அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

பாவண்ணன்


உலக அழகி பட்டம் பெற்றவரும் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யாராய் அவர்களுடைய நேர்காணல் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார இதழில் இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலில் அவர் அளித்த சில பதில்கள் யோசிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்திருந்தன. தம்மைச் சந்திக்க வருபவர்கள் தம்மை மீண்டும் மீண்டும் அழகி அழகி என்று அழைப்பதும் அழகி என்கிற பட்டத்தோடு தான் அடையாளம் காணப்படுவதும் தமக்கு அலுப்பூட்டும் விஷயங்களாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தாம் அழகாக இருப்பதில் தம் பங்கு ஒன்றுமில்லை என்றும் அழகாகத் தோற்றமளிப்பது என்பது முக்கியமான விஷயமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கேள்வி கேட்டவருக்கு அவருடைய உள்ளக்கிடக்கை புரிந்தமாதிரியே தெரியவில்லை. தொடர்ந்து அவரை உடலழகின் சிகரமாக மையப்படுத்தியே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

உலக அழகி என்ற பட்டம் சூட்டப்பட்ட பிறகு அக்கெளரவத்துடன் உலகெங்கும் பல நாடுகளைச் சுற்றிப் பலரையும் கண்டு, திரைத்துறையில் காலடிவைத்து வெற்றி கண்டு வலம் வந்த காலத்தில் இக்கருத்து அவரிடம் குடிகொண்டிருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் மேற்சொன்ன நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகள் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் இருந்தன.

‘புறம் துாய்மை நீரான் அமையும் அகம்துாய்மை வாய்மையால் காணப்படும் ‘ என்கிற திருக்குறளை எங்கள் பள்ளி நாள்களில் நடத்திய ரங்கநாதன் ஐயாவின் நினைவு வருகிறது. இக்குறளை அவர் நடத்திய போது அகஅழகு, புற அழகு என அழகை இரண்டாகப் பிரிக்கலாம் என்று குறிப்பிட்டார். புற அழகு என்பது தோல் நிறத்தாலும் தசை எழுச்சிகளாலும் வளைவுகளாலும் அமையக்கூடியது. அக அழகு என்பது மனத்தில் எந்த விதமான தீய எண்ணங்களுக்கும் இடம்கொடாதிருத்தல். கள்ளம் கபடில்லாமல் சிரிப்பது ஒருவித அழகு. உண்மை பேசுவது அழகு. இரக்கமும் கருணையும் கூட அழகின் வகைப்பட்டதே. மனத்தில் இந்த அழகுகள் எதுவும் இல்லாத ஒருவருடைய பு றஅழகு எவ்வளவு ஈர்ப்புடையதாக இருந்தாலும் பயனற்றுப் போகும். வள்ளல்குணம் ஒருவித அழகு. அன்புடைமையும் அழகுதான். இப்படி ஏராளமாகச் சொல்லி முடித்த நாள்களெல்லாம் அகஅழகை எண்ணும்போது நினைவுக்கு வருகிறது.

குழந்தையாக இருந்தபோது என் மகன் விரும்பிக்கேட்ட கதைகளில் ஒன்று அழகியும் ராட்சசனும் கதை. ஓர் ஊரில் கப்பல் வியாபாரி ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஐந்து பெண்குழந்தைகள். எல்லாரும் மணமாகாதவர்கள். கதை தொடங்கும் நாளில் சரக்குகளைக் கொண்டுசென்ற கப்பல் விற்பனையை முடித்துவிட்டுச் செல்வத்துடன் திருமபி வரவேண்டும். விற்பனைத் தொலைகயைப் பெற்று வருவதற்காக வியாபாரி துறைமுகத்துக்குச் செல்வதற்காகத் தயாராகிறார். பெண்கள் ஒவ்வொருவரும் சந்தையிலிருந்து தமக்கு வாங்கி வரவேண்டியதைச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். கடைசிமகள் தமக்குப் பொருளெதுவும் வேண்டாமென்றும் ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவருமாறு சொல்லி அனுப்புகிறாள். துறைமுகத்தில் விற்பனைத் தொகையைப் பெற்றுக்கொண்டு சந்தையில் பெண்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்பிவரும் வியாபாரி பூவை மறந்துவிடுகிறான். திரும்பும் வழியில் மாலையில் ஒரு தோட்டத்தில் தங்கியிருக்கும்போது அங்கே பூத்திருக்கிற ரோஜாவைப் பார்த்ததும்தான் ஞாபகம் வருகிறது. பறிக்கப்போகும் சமயத்தில் ஒரு ராட்சசன் தோன்றி வியாபாரியைப் பிடித்துக்கொள்கிறான். அகப்பட்ட வியாபாரி தம்மை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சுகிறான். காலையில் கிளம்பிவந்த கதையையெல்லாம் சொல்கிறான். தன் இளைய மகளுக்காகத்தான் பூவைப் பறித்ததாகவும் சொல்கிறான். வியாபாரியை விடுவிப்பதற்கு ராட்சசன் ஒரு நிபந்தனையை விதிக்கிறான். அவனுடைய இளைய மகளைப் பிணையாகத் தோட்டத்துக்கு அழைத்துவந்த பின்னர் செல்வத்தையெல்லாம் கொண்டுசெல்லலாம் எனச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறான்.

