அரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

தமிழ்மணவாளன்


(இவ்வாரம் சென்னையில் நடந்த இருபெரும் இலக்கிய விழாக்களை முன்வைத்து)

இந்த வாரம் சென்னையில் இரண்டு முக்யமான விழாக்கள் நடந்தன. ஒன்று, இளையபாரதியின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா.மற்றொன்று ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா. அந்த விழாக்கள் பற்றிய சிறு குறிப்பையும்,அவற்றினூடாக நிகழ்ந்த சிலவிஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

5-10-03 அன்று இளையபாரதியின் ஏழுநூல்களை கலைஞர் வெளியிட்டார். கல்யாண்ஜி விழாவுக்கு தலைமை தங்கினார். அசோகமித்ரன், அப்துல் ரகுமான், இன்குலாப், ஞானக்கூத்தன்,கலாப்ரியா ஆகியோர் பங்கேற்றனர். ஐந்தரை மணிக்கு சென்றபோது மிக முக்கியமானவர்கள் (VVIP) பங்கேற்கும் நிகழ்வின் மொத்த அடையாளங்களையும் அரங்க வாயிலிலேயே காணமுடிந்தது.

வண்ணப்பதாகையில் கலைஞர் சிரித்திருக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆறரை மணிக்கு விழாதொடங்கியது.முதல் நூல் ‘பட்டினப் பாலை ‘ பிரதியை கனிமொழி பெற்றுக்கொண்டதும் கட்டைவிரலை ஆட்காட்டி விரலில் இணைத்து சைகையில் பணம் கேட்டார். உடனடியாக பின்னமர்ந்திருந்தவர் பணம் கொடுக்க, அதைப் பெற்று கனிமொழி கலைஞரிடம் வழங்கியதும் அரங்கம் சிரிப்பில் நிறைந்தது.

அசோகமித்ரன், ஞானக்கூத்தன், இன்குலாப், கலாப்ரியா பேசிய பிறகு பேசிய அப்துல் ரகுமான் மேடையில் அமர்ந்திருந்த வினோதமான கூட்டணியைச் சுட்டிக் காட்டி, நவீன இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளை அங்கீகரிப்பதில்லை என்பதைச் சொல்லி ஆவேசமாகக் கண்டனக்குரல் எழுப்பினார்.

கலைஞர் பேச, விழா முடிந்தது.

6-10-03 அன்று ஜெயமோகனின் எட்டுநூல்கள் தமிழினி சார்பாக வெளியிடப்பட்டன. நான் அரங்கில் நுழைந்தபோது அசொகமித்ரன் பேசிவிட்டு அமர்ந்தார். அதற்குமுன்னரே நூல் வெளியிடப்பட்டு, சோதிப்பிரகாசம் பேசியிருக்கிறார். பலத்த கையொலி பார்வையாளர்களால் எழுப்பப்பட ,ஒருவாறாய் முடித்திருக்கிறார்.

கந்தர்வன் ‘இலக்கிய முன்னோடிகள் ‘ குறித்த புத்தகங்கள் மீதான முழு ஆய்வுரையாக ஒரு கட்டுரையை வாசித்தார்.

சிரமப்பட்டு தயாரித்த அக்கட்டுரை மிகவும் நேர்த்தியாகவும், உடன்படுபவைக்கும் முரண்படுபவைக்கும் சரியான காரணங்களோடும் அமைந்திருந்தது. விழாவின் முக்கியமான பகுதியாக அதைச்சொல்லலாம்.

தொடர்ந்த ஜெயகாந்தன், தனக்குப்பின் எழுத வந்தவர்களில் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் ஜெயமோகன் எனவும், தனக்கு ஆசான் எனவும் குறிப்பிட்டார். ‘நான் எழுதுவதை நிறுத்தியவுடன் இவருக்கு (ஜெயமோகனுக்கு) எழுத்து பீறிட்டு வருகிறது. இரண்டுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதாக உணர்கிறேன் ‘ என்று குறிப்பிட்ட போது, அவர் விட்டு விலகும் மன்னனாகவும் ஜெயமோகன் பட்டம் சூடும் இளவரசனாகவும் காட்சி தந்தனர். (இந்த காட்சியமைப்பிற்கு ஜெயமோகன் பொறுப்பேற்க முடியாது தான்) .

இறுதியாக ஜெயமோகன் ஏற்புரையாற்றினார்.பலவிஷயங்களைப் பேசி வந்தவர்,திடாரென கடைசிப்பகுதியில் தொண்டை கம்ம ‘சொல்லலாமா. வேண்டாமா ‘ என்னும் தடுமாற்றத்தோடு, சொல்ல முடிவெடுத்து இளையபாரதியின் நூல் வெளியீட்டு விழா குறித்துப் பேசலானார். அந்த விழாவில் நடந்தவைகளால் இரவெல்லாம் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்ததாகவும், அப்போதுகூட அரங்கம் நிறைந்திருந்ததாலேதான் பேச முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

நவீன இலக்கியவாதிகளான, அவரால் பெரிதும் போற்றப்படுகின்ற கலாப்ரியா,கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்(அசோகமித்ரன் விலக்கு) ஆகியோர் சேராத இடந்தன்னில் சேர்ந்து விட்டதால் ஏற்பட்டிருந்த பெருங்கவலையை அவரது பேச்சு உணர்த்தியது. ஞானக்கூத்தன் கலைஞரின் கைப்பற்றி புனிதமடைந்ததாகக் குறிப்பிட்டு, ‘ஞானக்கூத்தனா இப்படி ‘ என்ற அங்கலாய்ப்பு அரங்கத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது.

