அக்கரைப் பச்சை

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

ஏலங்குழலி


என் தலை தெரிந்ததுமே தூரத்தில் குழுமியிருந்த கூட்டம் பரபரப்படைந்தது எனக்குப் புரிந்தது. ஆவலுடன் நெருங்கியபோது அந்தக் கும்பல் அப்பா, அம்மா, தம்பி மற்றும் தங்கை எனப் பிரிந்து புன்னகைத்தது.

‘வாடா… ‘ அப்பா ஒரு வார்த்தையுடன், நிறுத்திக் கொண்டார். அவர் அதிகம் பேசுபவர் இல்லை. கண்களில் தெரிந்த நெகிழ்ச்சியை வைத்து அவரது மனநிலையைப் புரிந்து கொண்டேன். அம்மா ஆதுரத்துடன் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

‘இப்புடிக் கறுத்திட்டியேப்பா… ‘

தேவியும் கணேஷும் சுற்றிக் கொண்டார்கள். தேவி யாரோ மாதிரி புடவையில் மாறியிருந்தாள். கணேஷ் கணிசமாக வளர்ந்திருந்தான். ‘அண்ணே…நீீங்க இல்லாம வீடே என்னமோ போல இருந்திச்சி…இந்த முறை நெறைய நாள் இருப்பீங்கதானே ? ‘

வெளிநாட்டில் வருடக்கணக்கில் இருந்து, குடும்பத்தைப் பிரிந்திருப்பவர்களோடு ஒப்பிட்டால், என் பிரிவு ஒரு வருடம் மட்டுமே. அதையே இவர்களால் தாங்க முடியவில்லையே ? என் கண்ணோரத்தில் ‘சுறுசுறு ‘வென்று ஆரம்பித்த கண்ணீரை இமைத்து அடக்கிக்கொண்டேன்.

சென்னை வீதிகளை ஆவலோடு பார்த்தேன். மாற்றங்களைத் தேடினேன். திருவான்மியூரில் எங்கள் வீட்டிற்குள் வந்தவுடன் பெட்டிகளை ஒரு அறையில் தூக்கியெறிந்துவிட்டு உட்கார்ந்தவன்தான். என்னை யாருமே எழுந்திருக்க விடவில்லை. என் உடல் நலன், மன நலன், ஊர்க்கதை, உலகக் கதை, எந்த வீட்டில் எந்தப் பெண்ணிற்கு எப்போது திருமணமாகியது, யார் யார் என்னைப் போலவே வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் ( ‘ஒண்ணும் பெரிசா, உன்னை மாதிரியெல்லாம் இல்லை… ‘), யார் இறந்தார், யார் பிறந்தார்…இவற்றுக்கெல்லாம் நடுவில் அம்மாவின் கையால் மணக்க மணக்கக் காபி, தேவியின் கைப்பாகமான கொழுக்கட்டை ( ‘தேவி, நெசமாலுமே நீதான் செஞ்சியா, இல்ல கடையிலேர்ந்து நைஸா வாங்கியாந்துட்டியா ? ‘ ‘அம்மா பாருங்கம்மா, அண்ணே கிண்டல் செய்யுது… ‘- தேவி, நீயாக சமையலறைக்குள் புகுந்து புறப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டாயா ? கடவுளே, எனக்குத்தான்

வயதாகிவிட்டதோ ?)

அன்று நாங்கள் படுக்கச் சென்றபோது இரவு மணி இரண்டு.

