பாதிக்கிற சாமர்த்தியம் இல்லாததால் அது வந்திருக்கலாம்… நெல்லைப்போட்டு நெல்லை விளைவிப்பது போல, பணத்தை எறி. பணத்தை அறுவடை செய்… என்ற சித்தாந்தங்கள் உவப்பாகாத குடும்பம். எல்லாம் கிரகச்சாரப் பலன். என்றாலும் விதியை மதியால் வெல்லலாம்… என்று உள்ளே குழம்பிக் கிடக்கிற நடுத்தர வர்க்கம்.
தன் பிறந்தவீட்டை விட இங்கே பெரியசுற்றில் வளையவர வேண்டும் என்பது அம்மாவின் எடுப்பாய் இருந்தது. அதுதான் பிறந்தவீட்டில் நமக்குப் பெருமை என நினைத்தாள். இந்தக் காலத்தில் அவள்அப்பாவுக்கு அஞ்சு குழந்தைகள். அவள் அஞ்சாவது. பெண். ”எதோ எனக்குத் தக்ன கௌரவத்தோட கல்யாணம் பண்ணித் தர்றேன், பெரிசா பண்ணணும்னு ஆசைதான்…” என மாமனார் சொன்னபோது, கணேசன் நெகிழ்ச்சியுடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். அவரிடத்தில், இழந்த தன் தந்தையையே பார்த்தான் போல. ”உங்க ஆசிர்வாதம் போதும்,” என்று அப்பா சொல்லியிருக்கலாம்… என நினைத்துக்கொண்டாள் சவிதா.
பெரியவாளானா உங்க ஆசிர்வாதம், சின்னவாளானா நீ பிறந்த அதிர்ஷ்டம்… என அப்பா நெகிழ்ந்துவிடுகிறார். சே ரொம்பத்தான் கலாய்க்கிறோம், என தலையை உதறிக்கொண்டாள்.
அம்மாவுக்கு நல்ல சாரீரம். சில சமயம் சமையலறையிலோ குளியலறையிலோ, திடுமென்று தன்உள்ளே பொங்கும் அலையெழும்பலில் பாட ஆரம்பித்து விடுவாள். ரேடியோ பாடினால் கூட அடுத்த வரி தன்னைப்போல வாயில் கிளம்பும். சிவாஜி பாடும் சோக கானங்களின் ரசிகை. கிராமங்களில் இழவுவீடுகளில் வரிசையாய்ப் போட்டுவிடுகிறார்கள்.
வத்திராயிருப்பு பிறந்த பூமி. வாக்கப்பட்டது மயிலாப்பூர். கபாலிஸ்வரர் கோவிலையும் அதன் குளத்தைச் சுற்றிய நாலு வீதியையும் ஒரு சுத்து சுத்தினால் பொழுது றெக்கை கட்டி பறந்துவிடும். எத்தனை விதமான ஜனங்கள். கடைகண்ணிக்குப் போய் சாமான்களை விலைபேசி வாங்குவதே ஒரு சந்தோஷமான சமாச்சாரம் தான். வரவர ஷாப்பிங் கல்ச்சரே உருவாகி யிருக்கிறது. பாரதிய வித்யா பவன், லேடி சிவசாமி ஆடிட்டோரியம், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி என்று வாரத்தில் எப்படியும் நாலு நிகழ்ச்சிகள்… கச்சேரிகள், ஆன்மிகச் சொற்போழிவுகள். சனி ஞாயிறுகளில் நிச்சயம் கலகலப்புக்குக் குறைவில்லை. புத்தக வெளியீடுகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், முழுக்க சொந்தக்காரர்களே முன்வரிசையில் அமர்ந்து அவ்வப்போது கைதட்டுகிறார்கள். வேற இடம் கிடைக்கவில்லையா என்ன, எப்போதும் இறந்த எழுத்தாளருக்கு ரானடே ஹாலில் நினைவுக் கூட்டம்…
சின்னஞ் சிறுசுகள் கல்பலதிகா, பிருந்தா மாணிக்கவாசகம், ஸ்ரீரஞ்சினி, பிரியம்வதா, மாளவிகா, அபிஷேக், கீபோர்ட் சத்யநாராயணன் என்று பொலிந்து வரும் இளம் கலைஞர்கள் கச்சேரி கேட்கலாம். என்ன தைரியமா மேடையேறி எத்தனை ஜோராய்ப் பாடறதுகள். சவிதாவுக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்துப் பார்த்தாள். அவளுக்கு பற்றிக்கொள்ள வில்லை. கீதை வகுப்புகளுக்கு மாத்திரம் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சவிதா போய்வந்தாள்.
