பெரியாரும், சிறியாரும்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கற்பகவிநாயகம்


****

பெரியாரைச் சிறியார் என்று அரவிந்தன் விளித்ததைச் சரியல்லவெனச் சொல்லும் சாக்கில் ம.ம., பெரியாரை முடிந்த மட்டில் வம்புக்கிழுத்திருந்தார். அக்கட்டுரையில் கண்ட சில விஷய(ம)ங்களை இங்கு பார்க்கலாம்.

1) ‘தம்மை ஒரு ஹிந்துவாக அவர் (பெரியார்) உணராதிருப்பின், பாரதத்தை ஹிந்துஸ்தான் எனக் குறிப்பிட்டிருக்க மாட்டார் ‘ என்பது ம.ம.வின் கண்டுபிடிப்பு.

‘சாரே ஜஹான் சே அச்சா ‘ என்ற புகழ்பெற்ற பாட்டில் கூட கவிஞர் இக்பால் ‘ஹிந்துஸ்தான் ‘ என்றுதான் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானுக்குக் குடியேறிய இக்பாலை இந்து உணர்வுதான் அலைக்கழித்தது எனலாமா ?

கம்யூனிஸ்ட் புரட்சியாளரான பகத்சிங் தனது அமைப்பிற்கு சூட்டிய ‘ஹிந்துஸ்தான் சோசலிஸக் குடியரசுப் படை ‘ எனும் பெயரும் இந்து எனும் உணர்வின்பாற்பட்டதா ?

இந்து எனும் சொல்லே ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியை மட்டும் குறிக்கும் சொல்லாகவே கையாளப்பட்டதாகும். அக்கேமினிட் பேரரசுக் கால (கிரேக்க) கல்வெட்டுக்களில் சிந்து நதிக் கரையோரமாக இருந்த எல்லைப் பகுதிகள் ‘ஹிந்துஷ் ‘ எனக் குறிப்பிடப்பட்டன.

பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த அராபியர்கள், சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த மக்களைக் குறிக்க, அந்நதியை வைத்து ‘அல்-ஹிந்த் ‘ எனும் சொல்லைப் பயன்படுத்தினர். அப்போதும் கூட அச்சொல், குறிப்பிட்ட மதத்தவரைக் குறிக்கவில்லை.

‘ஹிந்துஸ்தான் ‘ எனும் பெயரைக் குறிப்பிடுவது, இந்து உணர்வென்றால், பல்லாயிரம் கோடி சோப்புகளை விற்பனை செய்யும் லீவர் கம்பெனி, இந்தியாவில் ஒவ்வொரு சோப்புக்கட்டியிலும் ‘ஹிந்துஸ்தான் லீவர் இந்தியா லிமிடெட் ‘ என்று அச்சடிப்பதற்கு, ஹிந்து உணர்வுதான் காரணம் என்று விளங்கிக் கொள்வாரா, மலர்மன்னன் ?

2) ‘ஹிந்துக்களுக்கும் மாற்றுப்பெயர் சொன்னார் பெரியார்; தாம் இந்து எனும் உணர்வுடன் ‘ என்பது ம.ம.வின் இரண்டாம் கண்டுபிடிப்பு.

அம்பேத்கர் கூட, இந்து மதத்தை, ‘குற்றவியல் சட்ட நூல்களின் தொகுப்பு ‘ என்றும், ‘மதம் அல்ல. இது தண்டனை ‘ என்றும், பல சிறப்புப் பெயரைக் கூறியுள்ளாரே! அதெல்லாம் ஹிந்து எனும் பெருமிதத்தில் சொன்னவையா ?

3) ‘ஹிந்துக்கள் பலவீனப்பட்டுப் போவது தேசத்திற்கு ஆபத்து ‘ என்பது அடுத்த கண்டுபிடிப்பு.

இந்த தேசம் பலவீனப்பட்டதற்கே நம் மதம்தானே காரணம். மக்களுக்கு நாட்டுப்பற்றை வளரவிடாமல் தடுக்கும் மதம் ஒன்று உண்டென்றால் அது நம் மதம்தான். இதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. உலக வரலாற்றில் பல சின்னஞ்சிறிய நாட்டு மக்களெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களை வீரத்துடன் எதிர்த்து முறியடித்திருக்கின்றனர். ஆனால் 2000 ஆண்டுகளாக இந்தியாவின் மீது படையெடுத்த மன்னர்கள் எல்லோருமே வென்றனரே! ஏன் ?