அடுத்த நாள் காலையில் என் பெட்டியைத் திறந்தேன். என் குடும்பதினருக்காக ஆசை ஆசையாக எத்தனையோ வாங்கி வந்திருந்தேன். அதையெல்லாம் கடை பரப்ப ஆரம்பித்திருந்த போது அம்மா உள்ளே வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

‘இருங்கம்மா, உங்களுக்கெல்லாம் என்னென்ன வாங்கியாந்திருக்கேன்னு பா… ‘

‘கெடக்கடும் விடு, ஓடியா போகுது ? அப்றம் பாத்துக்கிடலாம். நீ சட்டுன்னு குளிச்சிட்டு ரெடியாகு. நாம கோயிலுக்குப் போறம். ‘

அன்றைய பொழுது கோயிலில் கழிந்தது. ஏகப்பட பூஜைகளும், நேர்த்திக் கடன்களும் முடிந்த பிறகு நாங்கள் வீடு வந்து சேர்ந்த போது இருட்டிவிட்டது. அடுத்த நாள் காலையில் என் பெட்டி பக்கம் நகர்ந்தேன்.

‘தேவி, என்னைய பொடவை வாங்கிட்டு வரச் சொன்னியே… ‘

தேவி உள்ளே நுழைந்தாள். ‘அண்ணே, உங்களை என் friend வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர்றதா சொல்லியிருந்தேன். வாங்களேன்… ‘ தேவியின் தோழி வீட்டிற்குப் போய் வந்த பிறகு கணேஷ் தன்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை நான் பார்த்தால்தான் ஆயிற்று என்று இழுத்துக்கொண்டு ஓடினான்.

அடுத்த நான்கு நாட்களுக்கும் என்னைப் பார்க்க வருவோரும் போவோருமாய் வீடு நிரம்பிவிட்டது. யாரும் வராத பொழுதிற்கு குடும்பம் முழுதும் என்னை இழுத்துக் கொண்டு MGM, கடற்கரை, கோயில் என்று அலைந்தது. பேச்சும் சிரிப்பும் கும்மாளமுமாக கழித்தோம். திகட்டத் திகட்டச் சந்தோஷத்துடன் படுக்கச் சென்ற நான், அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது நான் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டதைப் புரிந்து கொண்டேன். நான் வாங்கி வந்திருந்த பொருட்கள் நினைவுக்கு வந்தன. பெட்டியைப் பார்க்க ஓடிய போது,

அது ஒர் மூலையில் காலியாக நிறுத்தப் பட்டிருந்தது. கலவரப் பட்டு பீரோவைத் திறந்தவன் அதில் என் துணி மணிகளும் இதர சமாச்சாரங்களும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அம்மாவின் காரியமாகத்தான்

இருக்க வேண்டும்.

லேசான குழப்பமும் எரிச்சலும் தலைதூக்கின. அடுக்கி வைத்ததெல்லாம் சரிதான்…ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு வீடு வருகிற பிள்ளை ஆசையாக குடும்பத்திற்கு ஏதேனும் வாங்கி வந்திருப்பானே, அதையெல்லாம் ஆவலுடன் பார்ப்போம், மகிழ்வோம் என்றெல்லாம் யாருக்கும் தோன்றாதோ ? இது என்ன குடும்பம், கொஞ்சமும் ஆர்வமில்லாமல் ? நான் வாங்கிவந்த பொருட்களைக் கூட மதிக்காதவர்கள் என்னை எப்படி மதிப்பார்கள் ?

நான் தேவிக்கு வாங்கிய புடவை, அம்மாவிற்கு வாங்கிய ஷால், தம்பிக்காக வாங்கிய புத்தகங்கள், அப்பாவின் துணிமணிகள்…எல்லாவற்றையும் அவர்கள் முன்னால் பிரித்துப் போட்டு அவர்கள் முகங்கள் மலர்வதைப் பார்க்கும் சந்தோஷத்தை ஏன் இவர்கள் எனக்கு அனுமதிக்கவில்லை ? ஆள் மாற்றி ஆள் அவரவர் வேலையிலேயே ஆர்வமாக இருகிறார்கள். அப்படியானால் நான் வாங்கிக்கொண்டு வந்ததற்குத்தான் என்ன பயன் ?