கொஞ்சம் இளையபாரதியின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்வோம்.

ஞானக்கூத்தன் பேச வந்தவுடன், கனிமொழி தனது தந்தைக்கு ஓய்வு தேவை எனச் சொன்னதாகவும், ஆகவே அதிக நேரம் பேசப்போவதில்லை எனக்கூறித் தொடங்கினார்.

‘தில்லியில் நடந்த ஒரு குழுக்கூட்டதில் கலந்து கொள்ள தென்னிந்திய கவிஞர்களின் பிரதிநிதியாய் என்னை அழைத்திருந்த போது, (பிரதமர் வாஜ்பாய் அக்குழுவின் தலைவர்) நானும் பிரதமர் வாஜ்பாயும் ஒரு வாயிலின் வழியே ஒரே சமயத்தில் வர நேர்த்தது. அப்போது நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தான் சந்திக்கமுடிந்தது என அவருக்குக் கைகொடுத்தேன். அதற்கு அவர் ‘ Is it so ? ‘ என்றார் சிரித்தபடி. இங்கே வந்தவுடன் கலைஞரிடம் கைகொடுத்து நான் ஞானக்கூத்தன் என்றேன். அப்போது வாஜ்பேயிடம் கைகொடுத்தபோது ஏற்பட்ட உணர்வே எனக்கு ஏற்பட்டது ‘.

பிரதமரோடு ஏற்பட்ட சந்திப்பை ஒப்பிட்டவுடன் மகிழ்ச்சியடைந்த பார்வையாளர்கள் கைதட்டினார்கள். இதைத் தான் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஒருவேளை ஞானக்கூத்தன் சந்தோஷ வெளிப்பாடாகவே அதை சுட்டியிருந்தாலும், ஐம்பது ஆண்டுகளாக கேள்விப்பட்டு இன்று சந்திக்க முடிந்தது என்று பிரதமரிடம் கூறியதை கலைஞரிடம் கைகொடுப்பதை ஒப்பிட்டு பேசியதில் இருந்த சூட்சமம் நுட்பமானது. இரண்டும் ஒன்றல்ல. இத்தனை ஆண்டுகள் ஒரே மொழியில் ஒரே காலத்தில் இயங்கி வந்த போதும் விலகி நிற்பதை உறுதிப்படுத்தும் சூட்சமம். தென்னிந்திய கவிஞர்கள் சார்பாக செல்பவர், பல ஆண்டுகள் முதல்வராய் இருந்தவரிடம் ‘நான் ஞானக்கூத்தன் ‘ எனக் கைகொடுப்பதும் அதை அரங்கில் சொல்வதும் எதனைக் குறிக்கிறது ? இதனைச் சரியான புள்ளியில் இருந்து அப்துல் ரகுமான் உள்வாங்கிக் கொண்டதால் தான் அத்தகைய காரமான பேச்சு வெளிப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் ஜெயமோகனோ முழுமையாக அவதானிக்கத் தவறி விட்டு கைதட்டலை கணக்கில் கொண்டு பேசுவது போல் தோன்றுகிறது. ஞானக்கூத்தன் பேச்சு எனக்கு உவப்பில்லையாயினும் அவர் தன்னளவில் திட்டமிட்டு நடந்து கொண்டார் என்பதையே உரையும், உடல் மொழியும் உணர்த்தின. ஆனால் ஜெயமோகன் இவ்விதமான சூட்சமங்களை அவதானிக்கும் அவசியமின்றியோ, ஞானக்கூத்தன் கலைஞர் உள்ள மேடையில் இப்படித் தான் இருக்கமுடியுமென்னும் முன்முடிவின் காரணமாகவோ கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்.

மற்றபடி கலாப்ரியா சிறுவயதில் கலைஞரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டதாய் (பழைய கதை) சொன்னதற்கும், கல்யாண்ஜி கலைஞரை ‘இருபது வயது துணிவு, எண்பது வயது கனிவு ‘ என்றதற்கும் ஜெயமோகன் இவ்வளவு அகெளரவப் படுவது வேடிக்கை. மொத்தத்தில் அரசியலில் இலக்கியமாய் ஒரு நிகழ்ச்சியும், இலக்கியத்தில் அரசியலாய் ஒரு நிகழ்ச்சியும் கோலாகலமாய் நடந்தேறின.

—தமிழ்மணவாளன்

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

author

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

Similar Posts