அலுவலகம் முடிந்து அப்பாதிரும்ப அநேகமாய் ஏழெட்டு மணி ஆகிவிடுகிறது. அப்பாவை அநேகமாக வரவேற்பது சவிதாதான். அப்பா வந்து உடைமாற்றிக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பார். பெண்ணே பெண்ணை பழிவாங்கும் எதாவது தொடர் ஓடிக்கொண்டிருக்கும். தொடரைவிட விளம்பரங்களை அப்பா விரும்பிப் பார்ப்பார். அடுத்த பத்திருபது நிமிஷத்தில் அம்மா வந்து தோசைக்கல்லைப் போட்டு சூடாய் தோசை வார்த்துக்கொடுப்பாள் அப்பாவுக்கு.
அவர்கள் வீடு சிறியது. மயிலாப்பூர்தான் வேணும் என்று அப்பா இருந்ததாகப் பட்டது. ஒரு படுக்கையறை. இந்தப் பக்கம் ஒடுங்கினாப்போல குளியல்-கழிவறை இணைந்து. நீளவசத்தில் ஒரு சமையல் பகுதி. கூடத்தில் இருந்து ஒரு பக்கமாய் கதவு இன்றி. கூடத்தின் சுவரிலேயே அலமாரியில் புத்தகங்கள், திணிக்கப்பட்ட படுக்கை, பெட்டிகள், மேலே சேந்தியில் பெரிய வெண்கல, அலுமினியப் பாத்திரங்களை மூட்டைகட்டி, விநோதமான உருவமாய்க் கிடக்கும். சரித்திரப் படங்களில் இப்படி சாக்குமூட்டையில் போட்டு ஆளைக் கடத்திப் போவார்கள். கடைசியில் யாரைக் கடத்த வேண்டுமோ அவளை விட்டுவிட்டு வில்லன்மனைவியையே கடத்திக் கொண்டுவந்து வில்லனிடம் விடுவார்கள்… திறந்து பார்த்தால், ”அத்தான்!” – ”அப்படிச் சொல் பெண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்!”
காலை ஏழு மணிக்குள் சவிதா ஓட வேண்டும். அம்மா சமையல் கூடத்தில் பரிதவிக்க, அப்பா அவளுக்கு டிஃபன் பாக்ஸ் கட்டுவார். ”ஐயோ என் ரெகார்டு நோட்டு!”… ”நீ தலையை வாரிக்கோ இவளே. நான் எடுத்துத் தரேன்” என்பார் அப்பா. தெருவிறங்கி ஐந்து நிமிட நடை. சித்திரக்குளத்தருகே கல்லூரி பஸ் வரும். ”அப்பா போயிட்டு வரேன்…” ”ஹ்ம்…” என்பார் மூச்சிறைக்க.
”இடம் வாங்கறது சரி, நமக்குன்னு கடைசி காலத்துக்கு வேணுன்றது சரி… இப்பசத்திக்கு நாம கட்டி அதை வாடகைக்கு விட்றலாம்…” என்றாள் பார்வதி.
அப்பாவின் முகம் மாறிப்போயிற்று. காலை வெயில் வர வெளி வராந்தாவில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இந்து நாளிதழ் வாசிக்க அவர் ஆசைப்பட்டிருக்கலாம். அவர்அப்பா கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கை அது. பள்ளிக்கூட ஆசிரியர். டிரான்சிஸ்டரை வாசல் திண்ணையில் உரக்க வைத்து ஆங்கிலச் செய்திகள் கேட்பது… காலையில் வாசலில் அமர்ந்து நாலு பேர் பார்க்க செய்தித்தாள் வாசிப்பது, ஒரு அடையாளம். நாலெழுத்து படிச்சவர் இல்லையா? தாளை மடித்துவிட்டு புன்னகையுடன், ‘ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப்’… என்று, இலவச பேப்பர் படிக்க வந்த நபரிடம் எதாவது பேசுவார். பெரிய வருமானம்னு இல்லாவிட்டாலும், வாத்தியார், போஸ்ட்மாஸ்டர் என்றால் ஊரில் மதிப்பு. ஒழுக்கத்தின் பிரதிநிதிகள். இவர்கள் சம்சாரங்கள் கோவில்களிலும், சுமங்கலி பூஜைகளிலும் பிளவுஸ் பிட், வெற்றிலை பாக்குடன் கொண்டாடப் படுகிறார்கள்.
