அருமையான பாதாளம்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

அ.முத்துலிங்கம்


இம்முறை அமெரிக்காவுக்கு சென்றபோது நான் பொஸ்டனில் ஒரு நூலகத்தை கண்டுபிடித்தேன். பிரம்மாண்டமான இரண்டடுக்கு கட்டடம். இதிலே ஒரு அறை பிரத்தியேகமான கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது. அகலமான தூண்கள், உயர்ந்த கூரை, மெலிந்த நீண்ட ஜன்னல்கள். ஒரு நூறு வருடத்துக்கு முந்தைய மகாராஜாவின் படிப்பு அறைபோல இருந்தது. இதை வட்டமான மேஜைகளும், மிருதுவான சோபாக்களும், நிற்கும் மின் விளக்குகளும் அலங்கரித்தன. இந்த அறைதான் தனியாளான எனக்கு ஒதுக்கப்பட்டது. நான் கேட்ட புத்தகங்களும் என் மேசையை தேடி வந்தன. அடிக்கடி நூலகர் வந்து வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்று விசாரித்தார். மூடி வைத்த கடுதாசிக் குவளைகளில் கோப்பியோ, தேநீரோ கொண்டுவர அனுமதி இருந்தது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இணையத்துடன் தொடுக்கப்பட்ட கம்புயூட்டரை இயக்கலாம்.

இவ்வளவுக்கும் நான் அங்கே ஓர் அங்கத்தவன்கூட இல்லை. அந்நியனும். ஆனால் அறிவுத்தாகம் தீர்க்க விரும்பும் எவரும் இந்த வசதிகளை இலவசமாக அனுபவிக்கலாம். Mark Twain எழுதிய அத்தனை புத்தகங்களும் இங்கே பூர்வ அட்டைகளுடன் கிடைத்தன. அவற்றை திரும்பவும் படித்தபோது எனக்கு இரண்டு விஷயங்கள் புலப்பட்டன. மேலான இலக்கியங்களை ஒருவர் சிறுவயதில் படிக்கக்கூடாது. நாங்கள் அநேகமாக சிறுவயதில் படிப்பவற்றை திரும்பவும் படிப்பதில்லை. இந்தப் புத்தகத்தில் சொன்ன எத்தனையோ அருமையான விஷயங்களை நான் முதல் வாசிப்பில் தவறவிட்டது மீண்டும் அவற்றை படித்தபோது தெரிந்தது.

இரண்டாவது, மார்க் ட்வெய்ன் அமெரிக்காவின் தலைசிறந்த இலக்கியக்காரர். அமெரிக்க இலக்கிய ஆரம்பமே இவர்தான். இவருக்கு பின்னால் வந்த எழுத்தாளர்களில் எவரும் இவரை தாண்டவில்லை என்று சொல்கிறார்கள். நவீன அமெரிக்க எழுத்தாளர்களிடம்கூட இவருடைய தாக்கம் இருப்பதை உணரமுடிகிறது.

ஹக்கிள்பெரிஃபின் நாவலில் ஒரு இடத்தில் இப்படி வரும். Don ‘t forget to remember that you don ‘t know anything about it. உனக்கு ஒன்றும் தெரியாது என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க மறக்காதே. இதைப் படித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. வேறு யாரால் இப்படி எழுதமுடியும்.

‘ஞாபகம் ‘ என்றால் நினைவில் வைப்பது. அதற்கு எதிர்ப் பதம் ‘மறதி ‘. அப்படி இருக்கும்போது ஞாபகமறதி என்ற சொல் எப்படி உண்டானது. எங்கள் வகுப்பு தமிழாசிரியர் எழுதச் சொன்ன கட்டுரையில் நான் ஒருமுறை ‘ஞாபக மறதி ‘ என்ற சொல்லை பாவித்துவிட்டேன். ‘அது என்ன ஞாபக மறதி, மறதி என்றாலே போதும் ‘ என்று ஒரு குட்டு வைத்தார். இவரிடம் கற்றதைவிட வாங்கிய குட்டுகளே அதிகம். சுருக்கமான தமிழுக்காக உயிரை விடுவார். அனுமதித்தால் உலகத்தையே சுருக்கிவிடுவார். யாராவது ‘அழகான பெண் ‘ என்று எழுதினால் தொலைந்தார்; ‘அழகி ‘ என்று எழுதவேண்டும்.

