அரிதிற் கடத்திகள்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தமிழ்மகன்சதாசிவம் பக்கத்தில் இருந்த கிளிமார்க் பையைத் திறந்து, மல்லிகாவின் திருமணப் போட்டோ, திருமண அழைப்பிதழ், சில ஜிராக்ஸ் காப்பிகள் ஆகியவற்றை ஒருமுறை தேவையில்லாமல் பார்த்துவிட்டு மறுபடி முன்பு போலவே எங்கோ வெறித்தபடி நின்றார். சற்றுத் தூரத்தில் கோர்ட் வராண்டாச் சற்றுச் சுவரின் அருகே, தத்தமது கணவன்மார்களிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்திருந்த வேறு சில பெண்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் மல்லிகா.

“உங்க வீட்டுக்காரர் வந்திருக்காரா?”
“அதோ… செவப்புச் சட்டை போட்ருக்கானே… அவன்தான்!”
மல்லிகாவை அடுத்திருக்கிற மூன்று பெண்களை நினைத்தபோது சதாசிவம் சற்றே திகிலும், அவநம்பிக்கையுமாக இருந்தார்.
கல்யாணமாகி ஒரு மாதம் கூட மல்லிகா கணவன் வீட்டில் இல்லை. முதலிரவன்றே, “”நீ இதுவரைக்கும் அபார்ஷன் பண்ணியிருக்கியா?” என்று கேள்வி கேட்ட கணவன் அவன்.
கதறிக் கதறி அழுது கொண்டு வந்தவளைத் தேற்றி அனுப்புவதைத் தவிர வேறு வழி தெரியவிóல்லை சதாசிவத்துக்கு. போனவள் சரியாய் ஒரு மாதம்… ஒரு மாதத்தில் மொத்தம் எத்தனை வினாடிகள் உண்டோ அத்தனை நரகங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து பார்த்தாள்.
அப்பாவும், அண்டை வீட்டாரும் சொல்லி அனுப்பியிருந்த அறிவுரைகள் எதுவுமே அவளுக்குப் பலன் தரவில்லை. சிரிக்கவோ, நடக்கவோ உட்காரவோ… கூட அவனது அனுமதியை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவுக்கும் அவனிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன.
மல்லிகா படித்த படிப்புக்கு அவன் ஒரு மனநோயாளி என்பதை உணர்வதற்கு வெகு நேரம் ஆகவில்லை. ஆனால் ஒரு குடும்பம் ஆணின் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற சமூக அமைப்பில், அவனது பைத்தியக்காரத்தனங்களுக்கு ஒரு அங்கீகாரம் இருந்தது.
பகல்களைவிட மல்லிகாவின் இரவுகள் ரணமானவை. ஒரு பாட்டில் சாராயத்தை அவள் வாயில் சாய்த்து, ஏதாவது உளறுகிறாளா என்று குரூரமாய்ப் பரிசோதிக்கிற கொடுமை நிறைந்த இரவுகள்.
ஒடிசலான அப்பாவுக்கும், தங்கைகளுக்கும் தான் ஒரு சுமையாய் போய்விடக்கூடாதே என்ற பயமும், இனி ஒவ்வொரு இரவும் நமக்கு இப்படித்தான் என்று தயார்படுத்தி விடுகிற சகிப்புத் தன்மையும் மல்லிகாவை ஒரு மாதம் வரை வாழவிட்டன.
நடு இரவில் ரயில் தண்டவாளத்தில் படுக்க வைத்து, “”நீ நிஜமாகவே பத்தினியா இருந்தா… ரயில் வரும்போது எழுந்திருக்கக்கூடாது” என்று அவன் கடைசியாய்ப் போட்ட கண்டிஷனுக்கும் அவளைச் சம்மதிக்க வைத்தது அதுதான்.
