அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

புதியமாதவி, மும்பை


திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

<1> திராவிட என்ற சொல்லை தமிழ்ச்செல்வன் இந்தப் பொருளில்தான் சொல்கிறார் என்பதை
சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொண்டவர்களுக்கு
என் எதிர்வினையில் “கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன்
இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான்” என்று சொல்வதை
மட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது எது? என்பது தான் புரியவில்லை.

<2> “கால்டுவெல் ஆதிதிராவிடர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னார் என்பது வேண்டுமென்றே தற்போது செய்யப்படுகிற ஒரு பிரச்சாரம்.” என்று குற்றம் சாட்டுவது இன்னும் அதிர்ச்சி தந்த விசயம் எனக்கு.

ஜன-பிப் 2006 கவிதாசரண் இதழில் தமிழகம் கண்டறியாத கால்டுவெல்லின் பின்னிணைப்புகள் என்று
அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது இருவர் எழுதிய கட்டுரைகள்.
பொ.வேல்சாமி எழுதிய கட்டுரை கால்டுவெல் நூலின் பதிப்புக் குளறுபடிகள் பற்றிய தகவல்களை திரட்டித்
தந்திருந்தது. வேதசகாயகுமாரின் கட்டுரை அக்குளறுபடிகளுக்கான சாதி அரசியலை வெகு நுட்பமாக
துலாம்பரப்படுத்தியிருந்தது.
இராபர்ட் கால்டுவெல் 1875இல் இரண்டாம் பதிப்பாகத் திருத்தி வெளியிட்ட “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A comparative Grammer of the Dravidian or South Indian Languages) என்னும் நூல் 1913இல் பல்வேறு விடுபடல்களுடன் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. மூல நூல் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என முப்பரிமாணம் கொண்டது. அவற்றில் மொழியியலை மாத்திரம் தக்க வைத்துக்கொண்டதே மூன்றாம் பதிப்பு – ஆகவே, குறை பதிப்பு. இப்போது கால்டுவெல்லின் 1875ஆம் ஆண்டின் முழுமையான ஆங்கிலப் பதிப்பு கவிதாசரண் பதிப்பகம் 2008ல் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

கால்டுவெல் நூலின் மூன்றாம் பதிப்பும் தற்போது கவிதாசரண் வெளியிட்டிருக்கும் இரண்டாம் பதிப்பின்
மறுபதிப்பும் இரண்டுமே என் வாசிப்புக்கு கிடைத்தது. இக்காலக்கட்டத்தில் இதுதொடர்பாக நான் கவிதாசரண்
அவர்களை சென்னையில் அவருடைய இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பேசியிருக்கிறேன்.
தலித்தியத்தையும் திராவிடத்தையும் தங்கள் சுயலாபங்களுக்காக விற்றுப் பிழைக்கும் தலைவர்கள்
மலிந்த தமிழ்மண்ணில் தான் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து கடன்பட்டுத்தான்
கவிதாசரண் அவர்கள் கால்டுவெல் நூலைப் பதிப்பித்தார் என்பதையும் நானறிவேன்.

இந்த உண்மைகளை நான் எழுதும் நோக்கம் உங்கள் குற்றச்சாட்டுக்குப் பதிலாக இருக்க முடியுமா?
தெரியவில்லை. ஆனால் இந்த உண்மையின் சாட்சியாக நானும் இருக்கிறேன் என்பதால்
இதை எழுத உங்க:ள் குற்றச்சாட்டே வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
அதற்காகவே உங்களுக்கு என் நன்றி.

<3> போரிடும் இனம் – மகர்கள் வெள்ளையர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டதையும்
மராட்டிய மண்ணில் ஒலித்த கோபால்நக் விதல்நக் வலன்க்கர் (Gopaknak vithalnak walangkar)
போராட்டங்களையும் அவருக்குப் பின் வந்த சிவராம் ஜான்பா காம்ப்ளேயின் போராட்டங்களையும்
இந்தப் போராட்டங்களே மகர் இன – தலித்திய போராட்டங்களாக வளர்ந்தது என்பதும்
மராத்திய வரலாறு. என் ஆதாரங்களைப் புறம்தள்ளிவிட்டு
“சாதியின் நெகிழ்ச்சித்தன்மையை இல்லாமல் ஆக்கியதில் பிரிட்டிஷாரின் பங்கு முக்கியமானது.
பிரிட்டிஷ் கல்வி முறையினால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கல்வியின்மை பரவியது
என சொல்கிறார் ஒரு நவீன பிரிட்டிஷ் கல்வி ஆராய்ச்சியாளர்” என்று புதிதாக ஒரு முழுப்பூசணிக்காயை
சோத்துக்கவளத்தில் மறைப்பது போல எழுதியிருக்கிறீர்கள்.

எனக்கு ஒரு பயணக்குறிப்பு நினைவுக்கு வருகிறது.
ஜேம்ஸ் மாசே, கட்டுரையில் இடம் பெற்றுள்ளது..

“பார்ப்பனர்கள் தாம் எழுதிய வேதங்களை சத்திரியர்களுக்கு கற்பித்தனர். சத்திரியன் அதை கற்றுக் கொள்ளலாம். ஆனால், கற்பிக்கக் கூடாது. ஒரு பார்ப்பனனுக்கே கூட அவ்விதம் செய்யக் கூடாது. வைசியர்களும், சூத்திரர்களும் அதை கேட்கவோ, உச்சரிக்கவோ கூடாது. அப்படி ஒரு செயல் நிரூபிக்கப்படுமானால், பார்ப்பனன் அந்த சூத்திரனை நீதிபதியின் முன்னால் இழுத்துக் கொண்டு போய் நிற்க வைத்து, அக்குற்றவாளியின் நாக்கினை துண்டித்திடும் தண்டனையைப் பெற்றுத் தருவான்.”

உங்கள் எழுத்துகளை என் கருத்துக்கு ஏற்றதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னிப்பாக
வாசித்து வருகிறேன் என்பதைச் சொல்வதற்கு எனக்கு இந்த வாய்ப்பு.
ஏனேனில் நான் மிகவும் விரும்பி வாசித்ததும் அது தொடர்பான அடுத்தக் கட்ட ஆய்வுக்குச்
செல்லத் தூண்டியதுமான உங்கள் கட்டுரை .. இதே திண்ணையில் தான் வாசித்தேன்.
மீண்டும் ஒரு முறை நீங்களே வாசிக்கவும்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20211241&format=html
சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்

மிக்க நன்றி.

Series Navigation

author

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

Similar Posts