ம.ந.ராமசாமி
—-
கைதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கைப்பந்து கூடைப்பந்து கபடி என்பதான விளையாட்டுக்கள். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில கைதிகள். சிலர் நின்று கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள். உட்கார்ந்து கால்களை நீட்டி சிலர் ஓய்வு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அது கைதிகளுக்கான தினசரி ‘சுதந்திர ‘ நேரம்!
பூவரச மரத்தடி மேடையில் மாரிமுத்து உட்கார்ந்து, நடப்பன அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஆட்டம் பாட்டம் எதிலும் கலந்து கொள்வதில்லை. நுால்நிலையம் சென்று சஞ்சிகைகளைப் புரட்டுவான். ஏக்கம். சோர்வு… விளையாடினால் லொங்கு லொங்கு என்று ஆடுகிறதை உணர்கிறான். நாற்காலியில் அமர்ந்து பத்திரிகைகளை வாசிக்கையில் கல்கட்டிய புடலங்காயாகத் தொங்குகிறது.
அப்படி ஒன்றும் ஓதமோ வேறு உபாதைகளோ இல்லை. சிறுவயது முதல்கொண்டு காலகாலமாக அவன் கட்டிப் பழகிய அரைக்கயிறையும் கோவணத்தையும் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டு விட்டார்கள்.
சிறைவாசத்தின் போது கோவணம் கட்டக்கூடாது என்று சட்டமிருக்கிறதோ ? அதிகாரிகள் முறைத்தார்களே தவிர அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கே தெரியாதோ என்னவோ.
ஒண்ணாப்பு காலத்தில் இருந்தே கோவணப் பழக்கம். நான்கு ஐந்து வயசுச் சிறுவர் சிறுமிகள்தானே… வேட்டி, பித்தான் இல்லாத அரைக்கால்ச் சட்டை என சிறுவர்கள். ஜட்டி போடாத சிறுமிகள். உட்கார்ந்திருக்கையில் கால் மாறும்போது எழும்போது சிறப்பு தரிசனம் சர்வ சாதாரணம். எப்போதாவது எதிரில் இருக்கும் சிறுவன் வாத்தியார் காதுபட ‘ ‘மாரிமுத்து வெளிச்சம் காட்டறான் சார் ‘ ‘ என்பான்.
ஒண்ணாப்பு சார் கண்டித்துச் சொல்லிவிட்டார்- ‘ ‘ஆம்பிளைப் பசங்க எல்லாரும் கோவணம் கட்டிவர வேண்டும்… ‘ ‘ பொம்பளைப் பிள்ளைகளைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
கோவணங் கட்டிவராத பசங்களிடம் தவளையை இடுப்பில் கட்டிவிடப் போவதாயும் அவர் மிரட்டினார். மாரிமுத்து பயந்து விட்டான். ஏற்கனவே அவனுக்குத் தவளைபற்றித் தடுமாற்றம் உண்டு. வாத்தியார் ‘ ‘த… வ… ளை, தவளை ‘ ‘ என்று சொல்லிக் கொடுத்தால், ‘ ‘த… வ… ளை, தவக்களை ‘ ‘ என்றே சொல்ல வந்தது. தாவிக்குதிக்கும் தவக்களை எப்படி தவளை ஆகும் என்பதான சந்தேகம். இவனுடைய தோழன் சுந்தரமூர்த்தி வேறுமாதிரி. ‘ ‘க… ல்… ச… ட்… டி, சக்கட்டி ‘ ‘ என்பான்.
மாரிமுத்து கோவணங் கட்டத் துவங்கினான். பழைய தனது சிவப்புச்சேலைத் துணியைச் சீராகக் கிழித்து அருணாக்கயிறில் செருகிக் கட்டிவிட்டாள் தாய். மணி அடிக்குமுன் பசங்கள் தத்தமது கோவணங்களைக் காட்டிப் பெருமைப் பட்டனர். ஒருத்தன்கூட சேலைக் கோவணம், வண்ணக் கோவணம் கட்டவில்லை. அவனுக்கு அதில் சிறு பெருமை. உற்சாக மூக்குறிஞ்சல்!
