அல்லி-மல்லி அலசல் (2)

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

பவளமணி பிரகாசம்


மல்லி:என்ன அல்லி, முகம் வாட்டமா இருக்கு ?

அல்லி:நேத்து ராத்திரி பிள்ளைகள் ரெண்டும் ரொம்ப படுத்திரிச்சி. ஆளுக்கு ரெண்டு முதுகில வச்சிட்டேன். ஆனா மனசுக்கு சங்கடமா இருக்கு.

மல்லி: தாயோ, தந்தையோ பிள்ளைகளை அடிக்கிறது சகஜந்தானே ?

அல்லி:அப்படிங்கறே ?

மல்லி: ‘தடித்த ஓர் மகனை ‘ தந்தை அடித்தால் தாய் அணைப்பாள், தாய் அடித்தால் தந்தை அணைப்பார், எனக்கு தாயும், தந்தையுமாய் இருக்கின்ற நீ இப்படி அடிக்கிறாயேன்னு வள்ளலார் சாமிகிட்ட கேட்கலையா ?

அல்லி: எனக்கென்னவோ பெத்தவங்க பிள்ளைங்களை அடிக்கிறது சரியா தோணல.

மல்லி: ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் ‘ன்னு பழமொழி கேட்டதில்லையா ?

அல்லி: ‘அடியாத மாடு படியாது ‘ன்னு கூடதான் சொல்வாங்க.

மல்லி:ரொம்ப இளகிய மனசுக்காரங்களும், கண்மூடித்தனமான பாசத்தினால அளவுக்கதிகமா செல்லங்குடுக்கிறவங்களுந்தான் பிள்ளைகள அடிக்கமாட்டாங்க. யார் மேலயோ உள்ள கோபத்த அங்க காட்ட முடியாம பிள்ளைங்க முதுகில மொத்துறத விட்டுட்டு பொதுவா பாத்தோம்னா பிள்ளைங்கள கண்டிக்கிறதுக்கு எப்பவாவது அடிக்கிறதுல என்ன தப்பு இருக்கு ?

அல்லி:இல்ல. கண்டிக்கணும்ங்கிறதுக்காக அடிக்கிறதுங்கிறது அவ்வளவு சரியான அணுகுமுறையா எனக்கு தோணல.

மல்லி:அப்போ நயமா எடுத்து சொன்னா பலன் இருக்கும்னு சொல்றியா ?

அல்லி:நிச்சயமா. அடிக்கிற சந்தர்ப்பங்கள் என்னன்னு பாத்தோம்னா, பணக்கஷ்டம், மனக்கஷ்டம் வரும்படி பிள்ளை நடந்துகிட்டா அடிக்கிறோம். அல்லது கீழ்படியாததால, கட்டுப்பாட்டை மீறுனதுக்காக அடிக்கிறோம்.

மல்லி:செஞ்ச தப்புக்கு தண்டனையாவும், இனிமேல அப்படி நடக்கக் கூடாதுன்னு ஞாபகத்துல வச்சுக்கிறதுக்கு உதவியாவும் அந்த அடி இருக்கும்னு நினைக்கிறது நியாயந்தானே ?

அல்லி: யோசிச்சிப் பாத்தா இது காட்டுமிராண்டித்தனமான தீர்வு. எதிர்மறையான கட்டளைகளை விட சாந்தமான அணுகுமுறைக்கும், பொறுமையான விளக்கங்களுக்கும் அதிக பலன் இருக்கும்.

மல்லி: அதுவும் சரிதான். ஆத்திரத்தோட அடிச்சோம்னா நம்ம ஆத்திரந்தான் பிரதானமா தெரியுமே தவிர அந்த ஆத்திரத்திலுள்ள நியாயம் பெரிசா புலப்படாது.

அல்லி: அதோட அடிபட்டவருக்கும் அடி வாங்கிட்டோமேங்கிற ரோஷந்தான் மேலோங்கியிருக்குமே தவிர அடி வாங்கும்படியா தவறா நடந்துக்கிட்டோம்ங்கற வருத்தம் அமுங்கிப் போயிரும்.

மல்லி: ஆக, அடி கொடுக்கிறது தற்காலிக தீர்வாத்தான் இருக்கும்ங்கிற ?

அல்லி:அது மட்டுமில்ல. நாம விரும்பாத எதிர் விளைவுகளைக் கூட உண்டு பண்ணும்.

மல்லி:அடடா! வெளிப்படையான நடவடிக்கைகள், திறந்த மனசோட பேசுறதுன்னு இருந்த நல்ல உறவு முறையில விரிசல் விழலாம்ல ? கொஞ்சம், கொஞ்சமா அவநம்பிக்கை, வெறுப்பு, விரோதம்னு மனநிலை மாற்றதுக்கு வாய்ப்பும் அதிகமாகிடுமோ ?

