அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ஆபிதீன்


முஸ்லிம்கள் முசுடுகள், முன்கோபமிக்க மூர்க்கர்கள் என்று யாராவது சொல்லும்போது அவர்களின் ‘கொரவளை’யை கடித்துக் குதறி விடலாமா என்று வருகிறது. நான் ஒரு முஸ்லிம்.

கோபம் வருமா , வராதா? சொல்லுங்கள்.

உலகம் முழுக்க சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற முல்லா எந்த மதத்தைச் சார்ந்தவராம்? ஞானிகளுக்கு மதம் கிடையாது என்ற மழுப்பல் எல்லாம் வேண்டாம். நிதானமாக நூறு வருடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள். முல்லாவின் எத்தனையோ கதைகளை நான் உதாரணம் கூறமுடியும் இங்கே. முதலில் , அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. பெரிய மீன் துண்டை தனக்கு வைத்துக்கொண்டு சிறிய மீன் துண்டை விருந்தாளிக்கு வைத்தவர். அவருடைய முதல் இரவுதான் எவ்வளவு சுவையானது! முகத்திரை நீக்கி தன் குரூர முகத்தைக் காட்டியபடி , ‘அன்பே…இனி யார் யார் முன்னிலையில் நான் முகத்தைக் காட்டலாம்?’ என்று அவருடைய மனைவி கேட்டபோது, ‘யாருக்கு வேண்டுமானாலும் காட்டு – என்னைத் தவிர’ என்று கூறியவர். சுவர்கள் இல்லாமல் , ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு இருக்கிற சமாதியின் உள்ளே இன்றும் நம்மைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார் முல்லா – தான் சொல்லாததெல்லாம் தன் பெயரில் உலா வருவதை நினைத்து. இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். தெரியாத வேறொன்றைச் சொல்கிறேன். முஸ்லிம்களின் நகைச்சுவைத் திறனுக்கும் ‘வாதாம்பருப்பு’ உட்பட எந்த விமர்சனத்தையும் பொறுக்க அவர்கள் வல்லவர்கள் என்பதற்கும் ஒரு உதாரணம். அறிஞர் அப்துற் றஹீம் எழுதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம் , முதல்பாகத்தில் வருகிறது அந்தக் கதை. கர்ணகடூரமாக பாங்கு சொல்லும் முஅத்தின் பற்றிய கதை. இமாம் ஷைகு ஸஅதியின் ‘குலிஸ்தான்’-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

என்ன கதை?

குராஸான் நாட்டுத் தலைநகரான ஸஞ்சரில் உள்ள பள்ளிவாயில் ஒன்றில் பாங்கு சொல்ல ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அவருடைய ‘பாங்கு’ ஒலியைக் கேட்டு வெளியே உள்ளவர்கள் தொழுவதற்கு பள்ளிவாயிலுக்கு வருவதற்கு பதிலாகப் பள்ளிவாயிலில் உள்ளவர்கள் தொழாது வெளியே வெருண்டோடினார்கள். இதனை அறிந்த பள்ளிவாயில் மேலாளர் அந்த முஅத்தினை அழைத்து, அங்குப் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய முஅத்தின் திரும்பி வந்துவிட்டதாகவும் அவருக்கு மாதமொன்றுக்கு ஐந்து தீனார் தாம் சம்பளம் கொடுத்து வந்ததாகவும், இவர் சில நாட்கள் பணியாற்றியதற்குப் பகரமாகப் பத்து தீனார் தருவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு சென்றுவிடுமாறும் கூறினார். தம் பணியைப் பாராட்டும் முறையில் அவர் இவ்விதம் செய்வதாக எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியிடன் அப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்ற அவர் வேறொரு பள்ளிவாயிலுக்குச் சென்று அங்கு முஅத்தினாகப் பணியாற்றி வந்தார். சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் வந்து பள்ளிவாயில் மேலாளரைச் சந்தித்து, ‘தாங்கள் பத்து தீனார் தந்து போகச்சொன்னது பெரும் அநீதி. நான் இப்பொழுது ஒரு பள்ளிவாயிலில் முஅத்தினாகப் பணியாற்றி வருகிறேன். அதை விட்டும் விலகிச் செல்வதானால் அங்கு இருபது தீனார் தருவதாகச் சொல்கிறார்கள். நான் ஒத்துக் கொள்ளவில்லை’ என்று கூறினார். அதுகேட்ட மேலாளர் கூறினாராம் : ‘நல்ல வேலை செய்தீர். அவர்கள் உம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஏமாந்து விடாதீர். சற்று உறுதியாக இருப்பின் ஐம்பது தீனார்வரை தர முன்வருவார்கள். அறிவோடு பிழைத்துக் கொள்ளும்’

கதையைக் கேட்ட எந்த முஸ்லிமும் இன்றுவரை கோபம் கொள்ளவில்லை. படித்தால்தானே, புரிந்தால்தானே என்றெல்லாம் பரிகாசம் வேண்டாம். உண்மையாக நடந்ததாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கேட்டால் உள்ளத்தை உலுக்கிவிடும் பாங்கு சப்தம் , பல மோதினார்களின் – முஅத்தின்கள்தான் – குரல்வளம் காரணமாக என்னைப்போன்றவர்களை பள்ளியை விட்டு ஓட வைத்துவிடுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஊரிலுள்ள சின்ன ஹொத்துவாப்பள்ளி மோதினார் ஹனீ·பாக்கா பாங்கு சொன்னால் மட்டும் உடம்பெல்லாம் ஆடி கரகரவென்று கண்ணீர் வந்துவிடுகிறது எனக்கு.

மக்கா இமாமைத் தோற்கடிக்கும் மகத்தான குரல் அது. கேட்கும் சகோதர மதத்தவர்களே கரைந்துவிடும்போது மூளைகெட்ட ஷைத்தான் நான் எந்த மூலை?

புகழ்பெற்ற இஸ்லாமியப் பாடகரான பீயெம்கலிஃபா ‘பாடுவதை’க் கேட்க கட்சிபேதம், காட்சிபேதமின்றி ஜனங்கள் கூடுவது அவர் இசையைக் கேட்கவா? ஜூபிடர் கிரகம் நடுங்க – ‘மைக்’ உபயோகிக்காமலேயே – அவர் சொல்லும் பாங்கு அப்படி. அதன் பாங்கு அப்படி. அடடா, ‘அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லா…’வை அவர் இழுக்கும்போது பிலால் ரலியல்லாஹுஅன்ஹு மீண்டும் பிறந்துவிட்டார்களோ என்றல்லவா தோன்றுகிறது! பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை பற்றி ஒரு பத்தி இங்கே எழுதலாமா? வேண்டாம். ‘அதான்’ என்று அரபியில் சொல்லப்படும் தொழுகைக்கான அழைப்பொலி எப்படியிருக்க வேண்டும் என்று நபி(ஸல்) யோசித்துக்கொண்டிருக்கும்போது, இப்போது சொல்லப்படும் முறையானது அப்துல்லா பின் ஸைத் என்பவருக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் ஒன்றுபோல வந்த கனவென்ற அதிசயம் கூறி கழன்று கொள்வோம். இதுதான் சாக்கு என்று அதிகம் இஸ்லாத்தை அவிழ்த்தால் ‘புஹாரி நாத்தம் கொடல புடுங்குது சாமி’ என்று திட்டுகிறார்கள். சாம்பாரில் ஒரு துண்டு இறைச்சிக் கறி போட்டு சுவைத்துப்பாருங்கள் சாமி, தெரியும் வேறுபாடு.

நீண்டநேரம் மூச்சை இழுத்து தான் பாடுவதைப் பார்த்து கைதட்டும் மக்களைப் பரவசப்படுத்த , இன்னும் இன்னும் என்று நீட்டி நீட்டி , ஒருநாள் மேடையிலேயே ஒரேயடியாக உடலை நீட்டிவிட்டார் பீயெம்கலிஃபா.

ஜனங்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்!

இந்த இடத்தில் இன்னும் ஒரு தமாஷ். என் நண்பர் ஹய்யும் சொன்னார். ரொம்பப் படித்த ஒரு மவுலவி தன் அதி முக்கியமான சந்தேகத்தை அடிக்கடி கேட்பாராம், ‘தர்ராவா துர்ராவா? என்று.

