This entry is in the series 20040827_Issue

ஸ்ரீமங்கை


இந்நடைபாதையில்
கூவிக்க்கூவி கண்ணாடிகள்
விற்பவனே!

சிரிக்காதே..
நாங்கள் இப்படித்தான்.
ரசம் தேய்ந்த மூலைகளில்
இறந்தகால பிம்பங்களைத்
தேடும் எம்கண்கள்.

கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க
சட்டங்களைத் துடைத்து வைப்போம்
தன்முகம் கண்டதாக
உண்மை எவரும் இதுவரை
உரைத்ததில்லை.

இருப்பினும் கண்ணாடிகளின் மேல்
எமது மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
ஒருமுறையேனும் உன் கோணல் கண்ணாடியில்
விகாரமாக மற்றவர் முகம் கண்டு சிரிக்கும் ஆசையில்
உன்கடையருகே எத்தனை கூட்டம் ?

பண்டமாற்றாக கண்களையே
கேட்கும் உன் விகார வியாபார
தந்திரங்களில் அதிர்கிறேன்.

அன்றைய வியாபாரம் முடிந்ததும்
உன்னுள்ளே நீ உரக்கப் பேசிய பேச்சென்ன ?

இருட்டியபின் முகம்பார்க்க எத்தனிக்கும்
எம் முயற்சிகளை எள்ளிநகையாடினாய்.
காலக்காற்ரில் முகத்தில் படிந்த புழுதியை
கண்ணாடியின் அழுக்கென
குறைசொல்கிறோமென
நீ கேலிசெய்தது நெருடுகிறது
இனியும் என் வாசலில்
கண்ணாடி விற்கக் கூவாதே.

உன் கூவல்களில் நிரம்பி வழியும்
என் செவிகளையும் எடுத்துச்செல்
குருடனாக மட்டுமல்ல
செவிடனாகவும் இருப்பதில்
எனக்கு ஒரு கவலையும் இல்லை.

அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

20040827_Issue

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்