அல்லி: அப்படியெல்லாம் ஆகிடாம இருக்கணும்னா பெத்தவங்களோட அணுகுமுறை ரொம்ப ஆரோக்கியமா இருக்கணும். பிள்ளைங்ககிட்ட மனசுவிட்டு பேசணும். நாம அவங்க மேல வச்சிருக்கிற பாசத்த புரிய வைக்கணும், சரிதானே ?

மல்லி: ஆமாமா. சின்ன வயசிலேர்ந்தே குழந்தைங்க தங்களோட வெளியுலக அனுபவத்த அம்மா அப்பாகிட்டதான ஓடி வந்து ஒப்பிக்கிறாங்க. அவங்க சின்ன உலகத்து சேதிகள் ரொம்ப சுவாரஸ்யமானதாச்சே. சின்ன சின்ன வருத்தங்கள், அதிசயங்கள், ஆர்வம்னு அவங்க சொல்ற சங்கதிகளை அக்கறையா உக்காந்து கேட்டோம்னா அவங்களுக்கு நம்ம மேல ஒரு பிடிப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்படும், இல்லியா ?

அல்லி:நாம அவங்களுக்கு நல்ல நல்ல கதைகள சொல்லி உயர்ந்த பண்புகளையும், லட்சியங்களையும் உருவாக்கலாம்.

மல்லி: அதோட இயற்கையில காணக்கூடிய அழகு, பூவோட வண்ணத்துல, பறவையோட குரல் இனிமையில, அருவியோட சலசலப்பில இருக்கிறத சுட்டிக்காட்டணும். நம்ம சுத்தி இருக்கிற உயிரினங்களோடநடவடிக்கைகளை கவனிக்கச் சொல்லணும். அதனால பிள்ளைங்களோட ரசனை, மென்மையான உணர்வுகள் எல்லாம் வளரும், அறிவும் விரிவடையும்.

அல்லி: ஆமா. ஒரு செடியோ, மரமோ வளக்கும் போது எப்படி அதன் வளர்ச்சிய நிர்ணயிப்போமோ அதே மாதிரி குழந்தைக விருப்பு வெறுப்புகள ஆதரிச்சும், அடக்கிவைச்சும் செம்மையான பாதையில திருப்பி விடணும்.

மல்லி: ஆமா அல்லி. அதே மாதிரி, தெரிஞ்சோ, தெரியாமலோ தப்பு பண்ணிட்டாங்கன்னா நம்ம அனுபவ அறிவை வச்சி அவங்க தப்போட தன்மைய, தப்போட பாதிப்புகள நல்லா விளக்கிச் சொல்லணும்.

அல்லி: அது மட்டுமில்ல, மல்லி.அவங்களோட நல்ல முயற்ச்சிகள மிகத் தாராளமா பாராட்டணும். அப்பத்தான் அவங்களுக்கு இன்னும் இன்னும் சாதிக்கணும்கிற உற்சாகமும், ஊக்கமும் ஏற்படும்.

மல்லி: ஓய்வு நேரங்கள்ல, விடுமுறை நாட்கள்ல குடும்ப அங்கத்தினர்கள் ஒன்னா கூடி பேசறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.

அல்லி:ஆமா. கருத்துப் பரிமாற்றங்களும், ஆரோக்கியமான விவாதங்களும், வேடிக்கைப் பேச்சுக்களும் நல்ல நெருக்கத்தையும், பாசப்பிணைப்பையும் ஏற்படுத்துமே.

மல்லி: தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைங்கள தோழனாவும், தோழியாவும் நினைச்சு பழகினோம்னா அவங்களுக்கு தன்னம்பிக்கையும் நம்ம கருத்துக்கு மதிப்பு கொடுக்கணும்ங்கிற உணர்வும் ஏற்படும்.

அல்லி: ஆமா, அப்பத்தான் பிரச்சினை ஏதும் அவங்களுக்கு வந்திச்சினா வேற யார்கிட்டயும் போய் யோசனை கேட்டு மேலும் துன்பப் படாம அவங்க மேல உண்மையான அக்கறை உள்ளவங்க நாமதான்னு புரிஞ்சிகிட்டு நம்மை நம்பிக்கையோட அணுகுவாங்க.

மல்லி: இப்போ பெத்தவங்கள்ல நிறையப் பேர் பிள்ளைகளுக்கு சுதந்திரம் குடுக்க தயங்குறாங்க. அவங்கள சுயமா செயல்பட அனுமதிக்கமாட்டேங்கிறாங்க.

