அமானுதம்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

ஆபிதீன்


————-

இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் , அம்மணமாக திரிந்து கொண்டிருந்த மகனை அப்படியே அணைத்துத் தூக்கினேன். என் முகப்பக்கம் வந்த அவன் தொடைகளின் நடுவே முகம் புதைத்து , அங்கிருந்து கிளம்பும் மூத்திர வாசத்தில் மெய் மறந்தேன் . உதடு , தம்பித்தோழன் இல்லா தனிமையில் ஆடும் அவன் குஞ்சில் உரசிற்று. கூசிச் சிரித்தான் மகன். ‘அமானுத சாமான் மச்சான் அது. பாத்து.. பாத்து.. ‘ என்று எச்சரிக்கை விடுத்தாள் மனைவி. அஸ்மா சொன்னால் அப்பீல் ஏது ? வீடு கலகலத்தது.

அன்று இரவு எங்கள் அமானுதங்கள் சரியான இடங்களைக் கண்டு பொருந்திக் களி கொண்டன. பசியைத் தின்று தீர்த்தோம் காலைவரை. களைத்துத் தூங்கிப் போனாள் மனைவி. நான் கட்டிலுக்கு பக்கத்தில் தொங்கிய தூளியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மகனையும் மகனுடையதையும் பார்த்தேன். என்ன அழகு..

அமானுதம்தான். யாருக்காகவோ படைக்கப்பட்டு அது காத்துக் கொண்டிருக்கிறது – உரியவரைப் போய்ச் சேரும் ஆவலுடன். அது பெண்ணாகவும் அவள் முன்னாகவும் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

அமானுதம்….இதைப்பற்றி யோசித்தால் என்ன ? எளியவருக்கு கட்டுரையாகவும் , எழுத்தாளருக்கு கதையாகவும் தோணும் ஒன்று தோன்றும். ‘இப்போதெல்லாம் எதுவும் பேச மாட்டேன் என்கிறாய். நே…ரா ஒரு கதை ‘ என்று நண்பர்கள் கிண்டல் செய்வதை பொருட்படுத்தாமல் எழுதிவிட வேண்டியதுதான். அப்படியே அவர்களையும் – பதில் சொல்வதாக இருந்தால் – ஒரு கதை எழுதச் சொல்லிவிட வேண்டும். எழுத்தே இன்பம், எழுதும் இந்தப் பேனாவோ பேரின்பம். இல்லை, பெருந்துன்பம்…

பிறரிடம் கொடுக்கச் சொல்லியோ, பாதுகாப்பிற்காகவோ ஒருவர் நம்மிடம் ஒரு பொருளை ஒப்படைக்கும்போதோ அந்தப் பொருள் அமானுதம் என்று அைழைக்கப்படுகிறது. வலிய பிறர் பொருளை நாம் எடுத்துக் கொண்டால் அது கூட அமானுதம்தான். கொடுத்தாக வேண்டும் திருப்பி . பாலஸ்தீனியப் பகுதிகள் , ஈராக் ஆட்சி இவைகள் முறையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அமானுதம் (ஒரு செளகரியத்திற்கு தனித்தனியாக சொல்கிறேன்). இந்தியாவின் சில பகுதிகள் சீனாவுக்கு அமானுதம் . சில இந்தியாவுக்கே அமானுதம். இதைச் சொல்லும் பாக். குண்டும் அமானுதம்தான். இப்படிப் பார்க்கப் போனால் காலணி நாடுகளில் அடித்த கொள்ளைகள் பிரிட்டிஷ் அரசுக்கு ; வீழ்ந்த புத்த சிலை , தாலிபான்களுக்கு ; இடிந்த மஸ்ஜித் , ‘குரங்குப்படை ‘களுக்கு என்று போகும்.

ஏய், அரசியல் பேசாதே..

Poly tic(k)s ? சரி. அது புர்ர்ரட்சி தீபங்களின் இலாகா. புரட்சிதான் என்ன ? தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த தானைத் தலைவனை எதிர்த்து மூன்று பேர் மட்டும் படிக்கும் இதழில் ஒரு வரி (அப்போது டிரெயின் வேறு டிராக்கில் போய்க் கொண்டிருந்ததது..) எழுதுவது. அது உண்மைதான். ஆனால் தைரியமென்பது அந்த டிராக்கில் – டிரெயின் கவிழ்ந்தாலும் பரவாயில்லையென்று – முதல்வி மொத்தம்மாவை ஓட வைப்பது.

