ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

வெங்கட் சாமிநாதன்


தமிழையும், தமிழனையும் பற்றிய உண்மையும் பெருமபாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான பெருமைகளைப் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம கடந்து விட்டது. இன்னமும் நமக்கு அந்த மயக்கம் தீரவில்லை. ஆனால் இதில் ஒரே ஒரு விதிவிலக்கு மாத்திரம் உண்டு. தமிழனின், தமிழின் பெருமையில் அதன் சாரம் உண்மையென்ற போதிலும் அதன் பூதாகரித்த கோஷத்தில் வீண் டம்பம் அதிகம். ஆனால் உண்மையில் நாம் பெருமை கொள்ளத்தக்க இன்னொன்று, மற்றவற்றைக் காட்டிலும் அதிக நியாயத்தோடு பெருமை கொள்ளத் தக்க இன்னொன்று நாம் எல்லோரும் பிறந்துள்ள இந்து மதம். அதை இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவு மாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாக்த் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும் அதை உருவாக்கிய துறவியும் ஞானி யுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிற தெனறால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலு க்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான்.

பிடிக்கிறதோ இல்லையோ சில உண்மைகளைச் சொல்லித் தான் ஆக வேண்டும். ஹிந்து மதம் மற்ற எந்த மதமும் போல எந்த ஒரு தனி மனிதராலும் பிரகடனப் படுத்தப்பட்டதும் அல்ல. நிறுவனமாக்கப்பட்டு மனித சிந்தனையையும் வாழ்க்கையையும் ஒரு கட்டமைப்புக்க்குள் சிறைப்படுத்து வதுமில்லை. உண்மையில் அது மதமாகவே உருவானதல்ல மக்கள் தாமாகவே தம் வாழ்க்கை முறையை உருவாக்கிக்கொண்டதைத் தான் நாம் பார்க்கிறோம். அவ்வப்போது பல கால கட்டங்களில் இவ்வாழ்க்கை முறையும் சிந்தனைப் பிரவாஹமும் ஒரு கட்டமைப்பில் சிறைபபடுவதாகத் தோன்றும் போது, அதைத் திரும்பச் சிறைமீட்டு சுதந்திரமாகப் பிரவாஹிக்கச் செய்து வருவதும் நிகழ்ந்துள்ளது. அத்தோடு இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்த ஹிந்து என்ற ஒரு பொதுப் பெயருக்குள் அடையாளப் படுத்தப்படும் வாழ்க்கை முறை எந்த கால கட்டத்திலும் ஏதும் ஒரு கட்டமைப்புக்குள் இருந்ததில்லை. பல சிந்தனையாளர்களும் ஞானிகளும் காலம் காலமாக அவ்வப்போது தோன்றி, எந்தக் கட்டமைப்புக்குள்ளும் சாரம் அழிந்து போகாதவாறு, உருவாகி வரும் கட்டமைப்பை உடைத்து சாரத்தைத் திரும்ப உயிர்ப்பித்தே வந்திருக் கிறார்கள். அந்த சுதந்திரத்தை ஹிந்து மதம் யாருக்கும் மறுத்ததில்லை. அந்த சுதந்திரம் ஹிந்துமதம் வழங்கியதில்லை. வழங்கப்பட்டது எதுவும் சுதந்திர மாகாது.

இம்மாதிரியான ஞானிகள் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளார்கள். இம்மாதிரியான வேறுபட்ட பார்வைகளும், வாழ்க்கை தரிசனங்களும் உள்ளடங்கியதாகவே, எதையும் தன்க்கு ஏலாத ஒன்றாக ஹிந்து எனச் சொல்லப்பட்ட வாழ்க்கை முறை ஒதுக்கியதில்லை. அக்காலத்தில் இது ஆறு தரிசனங்களாக அறியப்பட்டது. ஒன்றிலிருந்து மாறுபட்ட என அனேக உப்நிஷத்துக்கள். இயற்கை சக்திகளே தெய்வங்களாக துதிக்க்ப்பட்ட வேதங்கள் காலத்திலிருந்து எண்ணற்ற தேவதைகளை உருவாக்கிய புராணங்களும், எண்ணற்ற வேறுபட்ட வேத உப்நிஷத வியாக்கியானங்களைத் தந்த ஆசாரியாகளும் எல்லொருமே ஹிந்து மதத்தில் அடக்கம் தான். நிரீஸ்வர வாதிகளான சார்வாகனோ, புத்தரோ மஹாவீரரோ ஹிந்து மத ஞானிகளாலோ, சாதாரண மக்களாலோ காஃபிர்களாக, ஹெதன்களாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தலைகள் அறுககப்படவில்லை. அவர்க்ளும் தெய்வ அவதாரங்களானார்கள்.

