அது மறக்க முடியாத துயரம்..

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


அஸ்ஸலாமு அலைக்கும்..

நான் பேசுறது எல்லாருக்கும் கேட்குதா ?.. கேட்டுச்சுன்னா அது பெரிய ஆச்சரியம் தான்.. அப்படி உண்மையிலேயே கேக்குறதுல எந்த பிரச்சினையும் இல்லன்னா எனக்காக காத கொடுத்து கேளுங்க.. நான் வாய கொடுத்து அல்ல என் உயிரையே கொடுத்து சொல்றேன்..

எங்க வாப்பா பேரு சுபஹான்.. அஹ இப்ப என்ன செஞ்சுகுட்டு இருக்காஹா தெரியுமா ?..

வீட்டுக்கும் வாசலுக்குமா (உ)லாத்திட்டு இருக்காஹா..

காரணம்.. ?

என் தங்கச்சி ஷமீன் நாகப்பட்னத்துக்கு பரீட்சை எழுத போயிருக்கா.. ரொம்ப நேரமாகியும் திரும்ப வரவேயில்லை.. என்ன ஆச்சு ? ஏது ஆச்சுன்னு தெரியலை.. ? எங்க வாப்பாவால ஒரு எடத்துல இருக்க முடியல.. போட்டு ஒலண்டுட்டு வர்ராஹா..

எங்க ம்மா பேரு ஆசியா. எங்க வாபாவ விட எங்க ம்மா தான் தைரியசாலி. எங்க குடும்பத்துல நானும் என் தங்கச்சி ஷமீனும் மட்டும் தான்.

தோலுக்கு மேல வளர்ந்துட்டா தோழன்ங்கறது எல்லாம் எங்க வூட்ல கெடயாதுங்க. நான் எங்க வாப்பாவ விட ஒயரம் தான்னாலும் எனக்கு அஹ வாப்பா தான்.

நான் எங்க வாப்பா முன்னாடி நிண்டு அஹ மொகத்த பாத்து கூட பேசுனது கெடையாது. ஆனா இந்த ஷமீன் இருக்காளே.. அவ வாப்பா முன்னாடி பாட்டுலாம் பாடுவா.. ஹனிபா பாட்டு.. ஹிந்தி பாட்டு.. இப்படி.. எவ்வளவு தைரியம் பாருங்க..

‘ஏய்.. ஷமீனு.. எப்படிறீ வாப்பா முன்னாடி பாட்டுல்லாம் பாடுறே.. ? ‘ நான் ஆச்சரியமாவும் சில சமயம் கோவமாவும் கேப்பேன்..

அவ, ‘வாப்பாவே ஒண்ணும் சொல்லலே.. ‘ ன்னு ஒடனே ஒரு பதில தயாரா வச்சிருப்பா.

நான் எங்க ம்மா கிட்டே தான் எதாயிருந்தாலும் பேசுவேன். நா ம்மா புள்ளை. ஷமீன் வாப்பா புள்ளை.

ஷமீன் தான் வாப்பாக்கு பேப்பர்லாம் படிச்சு காட்டுவா. வாப்பாட சட்டைய இஸ்திரி போட்டு கொடுப்பா.. வாப்பா எதயாவது நெனச்சாலே ‘இதயா வாப்பா தேடுனீங்கன்னு ‘ எடுத்து வந்து கொடுப்பா..

ஷமீன் படிப்புல புலி. பத்தாவதுல கூட ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருந்தா..

எங்க ஊர்ல அதாவது நாகூர்ல பன்னெண்டாவது படிச்சா முழாண்டு பரீட்சை நாகப்பட்டினம் போய் தான் எழுதனும்.

ஷமீனுக்கு படிப்பா இருந்தாலும் சரி.. இல்ல எதுவா இருந்தாலும் சரி.. எங்க வாப்பா என்ன சொல்றாஹலோ அத தான் கேப்பா..

அவ படிக்கிறதே எங்க வாப்பா புரியப்படுறாஹான்னு தான்…

இந்த பாருங்க.. உங்க கிட்ட பேச ஆரம்பிச்சு இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.. அவ இன்னும் வூடு வந்து சேர்ந்த பாடில்ல..

