அலிகளுக் கின்ப முண்டோ?

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

பா பூபதி


மகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா என யோசிப்பதற்கு முன்பாக அலி என்பர்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உடலோடு பொருந்தாத மனதைப் பெற்றவர்களெல்லாம் அலிகள் அல்ல, அவர்களும் நம்மைப்போல சாதாரணமான மனிதர்கள்தான். யார் அலி என்பதை தெரிந்துகொள்ள நாம் மற்றவர்களின் உடல்ரீதியான காரணங்களை பார்க்க கூடாது, செயல்ரீதியான காரணங்களை கொண்டே யார் யாரெல்லாம் அலி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கணிதவியலின் அடிப்படையில் ஒவ்வொரு எண்களுக்கும் உள்ள மதிப்பு தவிர, தனிப்பட்ட முறையில் சில எண்களுக்கு நாம் மதிப்பளித்துள்ளோம். பதிமூன்றாம் எண் என்றால் ராசியில்லாத எண் என்றும், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று போன்ற எண்களை யார் திறமை சாலிகள் என வரிசைப்படுத்தவும் பயண்படுத்திகிறோம். அதுபோல நம்மிடையே உள்ள மக்களை நாமே இழிவுபடுத்த ஒரு எண்ணை பயன்படுத்துகிறோம் அந்த எண் ஒன்பது.

அதுவா நீ! உன்னை டேய் என்று கூப்பிடுவதா அல்லது டி என்று கூப்பிடுவதா, அது ஒன்பதுடா… நம்மை சிரிக்க வைக்க நாமே ஏற்படுத்திக்கொண்ட இழிவான சொற்கள் இவைகள். தெருநாய்கள் சில சமயத்தில் தெருவில் கிடக்கும் காய்ந்த எழும்புத்துண்டுகளை கடித்து சாப்பிடும்போது, காய்ந்துபோன அந்த எழுபுகள் நாயின் வாயில் ரத்தம் வருமளவிற்கு கிழித்து விடும். தன்னுடைய ரத்தத்தைதான் சுவைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அந்த நாய் தொடர்ந்து எழும்புத்துண்டுகளை கடித்துக்கொண்டிருக்கும். நம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்கிறோம் என்ற உணர்வில்லாமல் மனித இனத்தில் ஒரு பகுதி மக்களை இழிவாகப்பேசி வரும் நமக்கும் அந்த தெருநாய்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

உடல் ரீதியாக ஊனமானவர்களை கண்டது அவர்கள் மீது ஒரு கருணை பார்வை செலுத்துவதும், அவர்களுக்கு சிறு உதவி செய்வதன் மூலமும் மனித நேயம் இன்னும் அழிந்துவிடவில்லை மனிதனை மனிதன் மதித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்ற பிரம்மையை ஏற்படுத்துகிறோமே தவிர உண்மையில் நாம் சக மனிதர்களை எவ்வளவு உயர்வாக நடத்துகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், உடலோடு பொருந்தாத மனதைப் பெற்றிருப்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்துப்பார்த்தாலே நம்முடைய மனிதநேயத்தின் தன்மை என்னவென்று விளங்கிவிடும்.

வியாபார பொருளான சக மனிதபண்புகள்:

பாமர மக்கள்தான் விழிப்புணர்வு இல்லாமல் சக மனிதர்களை கேலி செய்கிறார்கள் என்றால், தொழில்நுட்பம், கதையம்சம் என உலக சினிமாக்களுக்கு போட்டிபோடும் அறிவு ஜீவிகளை கொண்ட நம்ம ஊர் சினிமாவில்கூட உடலோடு பொருந்தாத மனதப் பெற்றிருப்பவர்களை கேவலப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நம்மை சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு சிரிப்பு காட்சிகளில் அவர்களை கேவலப்படுத்துகிறார்கள். தன்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தவும், நம்மை சிரிக்கவைக்கவும் உடலோடு பொருந்தாத மனதைப் பெற்றவர்களின் பண்புகளை பயன்படுத்தி பணமாக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களும் நம்மைப்போல சக மனிதர்கள்தான் என்பதை எந்த புத்திசாலியும் புரிந்துகொள்வதில்லை. திரைப்படங்களுக்கான தணிக்கை குழு எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை, கொலை மற்றும் பாலியல் காட்சிகளை பார்த்தால் மன ரீதியான பாதிப்பு ஏற்படும் என தடுப்பவர்கள் (அதையும் முழுமையாக தடுப்பதில்லை) சக மனிதர்களின் பண்புகளை கேலி செய்து வரும் காட்சிகளை அப்படியே அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யார் அலி/அரவாணி/திருநங்கை:

திருநங்கை என்ற வார்த்தைக்கு ஆணும் இல்லாமல் பெண்ணுமில்லாதவர்களாக இருப்பவர்கள் என்று நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஒரு முழுமைத்தன்மை இல்லாதவர்கள் என சொல்லலாம் ஆனால் இந்த முழுமையற்ற தன்மையை காரணம் காட்டி உடலோடு பொருந்தாத மனதை பெற்றவர்களை கேவலப்படுத்த கூடாது ஏனெனில் அது இயற்கையாக ஏற்பட்ட ஒன்று. அவர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நாம் எவ்வளவு கீழ்தரமானவர்கள் என்பதை காண்பிக்கிறோம் என்பதுதான் உண்மை.