பனியின் காரணமாகத் தண்டவாளங்கள் சில்லிட்டுப் போயிருந்தன. கணுக்காலில், கண்டை சதையிலும் ஊசியாய் ஏறியது குளிர். மல்லிகாவுக்கு ஏனோ துளியும் பயமாகவே இல்லை. இப்படி ஒரு வனாந்தரத்தில் நட்சத்திரத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருப்பது கொஞ்சம் நிம்மதியாகக்கூட இருந்தது. ஏதோ ஒரு திசையில் ரயில் வருவதற்கான அறிகுறியாகத் தண்டவாளத்தில் அதிர்வுகள் ஏற்பட்டன. அவளுக்கு ஆறாம் வகுப்பு அறிவியல் பாடம் ஞாபகம் வந்தது. உலோகங்கள் நற்கடத்திகள்… அலோகங்கள் அரிதிற் கடத்திகள்…
“யாருப்பா…அது?”
தூரத்தில் வந்த யாரோ இருவர் குரல் கொடுத்தனர்.
“வீட்ல ஆயிரந்தான் பிரச்னை வந்தாலும் அதற்காக இப்படியா ரயில் தண்டவாளத்தில் வந்து படுத்துக்கிறது? நீங்களே கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள் இவளுக்கு… என்று அந்தர் பல்டி அடித்தான் மல்லிகாவின் கணவன்.
இலவசச் சட்ட ஆலோசனை தந்த அட்வகேட் மாலதியிடம் இதையெல்லாம் சொன்னபோது, “” எப்படி இவ்வளவு நாளா செத்துப் போயிடலாம்னு தோணவே இல்ல உனக்கு?” என்று ஆச்சிரியப்பட்டார்.
“சரியாயிடுவார்னு நினைச்சேங்க்கா…”
“எதுக்காக இப்படி ஒரு சந்தேகம் வந்தது அவனுக்கு?” என்றார்.
“கல்யாணத்துக்கு வந்திருந்த அவனது ஃபரண்ட்ஸ் எல்லாருமே என்னை ரொம்ப அழகா இருக்கறதா சொன்னாங்களாம். இவ்வளவு அழகான் பெண்ணை நமக்கு எப்படிக் கட்டிக் கொடுத்தாங்கன்னு காம்ப்ளக்ஸ் அவனுக்கு”
நீதிபதி கேட்கும்போது “அவன் ஒரு மெண்ட்டல்… அவன் கூட வாழ முடியாதுன்னு அடிச்சிச் சொல்லிடு…” என்றார் மாலதி.
“சரிக்கா..”
அவள் தன்னையே மலை போல நம்பிக்க கொண்டிருப்பது பரிதாபமாக இருந்தது மாலதிக்கு. மிஞ்சிப் போனால் இருப்பதேழு வயதிருக்கும். பி.ஏ. வரைக்கும் படித்தவள். அரசு உத்யோகத்தில் இருந்தவள்… இன்னும் என்ன குறை..? குறையே அதுதான்!
“இந்த காம்ப்ளக்ஸ்னாலேயே என்னை வேலையை விட்டு நின்னுட சொல்லிட்டாங்க்கா… திடீர்னு தாம்பரம் வரைக்கும் போயிட்டு வரலாம் வான்னு பஸ்ல கூட்டிட்டுப் போவான். அங்க இருந்து திரும்பி வரும்போது அவனுக்கு மட்டும் டிக்கெட் எடுத்துப்பான். எனக்கு எடுக்க மாட்டான். ஒருமுறை கண்டக்டர் பார்த்துட்டு… ஏம்மா, டிக்கெட் வாங்கிட்டியான்னு கேட்டுட்டாரு… அவன் பாட்டுக்கு இடிச்ச புளி மாதிரி உக்காந்திருக்கான்…. “என்னங்க கண்டக்டர் டிக்கெட் கேக்கறாரு’ன்னு ஒரே போடா போட்டுட்டான். கண்டக்டர் என்னை என்ன கேள்வி கேட்டான் தெரியுமாக்கா…? இவனும் கூட சேர்ந்துகிட்டு, இப்படீல்லாம் வேற வழிப்பறி பண்றாங்களான்னு கேக்கறான். கிண்டி வரைக்கும் நடந்தே வந்தேங்க்கா..”
