நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சுகுமாரன்


பாப்லோ நெரூதா பற்றிய எனது கட்டுரைக்கு திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை கண்டேன். சற்று வருத்தமாகவும் இருந்தது. குறிப்பாக ‘குறிப்பிட்ட உலகக் கவி ஒருவர் குறித்து தமிழில் நடந்திருக்கும் பங்களிப்புகளை ஒதுக்கி விட்டு தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ளும் தொனியிலேயே கட்டுரை அமைந்திருப்பது… ‘ என்ற அவதானிப்பு.

அந்தக் கட்டுரையில் நான் முன்னிருத்த விரும்பியது பாப்லோ நெரூதா என்ற மகாகவிஞன் எங்கோ தமிழில் எழுதும் ஒரு பொடிக்கவிஞன் அல்லது பெரும் வாசகனிடம் ஏற்படுத்திய ஆழமான செல்வாக்கைப் பற்றி மட்டுமே. அதனாலேயே எனது தேடல், வாசிப்பு, ஈடுபாடு,விளைவு ஆகிய அம்சங்களை முன்னிலைப் படுத்த நேர்ந்தது. எனது வாசிப்பு எல்லைகளில் நின்று என்னை பாதித்தவற்றைப் பற்றி மேற்கொண்ட பதிவுதானேயன்றி தமிழ் இலக்கியத்தில் நெரூதாவின் செல்வாக்கு குறித்த கணக்கெடுப்போ அல்லது ஆய்வோ அல்ல என்பதை திரு.யமுனா ராஜேந்திரன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதற்கு அவரது கடிதமே சான்று.

திரு.யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டவை தவிரவும் தமிழ்ச் சூழலில் நெரூதா மொழிபெயர்க்கப்பட்டதும் விவாதிக்கப்பட்டதுமான சந்தர்ப்பங்கள் என் கவனத்தில் அழுத்தமாகவே பதிந்துள்ளன. ‘ழ ‘ கவிதை இதழில் மயானஸ்வாமி என்ற பெயரில் நெரூதாவின் இரண்டு கவிதைகள் – கவிதை, வைகறையின் நலிவோடு – ஆகியவை. மீட்சி இதழில் பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பு, ஞானரதம் இதழொன்றில் சுந்தர ராமசாமியின் மொழியாக்கம், அண்மையில் விடியல் பதிப்பக வெளியீடாக ‘மச்சு பிச்சு ‘ ஆகியவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘முட்டைக்குள்ளிருந்து… ‘கட்டுரைத் திரட்டில் அப்துல் ரகுமான் ‘புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் ‘ நூலில் முருகு சுந்தரம் ஆகியோர் நெரூதா பற்றி எழுதியிருப்பதையும் பொதுக் கவனத்துக்கு முன்வைக்கிறேன். மொழி பெயர்ப்பை தனது தீவிர அக்கறையாகக் கொண்டு செயல்பட்ட அமரர் எம்.எஸ்.ராமசாமியும் நினைவுக்கு வருகிறார். எனது கட்டுரைக்காக நான் வரையறுத்துக் கொண்ட பரப்பில் இதையெல்லாம் வகைப்படுத்திக் குறிப்பிட விரும்பவில்லை. அதற்குக் காரணம், திரு.யமுனா ராஜேந்திரன் சொல்வதுபோல என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அரிப்பல்ல. என் வாசக அல்லது கவிதையனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் எளிய ஆசைமட்டுமே.

கடல் பெரியது.அதன்மேல் பல படகுகள் பயணம் செய்யும்.அதில் ஒவ்வொரு படகோட்டியின் அனுபவமும் வெவ்வேறானது. நான் முன்வைத்தது எனக்குக் கிடைத்த அனுபவத்தை. நெரூதாவை அறிமுகம்கொண்ட தருணத்தில் அதற்கு உதவிய மொழி,நபர்கள்,சூழல் இவற்றையே கட்டுரையில் கையாண்டி ருக்கிறேன். அதில் அவரை மறந்ததேன் ? அதனை ஒதுக்கியதேன் ? என்ற திரு.யமுனா ராஜேந்திரனின் ஆதங்கம் விவேகமற்றது. அவரும் நானும் குறிப்பிட்டவர்களல்லாத பலரும் நெரூதா மொழிபெயர்ப்பு ,அறிமுகம் ஆகிய செயல்பாடுகளில் பங்களித்திருக்கலாம். அவற்றைப் பதிவு செய்யும் நோக்கில் அமைந்ததல்ல என் கட்டுரை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நெரூதா மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறேன். அவ்வாறு மொழிபெயர்த்தவற்றுள் சில முறையே கொல்லிப்பாவை,காலச்சுவடு,சுபமங்களா, தாமரை,விண்நாயகன்,தீம்தரிகிட இதழ்களில் வெளியாகியுமுள்ளன. இந்த தகவலைக் கட்டுரையில் சேர்க்கக் கூச்சமேற்பட்டதன் காரணமும் நான் வகுத்துக்கொண்ட களம்தான்.

திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினையில் ‘சுகுமாரனால் மறக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதழான தாமரை… ‘ என்ற குறிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. எனது நினைவாற்றலின் அளவுமானியை திரு.யமுனா ராஜேந்திரன்வசம் ஒப்படைத்திருப்பதாக எனக்கு நினைவில்லை. பேசிக் கொண்டிருக்கும் விஷயத்துக்குப் புறம்பான இந்தக் குறிப்பின் தேவை என்னவென்று புரியவுமில்லை. சில ஆண்டுகள் முன்பு வரையிலும் ‘தாமரை ‘ இதழில் தொடர்ந்து பங்களிப்பவனாக இருந்திருக்கிறேன். எழுத நேர்ந்தவற்றில் நிறைவு தந்த சில கவிதைகள் அதில் வெளிவந்தவை என்ற மகிழ்ச்சியும் எனக்குண்டு. உலகக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு பகுதியை (coloumn) ‘தாமரை ‘யில் கையாண்டிருக்கிறேன். அன்னம் வெளியீடாக வந்துள்ள ‘கவிதையின் திசைகள் ‘ நூலின் கணிசமான பக்கங்கள் ‘தாமரை ‘யில் முதல் அச்சாக்கம் கண்டவை.

நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய நண்பர் ஒருவர் நம்மை நினைவுகூர்வது குதூகலமளிக்கக் கூடியது. ஆனால், திரு.யமுனா ராஜேந்திரனின் ‘அரங்கறியா வட்டாட்டமும் ‘ பொருத்தமற்ற இடையீடும் குதூகலத்தைவிட வருத்ததையே தந்திருக்கிறது. இதுவரையான இலக்கிய வாழ்க்கையில் சர்ச்சைகளிலிருந்து விலகி நிற்கவே விரும்பிவந்திருக்கிறேன்; விரும்புகிறேன். சொந்த தமுக்கை கொட்டி ஒலிபெருக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவசியமற்று முன்னிலைப் படுத்திக்கொள்வதிலும் அக்கறையில்லை. எனது இலக்கிய செயல்பாடுகளுக்கு மண்ணும் வேருமாக அமைந்தவற்றை மறந்ததுமில்லை.புறக்கணித்ததுமில்லை.

தோழமையுடன்

சுகுமாரன்

15 ஆகஸ்டு 2004.

***

n_sukumaran@rediffmail.com

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்