ம்ஹூம்.. எங்க வாப்பா பொறுப்பாஹலா.. ? சட்டைய போட்டுகிட்டு கெளம்பிட்டாஹா..

எங்க ம்மா, ‘எங்க.. ? ‘ ன்னு கேட்டதுக்கு

‘இந்த வர்ரேன்.. பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போய் பார்த்துட்டு.. ‘ ன்னு சொல்லிட்டு செருப்ப போட்டாஹா..

‘இப்ப வந்துடுவாம்மா.. எங்கே போயிடப்போறா.. அல்லா.. அல்லா.. எஹல்ட பேச்ச பேசறீங்களே.. ‘ ன்னு அலுத்துகுட்டாஹா எங்க ம்மா..

எங்க ம்மா அப்படி சொன்னாலும் ஷமீன் இன்னும் வரலைங்கற பயம் அஹலுக்கும் இருக்க தான் செய்யுது..

ஏன் இன்னும் வரல.. எப்பவும் இந்நேரத்துக்கு எல்லாம் வீட்ல இருப்பாலேன்னு அஹ தனக்குள்ளே சொல்லிகிட்டாஹா..

எங்க வாப்பா கெளம்பி போன அஞ்சாவது நிமிஷத்துல ஷமீன் வந்து கதவ தட்டுனா, ‘வாப்பா.. வாப்பா.. ‘ ன்னு சொல்லிகிட்டே..

எங்க ம்மா, ‘இந்தல வர்ரேன்.. ‘ ன்னு ஓடி வந்து கதவ தொறந்தாஹா..

‘அஸ்ஸலாமு அலைக்கும்.. ம்மா.. வாப்பா எங்கே ? ‘ ன்னு வாப்பாவ தான் மொதல்ல கேட்டா..

‘அலைக்கும் ஸலாம்.. வாப்பா ஒண்ணய தேடிகிட்டு தானே வந்தாஹா புள்ள.. வழியில பார்க்கல.. ‘

‘என்னய தேடிகிட்டா.. ஏன்.. ? ‘

‘அம்.. புள்ளய காணோம்னு பதறி போய்.. தேடிட்டு பஸ்ஸி ஸ்டாண்டு வரைக்கும் போய் பார்த்துட்டு வர்ரேன்னு போயிருக்காஹா.. இப்ப வந்துடுவாஹா.. நீ சாப்ட வாயேன்.. ‘ ன்னு சொன்னாஹா..

‘இரும்மா.. இப்ப தானே வந்தேன்.. வாப்பா வந்துடட்டும்.. அதுக்கெடைல நான் லொஹர் தொழுதுட்டு வந்துடறேன் ‘ ன்னு சொல்லிட்டு கொள்ளைக்கு போய் ஒலு(அங்க சுத்தி) செஞ்சுட்டு வந்து தொழுவுற பாய விரிச்சு அப்ப தான் தக்பீர் கட்டுனா..

‘அல்லாஹு அக்பர்.. ‘

வாப்பா வந்துட்டாஹா.. ‘வந்துட்டாளா புள்ள.. ‘ ன்னு கேட்டுகுட்டே..

‘ம்.. வந்துட்டா.. உங்க புள்ள.. இப்ப தொழுவுறா.. ‘ ன்னாஹா எங்க ம்மா சிரிச்சுக் கிட்டே…

எங்க வாப்பா வந்து ஷமீன் தொழுவுறதையே பார்த்துகிட்டு இருந்தாஹா..

அப்புறம் அவ தொழுவுற பாய்க்கு பக்கத்துல அவ பின்னாடி போய் உக்காந்துட்டாஹா..

ஷமீன் தொழுது முடிச்சு ஸலாம் கொடுத்துட்டு ரெண்டு கையையும் ஏந்தி வச்சுகிட்டு என்ன நெனைச்சாலோ ஏது நெனைச்சாலோ தெரியல திடார்ன்னு பொங்கி பொங்கி அழுவ(அழ) ஆரம்பிச்சுட்டா..

அவ கண்ணுல அழுவய பார்த்த எங்க வாப்பாக்கு கண்ணுலயும் தண்ணீ வந்துடுச்சு..