‘பட் ‘டென்று பீரோக் கதவை மூடிவிட்டு வாசலுக்கு நகர்ந்தேன். அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

‘இப்பத்தான் தூங்கியெழுந்திருச்சியா ? காப்பி குடிச்சியா ? ‘

‘ம்… ‘

‘என்ன, சொரத்தேயில்லமெ பதில் வருது ? என்னா விசயம் ? ‘

‘இல்ல, நா தெரியாமத்தான் கேக்கறேன்…அமெரிக்காவிலேயிருந்து அவ்வளவு ஜாமான் வாங்கியாந்திருக்கேன்… என்ன, ஏதுன்னு பாக்கணும்னு ஒங்களுக்கெல்லாம் தோணலியா ? ‘ஆசையா வாங்கியிருப்பானே. பாப்பம் ‘னு கூடவா தோணாது ? நானும் வந்தப்பலேர்ந்து பாக்கறேன், எல்லாரும் இதெத் தவுர மத்த எல்லா விஷயத்திலேயும் கவனமா இருக்கீங்க…எனக்கு ஏண்டா வாங்கியாந்தோம்னு

இருக்கு… ‘

‘ஜாமான் மேலே பிரியமில்லமெ உன்னைய கட்டிகிட்டு அளுவறாங்களேயின்னு சந்தோசப்படு… ‘

‘அதா ஏன்னு கேக்கறேன் ? ‘

‘அவங்கள்ளாம் பாக்கணும்னுதான் பிரியப்பட்டாங்க…நாதான் ‘அதெல்லாம் ஒண்ணூம் வேணாம் ‘னு சொல்லி வெச்சேன். ‘

‘எதுக்கு ? ‘

‘நா பட்ட கஸ்டத்தை நீயும் படக் கூடத்துன்னுதான். ‘ அப்பா மெளனமாக தரையை வெறித்தார். ‘ நானும் உன் வயசுலே வெளிநாடு போனவந்தாண்டா…குடும்பம் ஒண்ணும் பெரிய மோசமான நெலமைலே இல்லை…எங்க அப்பாருக்குதான் ‘புள்ளை வெளிநாடு போயிருக்கான் ‘ன்னு சொல்லிக்கிறதுலே பெருமை. நானும் ஆர்வப்பட்டுத்தான் போனேன். வித விதமா ஜாமான் வாங்கியாரச் சொல்லியனுப்பினாங்க. ஆர்வமாத்தான் வாங்கினேன். வூடு வந்து சேந்தா…அம்மா மொதல்லே ‘எவ்வளவு தங்கம் கொணாந்தே ? ‘ன்னு கேக்கறாங்க. அப்பாரு ‘அக்காளுக்கு வளை பண்ணிப்போட பணம் கொண்டாந்தியா ? ‘ன்னாரு. தங்கச்சி…அதான், உங்கத்தை மனோன்மணி…புடவையைக் குடுன்னு இழுத்துகிட்டு போயிட்டா. சித்தப்பாவும் அப்ப நம்மோடத்தானே இருந்தாரு ? ‘எனக்கும் அங்ஙன

ஒரு வேலை வாங்கித் தர்றியாடா ‘ன்னு கேட்டாரு… ‘

‘…………… ‘

‘என் நெலமையை நீயே யோசனை செய்து பாரு. மாசக் கணக்கா பிரிஞ்சிருக்கமே, எல்லாரும் நம்மைப் பாத்து சந்தோசப் படப்போறாங்கன்னு நெனைச்சா…அவங்கவங்க பொட்டியைத் தூக்கிக்கிட்டு போயிட்டாங்க. என் கோவமெல்லாம் எறங்கி நாஞ் செரியாப் பேசவே ரண்டு நாள் ஆச்சு…அவங்க யாரும் கண்டுக்கலையின்னு வெச்சுக்க… ‘ கொஞ்சம் பொறுத்து தொடர்ந்தார். ‘அதான் ரொம்ப உறுத்திச்சு. யாரும் கண்டுக்கலை… ‘

அதுவரை தலை குனிந்திருந்த நான் எழுந்தேன்.