இப்படியாய் அவன் கோவணத்துக்கு எனத் தனி புராணம் உண்டு. இப்போது வயது இருபத்தி ஐந்து. கோவணப் பழக்கம் இப்பவும் தொடர்கிறது. கோவணத்தின் நீள அகலப் பரிமாணங்கள் இப்போது கூடியிருக்கின்றன!
அவனுக்கு படிப்பு வரவில்லை. ‘காலில் முள் குத்திடிச்சு ‘ சமாளிப்பு போல! உற்ற கலைமடந்தை இவனை ஏனோ அணுக மறுத்தாள். ஒவ்வொரு வகுப்பிலும் பாசஞ்சர் ரயில் போல அவன் கிடந்து, மீண்டும் கிளம்ப, பதினான்காம் வயதில் அஞ்சாம் வகுப்பு. படித்தது போதும் என்று நின்று விட்டான்.
கோவணப் பழக்கம் நிற்கவில்லை.
—-
நகர போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் அவனுடைய தாய் பணிபுரிந்தாள். அவருடைய பழைய நைந்த சீருடைகளைப் பெற்று வந்தாள். சற்று பெரிய சீருடைகள். கஞ்சிபோட்டு விறைத்த ஜோரில் ஒரு படகுத்தோற்றம் தரும். அவை அவனுக்கு ஒரு போலீஸ்-மிடுக்கு கொடுத்தன.
போலீஸ் – குற்றம் – என்பதான இரு சொல்களும் ரயில்த் தண்டவாளம் போல இணைபிரியாதவை. போலீஸ் உடுப்பை அணிந்த கணத்தில் அவனுடைய மனதுள் குற்றம் புரிவதற்கான திட்டம் உருவாகியது.
சுற்று வட்டாரத்தில் மாலை ஆறு ஆறரைக்குமேலாக சூரியன் மேற்கு திக்கில் மறையக் காத்திருந்தவனாக அவன் வெளிப்பட்டான்! கிராமப்புறச் சாலைகளில் போலீஸ் உடுப்புடன்… பாதங்களில் செருப்புதான்! – அந்த வழி போகும் மாட்டு வண்டிகளை மறித்து நிறுத்தி விசாரித்தான். வண்டிக்காரர்களை மிரட்டினான். ரெண்டுரூபாய் அஞ்சுரூபாய் என்று தந்து சென்றார்கள்… மகன் ஏதோ பாரமூட்டைகள் சுமந்து, சில்லரை வேலைகள் செய்து சம்பாதித்து வருவதாக அவன் தாய் நம்பினாள்.
மாரிமுத்து அகப்பட்டுக் கொண்டான். அந்த வழியே நிஜ போலீஸ்காரன் வந்து விட்டதே காரணம். எனினும் இதில் முக்கிய விஷயம்… ரிமாண்டின்போதே ஆ. அவன் கோமணத்தைப் போலீஸார் பிடுங்கிக் கொண்டார்கள். கேட்டுப் பார்த்தான். கெஞ்சிப் பார்த்தான். ‘ ‘ஐயா கனவான்களே… (ஒவ்வொருத்தனும் அத்தனை கனம் இருந்தான்) கோவணம் இல்லாமல் என்னால் இருக்க முடியாதய்யா. என் உசிரு கோவணத்தில்தான் இருக்கு… ராவுல அதில்லாம எனக்குத் துாக்கம் வராதய்யா… ‘ ‘ பிரயோஜனமில்லை. சீருடை தந்த அந்த போலீஸ்துறை அவன் கோவணத்தைப் பறித்துக் கொண்டது.