பிணையாக வரும் இளையமகள்மீது ராட்சசனுக்கு ஆசை எழுகிறது. இளையமகளுக்கோ ராட்சசனுடைய தோற்றம் அருவருப்பையும் அச்சத்தையும் கொடுக்கிறது. உண்ணாமல் உறங்காமல் தோட்டத்திலேயே சிறையிருக்கிறாள் அவள். தன் அன்பை அவள் ஏற்காததில் ராட்சசனுக்கு உள்ளூர வருத்தமிருந்தாலும் அவளைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் இறங்குவதில்லை. மாறாக அவள் அன்பைச் சம்பாதிக்கப் படாதபாடு படுகிறான். அவள் உடல்மெலிவைக் கண்டு ஒருமுறை தாய்விட்டைக் கண்டுவரவும் அனுமதிக்கிறான். அவனுடைய நடவடிக்கைகளையும் பாசத்தையும் அவள் மெல்லமெல்லப் புரிந்துகொள்கிறாள். புறத்தோற்றத்துக்கும் அகத்திலெழும் காதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை விளங்கிக்கொள்கிறாள். அவளுக்கும் அந்த ராட்சசன்மீது அன்பு பிறக்கிறது. அகஅழகின் ஆழம் புரிந்தபிறகு புறத்தோற்றம் முக்கியமற்றதாக மாறிவிடுகிறது.

இக்கதையைத் திரும்பத் திரும்பக் கேட்கிற என் மகன் கதையை முடிக்கும் ஒவ்வொரு முறையும் புறத்தோற்றத்துக்கும் அகத்தோற்றத்துக்கும் தொடர்பேயில்லாத வகையில் பழகும் யாராவது ஒருவரைத் தன் ஞாபகத்துக்குக் கொண்டுவந்து அவர்களுடைய கதைக்குத் தாவிவிடுவான். ராட்சசனையும் அழகியையும் பற்றிய கதையாகத் தொடங்கிய எங்கள் பேச்சு கடைசியில் விசித்திரமான வகையில் எங்கள் பேச்சாகவே மாறிவிடும். அப்போது என் மனத்தில் சரத்சந்திரரின் ஒரு கதையும் நினைவுக்கு வரும். அது முதலில் புற அழகை முக்கியமென்று நினைத்து இறுதியில் நெருக்கடியான ஒரு கட்டத்தில் அழகின் நிலையாமையை உணர்ந்து கொள்கிற இளைஞன் ஒருவனுடைய கதை. அக்கதையின்

பெயர் ஞானதா.

ஒருபுறம் ஞானதா என்னும் இளம்பெண்ணையும் அவளுடைய தாயாரையும் மறுபுறத்தில் அதுலன் என்னும் இளைஞனையும் அவனுடைய அத்தைமார்களையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது கதை. பூப்படைவதற்கு முன்னரேயே பெண்ணுக்கு மணம்முடிக்கிற வங்கத்தில் வயது தாண்டிய நிலையிலும் ஞானதாவின் வாழ்வில் திருமணத்துக்கு வழியின்றிப் போகிறது. அவளுடைய கருநிறம் அவளுக்கு எதிராக இருக்கிறது. இளம்வயதில் கணவனைப் பறிகொடுத்த ஞானதாவின் தாயாரான துர்க்காமணிக்கும் துணையாக யாருமற்ற நிலை. துணையாக நிற்க வேண்டிய கொழுந்தனே வீட்டைவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகிறான். வேறு வழியின்றித் தன் தமையனின் ஆதரவை நாடிச் செல்கிறாள் அவள். உள்ளூர அவளுக்கு அதில் விருப்பமில்லை. சூழலின் நிர்ப்பந்தத்தால் அவள் அப்படிச் செய்யவேண்டி இருக்கிறது. ஆதரவு தேடி வந்து நிற்கிற தங்கைக்காரியின் இயலாமையைப் பயன்படுத்தித் தன்னுடைய கடனை நேர்செய்துகொள்ளத் தந்திரம் புரிகிறான் ஞானதாவின் சொந்தத் தாய்மாமன். வயதில் மூத்தவனும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனனவனுமான ஒருவனுக்கு ஞானதாவை மணம்முடித்துத் தருவதாக வாக்களித்துவிட்டதாக வாதாடுகிறான். சுகாதாரமற்ற கிராமத்துச் சூழலால் ஞானதா நோய்வாய்ப்படுகிறாள்.