அலிகளாக நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தவர்கள் உண்மையில் அலிகள் அல்ல. உடல்ரீதியான குறைகளை கொண்டவர்களை அலிகள் என அழைக்காதீர்கள், மனரீதியாக முழுமையடையாதவர்கள் தான் உண்மையில் அலிகள். மனரீதியாக முழுமையடையாத அலிகள் எப்படி இருப்பார்கள் என்பதை பாரதியின் கவிதையை கொண்டே நாம் புரிந்துகொள்ள முடியும்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
வஞ்சனை சொல்வா ரடி!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ!

தேவியர் மானம்என்றும் தெய்வத்தின் பக்திஎன்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே!
நம்புத லற்றா ரடீ!

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ!

ஒரு அலி எப்படி இருப்பார் என்ற பண்புகளை பாரதியின் இந்த கவிதைகளைக் கொண்டே நாம் வரையறுக்க வேண்டும். கவணித்துப்பார்த்தீர்களானால் ஆண் என்று சொல்லிக்கொண்டு அல்லது பெண் என்று சொல்லிக்கொண்டு இந்த தகுதிகளை பெற்றிருக்கும் பலபேர்கள் உங்களை சுற்றியிருப்பார்கள். அவர்களின் நடவடிக்கைகளைக்கொண்டே அவர்களை அடையாளம்காண முடியும்.

• எதையும் செய்ய விரும்பாத வாய்ச்சொல் வீரர்கள்
• எப்போதும் அவநம்பிக்கையிலேயே வாழ்பவர்கள்
• எவ்வளவு துன்பம் ஏற்பட்டாலும் எதிர்ப்பை காட்டாமல் முனங்கிக்கொண்டு இருப்பவர்கள்
• சுய முயற்சியில்லாமல் இருக்கும் நிலையிலேயே புலம்பிக்கொண்டிருப்பவர்கள்.
• திடமான முடிவை எடுக்க தெரியாமல் முழிப்பவர்கள்
• முடியும் ஆனா… என இரண்டுவிதமான பதில்களை சொல்பவர்கள்
• எதாவது பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், தன்னுடைய சாதாரணமான விருப்பங்களைக்கூட நிறைவேற்றிக்கொள்ளாதவர்கள்

• நமக்கு எதுக்கு பிரச்சனை என்று ஒதுங்கியே வாழ்பவர்கள்

இப்படி எந்த முயற்சியும் இல்லாமல் முக்கிக்கொண்டும் முனங்க்கிக்கொண்டும், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பவர்கள்தான் உண்மையில் முழுமையான தன்மையற்றவர்கள் இவர்களினால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது இவர்களை எந்த வகையானவர்கள் என வகைப்படுத்த இயலாது. அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல் இருப்பவர்கள் என நாம் இவர்களைத்தான் சொல்ல வேண்டும். இது போன்ற பண்புகளைக்கொண்ட நபர்களை தலைமை அதிகாரியாக, தலைவனாக பெற்றவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் அவர்கள் பட்டபாடு என்னவென்று. முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிடுங்கள் இப்படி காரணம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று அடிக்கடி இந்த நபர்கள் மற்றவர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.

அலிகளுக்கின்பம் இல்லைதான்:

எந்தவிதமான முடிவும் எடுக்கத்தெரியாமல், எந்தவித முயற்சியும் செய்ய துணிவில்லாமல், எந்தவித பயனுமில்லாமல் முக்கி முனங்கிக்கொண்டு இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல் இருப்பவர்கள்தான் அலிகளே தவிர நீங்கள் இதுவரை அலிகளாக நினைத்துக் கொண்டிருந்த “உடலுக்குப் பொருந்தாத மனதைப் பெற்றவர்கள்” அலிகள் அல்ல. இப்படி தனக்கும் மற்றவர்களுக்கும் எந்தவிதத்திலும் பயனில்லாமல் வாழும் அலிகளுக்கு இன்பம் இல்லை என்பதை துணிந்து கூறலாம்.

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி