அது ஒரு மழை நேர இரவு..!

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

இரவி ஸ்ரீகுமார்


முந்தா நாள் சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து பல் வலி. இரண்டு நாட்களாக கண்டுக்கொள்ளவில்லை.

இன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் சாப்பிட உட்கார்ந்தேன். நல்ல பசி. ஆவலாக, சூடாக இருந்த குழம்பு சாதத்தை எடுத்து, வாயை திறந்தால், ஒரு அங்குலத்திற்கு மேல் திறக்க முடியவில்லை.

நல்ல வலி.

அப்பா சொன்ன மத்திரையை விழுங்கிவிட்டு, பாலகுமாரனின்

‘சின்ன சின்ன வட்டங்களை ‘ படிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில், இரண்டு கன்னங்களிலும் நெருப்பு பற்றி எரிவதைப் போன்ற உணர்வு.

பயம் வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் மார்பு பகுதி – உணவு குழாய் எரிவதுப் போன்ற உணர்வு. நல்ல எரிச்சல்.

பயம் அதிகமானது.

இன்னும் கொஞ்ச நேரம் கழிந்தது.

மயக்கம் வருவதுப் போல, தலை சுற்றியது.

இல்லை பிரமையா ?

self medicationன் செய்யும் வேலை.இல்லை லீலை.

‘செத்து விடுவேனோ ? ‘ பயம் பீதியானது.

முதல் பிரசவத்திற்கு, தாய் வீட்டிற்கு வந்திருந்த என் அக்காள், தைரியம் சொன்னாள்.

‘உடனே டாக்டர்கிட்டே போ ‘ என்றாள்.

நாளைக்கு ஆபீஸ் போயாகவேண்டும். முக்கியமான புரொஜக்ட் டிஸ்கஷன் இருக்கிறது.

நானும், அப்பாவும் டாக்டரிடம் கிளம்பினோம். வீட்டிலிருந்து டாக்டரின் கிளினிக் இரண்டு நிமிட நடை.

கிளம்பும் போது மழை இல்லை.

மணி ஒன்பதரை.

இரவுகளில், ஒன்பது மணிக்கு மேல், நோயாளிகள் குறைவாக இருந்தால், டோக்கன் வாங்காமல் டாக்டரை பார்க்க முடியும்.

நாங்கள் உள்ளே நுழைந்தப் போது நான்கு பேஷண்ட் கள் இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள்.

பஸ்ஸிலோ, டிரெயினிலோ-வித்தவுட் டிக்கட் போல, இங்கே வித்தவுட் டோக்கன் கேஸ்கள்-என்னையும் சேர்த்து மூன்று.

எனக்கு முந்தைய டோக்கன் பேஷண்ட் உள்ளே போனார். கடைசி டோக்கன் கேஸ்.

வெளியே காற்று வீச ஆரம்பித்தது.

பேய் காற்று. வானத்திற்கு வயிற்றுக் கெடுப்புப் போல,

கடாம் புடாம் என தொடர் இடி.

‘ஆச்சு. கரெண்டை ஆஃப் பண்ணிடுவானுங்க..! ‘- பத்தாங் கிளாஸ் ஃபெயில் ஆகி, அதற்கு மேல் படிக்க பெற்றோரிடம் முரண்டு பிடித்து, சில டாக்டர்களிடம் வேலை செய்த அனுபவம்.

இன்று இந்த டாக்டரிடம் கம்பெளண்டராக இருக்கும் இருபது, இருபத்திரண்டு வயது சுரேஷ் அலுத்துக் கொண்டான். பெரிய மனித தோரணையில் உரத்த குரலில் சொன்னான்.

மழை. நல்ல, சரியான மழை. காற்று- சுழன்று, சுழன்று அடிக்கிறது.

வானத்தில் பெரிய, அகலமான வெளிச்சம், பூமியை புகை படம் எடுப்பது போன்ற ஒரு பாவனை. ஒரு சுவாரசியமான கற்பனை. பிரளயம் வந்துவிட்ட மாதிரி பேய் மழை, பூமியை வெள்ளக்காடாய் அடிக்கிறது.

கரெண்ட் ஆஃப் ஆவது தான், எப்போதும் இருப்பதாயிற்றே. எனக்கு வேறு கவலை-

உடம்பெல்லாம் அலர்ஜியின் லீலை. டாக்டர் நன்றாக வெளிச்சத்தில் பார்த்தால் தானே மருந்து சரியாக கொடுப்பார். பவர் கட் ஆகிவிட்டால் ?

‘கடவுளே, பவர்கட் இப்போ வேணாம் ‘- பிரார்த்தித்தேன்.

‘டிரிங் ‘- அழைப்புமணி. நல்ல காலம், டாக்டர் என்னை அழைத்தார்.

என் உடம்பின் உபாதையை பற்றி சொல்ல வேண்டியதை சொன்னேன். அதற்கு தீர்வாக, டாக்டர் பெற வேண்டியதை பெற்றுக்கொண்டு, கொடுக்க வேண்டிய மருந்தை கொடுத்தார்.