ஷமீன் திரும்பி பார்த்தா..

எங்க வாப்பா அழுதுகிட்டே.., ‘ஏம்மா.. ஏன் அழுவுறே ? ‘.. ன்னு கேட்டாஹா

‘வாப்பா.. நானா(என்னய தான் சொல்றா) மாதிரி ஏதாவது ஆயிடப் போவுதுன்னு தானே வாப்பா பயந்தீங்க.. ‘ ன்னு கேட்டா

வாப்பா ஒண்ணுமே பேசல.. அழுதுகிட்டே எங்க ம்மாவ திரும்பி பார்த்தாஹா.. ம்மாக்கு என் ஞாபகம் வந்துடுச்சு.. எங்க ம்மா திரும்பி கூடத்துல இருந்த அரை வாசல்ல மாட்டியிருந்த போட்டோவ பாத்தாஹா..

போட்டோல நான் தான்.. சின்ன வயசுல எடுத்த போட்டோ.. ஒரு தடவ ஹந்திரில.. போட்டோ ஸ்டூடியோக்கு கூட்டிட்டு போய் என் தலைல அஜ்மீர் தொப்பிய போட்டு கையை ஏந்தி துவா கேக்குற மாதிரி எடுத்த போட்டோ..

அந்த போட்டோவ நா ரசிச்சத விட எங்க ம்மா தான் ரொம்ப ரசிச்சாஹா..

‘எவ்வளவு அழவா(அழகா) இருக்கான் பாருங்க.. மூக்கு மட்டும் பெருசா கொஞ்சம் ஒசந்தாப்ல இருந்துச்சுன்னா.. இன்னும் அழவா இருப்பான்.. ஏன் இப்ப மட்டும் என்னவாம்.. ‘ எங்க ம்மா அந்த போட்டோவ பார்த்து அடிக்கடி சொல்வாஹா..

‘சரி.. சாப்ட வாங்கள்வோ.. ‘ ம்மா தான் வாப்பாவயும் ஷமீனையும் எப்பவும் கவலைப் படாம வச்சுக்கிறது..

எங்க ம்மா மட்டும் இல்லைன்னா.. அல்லா காப்பாத்தணும்.. நெனச்சு பார்க்கவே பயமா திகிலா இருக்குது..

—-

வாசலில் இருந்து அழைப்பு மணி ஒலித்தது..

‘யாரு ? ‘ எங்க வாப்பா தான் கேட்டு கதவ தொறந்தாஹா..

வாசல்ல வாப்பாட கூட்டாளி யூசுஃப் அதாவது என் கூட்டாளி ஃபர்ஹாண்ட வாப்பா.. நானும் ஷமீனும் தோழாப்பான்னு தான் கூப்பிடுவோம்.

‘அடடே.. உள்ளே.. வாப்பா.. ‘

உள்ளே வந்ததும் எங்க ம்மா மறைவாக நின்று, ‘வாங்க.. நல்லா இருக்கீங்களா ?.. மர்யம்(தோழம்மா) நல்லா இருக்கா ?.. தாஹிரா(தோழாப்பா மகள்) நல்லாருக்காளா ? ஃபர்ஹான்டேந்து(தோழாப்பா மகன்) கடிதம்லாம் வந்துச்சா ?.. ‘ வழக்கமா கேக்க வேண்டியதை வரிசையா கேட்டாஹா..

தோழாப்பா எல்லாத்துக்கும், ‘எல்லாம் நல்லா ருக்காஹா.. ஃபர்ஹான் போன் போட்டு இருந்தாரு.. அது சம்மந்தமா தான் பேசிட்டு போலாம்னு வந்தேன்.. ‘ ன்னு சொன்னாஹா..

ஷமீன் அப்போது தான் வந்து, ‘வாங்க தோழாப்பா.. நல்லா இக்கிறீங்களா ? தோழம்மா நல்லா இக்கிறாஹலா ? தாஹிராவ கூட்டிட்டு வந்தா என்னா ? அவ வூட்டுக்கு வரவே இல்லையே.. ? ‘ ன்னு கேட்டா..

