வால்பாறை

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

சுப்ரபாரதிமணியன்


குளிரும், மழையும், பனியும் என்று ஒரு வாரத்தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக வால்பாறைக்குப் போவது சாதாரணமாகி விட்டது.இந்த முறை கைபேசி நுட்பக்கோளாறு காரணமான வேலையில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஆசியாவின் மிகச்சிறந்த தூய்மைப்பகுதிகள் என்று கணிக்கப்படுகிற டாப்சிலிப்பும், அக்காமலையும், மிகப்பெரிய அணையான சோலையார் அணையும், காடம்பாறை மின் நிலையமும், மிக உயரமான கவர்க்கல் பகுதியும், பாலாஜி கோவிலும் முக்கியமானவை.
வால்பாறையில் சுற்றுலா இடங்கள் என்று அதிகம் இல்லாவிட்டாலும் மடிப்புகளான மலைகளும், இயற்கை சூழலும், ரம்மியமானவை. தேயிலைக்கு விலையில்லாமல் போவது பற்றி சமீப ஆண்டுகளில் தொடர்ந்து செய்திகள் வருவது தேயிலைத்தொழிலாளர்களின் நிலையைச் சொல்லி வருகிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு மலைப்பபகுதி மக்கள் இடம் பெயர்வது சமீபத்தில் சாதாரணமாகிவிட்டது. தொழிற்சஙக உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் என்ற நிலை இல்லாமல் அதிகாரத்துடனான நெருக்கமான உறவுக்கும், தலைவர்களின் சுயலாபத்திற்கும் தொழிற்சங்கங்கள் என்றாகி விட்டன. இரட்டை, மூன்று உறுப்பினர் நிலை என்று கணக்கு காண்பிப்பதற்காக ஒரே தொழிலாளரே மூன்று தொழிற்சங்கங்களில் உறுப்பினராக தலைவர்களே சந்தா செலுத்தி தங்கள் சங்கங்களை காத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள், கொத்தடிமை நிலை பற்றி “எரியும் பனிக்காடு “ என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு விரிவாகச் சொல்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்து 40 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த “ ரெட் டீ “ தமிழ் வடிவம் பெற்றுள்ளது. விடியல் பதிப்பகம், கோவை அதை முருகவேளின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.இனறைய தோட்டத்தொழிலாளி மலின உழைப்பை முன் நிறுத்தி மீண்டும் நவீன கொத்தடிமை ஆகிக்கொண்டிருப்பதை அவர்களின் நிலை பற்றி அறிகிற போது தெரிந்து கொள்ள முடிகிறது.
அறையில் குளிரில் முடங்கிக் கிடந்த போது வெங்கடேசனின் “ தாண்டவராயன் கதை” நாவலைப்படித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த விடுதி ஊழியர் ஒருவர் ” என்ன நீங்க எழுத்தாளரா.. கொஞ்ச நாளைக்கு முந்தி இங்க கவிஞர்கள் கூட்டம் ஒண்ணு நடந்தது. எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. கவிஞர்கள்ன்னா சிடுமூஞ்சியா இருப்பாங்க. ஆனா அவங்கெல்லா ஜாலியா இருந்தாங்க. கவிதைன்னா சந்தோசம்தாங்களே..” என்றார். அவரின் கவிஞர்கள் பற்றிய ப்ரமைகட்டுடைப்பிற்கு குறிப்பாக கவிதாயினிகள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.
கைபேசி கோபுரம் தொழில் நுட்பக்கோளாறு சின்கோனாபகுதியினை முடக்கியிருந்தது.அங்கு தோட்டத்தொழிலாளர்களின் பழைய மருத்துவ மனையை சீர்திருத்தி பாரதியார் பல்கலைக்கழக அரசு கலைக் கல்லூரியை நிறுவி இருக்கிறார்கள். வால்பாறையில் இருக்கும் சுமார் 60 தேயிலைத் தோட்டப்பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் படிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது அக்கல்லூரி. பனியும், மழையும், ஸ்வெட்டரும் , குடையும் அவர்களின் உடம்போடு ஒட்டிக்கொண்டவை. சிறு குழுவாய் உட்கார்ந்திருந்த மாணவர்களிடம் கேட்டேன்: “ என்ன கடலையா… “
“ இல்லீங்க .. கவிதைங்க “ என்றார்கள் . “ நெசமாலுமுங்க ..”

கவிதாயினிகள் தங்குவதற்காக சின்கோனாபகுதியில் நான் சிபாரிசு செய்யும் இடம் “ உட்டன் ஹைவுஸ் “. 1720ல் வெள்ளையர்களால் முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்ட வெயிலுக்கும், மழைக்கும் இதமாக இருக்கும் விடுதி . சின்கோனா சின்ன சொர்க்கம்.
subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்