அவர்கள் என்ன, ஹிந்து மதத்தைக் கேலி செய்பவர்கள், நிராகரிப்பவர்கள் கூட ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிவிடவில்லை. வெளியேறிய மறு நிமிடம் அவர்கள் நாஸ்திக பிரசாரத்தைக் கைவிடவேண்டும். இல்லையெனில் அவர்கள் கைகளோ தலையோ கலால் முறையில் தீர்வு காணும். ஹிந்து மதம் அதை அவமதிப்பவர்க்ளுக்கும் அளிக்கும் சுதந்திரம் பற்றி அவர்க்ளுக்குத் தெரியும்.

மக்கள் அனைவரும் ஞானிகள் அல்லவே. அவரவர் புரிதலுக்கும் ஆசைகளு க்கும் ஏற்ப சாரம் சடங்குகளாகி, சாரம் மறக்கப்படுவதும் இயல்பு தானே. சாரத்தோடு சேர்ந்த் சாரத்தை உணர்த்தும் சடங்குகள் சுகம் தருபவை. வண்ண மயமானவை. அழகு சேர்ப்பவை. மனித வாழ்வை கவர்ச்சிகர மாக்குபவை. ஆனால் சாரம் மறைந்து சடங்குகளே மிஞ்சும் போது, சாரத்தைத் திரும்ப உயிர்ப்பித்து மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை ஏற்படுகிறது

நம்க்கு, தமிழ்ருக்கு வள்ளலாரைத் தெரியும். அவருக்கு அணையா ஜோதியே தேவ ஸ்வரூபமாயிற்று. ரமண மகரிஷிக்கோ அதுவும் தேவையில்லை யாயிற்று. ரமணருக்கு வேண்டாமாயிருக்கலாம். திருவண்ணாமலையை விட்டு ந்கர்ந்தவரில்லை அவர். ஆனால் ஊரூராகச் சென்று மக்களுடன் உறவு கொண்ட வள்ளலார் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தம்மை மறந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது. ஜோதி தேவையாயிற்று. அதில் தான் ஆதி ஹிந்து தெய்வத்தைக் கணடான். அதைச் சுற்றித் தான் அவனது அர்ப்பணிப்பும், பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும், நடந்தன.
மற்றவை எல்லாம் பின்னர் வந்து சேர்ந்து சடங்காயின.

நமக்கு ரமணரையும் வள்ளலாரையும் தெரிந்த அளவு த்யான்ந்தரைப் பற்றித் தெரியாது. அவர் ஸ்தாபித்த ஆரிய சமாஜம் பற்றியும் தெரியாது. பெயரளவில் ஏதோ கேள்விப் பட்டிருக்கலாம். குஜராத், ஹரியானா, ப்ஞ்சாப் பிரதேசங்களில் ஆரிய சமாஜம், த்யானந்த சரஸ்வதி, அவருடைய சத்யார்த்த் பிரகாஷ் எல்லாம் பொதுமக்களிடையே மிக்ப் பிரபலமடைந்தவை. அவர் தோன்றிய (1824- 1883) 19-ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் வங்காளத்தில் தோன்றிய பிரம்ம ச்மாஜம் வெகு சீக்க்ரம் மறைந்துவிட்டது. இப்போது அது சரித்திரத்தில் நினைவு கொள்ளப்படும் ஒரு பெயர். கிறித்துவத்தின் செல்வாக்கு பாதிப்பில் அது தன் சுயத்தை இழந்தது. ஆனால் சாரத்தை விட்டுக்கொடாது அதைத் திரும்ப உணர்த்திய விவேகானந்தர் தம் வழிச் சென்ற தனியராக இன்றும் நாம் உறவு கொண்டு நம்மை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சக்தி.