‘வருவாஹாம்மா.. நீ எப்படிம்மா இருக்கே.. பரீட்சைலாம் நல்லா எழுதியிருக்கியாம்மா ? ‘

‘அல்ஹம்துலில்லாஹ்.. நல்லா எழுதியிருக்கேன் தோழாப்பா.. நீங்க வாப்பாட்ட ஏதோ பேசணும்னு வந்திருக்கீங்க போலருக்கு.. நான் தேத்தணி போட்டு எடுத்துட்டு வந்துடறேன்.. ‘

‘முக்கியமான விஷயம் தான்.. அதுவும் ஒன் கல்யாணத்த பத்தி தான்ம்மா.. ஃபர்ஹான் போன் போட்டிருந்தார்.. வர்ர வராத்து பொறைல(ஷஃபான் என்ற அரேபிய மாதம்) ஊர் வர்ரார்.. நாலு மாசம் லீவாம்.. அப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு பேச தான் வந்தேன்.. நல்ல செய்தியா இருந்தா எனக்கு தேத்தணி சீனி கொஞ்சம் ஜாஸ்தியாவே போட்டு எடுத்துட்டு வந்துடும்மா.. ‘ ன்னு சொன்னாஹா

அதாவதுங்க இந்த சம்மந்தம் ஏற்கனவே பேசியது தான்.. எனக்கு தாஹிராவையும் ஃபர்ஹானுக்கு ஷமீனையும் நிகாஹ் செய்றதுன்னு பேசியிருந்தாஹா.. இப்ப எனக்கும் தாஹிராவுக்கும் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைங்கறதால எங்க வாப்பா தோழாப்பாட்ட ஷமீன் கல்யாணத்த பத்தி பேச ரொம்ப தயங்கிட்டே இருந்தாஹா..

ஆனா தோழாப்பா ரொம்ப நல்லஹ.. அஹாலாவே வந்து பேசிட்டதாலே..

எங்க வாப்பா ஷமீனிடம், ‘ம்மா.. தோழாப்பாக்கு தேத்தணி போட்டு கொண்ட்டு வாம்மா.. சீனி அவர் சொன்ன மாதிரி ஜாஸ்தியா போட்டு.. ‘ ன்னு சொன்னாஹா..

வேறென்ன..

வெட்கம் தான்.. ஷமீனுக்கு..

எங்க ம்மா அல்லாவுக்கு நன்றி சொல்ற மாதிரி கைய மேல தூக்கி காம்பிச்சு கண்ணுல ஒத்திகுட்டாஹா..

எங்க வாப்பா, ‘ரொம்ப சந்தோஷம் யூசுஃப்.. அல்லா நல்ல கூலிய கொடுக்கணும்.. நானா வந்து எப்படி பேசறதுன்னு ரொம்ப தயங்கிட்டே இருந்தேன்.. ஷமீன பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும்.. தொழுவுவா.. ஒரு வேல கூட தொழுவய உட மாட்டா.. நல்லா சமைக்கிறா.. நல்லா படிக்கிறா.. ‘

தோழாப்பாக்கு ஷமீன பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் எங்க வாப்பா பேச பேச குறிக்கிடாம கேட்டுகிட்டே இருந்தாஹா.. நல்ல நண்பன் என்றால் பேசும் போது காத கொடுத்து கேட்குறவன் தான்னு அஹ அடிக்கடி சொல்வாஹா..

வாப்பா ஷமீன பத்தி பேசிட்டு கடைசியா.. ‘தாஹிராட கல்யாணமும் சேர்ந்து நடந்தா ரொம்ப நல்லா இருக்கும் ‘ ன்னு சொன்னாஹா..

தோழாப்பா, ‘தாஹிராவுக்கும் நெறய எடத்துல பேசி தான் வருது.. முடிவாயிடும் போல தான் இருக்கு.. அல்லா இருக்கான்..பார்ப்போமே.. ‘ ன்னு சொன்னாஹா

எங்க வூட்டுக்கு கல்யாண கலை வந்துடுச்சுங்க.. வூட்டுக்கு சாயம் அடிச்சுகிட்டு இருக்காஹா..