வேண்டாம். நாம் அமானுத டிராக்கிற்கு போய்விடுவோம். கண்ணுக்குள்ளே ஜெ.கம்பிகள் தெரிகின்றன…

ஒரு டாக்டர் அறுவை சிகிச்சையின்போது நம் வயிற்றில் கத்தியை வைத்து விட்டால் அது கூட அமானுத சாமான்தான். ஆனால் இந்த விஷயத்தில் திருப்பி எடுத்துக் கொள்வது (வேறொருவர் வயிற்றில் வைக்க ?) டாக்டரின் கடமை.

‘அமானா ‘ என்றால் அரபியில் பாதுகாப்பு, நம்பிக்கை என்று அர்த்தம். அந்த வார்த்தைக்கே அர்த்தம் கொடுத்தது ‘அல்-அமீன் ‘ (நபி (ஸல்)) என்பார்கள். நான் அரபியில் புலவனல்ல. சுருக்கமாக, நம்பிக்கை சம்பந்தமான வார்த்தைகள் என்று விளங்கிக் கொண்டால் போதுமானது. அமானுதம் சம்பந்தமாக வேதம் நிறைய எச்சரிக்கிறது. அதனால் எனக்கென்ன என்கிறீர்களா ? நீங்கள் கீழே உள்ளதைப் பார்க்காமல் நேராக சொர்க்கத்திற்கு போய் விடலாம். அது ரொம்ப ஜாலியான இடம். ஒரே பரிசு மழை…

Cashierஐ ‘அமீன் சந்துக் ‘ என்பார்கள் அரபுநாட்டில். பணப்பெட்டியை பாதுகாப்பவர் என்று அர்த்தம். பெட்டியை மட்டும் பாதுகாத்துக் கொண்டு அதில் உள்ள பணத்தை எடுத்து விடுபவரை அப்படிச் சொல்ல முடியாது. அந்தச் சிலர் (அடிக்கோடிடுக) நாம் விடைபெறும்போது தங்கள் முகமெல்லாம் மலர ‘ஃபீ அமானுல்லா ‘ என்பார்கள் சீதேவித் தனமாக – ‘எனக்கு ‘ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு. ‘அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டாகட்டும் ‘ என்று பொருள். சொல்லும்போது கணக்காகச் சொல்ல திறமை வேண்டும்..

‘அமானத் கணக்கு ‘ என்றே ஒரு ஸ்பெஷல் கணக்கு துபாயில் உண்டு. அரபிக்கு எவனாவது கடன் கொடுத்திருப்பான். அல்லது ‘வைத்துக் கொள்ளுங்கள் ; அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் ‘ என்று வங்கியிலிருந்து வட்டி வாங்க பிரியப்படாத நல்லோர் சொல்லியிருப்பர். சொல்லிவிட்டு, கொடுத்த பணத்தை விட அதிகமாக வாங்குவர். அது அமானத் கி அமானத். நம்ம வார்த்தைச் சித்தர் தவறாது சொல்வது போல தவறுகளின் தவறு.

‘அமானா ‘தான் , ஊரில் ‘அமானுதம் ‘ என்றாகிவிட்டது. சில வார்த்தைகள் முற்றாக வேறுபொருளில் ஊரில் சொல்லப்படுவதற்கு ‘அமானா ‘ தப்பித்ததென்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக…..வேண்டாம்; ஏற்கனவே ‘உன் கதைகள் இஸ்லாமியக் கலாச்சார ஆனம் (குழம்பு) அதிகம் ஊற்றப்பட்ட குழைந்த சோறு ‘ என்று கிண்டலடிக்கிறது ஒரு அடி பிடித்த சோறு. எனவே அமானுதம் பேசுவோம்.

