அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘இப்பூமண்டலத்துக்கும், பூகோள உயிரினங்களுக்கும் உடமைப்பட்டவர் நாம்! பூமிக்காகவே எப்போதும் பரிந்து பேசுவோம் நாம்! ஆனால் நாமனைவரும் உயிர் பிழைத்து வாழ்வதற்கு நமக்கு மட்டுமல்ல, நமதுயிர் மூலவிகள் தோன்றிய இந்தப் பிரம்மாண்டமான பூர்வீகப் பிரபஞ்சத்துக்கும் கடமைப்பட்டவர்!

கார்ல் சேகன் (1934-1996)

நோபெல் பரிசை இழந்த உன்னத விஞ்ஞான மேதை!

பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஃபிரெட் ஹாயில் அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டு அண்டவெளிக் கோள்களின் மூலம், விண்மீன்களின் தோற்றம், உயிரின மூலவிகளின் பிறப்புகளைப் பற்றி நூதன விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கி யிருக்கிறார். 1950-1960 ஆண்டுகளில் பரிதி மண்டலத்தின் மூலத் தோற்றம், காலக்ஸிகளின் வடிவ அமைப்பு, ஈர்ப்பியல்பின் பண்பாடு [Nature of Gravity] ஆகிய பன்முகத் துறைகளில் ஆர்வம் கொண்டு சூரியவியல் பெளதிகத்தில் [Solar Physics] ஈடுபட்டுப் புதிய கருத்துக்களை வெளிப்படுத்தி யிருக்கிறார். 1960 ஆண்டுகளில் குவஸார்ஸ் கண்டுபிடிக்கப் பட்டபோது [Discovery of Quasars], பெருநிறைப் பேரண்டங்கள் [Supermassive Objects], மிகுசக்தி விண்வெளிப் பெளதிகம் [High Energy Astrophysics] ஆகியவற்றைப் பற்றிச் சிந்தனையைக் கிளறும் பல ஆய்விதழ்களை பர்பிட்ஜஸ் விஞ்ஞானியுடன் வெளியிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞான மேதைகள் வில்லியம் ஃபவுளர் [William Fowler], சுப்ரமணியன் சந்திரசேகர் பெளதிகத்துக்கு நோபெல் பரிசு அளிக்கப்பட்ட போது, பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஃபிரெட் ஹாயிலும் ஃபவுளருடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று பல விஞ்ஞான நிபுணர்கள் வருந்தியதாகத் தெரிகிறது! பிரபஞ்சத்தில் அணுக்கரு இயக்கங்கள் நேர்ந்து இரசாயன மூலகங்கள் எப்படித் தோன்றின என்பதைச் சோதனை மூலமாகவும், கோட்பாட்டு முறையிலும் காட்டியதற்காக ஃபவுளருக்கு நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. விண்மீன்கள் எப்படி முளைத்தன, அவற்றின் உள்ளமைப்பு எவ்விதமானது என்று ஆய்வு செய்ததற்குச் சந்திரசேகர் அதே சமயத்தில் நோபெல் பரிசு பெற்றார்.

Gamow, Bethe, Hoyl

பல ஆண்டுகளாக ஃபிரெட் ஹாயில் வில்லியம் ஃபவுளருடன் இணைந்து விண்மீன்கள், சூபர்நோவாக்கள் ஆகியவற்றில் நிகழும் அணுக்கரு இயக்கங்களைப் [Nuclear Processes in Stars & Supernovas] பற்றி ஆராய்ந்து, ‘ஹைடிரஜனிலிருந்து மூலகங்கள் தொகுப்பு ‘ [The Synthesis of the Elements from Hydrogen] என்னும் முக்கிய இதழை 1946 இல் வெளியிட்டார். ஃபவுளரின் நோபெல் பரிசு வெற்றிக்குப் பாதிக் காரணம் ஃபிரெட் ஹாயில் என்று வெளிப்படையாக விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தாலும், சுவீடிஸ் நோபெல் தேர்வுக்குழு ஹாயிலை ஏனோ புறக்கணித்துத் தள்ளிவிட்டது!