‘இனிமே ,ஸெல்ஃப் மெடிகேஷன் பண்ணிக்காதே. உன் உடம்புக்கு எந்த மருந்து ஒத்துக்கும், எது ஒத்துக்காதுனு எனக்கு தான் தெரியும். அப்புறம் ஃபெமலி டாக்டரா எனக்கு என்ன மரியாதை ? ‘-எனக்கு அறிவுறித்து வ்ிட்டு, அப்பாவின் பக்கம் திரும்பினார்-

‘பையன் ஹார்ட் பேஷண்ட். அதனால டாக்டர் கிட்டே வரும்போது மட்டும் தனியா உடாம கூட வரீங்க. சரி. நல்லது. அவனே ஸெல்ஃப் மெடிசன் எடுத்திருக்கான். கவனிக்கலை. என்ன ஸார் நீங்க ? ‘- கடிந்துக் கொண்டார். அப்பா விழித்தார்.

மருந்து சொன்னது அவர். ஆனால் நான் ஸெல்ஃப் மெடிகேஷன் எடுத்துக்கொண்டதாக, டாக்டரிடமிருந்து இலவச இணைப்பாக- உபதேசம். எல்லாம் நேரம் தான்.

வெளியில் வந்தோம். மழை – இன்னும் உக்கிரமாக. நிதானமாக, அவ்வப்போது பூமியை-ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, தன் சத்தத்திற்கு தள ஜதியாக இடித்துக் கொண்டு, சந்தோஷமாக பெய்துக் கொண்டிருந்தது.

‘நனைஞ்சுண்டே போயிடலாமா ? ‘- நான் கேட்டேன்.

‘வேண்டாம். ஸம்மர் ரெயின். கொஞ்ச நேரத்திலே நின்னுடும், வெயிட் பண்ணலாம் ‘- அப்பா சொன்னார்.அவர் வயது கற்றுக்கொடுத்த பாடம்-பொறுமை.

‘கோடையில் ஒரு நாள் மழை வரலாம் ‘- கண்ணதாசன் சினிமா பாட்டு ஞாபகம் வந்தது. முணுமுணுத்தேன். அப்பா நக்கலாக சிரித்தார். அவர் அந்த கால மனிதர். அந்தக்காலம் என்றால்-நிஜமாலுமே, அந்தக் கால 78 வயது மனிதர்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பாபனாசம் சிவன் போன்றவர்களின் ரசிகர்.

‘பெரிசா எழுதிட்டான்.கோடையிலே என்ன, இந்த காலத்திலே, மான்சூன் காலத்திலேயே, என்னிக்கோ ஒரு நாள் தான் மழை பெய்யறது. ‘- பயங்கரமாக நக்கல் அடித்தார்.

எனக்கு காரணம் தெரியாமல் கோபம் வந்தது.

‘சாக்ரடாஸ் காலத்திலேந்து இதே கதை தான். வாழும் காலம் கேவலம். வரலாறு பொற்காலம்.சே.. இந்த பெரிசுகலுக்கு ஆனாலும் நக்கல் ஜாஸ்தி.எங்க காலத்திலே அவ்வளவு தான் மழை பெய்யும். அதுக்கென்ன இப்போ ? ‘ அப்பா சொன்ன உண்மை சுட, முணுமுணுத்தேன்.

‘என்னடா ? ‘

‘நனைஞ்சுண்டே போயிடலாமா ? ‘-மீண்டும் கேட்டேன்.

‘வேண்டாம். பல் வலிக்கே ஜுரம் வர சான்ஸ் இருக்கு. இதுல மழையிலே நனஞ்சா, நன்னாவே ஜுரம் வந்துடும். ‘

எனக்கு வீட்டிற்கு சென்று படுத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

‘சுரேஷ் அலுத்துக் கொண்டது வீணோ ? இன்னும் பவர் கட் ஆகலேயே.. ‘- டாக்டரிடம், மருத்துவம் முடிந்த நிலையில் நான் நினைத்தேன்.

மற்றவகளின் அசெளகரியத்தை கூட ஒருவித குரூரத்துடன் எதிப்பார்கிறோமோ ? எனக்கே, என் எண்ணம் கேவலமாக இருந்தது.

அதே நேரத்தில் சொல்லி வைத்தாற் போல எல்லா விளக்குகளும் அணைந்தன. டிவி அலறல்கள் மெளனமாயின.

பவர் கட்.

மழை பெய்யும் சப்தம் மட்டும் மிக ஆக்ரோஷமாக.

‘எத்தனை நாழி நிக்கறது ? லாஸ்ட் வீக் மூணு மணி நேரம் பெய்ஞ்சது- உங்க காலத்து மழை மாதிரி. இதுவும் அப்படி பெய்ஞ்சா ? ‘- நான் மனத்தாங்கலை வெளிப்படுத்தினேன்.