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சாதிகளாகக் கூறு போட்டு, இழிவுபடுத்தி, அவர்களைப் படிக்க விடாமல் செய்து, ஆயுதம் ஏந்தும் உரிமையைப் பறித்து ஒடுக்கியதால்தானே இந்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.

தங்களை மிருகத்தை விடக் கேவலமாக நடத்திய உயர்சாதிக் காரர்களையும், பிராமணர்களையும் விட வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல் எனக் கருதி, ஒடுக்கப்பட்ட சாதியினர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தனர். இந்த நாடு அடிமையானதற்கும், அடிமை நிலை நீடித்திருப்பதற்கும் காரணமான முக்கிய குற்றவாளியே நம் மதம்தான்.

மேலும் நம் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாக்கும் தரகு வேலையை, காங்கிரசை விட அதி தீவிரமாகச் செய்தவர்கள், ஆறாண்டுகளாய் நம்மை ஆண்ட இந்துத்துவ ஆட்சியாளர்கள்தானே!

4) ‘மைனர் விளையாட்டு, விளையாடித் திரிந்தவர்தான் பெரியார் ‘- யாருமே கண்டுபிடிக்க முடியாததைத் தாம் சொல்லிவிட்டது போன்ற தோற்றத்தில் இதை எழுதுகிறார் ம.ம.

பெரியார், தாம் இளமையில் செய்த அனேக காரியங்களை (மைனர் விளையாட்டு உட்பட) தான் வாழ்ந்த காலத்திலேயே பல இடங்களில் வெளிப்படையாகச் சொன்னவர்தான். சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர் ‘ நூல் இதைப் பதிவு செய்துள்ளது. இந்நூலைப் பெரியாரின் இயக்கம்தான் பெரியாரின் காலத்திலேயே வெளியிட்டது.

எனக்குத் தெரிந்தவரை தனது மறுபக்கங்களையும், இளமைக் குறும்புகளையும் ஒளிவு மறைவின்றி எழுதியவர்கள், தமிழ்ச்சூழலில் பெரியாரும், கண்ணதாசனுமே. இந்த நேர்மை நமக்கெல்லாம் வருமா ?

5) ‘பெரியார் நம்மவரே அல்லவா ? ‘ – இது மலர்மன்னன் செய்யும் திருவிளையாடல். இந்த விளையாட்டுக்கும் ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது இங்கு.

சாதி ஒடுக்கு முறையையே மையச்சரடாக வைத்திருக்கும் வைதீக தர்மம், தன்னுடைய ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய சக்திகளைத் திட்டமிட்டு நசுக்குவதையும், நிறுவனமயமாக்கி உட்செரித்துக் கொள்வதையும், கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது.

பார்ப்பனீயத்தை வேரோடு சாய்க்கப் புறப்பட்ட புத்தரை, ‘விஷ்ணுவின் அவதாரம் ‘ எனப் பிரச்சாரம் செய்து பார்த்தது. கதை நடக்கவில்லை.

காலடியில் தோன்றிய ஆதி சங்கரரால், புத்தமதக் கருத்துக்கள் ஜீரணமாக்கப்பட்டு, அதே கருத்துக்களை வைதீகத்தில் சேர்த்துக்கொண்டதன் மூலம், புத்தமதத்திற்கு குழி வெட்டப்பட்டது. இதனால், சங்கரரை அக்காலத்தில் ‘பிரசன்ன பவுத்தர் ‘ என்றும் சொன்னார்கள்.

பின்னாளில், ‘பேர் கொண்ட பார்ப்பான், பிரான் தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் ‘ என்று பார்ப்பனர்களை எதிர்த்த திருமூலரையும், சைவர் என்று உட்செரித்துக் கொண்டார்கள்.