வானவியல் விஞ்ஞானி ஹாயிலின் வியப்பான நூதனப் படைப்புகள்

பதினைந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரளய வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வருகிறது என்ற கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]! வெடிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] வீசி யிருக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறி அதையும் நிரூபித்துக் காட்டினார் ஜார்ஜ் காமாவ்! முதல் பிரளயத்துக்குப் ‘பெரு வெடிப்புக் கோட்பாடு ‘ [Big Bang Theory] எனப் பெயரிட்ட ஃபிரெட் ஹாயில் அக் கோட்பாட்டை ஒப்புக் கொள்ளாது, பிரபஞ்சத்தில் பின்புல நுண்ணலை வேறு முறைகளிலும் உண்டாக்கப்படலாம் என்று கூறி நிராகரித்தார்!

Sample from Mars

ஃபிரெட் ஹாயில் அவரது சீடரான இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகருடன் இணைந்து ஆக்கிய ‘நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை ‘ [Conformal Theory of Gravity], ‘ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ‘பெரு வெடிப்பு நியதிக்கு ‘ மாறாக, விஞ்ஞானிகள் முழுவதும் ஏற்றுக் கொள்ளாத தனது ‘நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை ‘ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்! தனது கொள்கையை விடாமல் பிடித்துக் கொண்டு ஃபிரெட் ஹாயில், ஜியோஃபிரி பர்பிட்ஜ், ஜெயந்த் நர்லிகர் ஆகியோருடன் இணைந்து ‘பிரபஞ்சத் தோற்றத்திற்கு வேறுபட்ட விளக்கம் ‘ [A Different Approach to Cosmology] என்னும் நூலை 2000 இல் வெளியிட்டு விஞ்ஞானிகளை வியப்புக்குள் தள்ளினார்!

உலகில் உயிரினங்கள் எவ்விதம் தோன்றின என்னும் வினாவுக்குத் தெளிவான ஓர் உயிர்மூலக் கோட்பாடை உருவாக்கிய விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் வர்க்கத்தில் வருபவர், ஃபிரெட் ஹாயில். ஹாயிலும் அவரது சீடர் சிங்கள விஞ்ஞான நிபுணர் சந்திரா விக்கிரமசிங்கும் இணைந்து பறைசாற்றிய, ‘வெளியண்டத்து விண்கிருமி நியதியைச் ‘ [Theory of Panspermia] சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அது முற்றிலும் பிழையான தென்று விஞ்ஞான உலகம் இதுவரைப் புறக்கணிக்கவில்லை!

பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலின் வாழ்க்கை வரலாறு

இங்கிலாந்தின் யார்க்ஸயர் மாநிலத்தில் உள்ள பிங்கிலி என்னும் ஊரில் 1915 ஜூன் 24 ஆம் தேதி ஃபிரெட் ஹாயில் ஓர் உல்லன் வாணிபருக்குப் பிறந்தார். உள்ளூர் பள்ளியில் படித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, உபகாரகப் பணத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்மானுவெல் கல்லூரியில் கணிதம் பயிலச் சேர்ந்தார். 1936 ஆம் ஆண்டு கணிதத்தில் B.A. பட்டம் பெற்று, ஹாயில் தனது உன்னதக் கல்வித் தேர்ச்சிக்கும், திறனுக்கும் கேம்பிரிட்ஜ் மாத்யூ பரிசளிக்கப் பட்டார். 1939 இல் அணுக்கருப் பீட்டாத் தேய்வு [Nuclear Beta Decay] ஆய்வுப் பணிக்குக் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியின் ஃபெல்லோஷிப் மதிப்பைப் பெற்றார்! விண்மீன்களின் தோற்றம், தொடர்வளர்ச்சி [Accretion & Stellar Evolution] ஆகிய ஆராய்ச்சிகளில் உடன் உழைத்த சக விஞ்ஞானி ரேமன்ட் லிட்டில்டன்தான் [Raymond Lyttleton] ஹாயில் அண்டவெளிப் பெளதிகத்தில் [Astrophysics] ஆழ்ந்து ஈடுபட ஊக்குவித்தவர்.