ஓராண்டு சிறைத் தண்டனை. அதைப் பற்றியென்ன… பத்தாண்டு தண்டனைக்கான மனப் பக்குவம் அவனிடம் இருந்தது. பத்தாண்டு வழிப்பறியான கொள்ளை செய்தவன் அல்லவா ?… ஆனால் இந்தக் கோவணப்பறிப்பு தண்டனையைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதிகளில் எவராவது இதற்குமுன் இப்படிக் கோவணப் பறிமுதலுக்கு ஆளாகி யிருப்பார்களோ என எண்ணிப் பார்த்தான். இருக்கலாம். அப்படி யாராவது இருந்தால் அவரிடம் ‘அவரது ‘ அனுபவம் பற்றி பேட்டி காணலாம். எனினும் எப்படிக் கேட்பது. அந்த நபரை எப்படிக் கண்டுபிடிப்பது. ‘ஐயா நீங்க கோமண ஜாதியா ? ‘ என்று ஒவ்வொரு கைதியிடமும் விசாரிக்க முடியுமா என்ன ? பாத்துக்க, கட்டியிருந்த உடம்பா இது – என்று அவன் அவுத்துக் காட்டிட்டா ?
இன்னல்கள் இடர்ப்பாடுகள் உலகில் இருக்கதான் செய்கின்றன. இனிமை, இன்பம் என்பன இருப்பது போல. கோவணம் கட்டுவது என்பது இன்பம். அதைத் துறப்பது என்பது துன்பம். கொடுமை. தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். வேறென்ன செய்வது ? கதற முடியுமா ? கதறியும் அவர்கள் இரக்கப்பட வில்லையே.
துடைப்பதற்கு துாய்மை செய்வதற்கு என்று நீலநிறத் துணியைக் கிழித்துக் கொடுக்கிறார்கள். அதன் பகுதியைக் கிழித்து அவன் கோவணம் கட்டிக் கொள்ள முடியும். ஆனால் பாவிகள், அருநாக் கவுறையும் அல்லவா அறுத்துச் சேர்த்து குப்பையில் வீசி விட்டார்கள். உடலில் இருந்து ஓர் உறுப்பே பிய்ந்ததாய் துக்கித்து அவன் குப்பைத் தொட்டியைப் பார்த்தான் அப்போது.
அந்த நீலத் துணியைக் கிழித்துத் திரித்து அரைஞாணில் கயிறென அவன் கட்டிக்கொள்ள முடியும். சுமாரான அகலம்விட்டுக் கிழிக்க வேண்டும். அரைஞாணுக்கு, கோவணத்துக்கு… என்று இருபகுதிகள். கற்பனையில் கிழித்து, அணிவதாக எண்ணும்போதே உடல் பேரானந்தம் கொள்கிறது. ஆனால் கண்டு பிடித்து விடுவார்கள். சக கைதிகள் வத்தி வைத்து விடுவான்கள். வத்தி வைத்து தாங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம் அல்லவா ? கைதிகளில் எவனும் நல்லவன் அல்லன். அவனும்தான். பிடிபட்டால் அடி! உதை!
காலையில் குரோடன்ஸ் செடிகளைச் சுற்றி மண்பறித்து வட்டப் பாத்திகட்டி நீர் தேங்கச் செய்வதான பணி அவனுக்குத் தரப் பட்டிருந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மேகங்கள் திரண்டு எங்கோ நகர்ந்தவண்ணம் இருந்தன. நேற்றே நுாலகத்தில் செய்தி வாசித்திருந்தான். புயல்சின்னம், என்று பெரிய எழுத்து பயமுறுத்தல். ஏதோ அரசியல்கட்சியின் தேர்தல் சின்னம் என்பதாகக்கூட மனதில் பட்டது. புயலைத் தேர்தல் சின்னமாகக் கொள்ள முடியுமா!
உயரமான சிறைமதில் அருகே அவன் வேலை செய்து கொண்டிருந்தான். அந்தப் பக்கமிருந்து சினிமாப் பாட்டு கேட்டது. ‘ ‘நான்… கொம்பு முளைச்சவண்டா… ‘ ‘ என்ன பாட்டு இது ? கொம்பு முளைத்த கதாநாயகன்! சிரிப்பு வந்தது. சிறைபோன்ற இடங்களில் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள, தண்டனை நாள்களைத் தள்ள, இப்படிச் சிரிப்புக் கற்பனைகள் வேண்டியிருக்கின்றன.
