சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

ரவிசங்கர்


முதலில், சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.

அக்கட்டுரையின் முக்கிய கருத்து:

* பிற மொழி ஒலிகளைத் தவிர்த்துத் தமிழில் எழுதுவதால் / பேசுவதால் / பாடுவதால் இனிமை குறைகிறது. எனவே தயங்காமல் பிற மொழி எழுத்துக்கள் / ஓசைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.

சோதிர்லதாவுக்கு என் கேள்விகள்:

1. ரோஜாவை ரோசா என்று சொல்வதால் ஓசை நயம் குறைகிறதா? ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் rose, rosa என்கிறார்களே? அங்கெல்லாம் ரோசா மணப்பதில்லையா இல்லை பூப்பதே இல்லையா? ரோசா மலரே முதலில் இத்தகைய நாடுகளில் தோன்றிய மலராக இருக்கலாம்.

2. முதலில் எந்த மொழியில் ஒரு பாடலைக் கேட்கிறோமோ அந்த மொழியிலேயே பாடல் வரிகள், இசை பிடித்துப் போவது உள இயல்பு. இரண்டாவதாக எந்த மொழியில் கேட்டாலும் அதன் சுவை வராது. இதற்கும் மொழிகளுக்கும் தொடர்பு இல்லை.

ஏ. ஆர். ரகுமான் தமிழில் முதலில் இசை அமைத்து பிறகு இந்திக்கு மாற்றிய பாடல்களைக் கேளுங்கள். தமிழின் சுவை இந்தியில் இருக்காது. இதற்காக இந்தி மொழியில் என்னென்ன எழுத்து / ஒலிச் சீர்திருத்தங்கள் செய்யலாம் என்பது உங்கள் பரிந்துரை?

3. நேற்று ஒரு சீனப்பாடல் கேட்டேன். அருமையாக இருந்தது. இதை ஆங்கிலத்துக்கு மாற்றினால் உலகம் முழுக்கக் கேட்கலாம். ஆனால், ஆங்கிலத்திலோ ஐயோ பாவம் 26 எழுத்துக்கள் தான் இருக்கின்றன. இன்னும் நிறைய எழுத்துக்களைச் சேர்த்தால் சீனப் பாடலின் சுவையைப் பெறலாமோ?

4. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இது போன்ற குழப்பங்கள் ஆங்கிலத்தைத் திக்கெட்டும் பரப்பப் பெரும் தடையாக இருக்கின்றது. இதை எப்படி மாற்றலாம்? யாரிடம் சொல்லி மாற்றலாம்?

5. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் இப்படி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? ஆங்கிலத்தைத் தாய் மொழியாகப் பேசும் மக்களை விட இரண்டாம் மொழியாகக் கற்பவர் எண்ணிக்கை கூட. அதனால், இப்படி கற்பவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தை மாற்ற இயலுமா? அதிலும், இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா? சீனா முழுவதும் ஒரு மொழி புரியும் என்பதால் அவர்கள் எழுத்துக்களைச் சேர்க்க முன்னுரிமை தரலாமா? ஆனால், சீனத்தில் எத்தனை ஆயிரம் எழுத்துக்கள் என்று சீனர்களுக்கே தெரியவில்லை. இதில் எந்தெந்த எழுத்துக்களை ஆங்கிலத்தில் சேர்க்கலாம்?

6. தம்பி என்ற சொல்லைக் கூட thampi என்பதா thambi என்பதா என்று வேற்று மொழியாள் குழம்புவான். இது குறித்தும் புதிய குறியீடுகள் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் உண்டா?

7. தமிழ் என்பதை thamil என்று கூட எழுதாமல் tamil என்று எழுதும் உலக மொழிகளிடம் ஏன் உங்கள் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைக்கக்கூடாது?

8. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா? இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா?

9. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் செத்துப் போனது? தன்னைக் காத்துக் கொள்ளக் கூடத் தெரியாத மொழியின் ஓர் ஒலியைப் பெற்று ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் தளைத்து ஓங்கும் உயிர்த் தமிழைப் பரப்பப் போவதாய் சொல்வது சிரிப்பாய் இல்லையா?

10. தமிழ்நாட்டிலும் வெளியேயும் தமிழ் சிதைவுறும் போக்குகள் குறித்து வேறு எந்த மொழியினரும் கவலையுற வில்லையே? நாம் ஏன் இன்னொரு மொழியின் ஒலிச் சிதைவைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்? அவர்களைப் போல் நாமும் இருக்காமல் நாம் பெருந்தன்மையாக இருப்போம் என்கிறீர்களா? சரி. ஆனால், அடுத்த வீட்டுத் தீயை அணைக்கும் முன் நம் வீட்டுத் தீயை அணைக்க என்ன செய்தீர்கள்? “ஒன்றும் செய்ய வேண்டாம், தமிழ் தானாய் வளரும்” என்றால் பிறகு ஏன் தமிழை வளர்க்க புது எழுத்துக்கள் தேவை என்கிறீர்கள்?

11. தமிழின் ல,ள,ழ, ண,ந,ன,ர,ற ஒலி வேறுபாடுகளை, இனிமையைக் காக்கும் பொருட்டு இதற்கென புதிதாக எழுத்துக்களை உருவாக்கி ஏற்றுக் கொண்ட மொழிகள் பெயர் ஒன்றையாவது சொல்லுங்களேன்?

12. ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ? இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் தமிழில் புதுப் புது எழுத்துக்களைப் புகுத்திக் கொண்டும் நீக்கிக் கொண்டும் இருக்க முடியுமா?

சரி கேள்விகள் போதும்.

– வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.
– ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே? அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா?
– முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.
– தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு? பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.

– எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.
– செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதுவும் தமிழை ஒத்த தொன்மை உடைய செம்மொழிகளில் இப்படி ஒரு எழுத்துத் திணிப்புச் செயலைக் காணவே இயலாது. 26 எழுத்துகள் மட்டுமே உடைய ஆங்கிலமே உலகில் கோலோச்சும் போது, தமிழுக்கு என்ன குறை?

இது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோரிடம் பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:

இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்கு எதிர்த்தரப்பில் மறுமொழி இருக்காது.


ravishankar.ayyakkannu@gmail.com

Series Navigation

ரவிசங்கர்

ரவிசங்கர்