வித்தியாசமான கார். வாங்கும்போதே ஹாரனைத் தவிர எல்லாத்திலிருந்தும் சத்தம் வந்தது. ”ஹாரன் தனியா அடிக்க வேண்டியதில்லை…” என்று அப்பா புன்னகைத்தார். ”நீ தலையெடுத்து புதூ கார் வாங்கிக் குடுடி அப்பாவுக்கு” என்றார் விடாமல். ஒரே பெண் என்பதில் அபார செல்லம். சவிதாவுக்கு வாயை வளர்த்து விட்டாச்சி, என்று பார்வதிக்கு அங்கலாய்ப்பு உண்டு…
பயிர் முளைத்துக்கொண்டிருந்த இடங்களில் புதிதாய் கட்டடங்கள் எழும்ப ஆரம்பித்திருந்தன. தலைக்கிராப்பாய் பச்சைப்புல். நடுவே நரைபோல சர்வே கற்கள். தெருவுக்கு வந்திருந்த தவளை ஒன்று கார் சத்தத்தில் ஐயோ என்று திரும்ப புல்கற்றைக்குள் பாய்கிறது. வண்டியை ஒரு ஓரமாக விட்டுவிட்டு இறங்கினார்கள். தெரு சீரற்றுக் கிடந்தது. கண்ணாடித் தாளாய் சேறுமேல் தண்ணீர் பளபளத்தது. இதற்குப் பிறகு வெளி. தெரு எண் போட்டு பலகையெடுத்திருந்தார்கள். சாஸ்திரி நகர் 27வது தெரு, மனை எண்கள் 437 முதல் 468 வரை…. என ஒரு பலகை. ”பாத்து வாங்க” என்றபடி அப்பா ஒரு ஆர்வப் படபடப்புடன் முன்னே போகிறார்.
நல்ல ஒரு கிரவுண்டு இடம். வாங்கிப்போட்ட அன்றைக்கு அவர் ரொம்ப சந்தோஷமாய் இருந்தார். வாழ்க்கை ஒரு சுற்று முடித்து அடுத்த சுற்றுக்கு வந்துவிட்டாப் போலிருக்கிறது அவருக்கு. வீட்டைப் பற்றிய கனவுகளை அவர் மனசில் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்து விட்டாப் போலிருந்தது. முதல் காரியமாக காம்பவுண்டு போட்டு வாசல் கதவில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை சின்னங்களைப் பொறித்திருந்தார்.
அம்மாவும் சவிதாவும் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். ”எங்க கல்யாணத்துல கூட இவருக்கு இத்தனை சந்தோஷம் இல்லைடியம்மா…” என்று அம்மா புன்னகைக்கிறாள். பொதுவாக தன் சந்தோஷங்களைக் காட்டிக்கொள்ளாத அப்பா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பம் வாய்த்ததில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் மகிழ்ச்சியே.
முதலில் காம்பவுண்டு எடுத்துவிட்டார்கள். ஒதுக்குப் புறமாகக் குடிவருவதில் மாடிவீடாய்க் கட்டினார் அப்பா.
”கீழ நாம இருப்பம். மாடிய வாடகைக்கு விட்டால் உனக்குத் துணையாச்சில்லியா…”
”நான் ஏற்கனவே அக்கம் பக்கத்துல நல்ல தொணையோடதான் இருந்தேன்…” என்றாள் அம்மா.
”இங்கயும் அதுமாதிரி இருக்க வேணாமா இவளே…” என்று புன்னகைக்கிறார் அப்பா.
அம்மா அவரைப் பார்த்தாள். பின் அவளும் புன்னகைக்கிறாள்.
வெளியே சிரித்தாப் போல நடமாடினாலும் கணேசனுக்கு ஆயிரம் கவலைகள் இருந்தன. கைமீறிய பெரிய எடுப்பு எடுத்திருப்பதாய் உள்ளே திக் திக் என்று அடித்துக்கொண்டே யிருந்தது. வங்கிக்கடனில் கட்டி முடிக்க வேண்டிய வீடு. இடம் வாங்கவே கைமுதல் கரைந்தது. முதல் இருபது சதம் கைக்காசை வைத்து வேலையில் இறங்கினால் கட்டம் கட்டமாய் கட்டடம் எழும்ப வந்து பார்த்துவிட்டு பணங் கொடுப்பார்கள். ”நோ பெய்ன் நோ கெய்ன்…” என்பார் தந்தை. அது ஞாபகம் வந்தது கணேசனுக்கு.