1945 ஆண்டிலிருந்து ஹாயில் கேம்பிரிட்ஜில் தங்கி கணித ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்பு 1958 இல் வானியல் துறைக்குப் புளுமியன் பேராசிரியராகப் பணியாற்றி அமெரிக்காவுக்கு அடிக்கடிப் பயணம் செய்தார். இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹாயில் ரேடார் பொறிநுணுக்கத்தை விருத்தி செய்வதில் வேலை செய்தார். அதன் பிறகு ஹெர்மன் போன்டி, தாமஸ் கோல்டு ஆகியோருடன் வானியலில் பணி செய்ய வாய்ப்புக்கள் கிடைத்தன. அடுத்து ராஜர் டெய்லர், வில்லியம் ஃபவுளர், ராபர்ட் வாகோனர் ஆகியோருடன் பணியாற்றிப் பெரு வெடிப்பு அணுக்கருத் தொகுப்பு [Big Bang Nucleo-synthesis] ஆராய்ச்சிகளில் அரிய அண்டவெளிக் கருத்துகளில் பெரும் பங்கை அளித்துள்ளார்.

1958 ஆண்டு முதல் அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மார்டின் ஸவார்ஸ்சைல்டுடன் [Martin Schwarzchild] பணி புரிந்து, ‘தணி நிறை விண்மீன் முதல் பூதச் செம்மீன் வரை ‘ மாறும் தோற்ற மாடலை [Low Mass Stars to Red-Giant Evolution Model] நிறுவினார். 1970 இல் பிரிட்டனில் ஓர் ஆங்கிலோ ஆஸ்டிரேலிய வானோக்கத்தை முதன்முதல் நிறுவி உலகத்தரத்துக்கு நிகரான ஒரு பெரும் தொலைநோக்கியை அமைத்து, விண்வெளியைக் காணப் பலகணியைத் திறந்து வைத்தார்.

Arrhenius, Hoyl, Chandra

நாமெல்லாம் விண்மீன் தூசிகளால் ஆக்கப்பட்டவர்!

ஃபிரெட் ஹாயில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு விஞ்ஞானிகளுக்குப் பல ஆண்டுகளாகப் புதிராக இருந்து வந்த ஒரு பிரச்சனையில் மூழ்கினார்! விண்மீன்களில் நேருவது என்ன ? 1938 இல் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே [Hans Bethe (B.1906)] என்பவர் ஏற்கனவே பேரளவு வெப்பம், அழுத்தத்தால் விண்மீன்களில் உள்ள ஹைடிரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலிய அணுவாக மாறி வருவதை அறிவித்திருந்தார். ஹாயில் பெத்தேயின் கருத்தை மேற்கொண்டு, மீண்டும் விருத்தி செய்து, ‘ஒரு விண்மீன் தனது ஹைடிரஜன் சேமிப்பை இழந்தமின் அணுக்கருப் பிணைவு இயக்கங்கள் [Nuclear Fusion Reactions] ஹீலியத்தைக் கரியாகவும் [Helium ->Carbon], மற்ற மூலகங்களாகவும், பின்னால் இரும்பு வரை எடைமிகும் கன உலோகமாகவும் மாற்றுகின்றன ‘ என்னும் புதிய விளக்கம் தந்தார். ‘இறுதியாக ஆயுள் முடிவில் ஒரு விண்மீன் வெடித்து அதன் மூலகங்கள், உலோகங்கள் யாவும் அண்ட வெளியில் சிதறி வீசப் படுகின்றன ‘ என்றும் கூறினார்.

Carbonaceous Meteorites

ஒரு சூபர்நோவாவில் [Supernova] பேரளவு பெருத்த விண்மீன்கள் வெடிக்கும் போது, இரும்பின் நிறைக்கும் மிகையான யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் உண்டாகுகின்றன என்று ஃபிரெட் ஹாயில் கணித்தார்! ஆதலால் பூமியிலும் மற்ற பிரபஞ்ச அண்டங்களில் காணப்படும் மூலகங்கள் [Elements] அனைத்தும் விண்மீன்களிலிருந்து விழுந்தவையே என்று ஆணித்தரமாக அறிவித்தார்!

பெரு வெடிப்புப் பிரபஞ்சமா ? நிரந்தர நிலைப் பிரபஞ்சமா ?