‘புரியலையே சாபு’

‘முஹம்ம துர்ர சூலுல்லாவா, முஹம்ம தர்ர சூலுல்லாவா? எது சரின்னு தெரியலே’

எவ்வளவு பெரிய உலகப் பிரச்சனை! இவராவது பரவாயில்லை, சென்றமாதம் துபாயில் இருந்தபோது, அஜ்கான்பள்ளியில் ஒரு விழா. அமீரக பாசம் அதிகமுள்ள ஒரு இந்திய எம்.பி , நல்ல திட்டங்கள் ஏதுமிருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். கழக அமைச்சர்களோடு காண்ட்ராக்ட் போடுவது தவிர அவருக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் மூவாயிரம் திர்ஹம் சம்பளமென்று வாங்கி முன்னூறு திர்ஹத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு பில்லியனர்களாக உலா வருகிறவன்களுக்கு பினாமி வேலை செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது, பாவம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல , பள்ளி இமாமின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது: ‘ஊர்ல ஓட்டுப் போடும்போது விரல்லெ வைக்கிற மையால தொழுகைக்கு இடையூறா இருக்குகிறது.’ என்று. அடிக்கவே போய்விட்டார்கள் ‘ட.மு.கு.ட.பா’ கழக இளைஞர்கள். அல்லா கொடுக்கும் மச்சத்தை இவர் என்ன செய்வார்? என்ற கேள்வியுடன் நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘விடுங்க..அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்றார்’ என்று கூலாகச் சொல்லி அவரைக் காப்பாற்றினார் எம்.பி.

இந்த மாதிரி இமாம்கள் பின்னால்தான் தொழுகிறோம், அவர் ‘துஆ’ கேட்பதற்கு ‘ஆ…மீன்’உம் போடுகிறோம்…

இடஒதுக்கீடு கிடைக்காதது இப்போதுதான் புரிகிறது!

துபாயில் நான் தங்கியிருக்கும் புறாக்கூண்டுக்குப் பக்கத்தில் எளிய ஒரு மஸ்ஜித் உண்டு. பரிச்சயமான பெங்களூர் பாய் ஒருவரைப் பார்த்தேன் ஒருசமயம் . பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தார். என்னையும் கூப்பிட்டார். ‘எப்பவாச்சும் நெனச்சா மதினாசூப்பர்மார்கெட் பக்கமுள்ள மஸ்ஜிதுக்குப் போவேன். இங்கே போவ மாட்டேன்’ என்றேன். ‘ஏன் பாய்?’ ‘பாங்கா சொல்றாங்க? காட்டெருமை கத்துற மாதிரி! தொழுவுற ஆசையே பொய்டும் மனுஷனுக்கு’

‘நாந்தாங்க அங்கெ பாங்கு சொல்றது’ என்றார் அப்பாவியாக.

என் எச்சரிக்கையில் இடிவிழ!

இந்த தமாஷையெல்லாம் விடுங்கள், அற்புதமாக பாங்கு சொல்பவர்களுக்கு ‘பாங்கான்’ பட்டமே கொடுக்கலாம் என்பது என் அபிப்ராயம். ‘பாங்கான்’ – இரண்டு வகை. ‘பாங்கான் ஊதுறது’ என்றால் கட்டைவிரலையும் ஆள்காட்டிவிரலையும் விரித்து – குவியும் அதன் நடுப்பகுதியை உதட்டருகே வைத்து ஊதி – ஒலி எழுப்புவது. வெடைப்பதற்காக ஊரில் செய்வார்கள் அப்படி. நான் சொல்லும் ‘பாங்கான்’ அதுவல்ல. ‘பாங்கான்’ என்பது ஒரு சாப்பாட்டு ஐட்டம். பாங்காக் சபராளிகள் கொண்டுவந்து பதம். கொடுமையாக கவுச்சியடிக்கும் உள்ளமீனை ஒதுக்கி கொடுவா, வவ்வா போன்ற நல்ல மீன்களை வைத்து உம்மா செய்வார்கள். அரைப்பதத்தில் மீனை பொறித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்வார்கள். பிறகு வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை – மசாலா சேர்த்து வதக்கி – கடைசியில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேங்காய்ப்பால் ஊற்றி ‘தம்’மில் வைத்து எடுப்பார்கள். ஆஹா, நினைக்கும்போது எச்சில் ஊறுகிறது. அஸ்மா, எனக்கு ஊறுது புள்ளே,உனக்கு?

அஸ்மா என் மனைவி. ‘வந்த பத்து நாளக்கி பரபரன்னு வரும், மோந்து மோந்துக்கிட்டு. அப்புறம் அதுபாட்டுக்கு பாட்டு, பொத்தஹம்டு அடங்கிடும்’ என்று மரியாதையாக அலுத்துக்கொள்ளும் மனைவி. வரும்,அது,டும்,ம்..!

என்னைக் காப்பாற்ற அவளைத்தான் கூப்பிட்டேன் அன்று. கதையே இப்போதுதான் ஆரம்பமாகிறது. பெரும்பாலும் என் கதைகள் முடிவுக்குப் பிறகுதான் தொடங்கும். இது ‘நட்ட நடுவால’! இதற்கெல்லாம் இலக்கணம் உண்டா என்ன? நாம் உதிர்ப்பதுதான் எழுத்து. நமக்கு உதிர்வதுதான் எழுத்து. இந்த வரியை எழுதும்போது எழுத்தாளர்களின் ரோமம் சம்பந்தமான ஒரு தகவல் ஞாபகத்தில் உதிர்கிறது. வளர்ந்த விஷயம். ‘ஏன் தாடி வளர்க்கிறேன்? என்று போனவாரம் கட்டுரை எழுதியிருந்தேனே, படித்தாயா?’ என்று அந்த நாள் ஜாம்பவான் அ.பி கேட்டபோது ம.பி சொன்னாராம்:’ ஏன் தாடி வளர்கிறது? என்று எழுதியிருந்தாயானால் படித்திருப்பேன்’

தாடி ஏன் வளரக்கூடாது?

*

அன்று நான் வீட்டிற்கு வெளியேயுள்ள வராந்தாவில் ரிலாக்ஸ்டாக – ‘சாய்’ கிடைக்காமல் – சாய்ந்திருந்தேன். தெருவைத்தான் நான் வராந்தா என்று சொல்கிறேன். வீடு அப்படி. வீட்டின் நிலைமை அப்படி. முப்பது வருட அரபுநாட்டு சம்பாத்தியம் என்றால் சும்மாவா? தேரடியிலிருந்து அதிர்ந்தபடி தெருவிற்குள் நுழைந்து, கடற்கரைநகருக்கோ அல்லது அங்கிருந்து குஞ்சாலித்தெருவில் திரும்பி தர்ஹாவுக்கோ விரையும் வாகனங்கள் எழுப்பும் புழுதிதான் எனக்கு புகழுரை. எதிர்வீட்டு ·பர்ஹான்பாய் வீட்டிலிருந்து ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பாட்டு கேட்டது. பின்னே, துலுக்கத் தெருவில் ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’யா வரும்? என்றெல்லாம் நீங்கள் துடுக்குத்தனமாக கேட்கக் கூடாது. என்னைப்போல சிலரின் வீட்டிலிருந்து வரும். ‘(பாலாஜியை நான் தரிசிப்பதற்காக) என்னை யாரும் திட்டலாம். ஆனால் சு(ரு)தியோடு திட்டனும்’ என்று கண்டிஷன் போடும் பனாரஸ்கான்கள் போல ஓரிரு கான்கள் எங்கள் ஊரில் இப்போதும் உண்டென்று காண். But they are not Terrorists!

அது போகட்டும், இப்போது கேட்டது புகழ்பெற்ற ஒரு பாட்டு. பெரும்பாலும் சத்தமாக , ஹிந்திப்பாடல்களோ பம்பாய் பாஷாக்களின் மட்டரகமான கவ்வாலியோ கேட்கும் அந்த ‘கோழிப்பட்டாணி’ வீட்டிலிருந்து அது வருவது ஆச்சரியம்தான். உருதுமுஸ்லீம்களை ‘கோழிப்பட்டாணி’ என்று இகழ்ந்து பேசுவது தமிழ் முஸ்லிம்களின் வழக்கம். இஸ்லாம் எங்கள் வலி, இன்பத் தமிழ் எங்கள் முழி! இதைத் தொட்டால் எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகும். நான் நெகிழ்ந்த பாட்டுக்கு வருகிறேன். முன்பே கேட்டதுதான். ஆனால் இப்போது என்னமோ செய்தது. அதைப் பாடிய கூவல்.ஷேக்ரஹ்மானை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. தமிழகத்தின் ‘சன்ச்சல்’ என்று சொல்வார்கள். ‘யாரா ஓ யாரா’ பாடலுக்கு முன் நிற்க இவன் யாருரா?’ என்று திட்டியபடி , அவர் கத்திவெளியிட்ட கேசட்டை தரையில் வீசி உடைத்திருக்கிறேன் சுக்கு ஆயிரமாக. ஆங்காரமான இளமைக்காலம். கொடுத்த நண்பரின் முகம் கோணிப்போயிற்று – மேலும். ஆனால் இப்போது…ஏதோஉடைந்தது என்னுள்ளே. வயசாயிடிச்சோ? சே, அம்பது வயசெல்லாம் ஒரு வயசா? இப்பதானே பொறந்தோம்!