காம்பவுண்டுக்குள் யாரோ தோட்டவேலை செய்துகொண்டிருந்தார்கள்.
”யாருப்பா ஆளு புதுசா யிருக்கே…”
”ஆமாம்மா. போனதடவை வந்தப்ப இந்தப் பக்கமா திரிஞ்சிட்டிருந்தாரு. என்னவோ தோணிச்சி கூப்பிட்டுக் கேட்டேன்… நம்ம இடத்லியே குடிசை போட்டுக்கிட்டு வாட்ச்மேனா இருக்காரு.”
வணக்கம் சொன்னார் அவர்.
அவர்கள் கடைசியாக வந்துபோன இந்த ரெண்டு மாதத்தில் கட்டடத்தைச் சுற்றி அநேக மாற்றங்கள். வெறும் அஸ்திவாரம் பார்த்த இடத்தில் கட்டடம் தோளுயரம் எழும்பியிருந்தது. கர்ப்பப்பை சிசுவுக்கு கைகால் முளைக்கிறாப் போல…
காம்பவுண்டுக்கு மேலே தலையை வெளியே நீட்டி ஆடிக்கொண்டிருக்கும் செம்பருத்திச் செடி. சிவப்பாய் இல்லாமல் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருந்தன. சிறு காற்றுக்கும் அவை தலையாட்டும் அழகு அம்மாவைக் கிறங்கடிக்கிறது. கிராமத்தில் சீரியல் செட் சவுண்ட் சர்விஸ்காரன் கொண்டுவரும் ஒலிபெருக்கிக் குழாயின் சின்ன வடிவம் இது… ஹலோ மைக் டெஸ்டிங். ஒன் டூ த்ரீ…
அம்மா எதிர்பார்க்காத விஷயம் இது. அவள் முகமே சந்தோஷத்தில் வீங்கியது.
”உங்க பேர் என்ன?” என்று கேட்டாள் அவரிடம்.
”ராமலிங்கம்…”
உள்ளே போனார்கள். வீடு இப்போது அறை அறையாய் அடையாளம் காட்ட ஆரம்பித்திருந்தது. உள்ளே நுழைந்ததுமான அகலமான பெரிய கூடத்தில் வருகிறவர் பார்க்கிறாப் போல, ”இங்க பெரிசா ஸ்ரீ அன்னை படம் வைக்கணும்டி” என்று அப்பா பாதி கனவு பாதி நினைவாய்ப் பேசுகிறார்.
கட்டடம் போக மீதியிடத்தில் பாதையெடுத்து ஓரங்களில் வரிசையாய்ச் செடிகள் நட்டிருந்தார் ராமலிங்கம். நாம வர்றதுக்குள்ள இந்த இடமே ‘அப்பிடி’ ஆயிரும்போலுக்கே…” என குழந்தையாய்க் குதூகலித்தாள்.
சின்ன வீட்டில் மூச்சுத் திணறலுடன் அஞ்சு குழந்தைகளும், அப்பா அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கையில் சங்கீதமோ, வீட்டுத் தோட்டமோ சாத்தியம் இல்லாததில் இப்போது அவளது தாமரை மடல்விரிக்கிறதோ என்னமோ?
செடிகளைத் துழாவி சிலுசிலுத்து வரும் காற்று. பயண வெக்கைக்கு இதமாய் இருந்தது. நல்ல ருசியான ஆழ்குழாய்த் தண்ணீர். கையில் ஏந்தவே சில்லென்றிருந்தது. அப்படியே முகத்தில் வாரியடித்துக் கொண்டாள் சவிதா.
”நம்ம ராமலிங்கம் ரொம்ப பாவண்டி…” என்று பேசிக்கொண்டிருந்தார் அப்பா.
ஏழை விவசாயி ராமலிங்கம். பயிர்க்கடன் வாங்கிவிட்டு சூழல் கைவிரிக்க நொடித்து, வட்டிகட்ட முடியாமல் நிலத்தையே இழந்திருந்தார் ராமலிங்கம். மனைவி இறந்தபின் அந்த ஊரே பிடிக்காமல் போனது.