த்யானந்த ச்ரஸ்வதி தன் காலத்தில் சடங்குகளாகி இறுகி சாரம் மறக்கப்பட்ட அனைத்தையும் கைவிட்டு வேதகால ஹிந்து மத வழிபாட்டு முறைகளுக்குத் திரும்ப வலியுறுத்தினார். இவற்றுக்கெல்லாம் தொடக்கம் அவரது பதிமூன்றாவது வயதில் தன் ஊர் ஜடேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி உப்வாசம் இருந்த போது கண்ட காட்சி. சிவலிங்கத்தின் மீது ஏறிக் கொட்டமடிக்கும் எலிகளின் அட்டஹாஸம். இந்த சிவலிங்கம்தான் என்னைக் காப்பாற்றும் கடவுளா, எலிகளின் உபாதையிலிருந்து தன்னைக் காத்துக்க்கொள்ளத் தெரியாத இந்தக் கல்தானா இந்த ஜகத்தைக் காப்பாற்ற்ப் போகிறது? என்ற கேள்வி எழுந்த மூல்சங்கர் மனம் தான் பின்னர் ஹிந்து மதத்தின் சாரத்தைப் புனர்ஜீவிக்க எழுந்த தயானந்த சரஸ்வதி. அவர் நிராகரித்தது விக்கிரஹ ஆராதனையை, தெய்வத்தை அல்ல. நிராஹரித்த அந்தச் சிறுவன் மூலசங்கர் தன் பதின்மூன்று வயதுக்குள் எல்லா வேதங்களையும் சமஸ்கிருத வியாக்க்ரணங்களையும் கற்றுத் தெளிந்த சிறுவன்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் துறவறம் பூண்டு, ஞான மார்க்கத்தில் பயணம் தொடங்குகிறான். பெரிய பண்டிதர்களுடன் வாதிக்கிறான். சாதிகளுக்கும் தீண்டாமைக்கும் ஆதாரம் எங்கே எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்கிறான். வேதங்களில் சொல்லப்படும் வர்ணம் தொழில் சார்ந்தது குணம் சார்ந்தது. பிறப்பில் பெற்றதல்ல என்கிறான்.
க்ஷத்திரியன் ரிஷியாக முடிகிறது. காயத்ரி மந்திரம் உபதேசிக்கமுடிகிறது. எனவே வேத நெறிதான் உண்மையான, ஆதி காலம் தொட்டு வரும் நெறி. வேதங்களும் உப்நிஷதங்களும் காட்டும் இறையுணர்வு தான் உண்மையானது.
ஹிந்து சமய நூலகளில் வேதங்களும், உபநிஷதங்களும், அர்ஷ நூல்கள். அவைதான் நமக்கு வழிகாட்டியாக முடியும். பின் வந்த புராணங்கள் அல்ல. அவை அனார்ஷ வகைப்பட்டவை என்கிறார். ஆர்ய சமாஜம் வழிபடுவது அர்ஷ நூல்களைத் தான். தயானந்தருக்கும் முன்னரே ஹிந்து சம்ய நூல்கள் ஸ்ருதி என்றும் ஸ்மிருதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்ருதி என்றுமுள்ள நிரந்தர உண்மைகளைப் பற்றிப் பேசுவனவாகவும், ஸ்மிருதி மாறுவ்ன ப்ற்றிப் பேசுவன என்றும் வகைப்படுத்தன்ப் பட்டுள்ளன. தயானந்த சரஸ்வதி கூறும் அர்ஷ நூல்கள் எல்லாம் ஸ்ருதிகள். ஸ்ருதிகள் ஒலிரூபத்தில் தரப்பட்டவை. ஸ்மிருதிகள் பின்னர் எழுதப்படடவை.