‘ ‘அண்ணே, என்ன பாட்டும் கூத்துமா இருக்குது அங்கே ? ‘ ‘
அவனை மேற்பார்வை பார்க்க வந்த காவலாள் ‘ ‘கட்சிக் கூட்டம்டா. கொடி ஏத்த அமைச்சர் வராராம். நீ வேலையை கவனி… ‘ ‘ என்றபடி தாண்டிச் சென்றார்.
வேலையில் மனம் லயிப்பது நேரத்தைத் தள்ள சிறப்பாக உதவுவதாகத்தான் இருக்கிறது.
பாட்டு பாதியில் நின்றது. வாழ்க! – கோஷம். அமைச்சர் வந்திருக்க வேண்டும். காரில் வந்திருப்பார். பின்னே நடந்தா வருவார் ? அவரைத் தோள்மீது துாக்காத குறையாகத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். சிமிண்ட் வட்ட கொடிமர பீடம். கொடிக்கம்பம் தெரிகிறதா என்று மதில்மேல் பார்த்தான். தெரியவில்லை. கற்பனையில் கம்பத்தின் அடிக்கம்பத்தில் பூ-முடிந்து சுருட்டிக் கட்டிய கட்சிக் கொடி.
கோவணச் சுருட்டல் போல!
அமைச்சர் சென்று கயிறை அவிழ்த்து இழுக்கிறார். உயரே கம்பத்தின் உச்சி சகடை சுழல கொத்துமலர்களுடன் பந்துபோல கொடி மேலேறுகிறது.
வாழ்க கோஷம்.
சட்டென்று ஒருவித நிசப்தம். ஏன் ? என்ன ஆயிற்று ? வேலையை நிறுத்திவிட்டு மாரிமுத்து அண்ணாந்து பார்த்தான். அப்போது நிகழ்ந்தது அது. வண்ணத் துணி ஒன்று காற்றலைகள்மீது தவழ்ந்து வந்தது. கொடி! கொடிதான் அது. ஏற்றியபோது கம்பத்தின் உச்சியில் அது அவிழாமல் சண்டித்தனம் செய்திருக்க வேண்டும். ஆத்திரம் கொண்ட அவசர அமைச்சர் சுண்டிச் சுண்டி கயிறை இழுத்திருக்கிறார். கயிறு அறுந்திருக்கிறது. கொடி விடுபட்டிருக்கிறது.
ஆகா! வாய்ப்பு! கோவணத்துக்கு ஆச்சு. ஒன்று என்ன, இரண்டு கோவணங்களுக்கு ஆகும். தரையில் வந்து விழுந்து கிடந்த கொடியைப் பார்த்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். துாரத்தில் அவரவர் வேலையில் கவனத்தில் இருந்தவர் யாரும் இவனையோ தரையில் வந்து விழுந்த கொடியையோ கவனிக்கவில்லை. அதிர்ஷ்டம் என்பது இதுதானா ? கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பார்கள். இப்போது அவனது அதிர்ஷ்டம் வானில் இருந்து இறங்கி யிருக்கிறது. கிழித்தால் இரண்டு கோவணங்கள்! துவைத்து, மாற்றிக் கட்டலாம்! எடுத்துச் சுருட்டினான். இடுப்பில் செருகிக் கொண்டபோது மணத்தது!
—-
சிறை என்பதன் கோட்பாடே மாரிமுத்துவுக்கு மாறியது. சிறையும் சுவர்க்கமாக இருக்க முடியும். எதையும் சுவர்க்கம் நரகம் எனக் காண்பது மனிதர் கையில் இருக்கிறது! தத்துவம் பேசியது மனது! இதுநாள்வரை துாங்காத துாக்கத்தை யெல்லாம் சேர்த்துத் துாங்கினான். உடலில் தனி சுறுசுறுப்பு. சக கைதிகளும் காவலர்களும் சிறை அதிகாரிகளும் தேவ தேவதைகளாகத் தெரிந்தனர். சிடுசிடுக்கும் காலவர் தங்கசாமி அவனுடன் சிரித்துப் பேசுகிறார். கோவணத்தின் மகிமை!