தொடக்கத்தில் ஞானதாவுக்கும் அதுலனுக்கும் நல்ல உறவு இருக்கிறது. அதுலன் தன்னை மணந்துகொள்வான் என்று மிகவும் ஆசையுடன் காத்திருக்கிறாள் ஞானதா. ஊரைவிட்டு வெளியேறிக் கிராமத்தை நோக்கிச் சென்றிருந்த வேளையில் மற்றொரு அத்தை மகள்மீது மையலுறுகிறான் அவன். அவளுடைய வெள்ளை நிறத்தையும் அழகையும் பார்க்கப்பார்க்க ஞானதாவின் கருத்த நிறமும் அழகற்ற கோலமும் உறுத்தலாகத் தெரிகிறது. விரும்பத்தகாத ஒருத்தியாக ஞானதாவை அவன் எண்ணத் தொடங்குகிறான்.

தமையனுடைய வீட்டில் தொடர்ந்து தங்க இயலாத இருவரும் மீண்டும் புகலிடம் தேடி கொழுந்தனை நாடி வருகிறாள் துர்க்காமணி. தம் பங்காக வரத்தக்க வீட்டின் பகுதியை அவன் பெயருக்கே எழுதித் தருகின்றனர். ஆனாலும் கொழுந்தனிடமிருந்தோ அல்லது வீட்டினரிடமிருந்தோ ஆதரவான வார்த்தைகளோ செயல்களோ கிடைப்பதில்லை. மாறாக. இருவருமே அந்த வீட்டின் வேலைக்காரிகளாக உழைக்கின்றனர். சமையற்கட்டும் பின்கட்டுமே அவர்கள் புழங்குமிடங்களாக மாறுகின்றன. வீட்டின் மற்ற பகுதிகளில் உலவவோ விருந்தினர்களாக வருபவர்களின் முன்னிலையில் வெளிப்படவோ அவர்களுக்கு அனுமதியில்லை.

மகளுக்குத் திருமணம் கூடிவரவில்லை என்கிற வருத்தத்திலும் எரிச்சலிலும் தமக்காக யாரும் உதவ முன்வரவில்லையே என்கிற ஆதங்கத்திலும் தொடக்கத்தில் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்த அதுலனின் ஈடுபாடும் பார்வையும் மற்றொருத்தியின்மீது படிந்துவிட்டன என்பதைப் பார்த்தறிந்ததில் கவலையிலும் மூழ்கியதில் துர்க்காமணியின் உடல்நிலை மோசமடைகிறது. படுத்த படுக்கையாகிவிடுகிறாள். எல்லாவற்றுக்கும் காரணம் ஞானதாவின் உடல்நிறமான கருப்பு. இரண்டாம் தாரமாக மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்ளப் பெண் பார்க்கிறவன்கூட நிறம்பார்த்துப் புறக்கணிக்கும் அவலத்தால் மனம் நலிந்துபோகிறாள். அவளது இயலாமை மெல்லமெல்ல மகள்மீது கோபமாக மாறுகிறது. தாயே மகளை வெறுக்கத் தொடங்குகிறாள். மரணத்தைத் தழுவும் முன்னர் அவளுக்கு எப்படியாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்கிற உந்துதலில் அடுத்த தெருவில் வசிக்கிற வயசாளியான கோபால் பட்டாச்சார்யாவுக்கு மணம்முடித்துத் தரவும் சம்மதிக்கிறாள். அவவூம் பெண்பார்க்க வருகிறார். அன்று ஒப்பனை என்கிற பெயரில் தன்னை அலங்கோலப்படுத்திக்கொண்டு வந்து நிற்கிறாள் ஞானதா. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் ஏற்பட்ட உடல்மெலிவுடன் இருந்தவள் இந்த அலங்கோலத்தால் மேலும் கோரமாகக் காணப்படுகிறாள். பிறகு பதில் சொல்வதாக அறிவித்துவிட்டுச் செல்கிறார் கோபால் பட்டாச்சார்யா.