தயானந்த சரஸ்வதி விரஜானந்தர் என்னும் வயோதிக குருவை அடைந்தார். விரஜானந்தரும் தன்னை மரணம் நெருங்க்ய நிலையில், தனக்குப் பின் ஹிந்து மத அனுஷ்டானங்களை வேத கால நெறிக்கு திரும்ப இட்டுச் செல்ல,
சீடனின் வருகைக்காகக் காத்திருந்தார். அவர் தன் சீடனிடம் வேண்டியது ஒன்றே. ஹிந்து மத புணருத்தாரணத்திற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமென்று. தயானந்தரும் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார். வழியெல்லாம் தன் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பண்டிதர் கூடும் இடங்கள், மக்கள் கூடும் கும்பமேளா போன்ற விழாக்கள், என் தேடிச் சென்று பண்டிதர்களோடு வாதம் புரிந்தும் மக்களிடையே பிரசாரம் செய்தும் நாடு முழுதும் பயண்ம் செய்தார். இப்பயணங்கள் அவரை வங்காளத்துக்கும் இட்டுச் சென்றது. தேவேந்திர நாத் தாகூர், கேஷப் சந்திர சென், போன்றோரின் பிரம்ம சமாஜத்தினரையும் கவர்ந்தது. பிரம்ம சமாஜத்தோடு ஐக்கியமாக அவர்கள் அழைத்தும் அவர் மறுத்து விட்டார். அவர்களுடன் ஒன்றுபடவும் மாறுபடவும் பல இருப்பதால் அவரவர் வழிச் செல்வதே ந்ல்லது என்று கருதினார். இவரது தீவிர விக்கிரஹ ஆராதனை, மற்றும் பல ஹிந்து மத சடங்குகளை மறுப்பதையும் கண்டு உற்காசம் கொண்ட கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லீம் குருமார்களும் இவரை ஹிந்து விரோதி என்று கணித்து தயானந்தரை நெருங்கினர். அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமல்ல. முஸ்லீமக்ள் காபாவைச் சுற்றிவருவது எவ்விதத்தில் விக்கிரஹ ஆராதனையிலிருந்து மாறுபட்டது என்ற் கிண்டல் செய்ததும், குரானில் அல்லா அசரீரியாக தன்னையே பெருமைப் படுத்திப் பேசிக்கொள்வதாக இருப்பதையும் கிறிஸ்தவர்கள் அப்படி ஒன்றும் விக்கிரஹ ஆராதனையிலிருந்து விலகியவர்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி அவர்கள் விரோதத்தையும் தயானந்தர் சம்பாதித்துக்கொள்ள வேண்டி வந்தது

ஹிந்து மத சடங்குகளை, விக்கிரஹ ஆராதனையை மறுத்ததும், தீண்டாமைக்கும் சாதிவேறுபாட்டுக்கு எதிராக பேசியுதும் ஹிந்து மத பண்டிதர்களையும் அவர் விரோதித்துக்கொண்டார். ஆனால் எவரும் அவர் வாதங்களை அறிவு பூர்வமாகவோ, சாஸ்திர ஆதாரங்கள் காட்டியோ மறுக்க முடியவில்லை. அவர் வேதங்களையும் இதிகாசங்களையும் தவிர வேறு பின் வந்த எந்த எதையும் மறுப்பவரானார். சங்கரரின் பாஷ்யம் அத்வைதத்தைப் பேசுவதால் அது அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. ராமன், கண்ணன் எல்லாம் இருந்தது உண்மை. ஆனால் அவர்க்ளைத் தெய்வமாக்கவேண்டாம். பாகவதம் கண்ணன் புகழ் பாடுகிறது அதில் காவியச் சுவை காணவேண்டுமே அல்லாது பக்தி ரசமல்ல. எந்த இடைத் தரகரது குறிக்கீடுமில்லாது, நேராக இறைவனை வண்ங்கும் வேத கால நெறியே உகந்தது என்றார். ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய அளவில் அக்னி வளர்த்து வேள்வி செய்யவேண்டும் என்றார். கோவில்கள் எழுப்புவதை விட பாடசாலைகள் கட்ட அப்பணம் செலவு செய்யவேண்டும். எல்லோரும் கல்வி கற்கவேண்டும். எல்லோரும் வேதங்களைக் கற்கவேண்டும். பிரார்த்தனை செய்ய காயத்ரீ மந்திரம் ஜபித்தாலே போதுமானது. பெண்களும் பூணூல் அணிந்து காயத்ரீ ஜெபம் செய்யவேண்டும் எல்லோரும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்யவேண்டும். என்றெல்லாம் அவர் போகுமிடமெல்லாம் பிரசாரம் செய்தார். யாரும் கிறித்துவரோ, முகமதிய்ரோ யாரும் ஹிந்துவாகலாம் என்றார். வேதங்களில் சாதிப் பிரிவினை இல்லை. வர்ணம் என்றது குணத்தைக் குறிபபது, பிறந்த சாதியைக் குறிப்பதல்ல. கல்வியில் நாட்டமுடையவன் பிராமணன், அஸ்திர வித்தையில் தேர்ந்தவன் க்ஷத்திரியன், உடல் உழைப்பில் நாட்டமுடையவன் சூத்திரன் தொழில் செய்பவன் வைசியன். க்ஷத்திர்யனாகக் கருதப்பட்ட விஸ்வாமித்திரன் காயத்ரீ மந்திரம் உபதேசித்தவன் என்று நீள்கிறது தயானந்தரின் பிரசாரம். கல்வி, எளிமையான மத அனுஷடானம், சாதி மறுப்பு, எல்லாம் உள்ளடக்கி உருவானது தான் ஆர்ய சமாஜம். இன்றும் ஆரிய சமாஜம் இருக்குமிடமெல்லாம், கல்விக் கூடங்களும், மருத்துவ மனைகளும், வேற்றுமதம் தழுவியவர்கள் ஹிந்துக்க்ளாகத் திரும்ப.ச் சேர்த்துக்கொள்ளும் இடமாகவும் காணலாம். தென்னிந்தியாவில் ஆரிய சமாஜம் ஏதும் செல்வாக்கற்றுக் காணப்பட்டாலும், வட இந்தியாவில் அதன் செல்வாக்கைப் பரவலாக எங்கும் காணலாம். வள்ளலாரையே தமிழ் சமூகம் வண்டலூரிலேயே வேலி எழுப்பி வைத்துவிட்டது. வங்கத்தில் பிரம்ம சமாஜம் போன இடம் தெரியவில்லை.

உடல்பலமும் மனமும் கொண்ட தயானந்தரை மன பலத்தாலோ அறிவாற்றலாலோ, உடல் பலத்தாலோ வெற்றி கொள்ள முடியாத நிலையில் அவர் கடைசியில் விஷமிட்டே கொல்லப்பட்டார். அவரைத் தீர்த்துக்கட்ட பலருக்கு பல காரணங்கள். அவரவர்ககு அவரவர் காரணங்கள். ஜோத் பூர் சமஸ்தான மன்னரின் ஆசை நாயகி நன்னி ஜானுக்கு ஒரு காரணம். முகம்மதியரைத் தாய் மதம் திரும்ப எளிய வழி காட்டியவரைத் தீர்த்துக் கட்டாமல் விட முடியுமா? அல்லது தம் பிழைப்புக்கு தடையாக மதச் சடங்குக்ளை எளிமைப் படுத்தியவரை, சாதி இல்லையென்பவரை, தீண்டாமைக்கு எதிராக பிரசாரம் செய்பவரை ஒழித்துக்கட்ட இன்னொரு சாரார். கடைசியில் விஷம் கொடுக்க சதி செய்தவருக்கு இவ்வளவு கூட்டாளிகள் இருந்தால் தப்புவது எளிது தானே. அமைதியாக அவரவர் தம் அம்மைதி மார்க்கத்தில் செல்வதற்கு தடைகள் ஏற்படுமானால், அமைதி விரும்பு கிறவர்கள் தயானந்தரையும் அமைதிப்படுத்த விரும்பியிருக்கிறார்கள்.

அவரவர்க்கு ஏற்படும் விழிப்புக்கு அவரவர் குணநலனுக்கு ஏற்பத் தான் அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். தன் 13-ம் வயதில் சிவலிங்கத்தை தெய்வ சொரூபமாகக் காண மறுத்தார் தயானந்தர். நட்ட கல்லும் பேசுமோ என்றார் நம்மூர் சித்தர். ஜோதி ஸ்வரூபத்தைக் கண்டார் வ்ள்ளலார். ரமணர் எந்தக் கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்தவரில்லை. எல்லோரும் நாஸ்திகர்கள் தான். இந்த நாஸ்திகர்களால் சமூகம் தனனை சுத்திகரித்துக் கொள்கிறது. படிந்துள்ள கசடுகளை நீக்கிக் கொள்கிறது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள நாஸ்திகர்கள் வேறு ரகம். த்ம்மையும், தம் சிலைகளையும், தம் பெயரையும் மக்கள் ஆராதிக்க விரும்பும் நாஸ்திகர்கள்.

மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழ்லையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவிலகளியும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று. அவர்கள் அறிந்த நாஸ்திகர்கள் ரகமே வேறு. தேர்தலில் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய, வெற்றி பெற்றபின் வேண்டுதலை நிறைவேற்ற, அம்மன் கோயிலுக்குச் செல்லும் தனி ரக நாஸ்திகர்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய நாள் நட்சத்திரம் பார்ப்பவர்கள். ராகு காலம் தவிர்பபவர்கள்.

இவர்கள் நம்க்கு அடிக்கடி சொல்லிக்காட்ட ஆசைப்படும் மனுசாஸ்திரத்திர வரிகள் ஒன்றிரண்டு தான். இவர்கள் படித்த ஆனால் மற்க்காமல் மறைக்கும் பெரும்பகுதி முற்றிலும் வேறாக இருக்கும். மலர் மன்னன் அவற்றைப் பற்றியும் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆரிய சமாஜமும், தயானந்த சரஸ்வதியும் நம்க்குச் சொல்லும் ஹிந்து மதத்தின் சித்திரம் வேறு. இறை வணக்கம் வேறு. அது போன்றே நமக்குப் பிரசாரப்படுத்தப்படும் மனு சாஸ்திர வரிகள் வேறு. மனு சாஸ்திரமும் வேறு தான். மனு சாஸ்திரத்தை ஆதாரித்தே இந்திய கிரிமினல் தண்டனைச் சட்டம் இயர்றப்பட்டுள்ளதாகச் சொல்வார்கள். சட்டத்தின் முன் எல்லோரும் சமம். என்பார்கள். ஆனால் மனு நீதி, கல்வியில் தேர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணன் புரிந்த குற்றத்துக்கு தண்டனை கடுமையாகவும், பாமரனும் ஏழையுமானவன் செய்த அதே குற்றத்துக்கு அவன் அறியாமை காரணமாக தண்டனை குறைவாகவும் விதிக்கிறது. எல்லோரும் மனு நீதியின் முன் சமமல்ல. எளியவன் செய்த களவுக்கு சாதாரண தண்டனையும், நாட்டுக்கே நீதி வழங்க வேண்டிய மன்னன் செய்யும் களவுக்கு தண்டனை கடுமையாகவும் விதிக்கும் மனு ஆளுக்குத் தகுந்த நீதி வழங்குமானால், அததகைய ம்னு நீதியை நாம் அறிந்த நாஸ்திகரும் அரசும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மனு நீதி பற்றிய அவர்கள் பொய்ப்பிரசாரத்தை எப்ப்டி நிறுத்திக்கொள்ள முடியும்?

