ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஆனந்தி


ஒரு வழியாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் அண்ணா நகர்ல போலீஸ் செய்தது தவறுதான்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாரு. அதனால காதலர்கள் சார்பா அவரை மன்னிக்கறேன். ஆனாலும் மனசு ஆறல. இதுவே வெளி நாடா இருந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டா, போலீஸ் திவாலாயிடும்.

அண்ணா நகர் டவர் பூங்காலருந்து 11 பையன்களை பெண்களின் ‘கண்ணியத்தை ‘ (modesty) குலைத்ததாக ஐ.பி.சி 509 கீழே போலீஸ் வழக்கு போட்டு எல்லாரையும் வேலூர் சிறைக்கு அனுப்பிடுச்சு. அந்தப் பெண்கள் எல்லாரும் பையன்களோட கேர்ள் ஃபிரெண்ட்ஸ். போலீஸ் அந்தப் பொண்ணுகளோட பெற்றோருக்குத்தெரியாம வந்தீங்களான்னு கேட்டு அவங்களை அவமானப்படுத்தியிருக்கு. அப்பறம் இன்னொரு பிரஸ் நோட்டுல அவங்கள்லாம் செக்ஸ் ஒர்க்கர்ஸ்னு சொல்லியிருக்கு. உண்மையில அதுதான் கண்ணியத்தைக் குலைக்கற செய்கை.

வேலூர் சிறையில அநியாயமா அடைக்கப்பட்ட பையன்கள்ல ஒருத்தனுக்கு மன நோய் ஏற்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டியதாயிடுச்சு. இதுக்கெல்லாம் யார் நஷ்ட ஈடு தரப் போறாங்க ? ஆச்சரியமா நம்ம தமிழ்ப் பத்திரிகைங்க யாரும் அண்ணா நகர்ல போலீஸ் நடந்துகிட்ட விதத்தைப் பத்தி எதுவுமே எழுதல. எல்லா பத்திரிகைக்காரங்களுக்கும் அவங்கவங்க பொண்ணு, பையனோட கற்பு பத்தி கவலை வந்திடுச்சு போல இருக்கு.

பையன்களோட பெயர், முகவரி, போட்டோ எல்லாத்தையும் போலீஸ் பத்திரிகைகளுக்குக் குடுத்திருக்கு. இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டோம்னு இப்ப போலீஸ் கமிஷனர் சொல்றாரு. இதே மாதிரி ஒரு வருஷம் முன்னாலயும் மகளிர் ஆணையத்துகிட்ட சொன்னாரு. கைதாகற பெண்கள் படத்தையெல்லாம் பத்திரிகைகள்ல போடறதைக் கண்டிச்சு ஆணையம் அவருக்குக் கடிதம் எழுதினப்ப இனிமே இப்படி நடக்காதுன்னு சொன்னாரு. ஒரு வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு.

காதலர்கள் பூங்காவுக்கும் பீச்சுக்கும் போய் உக்காராம எங்கே போகணும்னு போலீஸ் நினைக்கறாங்க ? போலீஸ் நுழைய தயங்கற ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டுகிட்டு, இல்லாட்டி யாராவது ஃபிரெண்ட்ஸ் வீட்டுல ரூமுக்குள்ள எது வேணா செய்யறதுக்கு தூண்டறாங்களா ? பூங்காலயோ, பீச்சுலயோ பப்ளிக் முன்னால உக்காந்திருக்கறதுதான் சேஃப். அங்கே ஃபிரெண்ட்ஸ், காதலர்கள் நிச்சயமா உடலுறவு கொள்ளப் போறது இல்ல. அதிகபட்சம் கழுத்தோட கழுத்தை உரசிக்கலாம். அவசரமா கன்னத்துல முத்தம் குடுத்துக்கலாம். பெரும்பாலான நேரம் வெறுமே மடியில படுத்திருக்கலாம். கையைக் கோத்துக்கலாம். அவ்வளவுதான் முடியும்.

போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல யாரும் காதலிக்கறதே இல்லியா ? எத்தனை ஆண் போலீசும் பெண் போலீசுமே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க ? அவங்கள்லாம் காதலிக்கறப்ப எந்த எடத்துக்குப் போவாங்க ? ஸ்டேஷன்லயே காதலிப்பாங்களா ? பீச்சுக்கும் பார்க்குக்கும் சினிமாவுக்கும் போயிருக்க மாட்டாங்களா ?

பொது எடத்துல ஆபாசம்ங்கறது என்ன தெரியுமா ? போலீஸ்காரங்க உட்பட நெறைய்ய ஆண்கள் நினைச்ச எடத்துல நிந்துகிட்டு ஒண்ணுக்கு போறதுதான். ஒரு பொண்ணு அப்பிடி செஞ்சா என்ன ஆகும் ?

குழந்தைகளும் கிழவிகளும் பிச்சை எடுக்க நம்ம சமூகம் விட்டிருக்கறதுதான் ஆபாசம். குடிசைவாசிகளுக்கு இன்னும் கூட ஒழுங்கா இலவசமா கக்கூஸ் கட்டித் தராம இருக்கறதுதான் ஆபாசம். இந்த ஆபாசங்கள்லாம் அண்ணா நகர் பங்களாக் காரங்களுக்கு உறைக்காது.

பொண்ணுங்க பையன்க கிட்ட ஏமாறாம காப்பாத்த இந்த மாதிரி நடவடிக்கை தேவைப்படுதுனு ஒரு அதிகாரி சொல்லியிருக்காரு. அதை ஒரு போதும் போலீசால தடுக்க முடியாது. நடந்தப்பறம் குற்றவாளி மேல நடவடிக்க எடுக்க மட்டும்தான் முடியும். தடுக்கணும்னா பொண்ணுக்கு படிப்பு வேணும். அவளோட படிப்பு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தரக் கூடியதா இருக்கணும். பெற்றோர் பொண்ணை தோழி மாதிரி நடத்தியிருக்கணும். தவிர நகரத்துப் பொண்ணுங்க லேசுல ஏமாறக் கூடியவங்க இல்ல. படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பொண்ணுங்கதான் ஏமாந்துகிட்டிருக்காங்க.

பின் குறிப்பு 1 : சிவில் லிபர்ட்டி சங்கம்னா அரசியல் கைதிகள், நக்சல்பாரிகள், பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் குரல் குடுப்பாங்கன்னு ஒரு கருத்து இருக்கு. காதலர்களுக்காக குரல் கொடுத்த பி.யு.சி.எல்லுக்கு கங்கிராஜுலேஷன்ஸ்.

பின்குறிப்பு 2: இந்த மேட்டரோட வைக்க காந்திஜி போட்டோ அனுப்பியிருக்கேன். காரணம் அவர்தான் தன்னோட ஆசிரமத்துல சின்னப் பையன்களும் சின்னப் பொண்ணுங்களும் ஒண்ணா நிர்வாணமா குளிக்கணும்கற எற்பாட்டை செஞ்சு வெச்சிருந்த புரட்சிக்காரர்.

( தீம்தரிகிட ஆகஸ்ட் 2003)

dheemtharikida@hotmail.com

Series Navigation