M.ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

M.ராஜா


காயம் ஒருநாள் காயும்
——–
எந்தப்பூவையும் மலர்த்தியிராத கிளையிலிருந்து
சருகுகளை விழுத்துகிறது மரம்

உலரிலைகளை
உருட்டிச் செல்கிறது காற்று
படுத்தே கிடக்கிற பூமியும்
பறந்து பார்க்கிறது கொஞ்சம்

0

ஒரு கூட்டிப்பெருக்களில் கலைத்தாயிற்று
பறத்தலின்
தோற்ற மயக்கத்தையும்
உதிர்புஷ்பங்களின்
மீள்விழிப்பில்லா உறக்கத்தில்
விரியும் கூந்தல் கனவுகளையும்

நிமிர்ந்தே நிற்கும் துடப்பத்தின் பற்களில்
ஒளிர்கிறது வன்மப் புன்னகை

0

கொஞ்சம் நீர்தெளித்தால் அடங்கிவிடும்
கீறலெழுப்பிய புழுதிப் புகை

சுழித்தியற்றும் கோலம்
கீறல்களையும் மறைத்துவிடும்.

_______

இத்தேடல் ஈக்கும் உண்டோ?

நிழலுக்குத் துணையாய்
நான் மட்டுமே உள்ள அறையில்
வழி தொலைந்து அலைகிறதோ
இந்த ஈப்பறவை?

வண்ணமொளிர் வெளிச்சத்தில்
தனக்கான கடவுளையோ
கனியுதிர்வனத்தையோ
கண்டிருக்கக் கூடும்.

உதைத்தும் உடையாத
சாளரக் கண்ணாடி மீது
ஊர்ந்து வழிகிறது
ஒரு கறுப்புக் கண்ணீர்த் துளி.

கண்ணாடி விலக
வழி புலப்படும்
றெக்கை விரித்தால் பயணம்
தாழ்த்தினால் பாதாளம்.

கரை தாண்டியும்
கடந்து போகட்டும்
கடவுள் கிட்டாதெனினும்
உண்ணக் கள்ளாவது கிடைக்கும்.

ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததை
கடலில் தள்ளிவிட்டதாய்
என்னைத் திட்டாதவரைக்கும் சந்தோஷமே.

_______

மேலே விழுந்து
தன்னையே உழுதோடும் காற்றில்
சுவாசம் இழுத்து
பயணித்து கொண்டிருக்கிறேன்.

கை
கால் பிருஷ்டம்
மூன்று புள்ளிகளில்
நங்கூரமிட்டிருக்கிறது
என் இருப்பு.

தளை அறுத்து
உறைந்த விழிப்பாய்
சிறிதுநேரம் இருந்துவிட்டு
திரும்பிவிடுகிறேன்.

அதுவரைக்கும்-

என் கூட்டையும்
கூடு தாங்கும்
இந்த பைக்கையும்
பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.

____________

சலனம்

நீர்ப்பரப்பு.
துளிநீர் விழ
குழித்து விழுங்கும்.

வட்ட அலை
பெரு வட்டம்
பெருகி
பெரியதாகி
கரை தொட்டு
திரும்பும்.
துளியிட்ட குழி நோக்கி
குறுகும்.
குழி மறைய
அடங்கும்.

_________
இருட்டுப் பள்ளம்

சட்டென்று
மின்சாரம் ஒளிந்துகொண்டது.

அறைக்குள்
சுற்றி வருகிறது
கறுப்பு நிறத்தில் காற்று
வெளிச்சத்தில் தெரிவதில்லை.

ஆளற்ற அரவங்கள்
ஒலிகூட்டி
கிலியூட்டும்.

ஒற்றைக் கண்ணே
ஒரே அங்கமென
சர்ப்பமாய் நெளியும்
கற்றைக் கால்களுள்
ஒன்று நீண்டு
முதுகு தொட்டதும்
உலக உருண்டை
உள்ளுக்குள் திரண்டு
வங்கக் கடலை
தெளித்தது முகத்தில்.

தைரியம் திரட்டி
திரும்பிப் பார்க்கிறேன்
கறுப்பு காற்று
காறி உமிழ்ந்தது.

அதீத கற்பனை
அர்த்தமற்ற பயம்.

சிந்தனை நிறுத்தினேன்
காலி செய்து
துடைத்து
கோப்பையை கவிழ்த்தேன்.

நானிருந்த அறையில்
யாருமில்லை
யாருமற்ற அறையில்
நானில்லை.

இயக்கமற்று
நிர்க்கதியாய்
நிர்மூலமாய்
நின்றது கோப்பை.

மோதி
உடைந்து
நிறைத்தது
இருட்டு.

குலை நடுங்க
உதட்டுக்கு வந்த பாடலை
உரக்க முணுமுணுத்தபடி
அறையைவிட்டு வெளியேறினேன்.

___________________

Series Navigation