சிறைத்துறை பெரிய அதிகாரியாம். பார்வையிட வந்திருந்தார். சுற்றிவந்து ஒரு தோரணையுடன் மேற்பார்வை யிட்டார் அவர்.
‘ ‘என்ன எப்பிடி இருக்கு இங்க நிலவரம் எல்லாம் ‘ ‘ என அவனிடம் திடாரென நின்று விசாரித்தார். ‘ ‘அம்சமா இருக்குங்க. சந்தோசமா இருக்கு ‘ ‘ என்று தலையைச் சொறிந்தான் மாரிமுத்து. அதிகாரி இவனை விநோதப் பிறவி என ஒரு பார்வை பார்த்தபடி நகர்ந்தார்.
திடாரென்று சிறையில் பரபரப்பு தட்டியது. அதிகாரியின் மோதிரத்தைக் காணவில்லையாம். காவலர்கள் பதறி சிறை முழுதும் சல்லடை கொண்டு தேடினார்கள். கிடைக்கவில்லை.
கைதிகளில் எவனாவது எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம் என அவர்கள் முடிவுசெய்தார்கள். வரிசையாகக் கைதிகளை நிற்க வைத்து, உள்ளறைக்கு வரவழைத்து விசாரித்தார்கள்.
அவனுடைய முறை வந்தது. அவன் பயந்தபடியே நடந்தது அது.
‘ ‘ஏண்டா நீ எடுத்தியா ? ‘ ‘
‘ ‘இல்லீங்க ‘ ‘
‘ ‘நிஜாரை அவு… ‘ ‘
‘ ‘ஐய வேணாங்க வேணாங்க ‘ ‘ என்றான் பதறி.
‘ ‘அவுடா! ‘ ‘ சுருக்கை நீக்கி அவிழ்த்து விட்டார் அருகில் நின்ற காவலாளி. வண்ணக் கோவணம் கட்டி யிருந்தான்! ‘ ‘கோவணம் ஏதுடா ? ‘ ‘
‘ ‘கிடைச்சது ‘ ‘
‘கொடிமாதிரி இல்லே இருக்குது ? ‘ ‘
‘ ‘கொடிதாங்க ‘ ‘
‘ ‘வானத்தில் இருந்து உனக்குன்னு விழுந்ததாக்கும்… ‘ ‘
‘ ‘ஆமங்க ‘ ‘ என்றான் அப்பாவியாய்.
‘ ‘கிருத்திரியமாவா பேசறே ? ‘ ‘ பிடறியில் விழுந்தது அடி. ‘ ‘சிறையிலே கோவணங் கட்டக் கூடாது தெரியுமில்லே ? ‘ ‘
‘ ‘தெரியும் ‘ ‘
‘ ‘ஏன் கட்டினே ? அவுடா! ‘ ‘
‘ ‘ஐய வேணாங்க… ‘ ‘ கால்களைச் சேர்த்துக் கொண்டான். ‘ ‘அவுடான்னா ?… ‘ ‘ என்று அடுத்த அடி விழுந்தது. ‘ ‘மோதிரத்தைக் கோவணத்துக்குள்ள வெச்சிருக்கியா ? ‘ ‘ மேலும் அடிகள்.
அவிழ்த்து உருவினார் காவலாளி. குதிக்கச் சொன்னார்கள். குனியச் சொல்லி பின்புறம் சோதித்தார்கள். தட்டிப் பார்த்தார்கள். குடைந்து பார்த்தார்கள். இல்லை.
—-
ம.ந.ராமசாமி 3 முருகன் காலனி விரிவு டிவியெஸ்நகர் கோயம்புத்துார் 641025 தொலைபேசி 0422 2400341
nanri – sitrithazh CHIRAKU
—-
எழுத்தாளரின் அனுமதி பெற்று தட்டச்சு செய்து அனுப்பியவர் எஸ். ஷங்கரநாராயணன் sankarfam@vsnl.net
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்