அல்லி: ஆமா. மன இயல் நிபுணர்கள் கருத்துப்படி பாத்தா பிள்ளைங்கள சின்ன வயசிலேயே சுயமா முடிவெடுக்க பழக்கறதுதான் ஆரோக்கியமான அணுகுமுறையா தோணுது.

மல்லி: சின்ன வயசில அவங்க என்ன விஷயங்கள்ல முடிவெடுக்க முடியம்னு சொல்லுங்களேன்.

அல்லி: நிறைய விஷயம் இருக்கு. உதாரணமா, குழந்தைக்கு உடுப்பு வாங்க கடைக்கு அழைச்சிகிட்டு போறீங்க. விலையை மட்டும் நீங்க நிர்ணயிச்சிகிட்டு, கலரையும் டிசைனையும் குழந்தையையே தேர்வு செய்ய சொல்லலாம்.

மல்லி:இன்னிக்கு என்ன கதை சொல்லட்டும்னு கேட்கலாம்ல ?

அல்லி:இன்னிக்கி கீரையை பருப்போட மசிச்சி தரவா, பொறியலா வேணுமான்னு கேக்கலாம்.

மல்லி:ஆமா, தேர்வு செய்ய தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அப்பத்தான் குழப்பமில்லாம தெளிவா சிந்திக்கிற திறமை வளரும்.

அல்லி: பெரியவங்க ஆன பிறகு கூட எத்தன பேர் மதில் மேல் பூனை மாதிரி, ஷேக்ஸ்பியரோட ஹேம்லெட் மாதிரி முடிவெடுக்கவே துணிவு இல்லாம தடுமாற்றத பாக்குறோம்.

மல்லி: ஆகையினால பிள்ளையின் ஈடுபாடு தெரிஞ்சி, அவன் சோபிக்கக் கூடிய தொழிலை நாம சுட்டிக் காட்டணும். விரும்பிய பாதைய பிள்ளைங்க திடசித்ததோட தானே தேர்ந்தெடுத்தாங்கன்னா வைராக்கியத்தோட உழைச்சி நிச்சயமா வாழ்க்கைல முன்னுக்கு வருவாங்க.

அல்லி: சில பெத்தவங்க அளவுக்கதிகமா பிள்ளைங்கள பாதுகாத்து பொத்தி பொத்தி வச்சி வளத்து அவங்க பிற்காலத்துல வாழ்க்கை போராட்டத்தை நடத்த தடுமாற்ற நிலைக்கு காரணமாயிடுறாங்க.

மல்லி: அப்படி நடக்காம இருக்கிறதுக்கு வீட்டு நிர்வாகத்துல பிள்ளைங்களுக்கு கண்டிப்பா பங்கு குடுக்கணும். வீட்டுக்குள்ள சின்ன சின்ன வேலைகள், தோட்ட வேலைகள், வெளியே கடைகண்ணிக்கு போற வேலைகள் மாதிரி கடமைகளை அவங்ககிட்ட ஒப்படைச்சி அவங்களோட பொறுப்புண்ர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வளக்கணும்.

அல்லி: வீட்டு வேலைகள்ல பங்கேற்கும் போது குடும்ப வாழ்க்கை நல்லபடியா இயங்குறதுக்கு தானும் காரணமாயிருக்கோம்ங்கிற பெருமிதம் அவங்க மனசில ஏற்படுமில்லையா ?

மல்லி: அதோட அவங்கள தைரியமா வெளியுலகத்துல போக வர பழக்கி, சைக்கிள், மொபெட் ஓட்ட பழகுறது, நீந்தக் கத்துக்கிறது போன்ற உபயோகமான திறமைகளை வளத்துக்க அனுமதிக்கணும்.

அல்லி: இதனாலெல்லாம் பிள்ளைங்களோட தன்னம்பிக்கை நல்லாவளரும். வாழ்க்கைல முக்கியமான விஷயங்கள்ல, சிக்கலான தருணங்கள்ல சரியான முடிவெடுக்கிற தைரியம் கிடைக்கும்.

மல்லி: சரியா சொன்னே. இனிமே ஆண்பிள்ளைக வாழ்க்கை துணைவிய தேர்ந்தெடுக்கும் போது தன்மானத்தோட வியாபார பேரங்கள தவிர்த்திடுவாங்க-கழுத்தில விலை சீட்டை மாட்டிவிட அனுமதிக்கமாட்டாங்க; பெண்பிள்ளைக அநியாயத்துக்கும், அராஜகத்துக்கும் கோழைத்தனமா பணிஞ்சி போகாம கெளரவமா வாழத் துணிவாங்க.

அல்லி: இப்படியாக பெத்தவங்க அணுகுமுறைகள்தான் பிள்ளைங்க வாழ்க்கைல வெற்றியடைய உதவுதுன்னு தெரிஞ்சிகிடுச்சி.

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்