மாலதி கொடுத்த தைரியத்தில் மல்லிகா குடும்ப வழக்கு மன்றம் வந்து ஜீவனாம்சம் கோரிக் காத்திருóந்தாள்.
யாரோ, “ஜட்ஜ் வந்துட்டாரு’ என்று பரபரப்பாய்ச் சொல்லிவிட்டுப் போனார். மல்லிகாவும், சதாசிவமும் அருகருகே வந்து நின்று கொண்டனர். நீதிபதியிடம் எதை எதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவசரமாக அச்சுக் கோர்த்தாள் மல்லிகா.
“மல்லிகா…மல்லிகா…மல்லிகா…”
மல்லிகா, முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு கூண்டுக்கு ஓடினாள்.
எவ்வளவு கூறினாலும் பொறுமையாய்க் கேட்கிற சாந்தமான முகம் நீதிபதிக்கு. இது மூன்றாவது விசாரணையாக இருந்தும் கூட மிகவும் பொறுமையாக விசாரித்தார் அவர்.
“உங்க வீட்டுக்காரர் இப்ப முன்னைப்போல இல்லம்மா… அவர் செய்த தவறுக்கெல்லாம் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாரா இருக்கார்… ” என்றார்.
……
மல்லிகா சதாசிவத்தைப் பார்த்தாள்.
“இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நீதான்… நீ அவர் மேல காட்டுகிற அத்தனைக் குற்றத்தையும் அவரே ஒத்துக்கிட்டாரு. ஏதோ ஒரு வெறியில அப்படியெல்லாம் நடந்துகிட்டதா சொல்லிஓ… ன்னு அழுறார். நீ ஏன் அவருக்கு இன்னொரு வாய்ப்பு தரக்கூடாது..?”
“….”
” இரும்மா அவரைக் கூப்பிடறேன்… ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசுங்க… அப்புறம் உன் பதிலைச் சொல்லு…”
“வந்தான். பாதியாய் இளைத்துப் போயிருந்தான். நிமிர்ந்து பார்க்க திராணியில்லாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டான்.
“என்னப்பா சொல்றே?”
“அவ பிரிஞ்சுப் போயிட்டா… நான் செத்துருவேன்… சார்”
“என்னம்மா சொல்றே?”
மல்லிகா இப்படியாகும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. படித்தவர்கள் சபை அவளது ஆமோதிப்புக்காக காத்திருப்பது அவளைச் சங்கடப் படுத்தியது. முடிவெடுக்க நேரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
சதாசிவம், “யோசிக்கிறதுக்கு என்னம்மா இருக்கு… மாப்ளதான் மன்னிப்பு கேட்டுக்கிடóடாரே…?” என்றார் தன் ஜென்ம சாபல்யம் அடைந்த பூரிப்போடு.
கோர்ட் சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்ததும், “உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா மல்லிகாவ இப்பவே வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன் மாமா…” என்றான்.
“இதில் என்ன ஆட்சேபணை வேண்டிக் கிடக்குது? தாராளமாகக் கூட்டிட்டுப் போங்க… ” என்று பஸ் ஸ்டாப் வரை வந்து வழியனுப்பினார். “”வரேன் மாப்ளே…” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
பஸ் நெரிசலாக இருந்தது. பெண்கள் இருக்கை ஒன்று காலியாக இருக்கவே, மல்லிகா அமர்ந்து கொள்ளட்டுமா? என்று பர்மிஷன் போல அவனைப் பார்த்துவிட்டு இருக்கை நோக்கி நகர்ந்தாள்.
அவன் கண்டக்டரிடம் திரும்பி மெல்லிய குரலில் ” கிண்டி ஒரு டிக்கெட் கொடுங்க” என்றான்.


tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்