இவர்கள் மேற்கோள் காட்ட ஆசைப்படும் வரிகள் இடைசெறுகல் என்று ஆங்கில ஆய்வாளர்கள் வூலர், ஜெனரல் கீத் மாக்டொனால்ட் போன்றவர்களும், அமெரிக்க கலைக்கள்ஞ்சியமும் சொல்வதை மலர் மன்னன் சுட்டிக்காட்டியுள்ளார். இடைசெறுகல்கள் பாரத்த்திலும் உண்டு, கம்ப ராமாயணத்திலும் உண்டு. எந்த பழம் நூலிலும் வாய்மொழி மரபில் வருவனவற்றில் இது ச்கஜமாகக் காணப்படுவது தான். ஒரு நூலின் ஆதார சுருதிக்கும், பெரும்பகுதியின் தரிசனத்துக்கும் முற்றிலும் விரோதமாக சில பகுதிகள் காணப்பட்டால் அத்தகைய் முரண்பாடு சாத்தியமில்லை என்பதால் அவை இடைசெறுகலாகும். அத்தோடு மொழியின் கையாள்லில் சொற்களின் பயன்பாட்டில் வேறுபாடுகள் காணப்படுவதிலிருந்தும் இடைசெறுகலை அடையாளப்படுத்தமுடியும். இது மொழி வல்லுனர்களின், சரித்திர ஆயவாளர்களின் அக்கறையாக இருக்கும். ஆனால், எந்த வரிகள் மாத்திரமே தம் அரசியல் பிரசாரத்துக்கு வகை செய்து தருகின்றதோ அவற்றை இடை செருகலாக ஒத்துக்கொள்வதில் பிரசாரகர்கள் மிகவும் சிரமப் படுவார்கள். அவர்களுக்கு அந்த சில வரிகளே போதும், முழு நூலையும் கொச்சைப் படுத்துவதற்கு. கழகப் பொது மேடைகளில், துண்டு பிரசுரங்களில் நமக்குச் சொல்லப்பட்ட மனு நீதி சாஸ்திரத்தில்,

சூத்ரோ ப்ராஹ்மணதாம் ஏதி, ப்ராஹ்மண மஷ்சை தி சூத்ரதாம்
க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைஷ்யாந்த்தைவ ச:
(மனுஷ்மிரிதி அத் 1 வாக்கு 65)

(குண் இயல்பு, ஈடுபாடு, தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பிராமணர் சூத்திரர் ஆகிவிடுகிறார். அவர் பிராமணராகப் பிறந்திருந்தாலும்) அதே போல, பிறப்பில் சூத்திரராக இருந்தாலும், குணையல்பு, ஈடுபாடு, தகுதி ஆகியவற்றால் ஒரு சூத்திரர் பிராமணர் ஆகிவிடுகிறார் என்பது இதன் பொருள்)

புத்ரேண் துஹிதா சமா (மனுஷ்மிருதி அத்-9 வாக்கு-130)
மகன் மகள் இருவரும் சமம் என்பது இதன் பொருள்.

இபபடி பல மேற்கோள்களை மல்ர் மன்னன் தன் புத்தகத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இதையெல்லாம் நம் கழகப் பிரசாரகர்களுக்கு நம்மூர் ப்ராண்ட் நாஸ்திகர்களுக்கு சங்கடம தருபவை. தயானந்தரின் நாஸ்திகம் அவரை எங்கு இட்டுச் சென்றுள்ளது? சரஸ்வதி தேவி பிரமனின் நாக்கில் வாசம் செய்கிறாளாம். அப்படீன்னா அவ மல ஜலம் எங்கே கழிப்பா? என்ற நம்மூர் நாஸ்திகமும் பகுத்தறிவும் எங்கு இட்டுச் சென்றுள்ளது?

மறுபடியும் அவரவர் குணநலம், ஈடுபாடு இவற்றைப் பொருத்தே எதுவும் அமையும். எல்லாமே.

ஆரிய சமாஜம்: மலர் மன்னன் வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 33/15 எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார் பேட்டை, சென்னை-18 ப். 112 ரூ 60

வெங்கட் சாமிநாதன்/19.8.2010

Series Navigation