ஷமீனுக்கு புடவைகள், நகைகள் வாங்க திருச்சி போய்ட்டு வந்தாஹா.. நிகாஹ் அழைப்பிதழ் தயாராயிடுச்சு.. பண்டாரி அத்தாட்ட சாப்பாட்டுக்கு சொல்லியாச்சு.. மணவறைக்கு ஏற்பாடு பண்ணியாச்சு..

எங்க வாப்பாவும் தோழாப்பாவும் காரைக்காலுக்கு ஒரு வேலயா தோழாப்பாட ஸ்கூட்டர்ல புறப்பட்டாஹா..

எல்லாரும் வெளியே போவும் போது ‘எங்கே போறீங்க ‘ ன்னு தான் யாரும் கேப்பாஹா.. ஆனா எங்க வாப்பா வெளியே போவும் போது..

ஷமீன் ‘எப்ப வருவீங்க வாப்பா.. ‘ ன்னு கேப்பா..

இப்ப கூட அதை தான் கேட்டா..

‘மஹ்ரிபுக்குள்ள வந்துடறேன்ம்மா.. ‘ ன்னு வாப்பா சொன்னாஹா

‘ஜாக்கிரத வாப்பா.. நல்லா கெட்டியமா புடிச்சுக்குங்க.. அல்லா தவக்கல்.. ‘ ன்னு அழுவுற மாதிரி சொன்னா.

சீக்கிரம் மஹ்ரிபுக்குள்ள வந்துடறேன்னு சொல்லிட்டு போன எங்க வாப்பா இஷா ஜமாத்லாம் முடிஞ்சும் இன்னும் வராததால ஷமீன் ரொம்ப பயந்துட்டா..

‘ம்மா.. ஏன்ம்மா வாப்பா இன்னும் வரல.. ‘

‘வந்துடுவாஹாம்மா.. எங்கே போயிட போறாஹா.. இப்ப வந்துடுவாஹா.. போன வேல முடியலையோ என்னவோ.. ‘

எங்க ம்மா சொன்ன தைரியம் ஷமீனுக்கு போதுமானதா இல்ல..

ஆனா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான்..

எனக்கு விளையாட்டு புத்திங்க..

எங்க ம்மாட்ட என் கூட்டாளி எல்லாம் பைக் வச்சிருக்கான்வோன்னு சொல்லி நானும் யமஹா வாங்கி தர சொல்லி நச்சரிச்சேன்..

ரோட்டுல போவும் போது ரேஸ்ல போற மாதுரி தான் போவேன்..

ஒரு தடவ கூட்டாளிங்களோட காரைக்கால்ல படம் பார்க்க போவும் போது வாஞ்சூர் செக் போஸ்ட தாண்டி கொஞ்ச தூரம்..

ரொம்ப ஆபத்தான் இடம் அது..

நான் ஒண்ணு சொல்றேன்.. அந்த எடத்துல போவும் போது ரொம்ப ஜாக்கிரதயா போங்க.. ஸ்கூட்டர், கார், லாரி, வேன்.. எல்லாம் கண்ணு முன்னு தெரியாம வருது.. அதுவும் இப்ப ongc, mrl அது இதுன்னு எக்கச்சக்க வண்டி..

நான் வேகமா போனேன் பாருங்க… எதிர்தாப்ல ஒரு லாரி காரன்.. நேரா வந்து மோதி.. என்ன தூக்கி அடிச்சு..

‘ம்மாஆஆஆஆ…. ‘ கத்திகிட்டே கீழே விழுந்தேன்..

அப்புறம் என்ன ? நான் குத்துயிரும் குலையிருமா கெடக்க.. என்னய தூக்கிட்டு நாகப்பட்டனம் ஆஸ்பத்திரி போய்.. அப்புறம் அங்கேந்து தஞ்சாவூர் ஆஸ்பத்திரி போய்.. எல்லாத்துக்கும் எவ்வளவு செரமம்..

கடைசியில தஞ்சாவூர்ல டாக்டர், என்ன பார்த்துட்டு.. ‘வர்ர வழியிலேயே ஆள் போயிடுச்சே.. ‘ ன்னு சொல்ல..