1945-1946 ஆண்டுகளில் விண்மீன்களைப் பற்றி ஹாயில் கூறிய கருத்துக்களால் பெரும்புகழ் பெற்றார். யுத்தம் முடிந்ததும் கேம்பிரிட்ஜுக்கு மீண்டு, தனது கணித வானியற் கல்வி புகட்டலைத் தொடர்ந்தார். அப்போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி, அதிலிருந்து விரிவடைந்து வருகிறது என்ற ஒரு கருத்தை ஜார்ஜ் காமாவ் பறைசாற்றி வந்தார். 1920 இல் அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வானோக்கி அக்கருத்தை மெய்ப்பித்து வலியுறுத்திருந்தார்! பல விஞ்ஞானிகள் ஜார்ஜ் காமாவின் பெரு வெடிப்புக் கோட்பாட்டை ஆதரித்தனர்! ஆனால் ஹாயில் தன் சகாக்களான தாமஸ் கோல்டு [Thomas Gold], ஹெர்மன் போன்டி [Hermann Bondi] ஆகியோருடன் இணைந்து கொண்டு பெரு வெடிப்புக் கோட்பாடைப் புறக்கணித்தார்!

‘பிரபஞ்சமே பெரு வெடிப்பிற்குப் பிறகுதான் தோன்றியது என்றால், அந்த ஆதிப் பிரளய வெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது ‘ என்று கேட்கிறார் ஃபிரெட் ஹாயில்! பிரபஞ்சத்துக்கு ஒரு முதலமைப்பும் இறுதியாக ஒரு முடிவமைப்பும் [A Beginning & An End] இருக்கலா மென்னும் ஜார்க் காமாவின் கோட்பாட்டை மூவரும் ஒப்புக் கொள்ளவில்லை! ஆதி அந்தமற்ற ஒரு பிரபஞ்சத்தையே ஹாயில் நம்பிப் பறைசாற்றினார்! பிரபஞ்சம் காமாவின் கூற்றுப்படி வெறும் ஒரு பெரு வெடிப்பில் மட்டுமே தோன்றவில்லை! தொடர்ந்து நிரந்தரமாக நிகழும் பல வெடிப்புகளிலும், சிறு வெடிப்புகளிலும் பிரபஞ்சம் உண்டாகி விரிந்து வருகிறது என்று கூறுகிறார், ஃபிரெட் ஹாயில்! அக்கோட்பாட்டின்படி உருவான ‘நிரந்தர நிலைப் பிரபஞ்சம் ‘ [Steady State Universe] ஒன்றையே ஹாயில் ஏற்றுக் கொண்டு விளக்கி வந்தார்!

‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரபஞ்சம் நிரந்தர நிலையில் [Steady State] மாறுகிறது! அகில வெளியில் காலக்ஸிகள் [Galaxies] அகன்று நகரும் போது, புதிய அண்டமும், பிண்டமும் [Matter] உண்டாகி, நிரந்தர மாறுதல் நிலை தொடர்கிறது! ஜார்ஜ் காமாவ் நியதியைப் ‘பெரு வெடிப்பு ‘ என்று ஃபிரெட் ஹாயில் கேலித்தனமாகக் கூறிப் புறக்கணித்தாலும், மெய்யாகவே அப்பெயர் உலகலாவிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் ‘பெரு வெடிப்பு நியதி ‘ [Big Bang Theory] என்று ஆகி விட்டது!

நிரந்தர நிலை நியதியும், பெரு வெடிப்பு நியதியும் ஒன்றை ஒன்று எதிர்த்து முரண்பட்டாலும், வானவியல் விஞ்ஞானிகள் வானோக்கிக் கண்ட அண்டவெளிப் புதிர்களுக்கு, இரண்டு கோட்பாடுகளும் சில சமயம் விடை அளித்தன! படிப்படியாக பெரு வெடிப்பு நியதிக்கு ஆதரவாக மிகையான சான்றுகள் கிடைத்தன! 1964 இல் பிரபஞ்சத்தில் ‘பின்புல அகில நுண்ணலைக் கதிர்வீச்சு கண்டுபிடிப்பு ‘ [Discovery of Background Microwave Radiation] பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்துவதாய் அமைந்தது! எதிரொலியான [Echo] பின்புல நுண்ணலைக் கண்டுபிடிப்பால் அநேக விஞ்ஞானிகள் பெரு வெடிப்பு நியதியை ஒப்புக் கொண்டாலும், ஹாயிலும் அவரது சீடர்களும் அதைப் புறக்கணித்து, மெய்நிகழ்ச்சி நிரூபணங்களுக்கு ஏற்ப நிரந்தர நிலை நியதியை வளைத்துக் கொண்டார்கள்!