அமானுத சாமான் அவ்வளவு முக்கியம். நமது பொருட்களை விட அமானுத சாமான்களை முதலில் திருப்பிக் கொடுத்து விடுவதற்கு சபராளிகள் துடிப்பார்கள். ஏனெனில் நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி நவின்றுள்ளார்கள் என்றுதான். நவிலப்படாமலே நல்லது செய்யும் சபராளிகளும் உண்டு. அவர் பினாங்கிலிருந்து வந்தாலும் சரி, அமெரிக்காவிலிருந்து வந்தாலும் சரி. ஊர் வந்து பெட்டியைப் பிரித்ததுமே முதலில் அமானுத சாமான்களை வெளியே எடுத்து அவரவர்களிடம் சேர்த்தால்தான் அவருக்கு நிம்மதி. நிம்மதி அவருக்குத்தான். அவரது பெண்டாட்டிக்கு அல்ல. ஏனெனில் எப்போதுமே அமானுத சாமான்கள் கண்ணைக் கவருகின்றன. தவிர பயணப்பெட்டியின் வாசமே தனி. அது ‘ஐஸ்ஒடுக்கலான் ‘ (No. 4711) கசியாத பெட்டியானாலும் சரி. சொல்லப்போனால் மாப்பிள்ளையை விட அதுதான் வாசம். வாசமுள்ள அமானுத சாமான்கள் , சுருட்டி மடக்கப்பட்டு இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து தேவைப்பட்டதை எடுப்பது ரொம்ப சிம்பிள் : ‘கஸ்டம்ஸ்கார bபலாக்கொள்ளுவான் எடுத்துக்கிட்டாண்டு சொல்லிடுங்கம்மா.. ‘ .க்ளோஸ்.

அமானுத சாமான்கள் , விமானத்தில் உட்காரும்வரை ‘விர்ர் ‘ரென்று வரும். ‘ஒண்ணுமில்லே.. ஒரே ஒரு சின்னோண்டு கவுன் – என் பேத்திக்கு ‘ என்போர் வருவதைப் பார்த்தாலே ‘பகீர் ‘. ஒரு பெரிய ‘அர்பானா ‘ வண்டியில் சாமான்களை நிரப்பித் தானே தள்ளிக்கொண்டுக்கொண்டு வருவார். ஒருவேளை அன்று ஊர் புறப்படும் எல்லா தெரிந்தவர்களிடமும் ஒவ்வொன்றாக டெலிவரி செய்வதற்கோ ? இல்லை, எல்லாமே நமக்காக. வருவதெல்லாம் தட்டிக் கழிக்க முடியாத சொந்தம் வேறு. நாம் போனமுறை அதனிடம் கொடுத்தனுப்பிய ஒரு கிராம் தங்கத் தோடுக்கு இப்படி ஒரு பெரிய மொய் எழுதாமல் விட்டால் மெய்யாகவே அதற்கு தூக்கமே வராது.

நமக்கு புத்தி இல்லையா, நாம் ஏன் முதலில் அதனிடம் கொடுத்தோம் என்றால் ஊரில் ஒரு பேய் உட்கார்ந்து கொண்டு நீங்க சாமான் அனுப்புனாத்தான் உண்டு என்று சொல்கிறதே ஐயா.. அரபுநாட்டில் கிடைக்கும் ‘கடப்பாசி ‘ மதுரையிலிருந்து வர, அதை வியாபாரி ‘made in malaysia ‘ என்று முத்திரை குத்தி ஒரு பாலிதீன் பையில் போட்டபிறகு தரமோ தரம். வாங்கி அனுப்பத்தான் வேண்டும். இம்மாதிரி அமானுதத்தைக் கொடுக்கப் போனவர் தன்னுடையதையும் சேர்த்துக் கொடுக்கும் வில்லங்க விவகாரங்களும் வெளிவரத்தான் செய்கிறது….

