அது அந்தக் காலம்….

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

சேவியர்.


வளர்ச்சியின் விகிதம்
இப்போதெல்லாம் என்னை
இனம்புரியா மனநிலைக்குள்
இழுத்துச் செல்கிறது.

‘அப்படின்னா என்னம்மா ? ‘
என்று,
பதின் வயதுக் காலங்களில்
நான் கேட்ட கேள்விகளுக்கு,
நர்சரி நாவுகளில் இன்று விடை.

சைக்கிள் ஓட்டிய
என் வயதில்,
என் பேரன் பைக் ஓட்டுகிறான்.
காதில் ஓட்டவைத்த
செல்போனுடன்.

முழங்காலுக்கும்
கணுக்கலுக்குமிடையே
முடிந்து போகிறது,
பேத்தியின் கால்சட்டை.

‘எங்க காலத்துல ‘ – என்று
ஆரம்பிக்காமல்
பேசுங்கப்பா.
இது சங்க காலம் அல்ல,
மகனின் கண்களில் மின்னுகிறது
அதே பழைய பாசம்.

கொஞ்ச நேரம் செலவழிக்க
வாங்கிய தொலைக்காட்சி,
எல்லார் நேரத்தையும்
விற்றுக் கொண்டிருக்கிறது.

இரவு உணவு கொறிக்கும் போது
மகன் நினைவு படுத்தினான்.
அடுப்படியில் இலைவிரித்து
கருவாட்டுக் குழம்பு
சாப்பிட்ட அந்த நாள் ஞாபகம்.

‘எங்க காலத்துல ‘ – ன்னு
வேணாப்பா
பிட்சா சாப்பிட்டுக் கொண்டே
பேசுகிறாள் பேத்தி.

கொல்லையில்
நான் நட்ட வாழைமரம்..
இன்னும்
மூட்டில் முளைகளோடு வளர்கிறது.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்