விண்வெளியிலிருந்து வீழும் உயிர்மூலவிகள், நோய்க் கிருமிகள்!

பெரு வெடிப்பு நியதியை ஆதரிக்கும் சக விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அதிகரித்த கேம்பிரிட்ஜ் வட்டாரத்தில் ஆராய்ச்சி செய்வது கடினமாகவே, பணியை உதறி விட்டு ஃபிரெட் ஹாயில் அங்கிருந்து அகன்று கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் புகுந்து, ஈழத்து இளைய விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங் என்பவருடன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அப்போது [1977] அடுத்தோர் ஒப்புக் கொள்ள முடியாத ஆராய்ச்சியில் சந்திராவுடன் ஹாயில் ஈடுபட்டார்! நூறாண்டுகளுக்கு முன்பு [1903] நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஸவாந்தே அர்ரீனியஸ் [Svante Arrhenius (1859-1927)] படைத்த ‘உயிர்மூலவி விண்வெளித் தோற்றக் கோட்பாடில் ‘ [Panspermia] ஆர்வம் கொண்டு, அதை விருத்தி செய்வதில் முனைந்தார்! பிரபஞ்ச மெங்கும் உயிர்மூலவிகள் நிலவி யுள்ளன! வால்மீன்கள் [Comets] ஈரநீர்மை [Moisture] கொண்டுள்ளதால் பயணத்தின் போது கிருமிகள், வைரஸ் [Virus] ஆகியவற்றைச் சுமந்து திரிகின்றன! கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சுற்றி வந்த வால்மீன்கள் மீதிருந்து உயிர்மூலவிகள் விண்வெளியில் தாவிப் பூமண்டலத்தில் வந்து விழுந்தன என்றெல்லாம் ஹாயில் நம்பினார்! அத்துடன் அந்நிகழ்ச்சிகள் இன்னும் நேர்ந்து வருகின்றன என்றும் கூறி வந்தார்!

விண்வெளியிலிருந்து புதிய வைரஸ் பூமியில் வீழ்ந்து தொத்து நோய்கள் பீடிக்கின்றன என்று ஹாயில் கருதினார். ஹாயில் அவற்றுக்கான புள்ளி விபரங்களையும், விஞ்ஞான நிரூபணங்களையும் சேகரித்து வெளியிட்ட போதும், பல விஞ்ஞானிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்! ஆயினும் சிந்திக்க வைக்கும் அவரது நூதன விண்வெளி உயிர்மூலவிக் கருத்துகள் அறிஞரிடையே ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தின!

1983 ஆம் ஆண்டு ஃபிரெட் ஹாயில் ஈழத்து விஞ்ஞான மேதை சந்திரா விக்கிரமசிங்குடன் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து ‘உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை ‘ [Modern Theory of Panspermia] ஆக்கி வெளியிட்டார். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து 2002 செப்டம்பரில் ஜெயந்த் நர்லிகர் குழுவினர், அண்ட வெளியில் உயிரினத் தோற்றத்தைக் [Extra-terrestial Life] கண்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்! நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] ஹைதிராபாத் TIFR விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தார்கள். அந்நுண்ணுயிர் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர்! ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது! அந்தக் கண்டுபிடிப்பு ‘பான்ஸ்பெர்மியா கோட்பாடின் ‘ போக்கில் [Panspermia Theory] பல புதிய சவால்களை எதிர்கால அண்டவெளிப் பெளதிகத்தில் [Astrophysics] தொடுக்க வல்லது! உலக விண்வெளி வரலாற்றில் ஃபிரெட் ஹாயிலின் பெயர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெறப் போகிறது!