ஊரிலிருந்து வரும்போதும் போகும்போதும் வரும் அமானுஷ்ய அமானுதத் தொந்தரவுகளை விடுவோம். ஊரிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்படைப்பது சரியாகத் திரும்பி வரும் என்றா நினைக்கிறீர்கள் ? எங்கள் ஊர் சீயாளிராவுத்தர் தெருவில் ஒரு bபடா பணக்கார வீடு ஒன்றில் ‘ரெய்டு ‘ நடந்தபோது , பாங்காக்கில் சேர்த்த வைரங்களை பக்கத்து ஹாஜியார் வீட்டில் கொடுத்து வைத்தார்கள். எல்லாவற்றையும் ஊர் பேங்க் லாக்கரில் வைக்கவும் முடியாது. திறந்து காட்டுவதற்கல்லவா சொத்தென்றும் __த்தென்றும் பெயர் ? ‘ரெய்டு ‘ முடிந்து , அரசாங்கத் திருடன்கள் போனபிறகு திருப்பிக் கேட்டதற்கு அடிதான் கிடைத்தது. மத்யஸ்தம் நடந்தது. கிடைத்தது நாலைந்து அஜ்மீர் இமிடேஷன் கற்கள் – ‘அல்லா மேல ஆணையா இதைத்தான் கொடுத்தாஹா.. ‘ என்ற பதிலோடு. அல்லாஹ் மேல் ‘தவக்குல் ‘ஐ (நம்பிக்கை) வைக்கச் சொன்னால் தவக்களை வைப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

ஈரானி ஒருவன் சொன்னது ஞாபகம் வருகிறது. புனித ரமலான் மாதத்தின் பகலில் , வலது கையின் நடுவிரலை மட்டும் நீட்டிக் கொண்டு அனைவருக்கும் சவால் விடுத்தபடி போன ஒரு ‘பது ‘ (பூர்வீகக் குடி) அரபிப்பெண்ணை சப்புக் கொட்டியபடி பார்த்தான் அவன். ‘ஹரீஷ் ‘ கொடுக்கும் தினவு. ‘என்னடா இப்படிப் பார்க்கிறேயே இந்த நேரத்தில்..கண்ணை நோண்டிவிடமாட்டான்களா ? ‘ என்று கேட்டதற்கு ‘வோ அலக் ஹை, யே அலக் ஹை ‘ என்றது அந்த ஹராமி. ‘எழுத்து வேறு; வாழ்க்கை வேறெ ‘ன்று செருப்பியல் தத்துவம் பேசுவார்களே சிலர், அதைப்போல.

ஒரு வீட்டில் திருடப் போன YYY , இறைவணக்கத்திற்கான நேரம் வந்தவுடன் திருடிய பொருட்கள் இருக்கும் பெரிய மூட்டையை தன் பக்கத்தில் வைத்து விட்டு ரொம்ப சின்ஸியராக வணங்க ஆரம்பித்து விட்டானாம். வீட்டுக்காரன் , துணிச்சல் திலகமாய் YYYஐக் கேட்டிருக்கிறான் பலமுறை. நம்பினால் உயிரையே கொடுப்பவர்களும் குழந்தை மனம் கொண்டவர்களுமான இந்த YYYகள் படிப்பறிவின்மையால் முரடர்களானவர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . XXXநாட்டு வடமேற்கு எல்லைப்புறத்தைச் சேர்ந்த இவர்கள் இரண்டு ‘பந்துக் ‘ (துப்பாக்கி) எப்போதும் வைத்திருப்பவர்கள். முதலாவது , முகத்திரை நீக்கும் தங்கள் மனைவிகளுக்கு. இரண்டாவது ‘துப்பாக்கி ‘ , அம்மனைவிகளுக்கும் மேலாக இவர்கள் மோகிக்கும் yyyக்கு.

இறைவணக்கத்திற்கு இடைஞ்சலும் செய்யக் கூடாது. சங்கடப்பட்டுக்கொண்டே வீட்டுக்காரன் YYYஐ தொடும்போதெல்லாம் ‘ஸ்சூ.. ‘ என்று கையைத் தட்டிவிட்டு, அவன் பாட்டுக்கு வணக்கத்தைத் தொடர்கிறான். சிந்தனை சிதறாமல் ஒருமுகப்படுத்துவதோ வணக்கத்திற்கு மிக முக்கியம். ஏ இறைவா, வழிகெடுக்கும் வீட்டுக்காரர்களை மன்னித்து விடு..

‘நான் திருடியது சம்பந்தமாக என்னவோ திட்டிக் கொண்டிருந்தீர்கள்.. வணங்கும்போது எதுவுமே எனக்குக் கேட்பதில்லையென்று உங்களுக்குத் தெரியும் ‘ – YYY.

‘உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை முட்டாளே ‘

‘நமாஸ் மேரா ஃபர்ஜ்ஹை. சோரி மேரா பேஷாஹை. ‘ – வீரம் , நெஞ்சை நிமிர்த்திச் சொன்னது.