என் நண்பன் ‘பாண்டவருக்கும் கெளரவருக்குமிடையில் நடந்த சண்டை ‘ என்று எழுதிவிட்டான். ‘தனிப்பட்டவர்களுக்குள் நடப்பதுதான் சண்டை. படைகளுக்கிடையில் நடப்பது போர் ‘ என்றார். இன்னும் அதை ஆழமாக விளக்குவதற்காக நீண்ட பிரம்பை எடுத்து வீசினார். அந்த வீச்சு முடிவு பெறுவதற்கிடையில் என் நண்பனுடைய முதுகு அதைத் தடுத்துவிட்டது.

இவருடைய கடைசிக் காலத்தில் நான் இவரைப் போய் பார்த்தேன். என் பெயரை மூன்று தரம் திருப்பி திருப்பி கேட்டார். நான் விடை பெறும்போது மறுபடியும் கேட்டு தெரிந்துகொண்டார். அவருக்கு மறதி வியாதி. இப்பொழுது யாராவது ‘ஞாபக மறதி ‘ என்று எழுதினாலும், ‘மறதி ‘ என்று எழுதினாலும் அவருக்கு ஒன்றுதான்.

மறதி வியாதி பற்றி கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. ஈயொஸ் என்ற தேவதையிடம் மையல் கொள்கிறான் தைதோனிஸ். ஆனால் தைதோனிஸ் மரணத்தை தாண்டமுடியாத ஒரு சாதாரண மானுடன். பெரிய கடவுள் ஈறொஸிடம் தைதோனிஸுக்கு சாகா வரம் தரும்படி வேண்டுகிறாள் அவன் காதலி ஈயொஸ். அவனும் கொடுத்துவிடுகிறான் – ஆனால் அதில் ஒரு சூழ்ச்சி இருந்தது. இளமையுடன் கூடிய சாகாவரம் அல்ல அது. தைதோனிஸ் வயோதிகம் கூடி, தளர்ச்சியும், மறதியும் மூடி தொணதொணக்க தொடங்குகிறான். ஈயொஸால் பொறுக்கமுடியவில்லை. தைதோனிஸை வெட்டுக்கிளியாக மாற்றிவிட்டு தப்பிவிடுகிறாள். இன்றும் வெட்டுக்கிளி ஓயாமல் சத்தம் போடுவது அதனால்தானோ என்னவோ.

அன்று தொடங்கியது இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரேகனுக்கு Alzheimer வியாதி என்று 1994 ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மறதி வியாதிக்கு வைத்தியம் இல்லை. படிப்படியாக இது ஆளை மூழ்கடித்துவிடும். மறதியைத் தொடர்ந்து மூளைக் குழப்பம், வார்த்தை தடுமாறல், எரிச்சல், தொணதொணப்பு என்று எல்லாம் சேர்ந்துவிடும்.

சிலர் வியாதியை மூடி மறைத்துவிடுவார்கள். ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் அப்படியில்லை. வியாதி அணுகியதும் ரேகன் அமெரிக்க மக்களுக்கு, தன் மூளை தன் வசத்தில் இருந்து விலக முன்னரே, ஒரு செய்தி விட்டார்.

‘ஆண்டவன் என்னை அழைக்கும்போது, அது எந்த நாளாக இருந்தாலும், நான் இந்த நாட்டில் ஆழமான பற்றுடன்தான் கிளம்புவேன்.

‘இன்று நான் என்னுடைய வாழ்க்கையின் அஸ்தமனத்தை நோக்கிய பயணத்தை தொடங்குகிறேன். அமெரிக்காவுக்கு ஒரு பிரகாசமான விடியல் நிச்சயம் என்பதை நான் அறிவேன். ‘

இன்று, 90 வயதுக்கு மேலான நிலையில் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ரேகன் மறந்துவிட்டார். அவர் மனைவியையோ, மகளையோ, உறவினர்களையோ, வேறு நண்பர்களையோ அவரால் அடையாளம் காணமுடியாது. மரண அரசனின் வரவேற்பறையில் காத்திருக்கிறார்.