காட்டுபள்ளியில , ‘இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்(திருக்குரான் வசனம்-இறைவனிடமிருந்தே வந்தோம் மீண்டும் இறைவனிடமே செல்வோம் என்று பொருள்) மூணு தடவை சொல்லி நாகூர் ‘இன்ன ‘ தெரு சுபஹான் அவர்களது மகன்னு ‘என் பேர ‘ சொல்லி அவர்கள் மெளத்.. மாலை மணி நாலுக்கு காட்டுபள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.. ‘ ன்னு மைக்ல என்னட மெளத் சேதிய சொன்னாஹா..

ம்மா, வாப்பா, ஷமீன் எல்லாம் துடிச்சு போய்ட்டாஹா..

எங்க ம்மாவின் தைரியம் தான் இடிஞ்சு போயிருந்த குடும்பத்த ஓரளவு மீள வச்சதே.. ஆனா எங்க ம்மாக்கு அஹ சொல்லி தான் எனக்கு பைக் கெடச்சதனால எங்க ம்மா வெளில காட்டிக்காம உள்ளுக்குள்ள துடிக்கிறது எங்க ம்மாக்கும் அல்லாவுக்கும் மட்டும் தான் தெரியும்.. எங்க வாப்பாவுக்கு கூட தெரியாது..

‘எங்க ம்மா என்ன நெனச்சு அழுவாத நாளே கிடையாது. ஆனா வாப்பா அல்லது ஷமீன் யாராவது வந்துட்டா அத அப்படியே மறச்சுட்டு வேற பேச்ச பேச ஆரம்பிச்சுடுவாஹா..

நான் கடைசிக்கும் கடைசியா ஒண்ணு சொல்றேன்..

தலை போற காரியம்னு அவசர அவசரமா போறோம் ஆனா கடைசியில தலையே போய் காரியம் தான் நடக்குது.. நெனச்சு பாருங்க.. அது மிகப் பெரிய துயரம் அல்லவா..

வண்டிக்கு பெட்ரோல், டாசல், கேஸ் இப்படி எது வேணாலும் காட்டுங்க.. ஆனா ரத்தம்.. அது மட்டும் காட்டிடாதீங்க.. ப்ளீஸ்..

வண்டி ஓட்டும் போது அவசரமில்லாம நிதானமா ஓட்டுங்க.. இனிமே வி ‘பத்து ‘ கூட வேணாம்.. வி ‘பூஜ்யம் ‘ ன்னு மாத்தணும்..

உயிர்கள காப்பாத்த என் உயிர கொடுத்து இத தான் நான் கேட்டுக்குறேன்..

காரைக்கால் போன எங்க வாப்பா இன்னமும் திரும்ப வில்லை.. ஷமீன் பயந்து கொல நடுங்கிட்டா..

ஷமீன் இப்போ திருக்குரான்ல உள்ள அலம் நஷ்ரஹ்(விரிவாக்குதல்) எனும் 94வது அத்தியாயத்தில் ஒரு வசனத்தை ஓதிட்டு இருக்கா..

‘..ஃப இன்னம அல் உஸ்ரி உஸ்ரா..

இன்னம அல் உஸ்ரி உஸ்ரா.. ‘

( ‘..ஆகவே, நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.. ‘)

என்று வரும் வசனத்தின் முழு அத்தியாயத்தையும் ஓதி முடித்த பின் திரும்பி பார்த்தாள்..

எங்க வாப்பா தான்..

அவ பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தாஹா..

‘வாப்பா.. ‘ ன்னு அழுதாள்

‘என்னம்மா.. ஏன்.. ம்.. நானா ஞாபகம் வந்துடுச்சா.. ‘

‘ஆமா.. வாப்பா.. நானா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.. ‘ ன்னு சொல்லி கூடத்துல இருந்த என் போட்டவ பார்த்தா..

நான் போட்டோல எங்க குடும்பத்துல உள்ளவங்களுக்காக துவா செஞ்சுகிட்டு இருந்தேன்..

நபிகள் நாயகம்(ஸல்) அவங்க சொல்லி இருக்காங்க ‘நீங்க யாரை அதிகம் நேசித்தீர்களோ அவர்களுடன் தான் மறுமையில் இருப்பீர்கள் ‘ என்று..

நான் எங்க ம்மா, வாப்பா, ஷமீன் இவங்களோட தான் இருப்பேன்..

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்