‘எங்க ஜனரேஷனிலேயும் தொடர்ந்து மூணு மணி நேரம் மழை பெய்தது. ‘-என்பதை வெளிப்படுத்திவிட்ட ஆனந்தம்.ஆனால் எனக்கே, குழந்தைத் தனமாகப் பட்டது. அப்பா முறைத்துப் பார்த்தார். பிறகு மென்மையாக சிரித்தார். பதில் சொல்லவில்லை.

மழை பெய்யும் சப்தத்தை தவிர, அமைதி.

‘சர் ‘-எங்கள் பக்கத்து வீட்டு கார் சென்றது.

காரினுள்ளே பக்கத்து வீட்டு விஸ்வநாதன் மற்றும் டிரைவர் வரதன்.

விஸ்வநாதன், என்னையும், அப்பாவை பார்த்தபடி சென்றார். அவருக்கு எங்கள் நிலைமை நன்றாக புரிந்திருக்கும்.

எனக்குள் ஒரு நப்பாசை.

கார் நின்று, எங்களை ஏற்றிக் கொள்ளாதா ?

தூரத்தில், எங்கள் வீட்டு சந்தில் கார் திரும்பியது.பின்புற இண்டிகேட்டர் விளக்கு, மினுக்கி மறைந்தது.

‘உய்ங் ‘-காற்று விசில் அடித்தது.

ஒரே தாளத்தில் மழை, நிதானமாக.

‘சரி உள்ளே வா. ஊதல் காத்து,, உடம்புக்கு ஒத்துக்காது. ‘ அப்பா கிளினிக் வெராண்டாவிலிருந்து, உள்ளே போனார். நானும். இன்னும் எத்தனை நாழி இப்படி பெய்யும் ?

பல்வலி உயிர் போயிற்று. ஒரு டோஸேஜ் மருந்து சாப்பிட்டு தூங்கணும்.

இன்னிக்கு ராத்திரி தூக்கம் கிளினிக்கிலேயா ?

எனக்கு மழை மீது எரிச்சல் வந்தது.

‘மழை இவ்வளவு ஸ்டிராங்கா பெய்யறது. அம்மா குடை எடுத்துண்டு வந்திருக்கலாம். ‘ அப்பாவிடம் சொன்னேன்.

அப்பா, என்னை முறைத்துப் பார்த்தார். கண்ணில் கோபம் இருந்திருக்க வேண்டும். இன்னும் கரண்ட் வராததால், இருட்டில் அவர் கோபம் தெரியவில்லை.

‘கொஞ்ஜம் பொறுப்போட, யோசிச்சு பாருடா. பிள்ளை தாய்ச்சி பொண்ணை விட்டுட்டு, இந்த இருட்டுல, எப்படி வருவாள் ? அவளூக்கு சாதாரணமாவே கண் தெரியாது. மூட்டு வலி வேற.இந்த மழையிலேயும், இருட்டுலேயும்.., எப்படி உனக்கு மட்டும் இப்ப முட்டாள் மாதிரி யோசிக்க தோண்றது. ? கொஞ்சம் பேஷண்டா இரு. ‘

அப்பாவின் குரலில் எரிச்சல்.

‘இப்போ பேஷண்டாதான் இருக்கேன். ‘-சிச்சுவேஷன் காமெடி செய்தேன். அப்பா இன்னும் கடுப்பாகி இருப்பார்.

வரதனிடம்,விஸ்வநாதன் அட்லீஸ்ட் குடையை கொடுத்து அனுப்பினாலாவது பரவாயில்லை.

ப்ச். காரை, நிறுத்தி ஏற்றிக்கொள்ளாதவர், குடை கொடுத்தா அனுப்பப்போகிறார்.

அம்மாவது, வரதனிடம் குடை கொடுத்தனுப்பினாள் தேவலை.

வரதன் வீட்டிற்கு இந்த வழியாகதான் போக வேண்டும்.

அம்மா, அப்படியே குடை கொடுத்தனுப்பினாலும், எத்தனை குடை கொடுத்தனுப்புவாள் ?

வெராண்டாவிற்கு மீண்டும் வந்து நின்றுக்கொண்டேன். அப்பாவும் எழுந்து வந்தார்.

மின்னியது. தூரத்தில், யாரோ வருவது தெரிந்தது. இரண்டு குடைகளை ஒரு கையிலும்,தனக்கு ஒரு குடையும். ஆள் அடையாளம் தெரியவில்லை.வரதனோ ?

‘யாருடா அது ‘ அப்பாவும் கண்ணை இடுக்கி பார்த்தார்.

மின்னலுக்கு காத்திருந்தேன்.

வெஜிடேரியன் மின்னல் மின்னியது.. இடி இல்லை.

வினாடியில் உருவத்தை அடையாளம் கண்டுக் கொண்டேன்.

அப்பாவின் யூகம் தவறு.

***

ravi_srikumar@hotmail.com

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்