அதாவது… வணக்கம் அவனது கடமை. திருடுவதோ தொழில்.

எல்லா YYYகளுமா ? இல்லை. என் கம்பெனி அக்கவுண்ட் சாஃப்ட்வேர்-ஐ தயாரித்தவனே ஒரு YYYதான். அபூர்வம். அவ்வளவுதான். ஆனால் ‘அது வேறு; இது வேறு ‘ சொல்லும் திருடர்களை ஏமாந்த பணக்காரரின் மகனுக்குத் தெரியாது. அவன் அந்த ஹாஜியார் வீட்டில் இப்போது எடுபிடி வேலை செய்கிறான். படித்த பையன். இபாதத் அதிகம். ‘Allah doth command you to render back your trusts to those to whom they are due ‘ என்று சொல்லத் தெரிகிறது. ‘Love all, trust a few ‘ என்று ஷேக்ஸ்பியர் தமிழில் சொல்லியிக்கிறானே தம்பி..

அமானுதம் பற்றி மேலும் விளங்கிக் கொள்வதற்காக ஆன்மீகம் மிகப் பேசும் பெரியவர் ஒருவரிடம் கேட்டேன். 3:75 , 4:58 , 23:8 , 33:72 என்று சொல்லி வாயை மூடிக் கொண்டார். கண்டிப்பாக இது இறைமறையாகத்தான் இருக்க வேண்டும். இதை ஆலிம் சி.டி நொடியில் செய்துவிடுமே, ஏன் இப்படி செய்கிறார் ? அவருக்கு கொடுக்கப்பட்ட ஞானமே அமானுதம். அதனால்தான். அமானுதத்தை வீணடிக்காமல் தகுதியானவரிடம் ஒப்படைத்தால்தான் மறுமைநாளில் , இறந்து போன அவரது ஞானகுருவை சந்தோஷமாகப் பார்க்க இயலுமாம். இது அவரது ஞானகுருவுக்கு தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்தான்.

அதென்னமோ கொடுக்கப்படும் வைரங்கள் எல்லாமே அடுத்த நொடியே கரியாகப் போய்விடுகிறது…எண்களை விரைவாகச் சொன்னதே பெரிதென்று எண்ணி வைத்தேன் ஒரு நூறு. பைசாதான். அதற்கே மகாபயங்கரமான குரலில் பாட ஆரம்பித்து விட்டார் மனுஷன். வார்த்தைகளே இல்லாத கவாலியும் இருக்கத்தான் செய்கிறது.

அதை அடக்க நூறு ரூபாய். சொல்அமானுதம் பற்றிச் சொன்னார். அதாவது ஒருவர் அல்லது ஒரு அவை ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொல்லி அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உத்தரவு போட்டால் அதுதான் சொல்அமானுதம். அதற்காக கொள்ளையடிக்கவும், கற்பழிக்கவும் முடிவு செய்து அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றால் ? அதற்கு விலக்கு இருக்கிறது. உரியவரிடம் போய் சொல்லி மனிதப் பண்பைக் காப்பாற்றிட வேண்டும். ஆனால் இது ‘குர்ஆனின்குரலி ‘ல் வந்த கட்டுரை என்று நினைவு.

கூர்ந்து தேடினால், இணையம் கூட கொடுத்து விடும். இவர் எதற்கு ? எனக்கு போதவில்லை. மேலும் கொடுக்க பணமும் இல்லை.

கடற்கரைக்குப் போய் தங்கை , அவள் பிள்ளைகளுடன் உட்கார்ந்தேன். மனைவி வரவில்லை. தங்கையுடன் ஒற்றுமை. எல்லா வகைப் புழுக்கமும் போக இந்தக் காட்டூருக்குக் கிடைத்த கடலும் காற்றும் கூட அமானுதம்தான் என்று தோன்றியது. காட்டூரான் சிந்திப்பதா ? நிறுத்து.