‘கோவில் ஆவதேதடா! குளங்களாவதேதடா! ‘ என்றும், ‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே! வேர்ப்பு இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ ? ‘ என்றும் கலகக் குரல் எழுப்பிய சித்தர்களை நாயன்மார் வரிசையில் சேர்க்க நடந்த முயற்சியை டாக்டர் முத்துமோகன் எழுதி இருக்கிறார். அவர் மேலும் ‘வள்ளலாரை சமூக சீர்திருத்த வாதியாகப் பார்த்த நிலை போய், சித்தாந்த சைவத்தில் ‘கரைக்க ‘ முயற்சி செய்கிறார்கள் ‘ என்றும் சொல்கிறார்.

நல்லவேளையாக ‘அருட்பாXமருட்பா ‘ விவகாரம் இப்போது மறுவாசிப்புக்கு வந்ததால், வள்ளலாரிடம் இவர்கள் கதை இப்போதைக்கு செல்லுபடியாகவில்லை.

சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மாற்று சமயம் கண்ட அய்யா வைகுண்டரையும், நாராயண குருவையும் ‘இது நம்ம ஆளு ‘ என்று தந்திரமாய்ப் பேசி உள்ளிழுக்கப் பார்க்கின்றனர்.

கம்யூனிசப் புரட்சியாளர், பகத்சிங்கையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவரை நம்மவர் என்று சொல்ல முனைந்தனர். ஆனந்த் பட்டவர்த்தன், பாபர் மசூதி இடிப்பை மையமாக வைத்து ‘கடவுளின் பெயரால் ‘ எனும் ஆவணப்படம் எடுத்த காலத்தில், ஓர் ஆர் எஸ் எஸ் காரர், பகத்சிங்கைத் தம்மவர் என்று கூறினார். ஆனந்த் பட்டவர்த்தன் அவரிடம், ‘பகத் சிங், ‘நான் ஏன் நாத்திகனானேன் ‘ என்ற புஸ்தகம் எழுதி இருக்கார் தெரியுமா ? ‘ எனக்கேட்டதும் ஆர் எஸ் எஸ் ஆளுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.

‘நான் இந்துவாகச் சாக மாட்டேன் ‘ என்று பிரகடனம் செய்து வாழ் நாளெல்லாம் இந்து மதத்தில் கொடுங்கோன்மைகளைத் தோலுறித்த அம்பேத்கரினை இருட்டடிப்பு செய்துவிட்டு அவரையும் தன்னுள் கரைக்க முயன்று வருகின்றனர். திண்ணை இணைய தளத்தில் நான் எழுதிய அம்பேத்கரின் பற்பல மேற்கோள்களுக்கும், இவர்களின் மவுனமே சாட்சி.

‘இந்த மண்ணில் தோன்றிய மதம் என்பதால்தான் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார் ‘ என்றும் அவரைத் திரித்துப்பார்க்கின்றனர்.

அம்பேத்கரே ‘தாம் கிறித்துவ / இஸ்லாமிய மதத்திற்கு செல்லாமல் ஏன் புத்தமதத்திற்கு சென்றேன் என்பதற்கு, இம்மண்ணில் நிலவும் பார்ப்பனீயக் கொடுமையை எதிர்த்த ஒரே மார்க்கம் புத்தம் என்பதே காரணம் ‘ என்றிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும், அம்பேத்கர் பிறந்த மராட்டியத்தில் ‘சிவ சக்தி, பீம் சக்தி, இந்து சக்தி ‘ எனப் பிரச்சாரம் செய்து, தலித்களைத் தன் பக்கம் இழுக்க இந்துத்துவா, சிவ சேனை மூலம் தயாரிப்பு வேலை செய்கிறது.

அம்பேத்கரை, ‘அபாயமற்ற பூசை அறைப் படமாக ‘ மாற்றி விட்டால், பொய்யான மகிழ்ச்சியையும், போலியான மன நிறைவையும் தலித்களுக்கு உண்டாக்கி, அவர்களைத் தம்முள் கரைத்து அடிமைகளாய் நீடிக்க செய்வதே இவர்களின் திட்டம்.

இதே வேலையை நாளைக்கு இவர்கள் பெரியாரிடத்திலும் காட்டுவார்கள்.

அதற்கு ஒரு முன்னோட்டமே, ம.ம.வின் இந்த தந்திரக் கட்டுரை. நாளை அவரின் சந்ததிகள் இதைத் தொடரலாம்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்