வெளியேறும் போது அவருக்கு ஒரே நினைப்புதான்… நிலத்துக்கு சொந்தம் உண்டா. விலை உண்டா. இழப்பு உண்டா… கால்போன போக்கில் நடை. கிடைத்த இடத்தில் கிடைத்தால் உணவு. அதைப்பத்தி என்ன… எப்படி இங்கே வந்தடைந்தார் அவருக்கே தெரியாது.
வந்து நின்றிருந்தவரைப் பார்த்து அப்பா சாப்பிடத் தந்தபோது மறுக்கத் தோன்றவில்லை. என்ன தோணியதோ அப்பா சட்டென்று கேட்டார். ”இங்க இருந்திர்றீங்களா?”
ராமலிங்கம் புரியாமல் அப்பாவைப் பார்த்தார்…
”இடத்தைப் பாத்துக்கங்க. சிமென்ட் இறங்கும். கம்பி இறங்கும்… பாத்துக்கணும்னேன். சரின்னு தலையாட்டினாரு, அவ்ளதான்…”
குடிசையெடுத்து ராமலிங்கம் தங்கிக் கொண்டார். நிலவை மீறிய வெளிச்சம் ஏது. தாவரம் மீறிய துணை ஏது…
நாம் மண்ணைப் பிரிகிறோம். மண் நம்மைப் பிரியுமா என்ன?
பின்பக்கம் அவர்கள் பார்த்தார்கள். வாழை தலையெடுத்து குருத்து குருத்தாய்க் கொப்பளித்து இடுப்புயரம் நின்றது. கட்டட எழுச்சியில் தாவர இனமே ஆவேசப்பட்டாப் போலிருந்தது…
ஆகா, என நினைத்துக் கொண்டாள் சவிதா. எனக்கொரு யோசனை. கல்லூரிக்கு தினசரி இங்கேயிருந்து போய்வர வேண்டும். பஸ் வந்து நிற்கிற இடத்துக்கே நெடுஞ்சாலைக்கு நாலைந்து கிலோமீட்டர் போகவேண்டும்…
அம்மாவுக்கானால் மயிலாப்பூர் கச்சேரி சார்ந்த, அதை இழக்கிற கவலைகள்.
அப்பாவுக்கு நல்லபடியா கட்டி முடிக்க வேண்டும். பணத் திகைப்பு வந்திறக் கூடாது… என்று உள்ளே போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் மூவருமே முன்னைவிட வசதியாகி விட்டு அதுசார்ந்த கவலைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். படிக்காத ராமலிங்கத்திடம் என்ன தெளிவு, இழப்பில் இழந்தபின் நிறைவு காணும் மனம்…
திரும்பி ராமலிங்கத்தைப் பார்த்தாள். எதைக் கொண்டுவந்தாய் இழப்பதற்கு… பகவத் கீதை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்களே.
வசதி பெருக்கிக்கொண்டு இடமாற்றம் பெற்றபடி நாங்கள் அலுத்துக் கொள்கிறோம். இருப்பதை இழந்து கிடைத்த இடமாற்றத்தில் அமைதியடைகிறார் இவர்… ராமலிங்கம்.
வலது ஓரமாய் அவர்களது படுக்கையறை. அதன் வெளிப்பக்கத்தில் செடி ஒன்று.
”என்ன செடி அது ஐயா?” என்று கேட்டாள் சவிதா.
”நந்தியாவட்டை… ராத்திரி படுக்கையறைக்குள்ள நல்லா வாசனையா இருக்குந் தாயி…” என்றார் ராமலிங்கம்.
கையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பிரித்து அங்கேயே சாப்பிட்டார்கள். பார்வதி ராமலிங்கத்துக்கும் ஒரு தட்டில் வைத்து நீட்டினாள்.
திரும்பிப் போகையில் மூன்று பேருமே ஆசுவாசப்பட்டாப் போலிருந்தது. ”அம்மா, நல்லாதான் பேர் வெச்சிருக்காங்க அவருக்கு… ராமலிங்கம்…” என்று புன்னகைத்தாள் சவிதா.
”ஏன்?” என்று அம்மா திரும்பிப்பார்த்தாள்.
”வள்ளலார் பேராச்சே…” அப்பா இப்போது பதில் சொன்னார். கார் திரும்பவும் நெடுஞ்சாலையை எட்டியிருந்தது.

Series Navigation