என் தங்கையிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு போன என் எட்டு வயது மருமகன் ஆஷிக் சற்று நேரத்தில் எல்லோருக்கும் சுண்டல் வாங்கிக் கொண்டு வந்தான். பிள்ளைகள் இந்த காலத்தில் உஷாராக இருக்கிறார்கள். என்னுடைய சுண்டலையும் எடுத்துக் கொண்டு மறக்காமல் கொன்னையை பிரித்துக் கொடுத்தான் அவன் மரியாதையாக.

அசிரத்தையாக, பிரிந்திருந்த கொன்னையைப் பார்த்தபோது ஆச்சரியமுற்றேன். திசை மாறிவிட்டதா ‘தினமனம் ‘ ? அமானுதத்தை விளக்கும் ஹதீஸ் இருக்கிறதே.. கோமான் பெருமை சொன்ன கொன்னை வாழ்க.

மக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவில் நுழைவதற்கு சாவி கேட்கிறார்கள். அது உஸ்மான் பின் தல்ஹா என்பவரிடம் இருக்கிறது. கஃபாவின் பாதுகாப்பாளர் (சதானா) அப்போது இஸ்லாமியரல்ல. தயக்கத்துடன் சாவியைக் கொடுக்கிறார் உஸ்மான். உள்ளே சென்று , பின் கஃபாவை விட்டு வெளியில் வந்ததும் அதைப் பூட்டி , மறக்காமல் சாவியை உஸ்மானிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு ‘(சாவி) ஊழுழிகாலமட்டும் உம்மிடமும் உம் சந்ததியினரிடமுமே இருந்து வரட்டும் ‘ என்று சொல்கிறார்கள் உத்தமத் திருநபி. அமானுதம் சம்பந்தமான முக்கியமான இறைவசனம் பிறந்த இடமும் இதுதான். நாயகத்தின் பெருந்தன்மையையும், கனிவையும், அமானுதப் பொருளில் அவர்களுக்கிருந்த எச்சரிக்கையையும் பார்த்து நெகிழ்ந்து , சாந்தி மார்க்கத்திடம் சரணடைந்து விடுகிறார் உஸ்மான். கஃபாவின் சாவி இன்றுவரை அவருடைய சந்ததியிடம்தான் இருக்கிறது.

துணுக்கை , சங்கீத விமர்சகன்-cum-எழுத்தாளன் மணிதாசன் எழுதியிருப்பதுதான் விசேஷம். ‘மறுவிலா முழுமதி ‘க்கு நன்றி கூடச் சொல்லவில்லை. எல்லாமே அமானுதம்தானென்றா ? ‘ இவனுக்குப் புடிச்ச ராகம் ‘சுருட்டி ‘லெ ? ‘ என்று தர்ஹா வித்வான் ஜாஃபர்கான் வெடைப்பது சரிதான்.

பொருத்தமான ஹதீஸ்… ஆனால் நான் புரிந்து கொண்டதை விட , ‘ஹயாத் ‘தே (உயிர்) அமானுதம்தானே.. ‘ என்று தன் முதல் கணவன் மெளத்தான சமயத்தில் அழாமல் பேசிய , என் லாத்தா(அக்கா) தான் அதிகம் புரிந்து கொண்டவளாகத் தோன்றுகிறது.

கதை முடிந்து விட்டது. சுபம்.

இதை எழுதிய இந்த அழகான 18Ct – Gold plated – Cross பேனாவை நாளை ஒரு பேராசிரியருக்கு கொடுக்க வேண்டும். அமானுதப் பொருள். ‘சங்கப்பாடலில் சமரசம் ‘ காய்ச்சப்போகும் அவர் தலைப்புக்காகவாவது…… அடியே அஸ்மா, இங்கேயிருந்த பேனாவை எடுத்துத்தொலைத்து விட்டாயா.. ?

(முற்றும்)

Email : abedheen@yahoo.com

Web : http://abedheen.tripod.com/

அருஞ்சொற்பொருள்

சபராளி – வெளிநாட்டுப் பயணம் செய்பவர் | bபலாக்கொள்ளுவான் – கெட்டவன் | ஹரீஷ் – இறைச்சி சேர்த்து அரைத்த கஞ்சி | ஹராமி – போக்கிரி | இபாதத் – இறைச்சிந்தனை | வெடைத்தல் – கேலி செய்தல்

————–

malikdxb@emirates.net.ae

Series Navigation

ஆபிதீன்

ஆபிதீன்