‘உனையன்றி வேறெதுவும் நினைத்தறியேன்
உன்புகழ் கூறாத சொல்லறியேன்
அணைபோட்டுத் தடுக்காத அருள்வெள்ளமே – நெஞ்சின்
அலைமோதும் நினைவெல்லாம் நீயல்லவோ’

என்ன பாட்டு, என்ன பாட்டு! தா. காசிமின் பாடலா? அவர்தான் இப்படி எழுத இயலும். கடைசிவரை கஞ்சிக்கு கஷ்டப்பட்டும் கருணையைச் சொன்னவர். வாழ்வதே கருணை என்பதால் போலும். யார் வாழ்வது?

அப்போதுதான் அவர் வந்தார்.

எழுத்தாளன் மனம் சாந்தமடைத்திருக்கும்போது இறைவன் மட்டுமல்ல, வாசகனும் வருவான்!

எனக்கும் ஒரு வாசகர் இருப்பது அப்போதுதான் தெரிந்தது.

யார் என்னைக் காட்டித் தொலைத்தார்களோ (ஆம்பூர் தோல் போர்த்திய அரூமியாகத்தான் இருக்கவேண்டும்) ‘நகைச்சுவைக் கதை எழுதுவதெப்படி?’ என்ற கேள்வியுடன் வந்தவர் – கொஞ்சநேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு – ‘சரிதான்’ என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டார்.

‘என்ன?’

‘இல்லே சார்.. உங்க கதையில நீங்க உங்களை குரங்கு மாதிரி இருக்குறதா சொல்லியிருக்கீங்க’

‘அ..ஆமாம், நம்மை நாமளே பொய்யா கிண்டல் செஞ்சிக்கனும். படிக்கிறவங்களுக்கு அது ரொம்ப சிரிப்பா இருக்கும்’ – சமாளித்தேன்.

‘உண்மையைத்தானே சொல்லியிருக்கீங்க’

விடமாட்டான் போலிருக்கே…! இப்போதெல்லாம் வாசகன் உஷாராக இருக்கிறான். படிக்காமல் விமர்சனம் செய்யும் தன் பண்பைப் போக்கிவிட்டான். கவனமாகத்தான் இனி எழுதித், தொலைய வேண்டும்.

வீட்டிற்குள் கூட்டிப்போனேன். காப்பாற்ற மனைவி இருக்க கவலை எதற்கு? ‘அஸ்மா.. ரெண்டு தேத்தணி தா’. ஒருமணி நேரத்திற்குள் ஒரு தேத்தணி எடுத்து வந்தவளிடம் அவர் சொன்னதைச் சொன்னேன், அட்டகாசமாக சிரித்துகொண்டே.

‘ரொம்ப நாளைக்கிபொறவு இன்னக்கி குளிச்சி , பவுடர்லாம் பூசியிருக்காஹா’ என்றாள்.

போய்விட்டாள் – புர்க்காவுடன்.

*

‘நீங்கள் வந்து சென்ற மேலேயுள்ள பகுதியை படித்துப் பாருங்கள். இதுதான் உத்தி. கதையில் வரும் பாத்திரம் அந்தக் கதையைப் படிப்பது புதுமையும் அல்ல’ என்றேன். லத்தி அமெரிக்கா, புத்தி ஆப்ரிக்காவெல்லாம் போகவேண்டாமென்று உதாரணமும் சொன்னேன். சீதையை காட்டுக்குக் கூட்டிப்போக மறுக்கும் ராமனைப் பார்த்து – அத்தியாத்ய ராமாயணம் போன்றவைகளில் – சீதை சொல்கிறாள் : ‘ஏற்கனவே நடந்து முடிந்த ராமாயணங்களில் என்னைக் காட்டுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறீர்கள் ராமா!’. ‘முன்னூறு ராமாயணங்களின் ஐந்து உதாரணங்கள்’ கட்டுரையில் படித்த ஞாபகம். ஏ.கே.ராமானுஜத்தின் உரை அது. ‘எப்படி?’ என்றேன். ஆள் உஷார். ‘நகைச்சுவையாக எழுதுவது எப்படின்னு மட்டும் சொல்லுங்க சார், போதும். அனாவசியமா உங்க தெறமை பொலமையெல்லாம் காட்டாதீங்க’ என்றார்.

என்னடா இது, வீடு தேடி வந்து விதி விளையாடுகிறது!

‘ஒன்ணும் செய்யவேணாம். ஜானகிராமன் கதைகளை மட்டும் படியுங்க. சிரிக்கவைக்கிற டேலண்ட் வந்துவிடும். உதாரணம் : ‘ஸாருக்கு காவேரிக் கரைதானே?’ ‘ஆமாண்ணா.. எப்படித் தெரிஞ்சது?’ ‘வெத்தலைக் கறையைப் பாத்தாலே தெரியறதே!’. என் புத்தக அறையில எழுதிவச்சிருக்கிற வாசகம் கூட அந்தாள் சொன்னதுதான். ‘வாழ்க்கையைப் பார்த்து சிரிக்கணும். சந்தோஷமா இருக்கக் கத்துக்கனும். சிரிச்சிண்டே இருப்பேன்னு பிடிவாதம் பிடிக்கனும். கங்கணம் கட்டிக்கணும். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சிரிக்கிறதை நிறுத்த மாட்டேன்னு, சண்டித்தனம் பண்ணனும். பல்லு வலிக்க, மனசு கொள்ள சந்தோஷமா சிரிக்கணும்’ங்குறார். எப்பேர்ப்பட்ட மனசு! விகடன் தீபாவளி மலர்லே ‘துணை’ ண்டு ஒரு கதை. ஹா..ஹா..’

‘புத்தக அறை எங்கே இருக்கு இங்கே?’

‘இன்னமேதான் கட்டணும், அல்லாஹ் பெரியவன்’

‘அதானே பார்த்தேன், ரேஷன் அட்டை கூட வைக்க முடியாது போலிருக்கே இங்கே!’

‘அல்லாஹ் பெரியவண்டு சொன்னேன்ல?’

‘சரி , வேறு யாராவது?’

ராகினி ரத்னசாமியைச் சொல்லலாமா? வேண்டாம் , அவருடையது லூசாக இருக்கும், அதாவது லூசுத்தனமாக. மெதுவாக யோசித்துவிட்டுச் சொன்னேன். தன் இளமைப்பருவத்தை எழுதும்போது , ‘அப்போதும் நான் முட்டாளாகத்தான் இருந்தேன்’ என்று சொன்ன அ.மு, கும்பமேளாவில் கலந்து கொள்ள குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபாவை அழைத்துச்சென்ற கு.மு, குளிக்கும் பொண்டுகளை குனிந்து பார்க்கச் சொன்ன இ.மு, அப்புறம் பழைய ஆட்களான பு.பி, கோ.பி… ‘யாரைப் படிச்சாலும் சரிதான், இந்த என்னூர்விரதனை மட்டும் படிக்காதீங்க’ என்று சொன்னேன். ‘ஏன்?’ ‘அவரோட எழுத்துல பொம்பளைங்க மேல நெஜமான கரிசனை, ஒரு வலி இருக்கு. அவர் கொடுக்குற தலைப்பே அட்டகாசம். ஒரு கதையோட பெயர்: ‘ஆலமரத் தொடையழகு!’

வாசகர் முகத்தில் வாட்டம் போகவில்லை.

குஷ்வந்சிங் என்று தன்னை நினைத்துக் குதித்துக் கொண்டிருப்பவரின் கட்டுரைகளில் ஓரிரண்டை படிக்கச் சொல்லலாமா? வேண்டாம், சக்தி தரும் ஷோபனாதான் சரி. அவளுடைய துணுக்கு ஒன்றைக் காட்டினேன். ஈழத்துப் பத்திரைக்கையொன்றில் – ‘புலி’ இருமிக்கொண்டிருந்த காலத்தில் – வந்த துணுக்கு. ஜனநெரிசல் மிக்க பஸ் ஒன்றில், கம்பியைப்பிடித்து தள்ளாடிக்கொண்டிருக்கிற முதியவர், பக்கத்திலுள்ள இளைஞனிடம் பேச்சு கொடுக்கிறார். ‘கேக்கிறன் எண்டு குறைவிளங்கக்கூடாது. தம்பி ஏதும் இயக்கமோ?’ ‘இல்லைப் பெரியவர்’ ‘தம்பிக்கு தெரிஞ்சவை ஆரும் இயக்கத்தில் இருக்கினமோ?’ ‘ஓ நோ!’. ‘அப்ப எடடா காலை. பஸ் வெளிக்கிட்டதிலயிருந்து என்ர காலை மிதிச்சிக்கொண்டொல்லோ நிக்கிறாய்!’

இது தென்கச்சியாரின் ஜோக் என்று சொன்னார் வாசகர். தென்கச்சியாரே ஒரு கூட்டத்தில், ராமகிருஷ்ணா மடத்தின் சில புத்தகங்களிலிருந்துதான் பல கதைகளை தான் எடுத்துச் சொல்லிவந்ததாகவும் , ஒரு நாள் அந்த மடத்து சாமியார் அவரைக் கூப்பிட்டனுப்பி, ‘பிரமாதமாக சொல்றீங்களே.. ஆமா, இதையெல்லாம் எங்கேயிருந்து எடுத்தீங்க?’ என்று கேட்டதாகவும் சொன்னாராம். சொல்லியிருப்பார். சாமியார் படிக்கவில்லையென்று அர்த்தம்! தெரிகிறது. ஆனால் நான் சொல்ல வந்தது, பெரிய எழுத்தாளர்களை விட சாதாரண ஜனங்கள் எவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் என்று சுட்டிக் காட்டத்தான் என்றேன்.

‘ம்’

‘எழுத்தாளர்களை விடுங்க. ‘ப்ளாக்’-ல பிச்சு உதர்றாங்க பலபேரு. ‘ஜவ்வுலால்’னு ஒருத்தர். ஜப்பான் போனபோது அங்கேயுள்ள பிச்சைக்காரன் ஒருத்தனோட சேர்ந்து ·போட்டோ எடுத்திருக்கார். ‘ஜப்பான் பிச்சைக்காரன்’ என்று தலைப்புல அந்தப் போட்டோவை நண்பருக்கு அனுப்பினபோது அவர் கேட்டாராம் ,’ இதுல யாரு பிச்சைக்காரன்?! எப்படி? இதையிலாம் காப்பி-பேஸ்ட் பண்ணி நம்ம workலெ அங்கங்கே புகுத்தனும். InterTextண்டு சொல்லிக்கலாம்’

‘… ….’

‘என்ன தீர்க்கதரிசனம் ஒருத்தருக்கு! ‘அக்ரஹாரத்தில் கழுதை’ தூர்தர்ஷன்ல போடப்போறாங்க அப்படீங்குறதை , ‘கழுதை இன்றைக்கு வீட்டிற்கு வருகிறது’ன்னு எழுதினார்; அன்னக்கே செமத்தியா உதை வாங்கினார்!’

‘அப்படியா?’

‘ப்ளாக்லெ வர்ற கமெண்ட்ஸ், அதுல உள்ள ரெண்டு மூணு வார்த்தைகூட சிரிக்க வச்சிடும். அர்த்தம் தெரியலேனாலும் அதப் பயன்படுத்திக்கலாம். ரொம்ப தீவிரமா அடிச்சிக்கிட்ட ஒரு விவாதத்துலெ வந்த ‘அல்லுடு மஜாக்கா கித்த்ரமிக்கி ஜலேக்கா’ மாதிரி! படிச்ச அன்னக்கி நாள்முழுக்க சிரிச்சிருக்கேன் பாத்துங்குங்க’

அழுதுவிடுவார் போலிருந்தது.

பத்துக்குடி அக்ரஹாரம் மாதிரி , அறைக்கு பத்திருபது பேராக வாழும் துபாய் ‘பேச்சுலர்’களின் அவல நிலையைச் சொல்லி, சுற்றியுள்ளவர்களின் சோகங்களைக் கொண்டுவர வேண்டுமென்றேன். ‘என்ன சார் இது, ‘வயர்லெஸ் ப்ராட்பேண்ட்’ வந்ததும் வந்தது, ஒவ்வொரு ரூமும் பைத்தியக்கார ஆஸ்பத்திரி மாதிரி ஆயிடிச்சி. ஆளுக்காள் டூட்டி முடிச்சி வந்ததுமே , பாத்ரூம்கூட போகாம, கம்ப்யூட்டர தொறந்து வீட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுறான் – மணிக்கணக்கா. நாலு மணி நேரம் தொடர்ச்சியா பேசுன ஒருத்தன் , ‘ஓ..அத கேக்கிறியாடீ…அது பெரிய கதை. இப்ப சொல்ல முடியாது’ன்னு சொல்லி முடிக்கிறான்; அடுத்த நாலு நிமிசம் கழிச்சி சத்தமா ஆரம்பிக்கிறான், ‘எங்கேடி போனே, என்னாடி செஞ்சே, என்னா மசுருடி புடுங்கினே?’ன்னு. எல்லா ‘bed-space’லேர்ந்தும் விதம்விதமா சத்தம், பொலம்பல். சே, யாரால பைத்தியமானோமோ அவங்கள்ட்டேர்ந்தே ட்ரீட்மெண்ட்! வேடிக்கையா இல்லே?’

வாசகர் முகத்தில் கடும் வெறுப்பு புலப்பட்டது – இவனைப்போயா நம்பி வந்தோம் என்பது போல. இந்த ஆளுக்கு இலவச டிப்ஸ்கள் சொல்லி என் சிரிப்பெல்லாம் போய்விடும் போலிருக்கிறதே. ஏமாளி என்நிலை நினைத்து எத்தனைபேர் சிரிக்கிறார்கள், எமன் மாதிரி எத்தனாக இவன் இருக்கிறானே! – என் சொய்ங்ஞானப் புலம்பல்.

மீண்டும் காப்பாற்ற வந்தாள் அஸ்மா. ‘தர்ஹாக்கு கூட்டிட்டுப் போய் வாங்களேன் மச்சான், சாப்பாடு செஞ்சி வச்சிடுறேன்’ என்றாள். ஆமாம், அங்கே சிரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அது நாவலில் அல்லவா போய் முடியும்!

Jerome K. Jerome , திறந்துடு திசே!

*

‘ஒன்றும் பிரச்சனையில்லைதானே?’ என்று கேட்டபடி வந்தார் வாசகர்.

‘என்ன பிரச்சனை? யாரை பாத்தாலும் ‘சலாமலய்க்கும்’டு சொல்லுங்க. ‘அலைக்கும்சலாம் நூத்தியொரு ரூவா பதினோரு காசு’ம்பாங்க; அவ்வளவுதான்!’

சிரித்தாரோ? இல்லை. என் கற்பனை. பாவி, நான் ‘மவுத்’தானால்தான் என் திறனை ஒத்துக்கொள்வான் போலும்!

தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிற அவுலியாவின் சரித்திரம் கேட்டார். விளக்கியபடி வந்தேன். தன் குருவைத் தேடி அவுலியா போகும்போது , காட்டு வழியில் பெரும் புலி ஒன்று வந்ததையும் , அவர்கள் ‘ஜாவ்’ என்று சொன்னதும் அது போய்விட்டதையும் சொல்லிவிட்டு, ‘உருது தெரிஞ்ச புலிங்க அது. சப்போஸ் ‘ஜாவ்’ண்டு சொல்றதுக்கு பதிலா ‘ஆவ்’ண்டு சொல்லியிருந்தாஹாண்டு வைங்க. என்னாயிருக்கும்?’ என்றதற்கும் முகத்தில் ஒரு சலனமில்லை. ‘டெக்னிக்’குகளை சேகரித்துக்கொண்டிருக்கிறாரோ? இவன் மனிதனே இல்லை. அந்தப் புலியை விட்டுதான் கடிக்கச் சொல்ல வேண்டும்.

‘மகான்களைக் கிண்டல் செஞ்சாத்தான் பொளப்பு நடக்கும்’ என்றேன்.

‘அற்புதங்களை நம்புறீங்களா?’

பின்னே? எவ்வளவு கிண்டல் செய்தாலும் ‘நம்மைச் சொல்லவில்லை’ என்று முஸ்லிம் ஜனங்கள் என்னை விட்டுவைத்திருப்பது அற்புதமல்லவா?! உண்மையில், அற்புதங்கள் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு. எவ்வளவு அழகான புனைவுகள்! மௌலானா ரூமி தன் குரு ஷம்ஸே தப்ரேஸை முதன் முதலாக சந்திக்கும் இடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மஸ்ஜிதில் – ‘ஒலு’ (சுத்தம்) செய்வதற்கான ‘ஹௌலு’ அருகே – மௌலானா ரூமி அவர்கள் மௌனமாக சில நூற்களை படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் குரு அங்கே வந்து , ‘நீர் படிப்பது என்ன நூல்?’ என்று கேட்டதற்கு ‘ இவைகள் இல்ஹாமால் (இறை உதிப்பு) எழுதப்பட்டவை. உமக்கெல்லாம் எங்கே தெரியப்போகிறது?’ என்று திமிரோடு சொன்னார்களாம். அந்த நூற்களைப் பிடுங்கி ஹௌலுத் தண்ணீரில் எறிந்து விட்டார்கள் ஷம்ஸே தப்ரேஸ். ரூமி கலங்கித் தவித்து அழுதபோது , தண்ணீரில் கைவிட்டு அந்த நூற்களை எடுத்துக்கொடுத்தார்களாம். புத்தகம் துளிக்கூட நனையவில்லை! குருவின் மேல் ரூமி கொண்ட ‘இஷ்க்’ (காதல்) ஒரு அற்புதம். இதே அற்புதம் , எங்கள் ஊர் – பக்கத்து ஊர் – பக்கத்து மாநில – நாட்டு அவுலியாக்கள் மேல் சொல்லப்படுவது பெரும் அற்புதம்! அவுலியா செய்ததெல்லாம் பின்னர் மாதாவுக்கு, மாரியம்மாவுக்கு என்று நீளுவது நம்பமுடியாத அற்புதம். நம்பாமல் என்ன செய்ய?

நானொரு ஒட்டகப் புன்னகை செய்தேன்.

அவுலியா அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியவாசலுக்கு எதிரே ஜனங்கள் ‘ஜியாரத்’ செய்துகொண்டிருக்க, ஒருவர் மட்டும் உட்கார்ந்துகொண்டு ஏதோ சைகை செய்துகொண்டிருந்ததை இருவரும் கவனித்தோம். அவுலியாவை தன்னிடம் வருமாறு விரலை ஆட்டிஆட்டி கூப்பிட்டுக்கொண்டிருந்தார் அவர். ‘ஊஹூம், நான் வரமாட்டேன்’ என்று அவுலியா சொல்வதுபோலவும் ,’இல்லை, நீங்கள் இங்கே வந்துதானாக வேண்டும்’ என்பதுபோலவும் சைகை. ஞானச்சிரிப்பு வேறு. ‘என்னாங்க பன்றார்?’ என்று வாசகர் கேட்டார். நான் அந்த பக்தரின் கால்களை பார்க்கச் சொன்னேன். கனத்த இரும்பு சங்கிலி சுற்றப்பட்டு தர்ஹா யானையின் கால்கள் போல பெருத்திருந்த தூண் ஒன்றில் இணைத்திருந்தது.

‘அரபுநாட்டுல இப்படித்தான் இருக்குறோம்’ என்று சொல்லியபடி அவரை பீர்மண்டபம் கூட்டிப்போனேன்.

‘பீர்’ என்று அழைக்கப்படுகிற குருமார்கள் தங்குவதால் பீர் மண்டபம் என்று சொல்வார்கள். அதனாலேயே BEER மண்டபம் என்றும் சொல்லலாம். அங்கிருந்தபடியே பிச்சைக்காரர்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது (‘சஃபர்’ முடிந்ததும் நான் உட்கார வேண்டிய இடமாயிற்றே!) ஒரு யோசனை வந்தது. என்னை நகைச்சுவையாக எழுதத்தூண்டிய, இன்று இந்த கதிக்கு என்னை ஆளாக்கிய , தமிழய்யா ‘சக்கரை’ சண்முகம் பற்றி இவரிடம் சொன்னால் என்ன?

காலையில்தான் அவருடைய பழைய பட்டிமன்றப் பேச்சு ஒன்றை – MP3யை ஓடவிட்டு , ஓடவிட்டு – எழுதியிருந்தேன். அதை உணர்ச்சி பொங்கும் குரலில் உரக்கப் படித்துக் காட்டினேன். தமிழய்யாவை ‘பெருசு’ என்று நடுவர் கிண்டல் செய்தபோது தமிழய்யா சொன்னார் : ‘ஓ.. என்னோட வழுக்கையை வச்சி நீங்க சொல்றீங்க! கனம், நீதிபதி அவர்களே, இந்த வழுக்கை என்பது முதுமையின் அடையாளம் அல்ல என்பதை உங்களுக்கு நான் மெத்தப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்ப.. தென்னைமரத்துலே தேங்காய் பறிச்சிக்கிட்டிருக்கான், கீழே நிக்கிறவன் சொல்றான், ‘தம்பி.. தாகமா இருக்குப்பா, இளசா ரெண்டு பறிச்சிப் போடுப்பா’ அப்படீன்னா எதை பறிச்சிப் போடுவான்? வழுக்கையைதான் பறிச்சிப் போடுவான்! அப்ப, ‘வழுக்கை’ என்பது இளமையின் சின்னம்! கனம் நீதிபதி அவர்களே… ‘

‘நிறுத்துங்க’ என்று சொல்லி என்னை பரிதாபமாகப் பார்த்தார் வாசகர்.

உண்மையில் , தமிழய்யாவின் நகைச்சுவை விசேஷமானது. பட்டிமன்றங்களுக்கே உரிய ரெடிமேட் நகைச்சுவையாகப் போய்விட்டதாலும் அதையும் முறையாக சொல்லத் தெரியாததாலும்தான் சொதப்பி விட்டது. ‘மாணாக்கர்களே, Mother என்று அழைக்கும் கன்றை நீங்கள் எங்கேயாவது கண்டதுண்டோ? இதிலிருந்து என்ன தெரிகின்றது?’ என்று தன் தமிழய்யா கேட்டபோது, ‘மாடுகளுக்கு ஏற்ற மொழி தமிழ் என்று தெரிகிறது’ என்று ஒரு மாணாக்கன் சொன்னதாக கிண்டல் மன்னன் கி.மு ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். எங்கள் தமிழய்யாவுக்கு இந்தமாதிரி ஓவர் தமிழ்ப்பற்றெல்லாம் கிடையாது. ‘காலத்துக்கு தகுந்தமாதிரி வேற்றுமொழிச் சொற்களை எடுத்துக்கலாம். இல்லேன்னா விபரீதமா பொய்டும். கண்ணதாசன் சொன்னான், பஸ் ஏறி காளை மரணம்டு சொல்றதுதான் சரி. பசு ஏறி காளை மரணம்டு சொன்னா…?’ என்று அத்தனை மாணவிகளுக்கும் முன்னால் அதிர்வெடி வெடித்தவர் அவர். அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது, ‘இப்பல்லாம் பசுதான் காளையை ஏறுதுடா!’ என்றான் ஊரிலுள்ள நண்பன் பாலா. ஆட்சேபணையே கிடையாது!

இன்னொன்று, தமிழய்யாவுக்கு கொஞ்சம் மந்திர வேலைகளும் தெரியும்!. ஆமாம், நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்…அப்போது அவர் ‘நீதிபோதனை’ பீரியடுக்காக எங்களுக்கு வருவார். வகுப்பில் ஒருநாள் என்னுடைய பென்சில் டப்பா திடீரென்று காணாமல் போய்விட்டது. அழகான அலுமினிய டப்பா அது. வீட்டு முற்றத்தைச் சுற்றிலும் பைப் போட்டுக்கொண்டிருக்கும்போது அந்த வேலை செய்யவந்தவர் செய்துகொடுத்தது. எல்லா பிள்ளைகளுக்கும் அதன்மேல் ஒரு கண். எப்படி மாயமாய் போயிற்று? காலையில் கொண்டுபோயிருந்தேனே.. தமிழய்யாவிடம் சொன்னதும் – ‘அப்படியா? கண்டுபுடிச்சிடலாம் மரைக்காரே..’ என்று எல்லாப் பிள்ளைகளிடமும் ஒரே உயரமுள்ள சாக்பீஸ்களை கொடுத்தார். ‘ இப்ப நான் ஒரு மந்திரம் போடப் போறேன்.. யார் அதை எடுத்தாங்களோ அவங்களோட் சாக்பீஸ் மட்டும் கொஞ்சம் உசரமா ஆயிருக்கும்’ என்று சொல்லிவிட்டு ‘ஓம்..ரீம்..’ என்று கண்ணைமூடி முணுமுணுக்க ஆரம்பித்தார் ஓரிரு நிமிடம். பிறகு எல்லாப் பிள்ளைகளையும் சோதித்தால்…

பக்கத்து பெஞ்சு பத்மாவதியின் சாக்பீஸ் மட்டும் பாதியாக ஆகியிருந்தது!

தமிழய்யாவின் ‘மந்திரம்’ பழசாக உங்களுக்குப் படலாம், ஆனால் அவரைவைத்து சிலவேலைகள் இப்போதும் ஆகவேண்டியிருப்பதால் சும்மா சொல்லிவைத்தேன்.

என்னைப் பாதித்த இன்னொருவர் பில்லாநானா. ‘படுத்த வினாடி’ என்ற சுயமுன்னேற்றப் புத்தகத்தின் அட்டையில், ‘இது உங்களின் வாழ்க்கையை மாற்றிவிடும்!’ என்று எழுதியிருந்தது. ‘இது சரியில்லையே.. ‘ என்றார். ‘ஏன்?’ என்றான் அரூமி. ‘ஆமாங்கனி.. ஒருத்தன் நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கான்னு வையும். அவன் எப்படி இந்த புக்-ஐ வாங்குவான்?’

‘தயவுசெஞ்சி விட்டுடுங்க, நாகர்பட்ணம் போவனும்’ என்றார் வாசகர்.

‘சோகக் கதைகள் எழுதுவது எப்படி?’ என்று அங்கிருக்கும் எந்த எழுத்தாளனையாவது கேட்டு அவனை அழவைப்பதற்காக இருக்கும். ஊர்ஊராகப் போய் அனைவரையும் சாகடி!

*

சமாதானப்படுத்தி அவரை வீட்டுக்கு அழைத்து வரும்போதும் எவ்வளவு சொன்னேன்! ‘மனிதனின் மிதமிஞ்சிய சக்தியை வெளியேற்ற நகைச்சுவை உதவுகிறது’ என்று ஞானி குர்ஜீ·ப் சொன்னதை மறுத்து, ‘It is an absured statement. Firstly, the normal man cannot have excessive energy. He is tired, so why does he laugh?.. The normal man has to laugh just to live’ என்றவன் ஓஷோ. கோபம், துக்கம், நிராசை போன்ற நெகடிவ் சக்திகளை வெளியேற்ற சிரிப்பது அவசியம் என்றவன். இதைச் சொன்னேன். என்னிடமுள்ள ஒரே ஒரு ஓஷோ புத்தகத்தைக்கூட சொல்லிக்காட்டாமல் நான் உயிர் வாழ்வது எப்படி?

நல்ல நகைச்சுவைப் படங்களைப் பார்க்கச் சொல்லலாமா? அதுதான் சரி. அவைகளைத் தொடர்ந்து பார்த்தால் ஒரு ‘இது’ கிடைக்கும். விளையாடி விடலாம்.

துபாயில் என்னை அவர் சந்தித்திருந்தாலாவது அழுத்தமான கதைகளுள்ள பல மலையாளப் படங்களைக் காட்டியிருப்பேன். போலி கம்யூனிஸ்ட் சீனிவாசன் பொண்ணு பார்க்கப் போகும் ‘சந்தேசம்’, ப்ரியதர்ஷனின் ‘வெள்ளானகளுடெ நாடு’விலுள்ள ரோடுரோலர் காமெடி. மோகன்லால் ஓடுவதும், யானை நடப்பதும் பார்க்கத் திகட்டாத விஷயம். அல்லது , ‘ஏ ஆட்டோ’வில் படைச்ச ‘ரப்’ஐ – அவரது பாரியா , மக்களோடு – பார்க்கும் பப்பு காமெடி. விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அழ நேரும்போதெல்லாம் மலையாளப் படங்கள்தான் அங்கே என்னை காப்பாற்றியிருக்கின்றன – அரபிகளிடமிருந்தும், முக்கியமாக சேட்டன்களிடமிருந்தும்.

‘விரிவான செய்திகள்’ வாசிக்கும்போது ஒருமாதிரியாக நெளிந்து உட்காரும் ‘கொலைஞன் டி.வி’யில் என்ன காட்டித் தொலைய? அரபுநாட்டு தமிழ் அசடுகள் ‘சங்கமித்து’ நடத்தும் ‘சங்கு டி.வி’க்கு உலகத்தின் எந்த டி.வியும் பரவாயில்லைதான். ஆனாலும் வாசகர் பாவம். ‘டிவிடி’யில் சாப்ளின் – அட, ஏன் பெரிய மேதாவி மாதிரி பேசனும் – நம்ம லோக்கல் வடிவேலுவின் ‘நேசம்புதுசு’ காமெடியைப் போட்டுச் சிரிக்கலாமா? அதுக்கு டிவிடி-ஐ ரிப்பேர் செய்யனுமாம். என்ன டிவிடி-ஐ ரிப்பேர் செய்யனுமாம்?

‘டிவிடி இல்லாம கேவலமா இருக்கு வாப்பா’ என்று மகன் சொல்கிறான். கேவலம்! முதலில் இந்த வார்த்தையைக் கேட்டு கடுமையான கோபம் வந்தது. மோசம் என்பதைத்தான் இப்போதைய பிள்ளைகள் அப்படிச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டபோது என் கேவலம் புரிந்தது. நான் ஓட்டும் பழைய ஸ்கூட்டர் கேவலம், நான் வாங்கித்தந்த ஓட்டை கம்ப்யூட்டர் கேவலம், பிள்ளைகளோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களை சிறந்தவர்களாக உருவாக்காத வாழ்க்கை கேவலம்…

ஓ, இது நகைச்சுவைக் கதையல்லவா? சிம்பு ரசிகனான என் மகனைப்பற்றிக் கூட ஒரு சிரிப்பு உண்டு. வீட்டுப் பிள்ளைகளை நம் கதைகளில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். காரைக்காலுக்கோ திருவாரூருக்கோ போய் , புத்தம் புது சிம்பு படம் பார்த்துவிட்டு திரும்பியிருந்தான் அனீஸ். ‘கதை என்னாடா? சுருக்கமா சொல்லேன்’ என்றதற்கு படு சுருக்கமாக ஆரம்பித்தான் : ‘மொதல் சீன் வாப்பா. மாடிலேர்ந்து சிம்பு அப்டியே….ஒவ்வொரு படியா கீழே எறங்கி வருவான்..’

ஓடிவிட்டேன்!

முட்டை பொறிக்கும் வாசம் வீடெங்கும் பரவியது…

சாதாரணமான முட்டையல்ல, மூளை முட்டை. ஆமாம். மூளையை அடித்துக்கலக்கி முட்டையோடு சேர்த்துப் பொறிப்பார்கள் அஸ்மாவின் உம்மா. பிரமாதமாக இருக்கும். இறைச்சிப் புரோட்டா மாதிரி இதுவும் அவர்களின் ஸ்பெஷல். என்னையும் மதித்து ஒருவர் வந்திருக்கிறானென்று மூளையை உபயோகிக்கிறார்கள் போலும். கொஞ்சமாவது வைத்துக்கொள்வது முஸ்லிம்களுக்கு ஹராம்!

தர்ஹாவுக்குப் போகும்போது உம்மாவீட்டுப் பக்கம்தான் அவரைக் கூட்டிப்போனேன். உள்ளே நுழைய ஏனோ மனமில்லை. நுழைந்து வெளிவந்தால் நூறு கதைகள் தேறும். போதும் பட்டது. தெருவில் இருந்த ஒரு மத்றஸாவைக் காட்டி , ‘இதுலதான் நான் ஓதுனேன்..இங்கெ மறக்கமுடியாத ஒரு முட்டைசம்பவம் நடந்திச்சி.. ஞாபகப்படுத்துங்க’ என்று வாசகரிடம் சொல்லியிருந்தேன். இப்போது அவர் சொல்லாமலேயே ஞாபகம் வந்தது. என் மூளையே தனிதான்!

சின்னபிள்ளையாக இருக்கும்போது, அலற அலற பள்ளியில் – அரபி மதறஸாவை ‘பள்ளி’ என்றுதான் சொல்வோம் – கொண்டுபோய் விடுவார்கள் என்னை. ஆறுவிரல்சாபுவின் கண்டிப்பு அப்படி. ஓதுவதற்கு சேர்ந்துவிட்டால் ஒருநாள்கூட போகாமலிருக்க முடியாது. ‘குண்டாக்கட்டை’யை காலில் மாட்டிவிடுவார்கள். குர்-ஆனின் 30 ஜூஸ்வு (பாகம்) முடிக்கும்வரை இந்தத் தொந்தரவுதான். அர்த்தம் தெரியும்வரை போகவேண்டும் என்றிருந்தால் மறுமைநாள் வரை போகவேண்டியிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியோ போனேன். பின்னர் அரபுநாட்டுக்குப் போனால் உதவியாக இருக்கும் என்ற உதிப்போ என்னவோ, போனேன். காலை எட்டு மணிக்குள் பள்ளி முடிந்துவிடும். திரும்ப வீட்டுக்கு வந்து, பசியாறிவிட்டு, பள்ளிக்கூடத்திற்கு ஓட்டம். பள்ளிக்கூட ஐயருக்கு பணிரெண்டு விரல்.

பள்ளியை நடத்தும் முஸ்லிம் சங்கம் , ஆறுவிரல் சாபுவுக்கு எவ்வளவு பைசா சம்பளம் கொடுக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் சாபுவின் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொருநாளும் தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சாப்பாடு – பகல் மட்டும். சாபு அதை இரவிலும் வைத்துக்கொள்வார்கள். காலை நேரத்தில் சாபுக்கு தேவை சில முட்டைகள். அடைகாக்க அல்ல, அப்படியே உடைத்து வாயில் ஊற்றிக்கொள்ள. சாபு காசு கொடுத்ததும், ‘முட்டாய்மாப்ளே’ என்று பெண்பிள்ளைகளால் கிண்டல் செய்யப்படும் ஒரு பையன் (கைலிக்குள் கையைவிட்டு கமர்கட் மிட்டாய் கொடுத்தவன்!) வழக்கமாக வாங்கிவருவான். அன்று அவன் வரவில்லை. என் கெட்டநேரம், ‘இன்னக்கி மவுலாசா மவன் போவட்டும்’ என்று சாபு சொல்லிவிட்டார்கள். இனி போகாமலிருக்க முடியாது. நானும் அந்தநேரமாவது சாபுவின் பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் போனேன். மூன்றாவதோ நாலாவதோ படித்துக்கொண்டிருக்கிறேன் – செட்டியார் ஸ்கூலில். ரொம்பவும் சின்னதாக , சோகையாக இருப்பேன்.

தர்ஹாமார்க்கெட் வாசலில் முதல்கடை ‘ஒத்தக்கண்’ மாலிமார்மாமா கடை. என் வாப்பாவின் கூட்டாளி அவர். பயணத்திலிருந்து வந்தால் வாப்பாவை அங்கேதான் பார்க்கலாம். அந்தக் கடையில்தான்- சின்ன கம்பிக்கூடையில் – விற்பனைக்கான முட்டைகள் தொங்கிக்கொண்டிருக்கும். கூரையில் கோழிகள் இருக்கலாம். மாலிமார்மாமா இல்லை. வேறொருவர் இருந்தார். அவரை நான் பார்த்ததில்லை. அவரிடம் காசைக்கொடுத்து முட்டைகள் கேட்டேன். அவரும் அவைகளை ஒரு காகிதத்தில் மடித்து என்னிடம் கொடுத்தார்.

அழுத்திப் பிடித்தேனோ என்னவோ, அத்தனையும் உடைந்துவிட்டது!

கையெல்லாம் கொழகொழவென்று…

‘அழுஅழு’வென்று அழுதேன். என் பையில் ஒரு நயாபைசா கிடையாது. எப்பவாவது – ஒரு மாதத்தில் – காலணா கிடைக்கும், அதுவும் மாமிதான் கொடுப்பார்கள். வீட்டில் பணம்காசு திருடி தொப்பியில் சேமித்து வைத்துக்கொள்ளும் பையனுமல்ல நான். இப்போது என்ன செய்வது? முட்டைகள் குடிக்கவில்லையென்றால் கொத்தி எடுத்துவிடுவார்கள் சாபு. திரும்ப பள்ளிக்கு எப்படிப் போவது? அப்படியே தர்ஹாகுளத்திற்கு ஓடி தற்கொலை செய்துகொள்ளலாமா? குளத்தையொட்டி வேறொரு மதறஸா உண்டு. ஜானாசாபு பள்ளி. அங்கே ஓதும் பையன்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

பரிதாபமாக கடைக்காரரைப் பார்த்தேன்.

என்ன நினைத்தாரோ, ‘சரியான பேயனா இக்கிறியுமே. ஒழுங்கா புடிக்கிறதில்லே? சரி, இதைப் புடியும். நாளைக்கி காசு கொடும்’ என்று இரண்டு முட்டைகள் கொடுத்தார்.

அதுவும் உடைந்துவிட்டது!

அல்லாவே, பெரியஎஜமானே, என்ன காப்பாத்துங்க…

சத்தியமாகச் சொல்கிறேன், அல்லாதான் அன்று என்னைக் காப்பாற்றினான் – மாலிமார்மாமா வடிவத்தில். அங்கே வந்தவர்கள், என் நடுக்கத்தைப் பார்த்து, ‘கடைப்பையன்ட்டெ கொடுத்து அனுப்புறேன், நீம்பரு போரும்’ என்றார்கள்.

வாழ்க்கையின் பல கட்டங்களில் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து இறங்கி , அதில் மரணஅடி படும்போதெல்லாம் , ‘ஓ..அடுத்த முட்டை!’ என்று எனக்குள் நான் சொல்லிக்கொள்வேன். இந்த குணம்தான் இதுவரை என்னை காப்பாற்றி வருகிறது. நான் முடிவு செய்யாமல் நடந்த ஒரே நல்ல விஷயம் அஸ்மாவை கல்யாணம் செய்ததுதான். ஏனெனில் அவள் மோசமான முடிவு எடுத்திருந்தாள்!

சாப்பிட்டு முடிக்கும்வரை ‘அடுத்த முட்டை’ கதையை வாசகரிடம் சொல்லவில்லை.

*

இசையரசி நூர்ஜஹான் , ‘பய்யாம் ஆயே ஹேங்’ என்று தன் கம்பீரமான குரலில் பாடுவதைக் கேட்கும்போது ஒருமாதிரி கிறங்கிக்கொண்டு வருமே, அதுபோல் ஒரு மயக்கம் கண்ணைச் சுழற்றியது. பகல் சாப்பிட்டுவிட்டு ஒருமணி நேரமாவது தூங்கினால்தான் ராத்திரி ‘ஜோலி’க்கு சரியாக வரும். ஏற்கனவே, ‘வேகம் கொறஞ்சிடிச்சி உங்களுக்கு’ என்று வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறாள் நாப்பது வயசு நங்கை அஸ்மா. ஆனால் , இந்த ஆள் அவராக விடைபெறுவதுபோலத் தெரியவில்லையே… சாயந்தரம் கடற்கரைக்கு வேறு கூட்டிப்போகனுமோ? அங்கே என்ன கேட்பார்? பேசாமல் பழங்கடைத்தெருவில் பருத்திக்கொட்டை ஹல்வா வாங்கி ஒரு பையில் போட்டு , ‘பை’ சொல்லிவிட வேண்டியதுதான். எழுத்தாளனைப் பார்க்க ஒரு எலுமிச்சம்பழம் கூட கொண்டுவராதவருக்கு அதுவே அதிகம். தவிர, இவருக்கு எவ்வளவுதான் சொன்னாலும் திருப்தி வராது போலிருக்கிறதே… எவ்வளவோ சொல்லலாம் – அடுத்த கதைக்கு மிச்சம் வைக்காமல். தமிழர்களை சிரிக்கவைக்க – ஈழப்போரை ‘முடிவுக்கு’ கொண்டுவந்த – கலகத்தலைவரின் கால்மணிநேர உண்ணாவிரதம் ; மூளையுள்ள உலகத்தோருக்கோ ஒன்றுமே தேவையில்லை. ‘பேரழிவு ஆயுதங்கள்’. இந்த இரண்டே இரண்டு வார்த்தைகள். அவ்வளவுதான், வழித்துக்கொண்டு சிரிப்பார்கள். ஆனால் அதுவும் இவருக்கு நகைச்சுவையாகத் தெரியாது என்றுதான் நினைக்கிறேன். வேறெதாவது, உச்சகட்ட நகைச்சுவை ஒன்றை எதிர்பார்க்கிறாரா என்ன?