‘எங்கடா போறே ? ‘

‘என் ஜாமான் விசயமாதான். பீரோவைப் பூட்டிச் சாவியை கெணத்துலே போட்றப் போறேன். ‘

அப்பா புன்னகையுடன் மறுபடியும் பேப்பரில் ஆழ்ந்தார்.

***

elankhuzhali@yahoo.com

Series Navigation

ஏலங்குழலி

ஏலங்குழலி

அக்கரைப் பச்சை

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

அனந்த்


எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)
… என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம் ?
(எல்லாமே இந்நாட்டில்…)

பள்ளிசெல் லும்அந்த நாளாய் – இந்தப்
… பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய்
மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த
… வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:

எங்கும் நிறைந்திடும் ஊழல் – அதை
… எடுத்துரைத் தால்காவல் படையினர் சூழல்
பங்குச்சந் தைபடு தாழல் – பணம்
… போட்டவர் வாழ்க்கையும் பள்ளத்தில் வீழல்

துண்டுபோட் டோரெல்லாம் கூடி- நாட்டைத்
… துண்டாக்கிச் சேர்த்திடு வார்பலகோடி
கண்டு மனம்சலித் தாச்சு – இனிக்

… காணவோர் கேடுமில் லையென வாச்சு

அமெரிக்கா கானடா எல்லாம்- ஆகா!
… அமரர்கள் வாழ்கின்ற பூமியென் றெல்லாம்
‘குமுத ‘த்தில் காணும்போ தெல்லாம்-குஷி
… கூடவே ஏறியென் வாயெல்லாம் பல்லாம்! (எல்லாமே
இந்நாட்டில்…)

‘கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்
… கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;
பணிகள் பலவுள ‘ என்றே- பல
… பேருஞ்சொன் னாரதைக் கேட்டுப்ப யின்றே

பாலொடு தேனோடும் வீதி – இளம்
… பாலகர்க் கும்மரி யாதைசெய் நீதி
பார்க்கு மெவருமோர் சாதி -என்று
… படித்ததை என்றன் மனத்தினில் ஓதி

அமெரிக்கா வந்துநான் சேர்ந்தேன் – அங்கென்
… ஆசைக் கனவை நினைவினில் கூர்ந்தேன்
செமையாய் நடந்தெல்லாம் பார்த்தேன் – வந்து
… சேர்ந்தாறு நாளுக்குள் கைக்காசு தீர்த்தேன்
(அமெரிக்கா வந்துநான்..)

நாட்கள் பலவான பின்னும் – நானும்
… நல்லதாய் ஒன்றையும் கண்டில்லை இன்னும்
ஆட்கள் பலர்துணை கொண்டு – மாதம்
… ஆறான பின்பொரு வேலையைக் கண்டு

இன்றோடு நம்துயர் போச்சு- அப்பா!
… என்றுநான் விட்டஅந் நிம்மதி மூச்சு
சென்று மறைவதன் முன்னே – என்றன்
… சீட்டைக் கிழித்துத்தந் தான்;விதி என்னே!

கணினிக்கு எமனென்ற ஆண்டு – தந்த
… கஷ்டமெல் லாம்என்றோ தீர்ந்தது கொண்டு
பணியாள் குறைப்பில்என் வேலை – நடு
… பாதியில் போகக்கண் டேன்தெரு மூலை (அமெரிக்கா
வந்துநான்..)

இந்திய நாட்டினை வைவேன் – ஐயோ!
… இப்போதின் னாட்டினில் என்னதான் செய்வேன் ?
சொந்த நிலமென்றும் மேலாம் – என்ற
… சொல்லதின் உண்மைக்கென் வாழ்வொரு கோலாம்

எல்லாமே அக்கரைப் பச்சை – என்ற
… எண்ணத்திலே எழவேண்டும் நம்இச்சை
நல்லவை உண்டெங்கள் நாட்டில் -என்ற
… நம்பிக்கை வித்தைவி தைப்போம்நம் வீட்டில் (எல்லாமே
அக்கரை…)

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்