எங்கள் புராணங்களிலும் மறதிக்காரர்கள் இல்லாமல் இல்லை. வேட்டையாட வந்த துஷ்யந்தன், காட்டிலே விளையாடிக் கொண்டிருந்த சகுந்தலையை கண்டு காமவசமாகி, அங்கேயே அவளைக் கந்தர்வ மணம் செய்துகொள்கிறான். அடையாளமாக ஒரு மோதிரமும் தருகிறான். அவ்வளவு அவசரமாக மணம் செய்தவன் உடனே அவளை அரண்மனைக்கு அழைத்துப் போவதுதானே. இல்லை. ஓர் அரசிக்குரிய மரியாதைகள் தந்து தன் பரிவாரங்களுடன் வந்து அழைத்துப் போவதாக சொல்லி தப்பிவிடுகிறான்.

ராஜ்ஜியத்துக்கு திரும்பியதும் சகுந்தலையை மறந்துவிடுகிறான் துஷ்யந்தன். சகுந்தலை அரண்மனைக்கு வந்து முறையிட்டபோது அவளை முற்றாக மறுத்து உதாசீனம் செய்கிறான். பிறகு அரசன் கொடுத்த மோதிரத்தை மீனவன் கண்டு பிடித்ததும் ஞாபகம் மீண்டு சகுந்தலையை திருப்பி ஏற்றுக்கொள்கிறான் என்று காளிதாஸர் கதையை முடிக்கிறார்.

இசை மேதை பீதோவன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் செவிடாகிவிட்டார். அது கொடுமை. புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் ஜோர்ஜியா ஓகீவ் முதுமையில் கண் பார்வை இழந்துவிடுகிறார். அதுவும் கொடுமை. ஆனால் ஒரு விஞ்ஞானிக்கு முக்கியமான உறுப்பு மூளை. இறுதிக் காலத்தில் கலீலியோவின் மூளையை மறதி மழுங்கடித்து விடுகிறது.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று விஞ்ஞான பூர்வமாக முதலில் நிரூபித்தவர் கலீலியோ. இந்தக் கூற்றுக்காக அவர் மேல் கடவுள் நிந்தனைக் குற்றம் சுமத்தப்படுகிறது. உலகத்தின் புகழ் பெற்ற முதல் வான்கணிப்பாளர் தன் முதுமைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பார். இந்த சமயங்களில் தான் இள வயதில் எழுதிய கணித சித்தாந்தங்களை எல்லாம் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருப்பார். அப்பொழுது ‘ நான் எழுதிவைத்த சித்தாந்தங்களே எனக்கு ஒன்றும் புரியவில்லையே ‘ என்று கண்கலங்குவாராம்.

ஆனால் மறதிக் கதைகளுள் என்னை சமீபத்தில் கவர்ந்தது கனடா செய்தித் தாளில் வந்த ஒரு தகவல்தான். தன்னுடைய செயற்கைக் காலை ஒருவர் பொது இடத்தில் மறந்து வைத்துவிட்டு போய்விட்டார். அவரைத் தேடுகிறது கனடா பொலீஸ்.

இந்தக் கால் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட இடதுகால். இது அடிடாஸ் ஆண் சப்பாத்து சைஸ் எட்டு அணிந்திருந்தது. இந்தக் காலின் தேய்வை வைத்து சோதித்துப் பார்த்தபோது குறைந்தது இரண்டு வருடங்களாவது இது நடந்து உதவி செய்திருக்கிறது.

மறதிக்கு பரிசு கொடுப்பதென்றால் இந்த ஒற்றைக்கால்காரரை மறக்க முடியுமா!

எனக்கு மறதியுடன் சிறுவயதில் இருந்தே நல்ல பரிச்சயம் உண்டு. இரவு முழுக்க பரீட்சைக்கு கண் விழித்து மனப்பாடம் செய்துவிட்டு மண்டபத்துக்கு சென்றால் நான் வாயே திறக்கமாட்டேன். படித்தவை வெளியே விழுந்துவிடுமோ என்ற பயம். கேள்விப் பேப்பர் வந்ததும் கஜபாகுவின் தேதியும், கங்கை கொண்ட சோழனின் தேதியும் மாறிவிடும்.