படைப்பவனின் நேரத்தைப் பாழ்படுத்துவதே வாசகர்களுக்கு இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. பின், மூலத்தைத்தான் சொல்லவேண்டும். மீண்டும் சொல்கிறேன், படைப்பாளியின் வலியும் கஷ்டமும் படிப்பவனுக்கு கொடுக்கும் சிரிப்பே அலாதி.

Diletation என்று பெயர். மூல ஆபரேஷன் முடிந்து வெளியேறும் நாளில் டாக்டர் செய்வார். விரலை மலதுவாரத்தில் விட்டு (அவருடையதல்ல!) ஒரு குடை.. அது ஒரு கொடுமையான அனுபவம். ஆபரேஷனுக்கு முன்னால் , ‘டெஸ்ட்’டுக்காக அப்படி அவர் விட்டபோது அவ்வளவு வலி இல்லை. பக்கத்திலிருந்து நண்பர்கூட – நான் அரபு நாட்டில் இருப்பதாலோ என்னவோ – ‘கையை வுட்டாக்கூட இவருக்கு தெரியாது டாக்டர்’ என்று சொன்னார். ஆனால் வெட்கமும் வேதனையும் நிரம்பிய பொழுதில் – சிக்கல் இல்லாமல் மலம் வெளியேறுவதற்கான உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில்…ஒரு குடை குடைந்துவிட்டு விரலை எடுத்த டாக்டர் – அந்த விரலைப் பார்த்துக்கொண்டே – என்னிடம் கேட்டார் : ‘நேத்து கீரை அதிகம் சாப்பிட்டிங்களா?’

வெஜிடேரியன் சிரிப்புதான், இருந்தாலும் அருவருப்படைவார் என்று சொல்லவில்லை. ‘சரி, எதாச்சும் டி.வில பாத்துக்கிட்டிருங்க’ என்று சொல்லிவிட்டு எதிரிலுள்ள குர்-ஆனைத் திறந்தேன். இறைவன் சொல்கிறான் : ‘நிச்சயமாக நாம்தாம் வானங்களையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எந்தக் களைப்பும் நம்மைத் தீண்டவில்லை’.

உரக்க இன்னொரு முறை படித்தேன் – உள்ளம் நடுநடுங்க.

என்ன அற்புதமான வசனம்! ‘புழுதியைக் கிளப்பும் காற்றுகளுக்கு’ (தாரியாத்) முன்புள்ள 50ஆம் அத்தியாயத்தின் 38ஆம் வசனம் அது. படைத்த இதே இறைவனால் காப்பாற்றப்படாத முந்தைய வேதங்களில் வருவதுபோல ஏழாம் நாள் இங்கே ஓய்வெடுப்பதில்லை ‘அவன்’. சதா வேலை! பசி, பஞ்சத்தை தீர்க்க போராடுகிறான் போலும். அது இருக்கட்டும், இந்த ஆறுநாள் கணக்கு , 41ஆம் அத்தியாயத்தின் – வசனம் 9லிருந்து 12வரை – கூட்டிப்பார்த்தால் எட்டு நாட்கள் வருகிறது! பூமிக்கு 2 நாள், மலைகளுக்கு 4 நாள், ஏழு வானங்களுக்கு 2 நாள். என்னையும் படைத்த என் ரப்பே, இதில் எது சரி? படைப்பின் மயக்கமோ? என்ற குழப்பத்தை அறிஞர் யூசு·ப் அலிதான் தீர்த்தார். மலைகளுக்காக வரும் நாலு நாளில் பூமிக்கான இரண்டு நாளும் அடக்கம் , எனவே 6 நாள்தான் என்று! 8-2=6. ஆறு மனமே ஆறு! ஒரு நாளென்பது ஆயிரக்கணக்கான வருடங்களாம், காலங்களாம். ஆண்டவன் சொல்லவில்லை, ஆய்ந்தறிந்தவர்கள் சொல்கிறார்கள். The Creation in Six Days is ofcourse metaphorical… ஓ, வேண்டாம். துருப்பிடித்த மூளையே , துள்ளாதிரு! உன்னால் வந்த பிரச்சனைகள் போதும்…

‘இப்ப புரிஞ்சது சார். ரொம்ப நன்றி’ என்று எழுந்து ஓடினார் வாசகர்.

அநேகமாக அவர் R.S.Sஆகத்தான் இருக்க வேண்டும். R.S.S ஒழிக!

நல்ல இடம். இப்படியே கதையை முடித்துவிடலாம். ஆனால் , சொல்லத் தெரியாதவன் என்ற நற்பெயரை காப்பாத்தனுமே!

அவரிடம் சொல்ல மறந்த முக்கியமான விஷயத்தை இப்போது உங்களிடம் சொல்கிறேன். கற்பனையெல்லாம் செய்யவேண்டாம், சும்மா அப்படியே நம் பார்வையில் வருகிற மனிதர்களைப்பற்றிச் சொன்னாலே போதும், நகைச்சுவை – சும்மா றெக்கை கட்டிக்கொண்டு – பறக்கும்.

உதாரணமாக , வரும்வழியில் தாவுஸாமரைக்காரைப் பார்த்தோம். அவர்பாட்டுக்கு தன் கோட்டு பாக்கெட்டிலிருந்து ஆப்பத்தை எடுத்து பிய்த்துப்பிய்த்துத் தின்றபடி வானத்தை நோக்கிக்கொண்டு போனார். கோட்டு துவைக்கப்பட்டு குறைந்தது பத்துவருடம் இருக்கும். கைலியை இறுக்கியிருக்கும் ‘வரிசை ராவுத்தர் & சன்ஸ்’ பிராண்ட் பச்சை பெல்ட் வரிவரியாக பிய்ந்து தொங்குகிறது. ஊரில் ஒரு பயல் அவரைக் கிண்டல் செய்ய முடியுமா? காரணம் , அதுதான், காசு பார்ட்டி. முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே.. சிங்கப்பூரில் பெரிய கடை இருக்கிறது அவருக்கு. கடையின் போர்டு ரொம்பப் பெரிதாக இருக்கும் என்று போய்வந்தவர்கள் சொல்வார்கள் , பிரமித்துப்போய். போர்டின் நடுவில் : ‘DAWOOSA’. அவ்வளவுதான். பிரபலமான டெக்ஸ்டைல் கடையாம்.

அவரையும் அவரது கோலத்தையும் பார்த்து, ‘ஹூம் , பொல்லா நஸீபு’ என்று ஊர்ப்பெண்கள் சொல்வார்கள். ‘நஸீபு’ என்றால் தலைவிதி.

யாருக்கு பொல்லா நஸீபு?

நம்மைப்போலவே மற்றவர்களையும் நினைக்கவேண்டும் எனும் நாகரீகம் காரணமாக மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. தவிர, நல்ல நஸீபு உள்ளவர்கள் இப்படி சொல்லிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பதில்லை.

சிங்கப்பூர் கடை , தாவுஸாமரைக்காருக்கு மட்டுமே உரிமையானதல்ல. இவருக்கும் இவர் கூடப்பிறந்த ஒரே தம்பிக்கும்தான் சேர்த்து எழுதிவைத்துவிட்டு மவுத்தானார் இவர்களின் தகப்பனார். மார்க்கத்தை ரொம்பவும் பேணும் தாவுஸா, தன் தம்பியை ஏமாற்றி , கடையை தனதாக்கிக் கொண்டார். பாங்காக் ஓடி, பல கடைகளிலும் வேலைபார்த்து , தம்பி பட்ட கஷ்டம் கொடூரமானது. நண்பர்கள் கொடுத்த தைரியத்தில் – ஒரு பாயிண்ட்-ஐ பிடிக்கலாமென்று – ‘DAWOOSA & BROS’ண்டாவது போடுங்க நானா.. அதான் எடம் இக்கிதே’ என்று அப்பாவித் தம்பி கேட்டதற்கு , ‘ஆமாங்கனி.. போர்டுலெ எடம் இக்கிதுதான்.. அங்கனெ ஒரு ரோசாப்பூ, இங்கனெ ஒரு ரோசாப்பூ போட்டுடப்போறேன்’ என்றாராம் இவர்! எப்படி?

சிரித்தீர்களா? என் சீதேவி வாப்பாதான் அந்தத் தம்பி.

(END)

நன்றி : சோமன்

*

abedheen@gmail.com
abedheen.wordpress.com

Series Navigation

ஆபிதீன்

ஆபிதீன்