Dying Star

ஃபிரெட் ஹாயில் எழுதிய நூல்கள், பெற்ற மதிப்புகள்

சிக்கலான விஞ்ஞானக் கருத்துக்களை எளிமையாக, இனிமையாக பொதுநபர் புரிந்து கொள்ளும்படி, புனை நாவல் மூலம் அறிவூட்டும் வல்லமை பெற்றவர், ஹாயில்! அத்துறையில் நிபுணர்களான ஹெச்.ஜி. வெல்ஸ், ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எட்டிங்டன் ஆகியோர் அணி வரிசையில் நிற்பவர், ஹாயில்! ரேடியோ, டெலிவிஷன், சொற்பொழிவு, நூல்கள் மூலமாக விஞ்ஞானக் கருத்துகளைப் பரப்புவதில் கைதேர்ந்தவர் ஹாயில்! 1960 இல் விஞ்ஞானப் புனை நாவல் [Science Fictions] இலக்கியத்தில் ஆர்வம் எழுந்து, ‘காரிருள் மேகம் ‘ [Black Cloud], ‘உர்ஸா மேஜரில் ராக்கெட்டுகள் ‘ [Rockets in Ursa Major -Radio Play], ‘ஆ என்னும் ஆன்ரோமீடா ‘ [A for Andromeda -Television Series] ஆகிய படைப்புகளை, ஃபிரெட் ஹாயில் ஆக்கினார். நாற்பதுக்கும் மேற்பட்ட விஞ்ஞான நுணுக்க நூல்கள், விஞ்ஞானப் புனைநாவல்கள், போற்றப்படும் எளிய விஞ்ஞானப் புத்தகங்கள் பல எழுதியுள்ளார்.

Quasars

1968 இல் பொதுநபர் விஞ்ஞான அறிவுப் புகட்டலுக்கு ஐக்கிய நாடுகளின் காலிங்கப் பரிசு [United Nations Kalinga Prize] ஹாயிலுக்கு அளிக்கப் பட்டது. நோபெல் பரிசுக்குத் தகுதி பெறாத ஹாயிலின் விஞ்ஞானப் பணிக்கு, சுவீடிஷ் விஞ்ஞானப் பேரவை [Swedish Academy of Sciences], அதற்கு அடுத்த கிராஃபோர்டு பரிசை [Crafoord Prize] அளித்துக் கெளரவித்தது. ஹாயில் பெற்ற பிற மதிப்புகள்: ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி, ராயல் வானியல் குழுவின் அதிபதி. அறுபதாண்டுகளுக்கு மேலாக விஞ்ஞானப் பணி புரிந்து உலக விஞ்ஞான மேதைகளில் ஒருவராகப் பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஃபிரெட் ஹாயில் 2001 ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் காலமானார்.

****************

Fred Hoyle ‘s Books:

1. Frontiers of Astronomy [1955]

2. Men & Materialism [1956], The Black Cloud [1957],

3. Star Formation [1963]

4. Galaxies, Nuclei and Quasars [1965]

5. The Relation of Physics & Cosmology [1973]

6. Ten Faces of the Universe [1977]

7. The Stonehenge [1977]

8. From Stonehenge to Modern Cosmology [1972], Copernicus [1973], Lifecloud [1978], Disease from Space [1979], Evolution from Space [1981].

9. Home is Where the Wind Blows -Autobiography [1994]

10 A Different Approach to Cosmology By: Hoyle, Burgidge, Narlikar [2000]

11 Static Universe through the Big Bang towards Reality By: Hoyl, Burbidge & Narlikar [2000]

தகவல்கள்:

1. Professor Sir Fred Hoyle By: Dr. Chandra Wickramasinghe [August 23, 2001]

2. Fred Hoyle Interview at the Institute of Astronomy Cambridge By: Brig Klyce [July 1996]

3. The Quest for the Origin of the Elements in the Universe -Experimental & Theoretical Nuclear Astrophysics By William Fowler [December 1983]

4. Professor Sir Fred Hoyle By: Martin Rees, University of Cambridge [2001 American Institute of Physics]

5. Professor Sir Fred Hoyle By: Bernard Lovell, The Guardian [August 23, 2001]

6. Dr. Fred Hoyle in Goa By: Dr. Nandakumar Kamat [Aug 2001]

7. Scientist of the Month, Science Show -Sir Fred Hoyle [August, 25, 2001]

8. Panspermia Thinnai Article By: Aravindan Neelakandan [September 7, 2002] http://www.thinnai.com/sc0909023.html

*****************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா