செம்மொழித் தமிழின் பொதுமை

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

முனைவர் மு. பழனியப்பன்



தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி உலகப் பொதுமை நோக்கிய பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள் அனைவரும் ஓர் நிறை, ஓர் நிலை என்று எண்ணி உலக மக்கள் பற்றிய பல அரிய பொதுமைக் கருத்துக்களைச் செம்மொழி இலக்கியங்கள் தாங்கி நிற்கின்றன. இந்தப் பொதுமைக் கூறு தமிழுக்குக் செம்மொழித்தகுதியை நிலைப்படுத்தித் தருகின்றது.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல்காப்பியம்640) என்று உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் உரிய சொல் வடிவ இலக்கணத்தைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். அதாவது பொருளைப் புலப்படுத்தி நிற்கின்ற அனைத்துச் சொற்களும் சொல் என ஏற்கப்படும் என்ற தொல்காப்பியர் கருத்து உலக மொழிகளுக்கு உரிய இலக்கணத்தை வகுப்பதாக உள்ளது.

மொழிக்கான பொதுமை இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர் உலக உயிர்கள் அனைத்திற்கும் உரிய பொதுத்தன்மையை மற்றொரு இடத்தில் எடுத்துரைக்கிறார்.

`எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வருஉம் மேவற்றாகும்’ (1169)

என்பதுவே அப்பகுதியாகும். உயிர்கள் எல்லாமும் உடலின்பத்தால் பிறக்கக் கூடியவை. அவ்வாறு அவை பிறப்பதற்குக் காரணம் உடல் கருதி உயிர்க்கு ஏற்படும் இன்பம். அவ்வின்பம் தானாக ஒவ்வொரு உயிரிடத்திலும் உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் இன்பம் தானாக மேலெழுந்து உயிர் ஆக்கத்தினைத் தருகின்றது. அடிப்படையான இந்த இன்ப நோக்கம் அனைத்து உயிர்களுக்கும் உரியது என்ற தொல்காப்பிய கருத்து உலகப் பொதுமை நோக்கிய அடிப்படைக் கருத்தாகும்.

சங்க இலக்கியப் பாடல்கள் பாடுபொருள் அளவில் அகம், புறம் என்று இரண்டு வகைப்படும். இவற்றில் அகப்பாடல்கள் எனப்படும் காதல் பாடல்களில் இடம் பெறும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டக்கூடாது என்பது மரபாகும். இவ்வகையில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டு (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 256) காதல் பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டப்படவில்லை. இவ்வாறு இயற்பெயர், சிறப்புப் பெயர் சுட்டாமல் பாடப்படுவதன் நோக்கம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

`சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெறாஅர்'(தொல்காப்பியம்1000) என்பது அகப்பாடல்களுக்கான தொல்காப்பிய நெறியாகும். காதல் பாடல்களில் மாந்தர்களின் பெயர் கூறப்படாமல் விடப்படுவதன் காரணமாக அப்பாடல் தனி ஒரு மனிதனின் அனுபவத்தை மட்டும் சுட்டாமல் படிக்கும் அனைவரின் உள்ளத்திலும் அப்பாடல் தரும் காதல் இன்பம் தனக்கும் உரியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே ஆகும்.

எனவே தமிழன் உலக உயிர்கள் ஒவ்வொன்றின் தனித்த இன்பமான காதல் இன்பத்தை தனிப்பட்ட உணர்வாகப் பாடாமல், உலகப் பொது நிலையில் கொண்டு வைத்துள்ளான் என்பது தெரியவருகிறது. “இயற்பெயர் கூறாது விடின் அச்செய்யுட் செய்தி படித்து மகிழ்தற்கும் எக்காலத்தும் எல்லார்க்கும் உரித்தாகுதற்கும் ஏற்புடையதாகும்” (ஆ. சிவலிங்கனார், தமிழ் இலக்கண உணர்வுகள் ப. 164) என்று கருத்து மேற்கருத்துக்கு வலு சேர்ப்பதாகும். `அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சியாகிய காதல் பாடல்கள். அவை உலகக் காதலர் அனைவருக்கும் உரியவை. ஒரு தனிப்பட்ட இனத்திற்கோ, மொழியினருக்கோ கூறுப் பெற்றவை அல்ல. உலகினருக்குக் கூறப்பெற்றவை சங்க அகப்பாடல்கள்” ( ச. வே. சுப்பிரமணியம், சங்கஇலக்கியம், தொகுதி.1, 14) என்ற நிலையில் உலகத்தாருக்கு உரிய பொதுமை இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பது தெளிவாகின்றது.

தனித்த ஒரு தலைவனும் தலைவியும் மட்டும் அனுபவிக்கும் இன்பத்தைப் பாடுகின்ற புலவன் அவர்களின் பெயர்கள் சுட்டாமல் பாடும் பொதுமை நடைமுறையை உலகிற்குத் தமிழ் வழங்கியுள்ளது என்பது உலகிற்குச் சொல்லத்தக்க சிறந்த கருத்தாகும்.

சங்க அகப்பாடல்கள் அனைத்திலும் இப்பெயர் சுட்டா முறை அமைந்துள்ளது. இதன் தொடர்வுகள் இன்னமும் தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சங்க அகப்பாடல்கள் அனைத்தும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது அந்த அந்த மொழி வாசகர்கள் தமிழ் அகப்பாடல்களை அவர்கள் அவர்கள்தம் மொழியில் படிக்கும் நிலை வரும்போது, இந்த அகப்பாடல்கள் உலகப்பொதுமையின் அடையாளங்களாக விளங்கும். ஜெர்மானியர்களும், பிரெஞ்சுநாட்டவரும் இது நமது இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உலக உயிர்களின் இன்பத்தைப் பொதுமைப் படுத்திப் பொதிந்து வைத்துள்ள இலக்கியச் செழுமை கொண்டது தமிழ் என்பது நிலைபெறும்.

நயனும் நண்பும், நாணும்நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடுஅறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே! கம்மென
எதிர்த்த தித்தி ஏர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே
(நற்றிணை 160- பாடியவர் பெயர் தெரியவில்லை)
என்ற பாடலில் காதலின் பொதுக் கூறு ஒன்று சுட்டப் பெற்றுள்ளது. தலைவன் முதன் முதலாகத் தலைவியைக் காணுகின்றான். அவளைக் காணும்வரை தலைவனின் பண்புகள் சீர்பட இருந்துள்ளன. அதாவது தலைவன் மற்றவரொடு கலந்து பழகும் திறத்தை (நயன்) உடையவனாக இருந்துள்ளான். சுற்றத்தவர்களைப் பேணிக் காப்பவனாக நட்புடையவனாக இருந்துள்ளான் (நண்பு). தீமை செய்வதற்கு வெட்கப்படுபவனாக (நாண்) இருந்துள்ளான். பிறருக்கு உதவும் பயனும் அவனிடம் இருந்துள்ளது. பாடறிந்து ஒழுகும் பண்பும் அவனிடமிருந்துள்ளது. ஆனால் தலைவியின் அழகினைக் கண்டபின்பு அவை யாவற்றையும் இழந்துத் தலைவன் தலைவியின்மேல் கொண்ட காதல் என்ற ஒன்றை மட்டுமே கொண்டு மற்றவற்றை விடுத்து நிற்கின்றானாம்.

ஒரு பெண்ணைக் காணுவதற்கு முன்பு, கண்டபின்பு என்ற இருநிலைகளில் காதலின் தொடக்கப் பகுதியில் நிகழும் மன இயல்பை இப்பாடல் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இப்பாடலில் காட்டப்படும் தலைவியின் அழகு வேண்டுமானால் தமிழ் சார்ந்த வருணனையாக இருக்கலாமே அன்றி இதில் காட்டப்படும் உள்ளத்து உணர்வு பொதுமை இயல்பு என்பதை மறுக்க இயலாது.

காதல் என்ற தனிமனித உணர்வையும் பொதுமை உணர்வாகக் காட்டிய பெருமை சங்க அகப்பாடல்களுக்கு உண்டு என்பது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டிய உன்னத கருத்தாகும்.

புறப்பாடல்களில் அகப்பாடல்கள்போல் இல்லாமல் பெயர், குடி, நில அடையாளங்கள் இருப்பினும் அவற்றில் சமுகப் பொதுமைக் கருத்துக்கள் பல இடம் பெற்றுள்ளன.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிந்தன்றும் இலமே. முனிவின்
இன்னாது என்றலும் இலமே….
… மாட்சியின்
பெரியயோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறநானூறு 192)

என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பொதுமை நோக்கிய இனிமைப் பாடலாகும். பெரியோர் என்று யாரையும் ஏற்றி வைத்துப் போற்றுதல் இல்லை. சிறியவர் என்று இகழ்தலும் இல்லை என்ற கருத்தில் மக்கள் அனைவரும் சமம், அவர்கள் இயல்பு பொதுமை வாய்ந்தது என்பது தெரியவருகிறது. குறிப்பாக பெரியோர், சிறியோர் என்ற இரு நிலைப்பட்டவரைச் சுட்டிக்காட்டிய இப்பாடல் பெரியோரும் அல்லாமல் சிறியோரும் அல்லாமல் இடையில் நிற்போரைக் குறிக்காமல் குறித்துள்ளது. இந்த இனிய பண்பில் பொதுமை உணர்வு மிக்கிருப்பதை உணரமுடிகின்றது.

சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகின்றன. இவற்றின் பொதுமை நோக்கு என்று எண்ணுகின்ற பொழுது திருக்குறள் முன்னணி பெறுகின்றது. உலகப் பொதுமறை என அழைக்கப்படும் இந்நூலின் பொதுத்தன்மை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (திருக்குறள் 425)

என்ற குறள் உலகின் பொதுமையையும், அறிவாற்றல் பெற்றவர்களின் பொதுமையையும் எடுத்துரைப்பதாக உள்ளது. மலர்தல், கூம்பல் என்பதன் முல விதை கணியன் பூங்குன்றனார் விதைத்த வியத்தல், இகழ்தல் என்பதாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்ற நடைமுறையை வள்ளுவர் உலகப் பொதுமையாகக் காணுகின்றார். இவ்வளவில் தொட்ட தொட்ட இடமெல்லாம் வள்ளுவத்துள் பொதுமையைக் காணமுடிகின்றது. இதுபோன்று மற்ற அற நூல்களில் பல பொதுமைக் கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றுள்ள உலகப் பொது அறம் வெளிப்படுத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் முன்பகுதியில் உள்ள வாழ்த்துப் பகுதியும், மணிமேகலை உணர்த்தும் உலகஅறவியும் பொது நோக்கினவேயாகும்.

இவ்வகையில் உலகப் பொதுமை நோக்கிய பல இனிய கருத்துக்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. தேடிச் சேர்க்கின் மிகும் என்பது கருதி இக்கட்டுரையில் அவை தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன. இந்த பொதுமைச் செய்திகளை உலகோர்க்கு அறிவிப்பது தமிழர்களின் தனித்த கடமையாகும்.

muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்