வயது வந்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாமல் மரணமெய்தினால் மூதாதையர்களுக்கு நரகமே கிட்டும் என்பதிலும் இறந்த பிறகும் அவள் எவ்வித வைதிக காரியங்களுக்கும் பயன்படமாட்டாள் என்பதிலும் அவள் கையால் நீரோ நெருப்போ ஏற்றுக்கொள்வதற்கில்லை என்பதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவளான துர்க்காமணியின் வேதனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மனவருத்தத்தில் மூழ்கிய துர்க்காமணி மரணமடைகிறாள். திருமணமாகாத ஞானதா தன் தாயின் ஈமக்கடன்களைச் செய்ய முடியாது என்று சாஸ்திரம் தடைசெய்தபோதும் அவளே செய்யவேண்டியிருக்கிறது. சிதையில் நெருப்பிடப்பட்டு அது எரியத் தொடங்கியதும் அவள் ஆடவர் கூட்டத்திலிருந்து விலகி அருகிலிருந்த பாகீரதி நதிக்கரையில் உட்கார்கிறாள். வேகமாகச் செல்லும் ஆற்றின் பிரவாகத்தருகே அவள் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அதுலனுடைய மனம் திகிலடைகிறது. எதிரே கொழுந்துவிட்டெரியும் சிதையைக் கண்டு அவன் மனத்தில் குடிகொண்டிருந்த பழைய பிரச்சனை மீண்டும் உயிர்த்தெழுகிறது. நேற்று இருந்தவள் இன்றைக்கு இல்லை. இன்று இருப்பவர்களும் நாளை மடிந்து அவர்களது உடல்களும் இப்படித்தான் தீக்கிரையாகப் போகின்றன. உடலை மையமாக வைத்து உருவாக்கிக்கொள்ளும் ஆசைகள், கனவுகள், துக்கங்கள், கவலைகள் எல்லாவற்றையும் மரணம் அழித்தொழித்துவிடுகிறது. இத்தகு எண்ண எழுச்சியைத் தொடர்ந்து அழகின்மீதும் உடல்நிறத்தின்மீதும் அவன் கொண்டிருந்த பிடிப்பு மெல்லமெல்லத் தளர்கிறது.

கரையோரம் அமர்ந்திருக்கிற ஞானதாவை நெருங்குகிறான் அதுலன். அவள் அருகே அவள் உடைத்துப்போட்ட கண்ணாடிவளையல் துண்டுகள் கிடக்கின்றன. அவள் மீது பிரியத்தோடு இருந்தபோது அவன் வாங்கிக்கொடுத்த வளையல்கள் அவை. வேறொருத்தியின்மீது மையல்கொண்டு அவன் மனம்மாறிவிட்டபோதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவள் அவ்வளையல்களை அணிந்தே வந்தாள். எல்லா நம்பிக்கைகளையும் தாயின் மரணத்தையொட்டி உதறியதால் வளையல்களை உடைத்துப்போட்டாள். ஏற்கனவே எரியும் சிதையைப் பார்த்ததில் மாறுபட்ட எண்ணங்களில் மூழ்கியிருந்த அதுலன் உடைந்த வளையல் துண்டுகளைக் கண்டதும் முற்றிலுமாக மனம் மாற்றமடைகிறான். ஞானதாவுக்கு நேர்ந்த பல துன்பங்களுக்குத் தான் பலவகைகளில் காரணமாகிவிட்டதை எண்ணிக் குற்றஉணர்வால் வேதனைக்காளாகிறான். தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு ஞானதாவை வேண்டுகிறான். குனிந்த தலை நிமிராத ஞானதா வாய்திறந்து ஒன்றும் பேசவில்ால. மெலிந்து பலவீனமான அவள் கை அதுலனுடைய கரங்களிடையே நடுக்கத்துடன் அடைக்கலமாகிறது.

*

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழ்வாசகர்களால் விரும்பிப்படிக்கப்பட்ட பிறமொழி எழுத்தாளர்களுள் முக்கியமானவர் சரத்சந்திரர். காதல் காவியமாகப் பல மொழிகளிலும் உருவெடுத்த ‘தேவதாஸ் ‘ திரைப்படத்தின் மூலக்கதையாசிரியர் இவரே. நாற்பதுக்கும் மேற்பட்ட இவருடைய படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வைகுந்தன் உயில், மணப்பெண், உடைந்த உள்ளம், பாரதி, ஸ்ரீகாந்தன் ஆகியவை இவருடைய முக்கியமான நாவல்கள். எழுபதுகளில் இவருடைய படைப்புகள், விமர்சனங்கள், நுால்அறிமுகம் என்பவற்றின் தொகுப்பாக அமரர் சரத்சந்திரருக்காக சிறப்பிதழொன்றைக் கண்ணதாசன் இதழ் எழுபதுகளில் வெளியிட்டுக் கெளரவித்தது. இவருடைய முப்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்தவர் அ.கி.ஜயராமன். ‘ஞானதா ‘ என்னும் இக்கதை தனிநுாலாகவே அ.கி.ஜெயராமனுடைய மொழிபெயர்ப்பில் 1958 ஆம் ஆண்டில் ஜோதி நிலையம் வெளியீடாக பிரசுரமானது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்