அது பரவாயில்லை. இன்னும் மோசமான காரியமும் நடப்பதுண்டு. நடு இரவு தாண்டியபிறகு வரும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு. ‘ஹலோ, ஹலோ ‘ என்று நாலு தரமும், ‘கேட்கிறதா ? ‘ என்று பதினாறு தரமும் விசாரிப்பார் ஒருவர். பிறகு சவாலுக்கு தோதான குரலில் கேட்பார். ‘யார் பேசுறது சொல்லுங்கோ பாப்பம். ‘ இரவு ஒரு மணிக்கு மேல் மிகவும் அவசியமான ஒரு புதிர். ‘உங்கள் குரலை மறக்க முடியுமா ? ‘ என்பேன் நான் பிடிகொடுக்காமல். பேசிக்கொண்டே நடு ரோட்டில் போவேன். அவரும் பேசுவார். சில வேளைகளில் ஒரு நுனி கிடைக்கும். தப்பி விடுவேன். பல சமயங்களில் மாட்டுப்படுவதும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு அப்படியான ஆபத்து ஒன்று எனக்கு வந்தது.

நான் சிறு வயதில் படித்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் தேகப்பியாச வகுப்பு நடக்கும். முதல் வேலையாக நேர்க்கோட்டில் நின்று நாங்கள் எண்ணிக் கொண்டே வரவேண்டும். அதாவது one, two, three என்ற ஒழுங்கில். இந்த நம்பர்கள் சொல்வதற்கும், தேகப்பியாசத்திற்கும் என்ன தொடர்பு என்று என்னைக் கேட்காதீர்கள்.

அருமைநாயகம் என்ற மாணவனுக்கு sixteen சொல்லவராது; ‘சிக்கிட்டான் ‘ என்றே சொல்வான். அந்த வகுப்பு முடியும் வரை எங்களையெல்லாம் சிரிப்பு மூட்ட இது ஒன்றே போதும். வரிசையில் நிற்கும்போது எப்படியோ அவனுக்கு அந்த நம்பர்தான் கிடைக்கும்; அவனும் சிக்கிட்டான் என்று சொல்வான்.

போகப்போக அவன் லைனில் நிற்கும் முன்பு தனக்கு முன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று எண்ணி 13வது இடத்திலோ 18வது இடத்திலோ நிற்க பழகிக்கொண்டான். அந்த உத்தியும் வாய்க்கவில்லை. வாத்தியார் பார்த்துவிட்டார். உயரப்படிதான் நிற்கவேண்டும்; பத்மநாபன் முதலில், ஜெயவீரசிங்கம் கடைசியில் என்று கட்டளை இட்டார். அவனை மாற்றி நிற்கவைத்தார். அவன் மறுபடியும் சிக்கிட்டான் ஆகிவிட்டான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அவன் பெயரே எல்லோருக்கும் மறந்துவிட்டது. சிக்கிட்டான் என்றால்தான் தெரியும். அவனும் சிக்கிட்டான் என்று கூப்பிட்டால் பதில் சொல்லப் பழகியிருந்தான். ஒரு நாள் ஆசிரியர்கூட சிக்கிட்டான் என்று அவனைக் கூப்பிட்டது எங்களுக்கு முழுவெற்றி.

பல வருடங்கள் கழித்து கொழும்பில் அவனை ஒருமுறை சந்தித்தேன். மனைவியுடன் மிருகக் காட்சி சாலை பார்க்க வந்திருந்தான். அவள் வட்டமான தாலியும், சருகைவைத்த மொடமொடக்கும் சேலையும் அணிந்திருந்தாள். ஒரு திருமண வீட்டுக்கு போவதற்கு வெளிக்கிட்டு பாதியில் மனதை மாற்றி மிருகங்களைப் பார்க்க வந்ததுபோல பட்டது. பதினாறு சொல்லத் தெரியாவிட்டால் என்ன பெரிய நட்டம். அவன் மனைவி பேரழகி.

அவள் ஆவலுடன் மிருகங்களைப் பார்த்தாள். சற்றும் குறையாத அதே ஆவலுடன் மிருகங்களும் அவளைப் பார்த்தன. அவளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தான். நானும் அப்படியே அவனை என் மனைவிக்கு அறிமுகம் செய்யலாம் என்று பார்த்தேன். எவ்வளவு யோசித்தும் சிக்கிட்டான் என்ற பெயர் தான் ஞாபகத்துக்கு வந்தது. அவனுக்கு விளங்கிவிட்டது. முந்திக்கொண்டு ‘அருமைநாயகம் ‘ என்றான்.

ஓர் அருமையான பாதாளத்தில் இருந்து அன்று நான் காப்பாற்றப்பட்டேன்.

முற்றும்

***

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்