இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

ஜெ.பி, சென்னை


1. நீங்கள் எழுதியதை பக்கத்திலிருப்பவரிடம் கொடுத்து புரிகிறதா என்று கேட்கவும். அவர் புரிகிறது என்று சொன்னால் நீங்கள் எழுதியதை கிழித்துப் போட்டுவிட்டு மறுபடியும் முயற்சிக்கவும். புரியலை என்று அவர் சொல்லும் வரை நிறுத்தாதீர்கள்.

2. நீங்கள் urban ஆசாமியாக இருந்தாலும், கிராமச்சூழலில், வட்டார மொழியில் கதை அமையவேண்டும். ஒரு வட்டாரத்தின் dialectஐ மற்றொன்றில் கலந்தாலும் பரவாயில்லை. யாரும் கண்டுபிடிக்கப்போவதில்லை. ஏச்சு வார்த்தைகள் கதையில் அதிகம் புழங்கவேண்டும்.

3. கதையா, கட்டுரையா, சுயசரிதையா, இன்னொருத்தன் சரிதையா என்பது படிப்பவனுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் எளிதில் விளங்கக் கூடாது. முக்கியமாக எந்தப் பக்கத்தை திறந்தாலும் புரியுமாறு அல்லது புரியாதவாறு கதை அமையவேண்டும். யாருக்காவது நீங்கள் கணக்கு தீர்க்கவேண்டி இருந்தால், அதற்கு புத்தக முன்னுரை நல்ல களம். வேண்டாதவர்களை போட்டுக் காய்ச்சலாம். Spicy ஆக இருக்கும்.

4. திருமதி ராக்ஃபெல்லர் & சாவி மூலம் பிரபலமான , ‘ஷம்பந்தி ஷண்டேய் ‘ போல இத்திருவிடத்திலும் பல சண்டைகள் உண்டு. இவற்றில் நீங்கள் கலந்து கொண்டே ஆகவேண்டும். எந்தப் பக்கம் நிற்பது என்பதை சாவகாசமாக முடிவு செய்து கொள்ளலாம். கேள்விகள், பதில்கள், பதிலுக்கு பதில், கண்டனம், கண்டனத்துக்கு கண்டனம் என்று சரமாரியாக, இதற்கென்றே இருக்கும் சிறு பத்திரிக்கைகளில் எழுதவும். இம்மாதிரி எழுதுவதென்பது is an art by itself. சமீபத்திய காலச்சுவடு இதழ்களில், சு.ரா புதல்வர், குமுதத்தின் மீது நடத்திய படையெடுப்புகளை தனியே பிரித்து, பைண்டு செய்து, ஒரு மண்டலம் பாராயணம் செய்து வந்தால் ஒரு தெளிவு பிறக்கும். கைகூடிவந்தால் கண்ணனுக்கும் தனியே நன்றி தெரிவித்துவிடுங்கள்.

5. சாதீயம், தலித்தியம்,பெண்ணியம், பிறன்மனை விழைதல் போன்ற விவாதத்துக்குரிய சப்ஜெக்ட் அமைந்தால் ரொம்ப சிலாக்கியம். அப்போதுதான் புத்தகம் வெளிவந்தவுடன் காட்டா குஸ்தி போட ஏதுவாக இருக்கும். க்ரைம், சரித்திரக்கதை, காதல் காவியங்கள் எல்லாம் மூச்!.

6. நீங்கள் இதுவரை வெகுசனப் பத்திரிகையில் எதுவும் எழுதியிருக்கவே கூடாது. அப்படி எழுதியிருந்தால், அந்தத் தீட்டை எப்படிக் கழிப்பது என்று யாராவது ‘ரப்பர் ‘ எழுதியவரிடம் கேட்டு , பதில் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள். விருதுக்குக் குறிவைப்பவர்கள், கதையை தொடராக இல்லாமல் முழுப்புத்தகமாகவே எழுதியிருப்பார்கள். ரொம்ப செளக்கியம். கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கவேண்டாம். மனைவி எதற்கு இருக்கிறாள் ? அவள் ‘ரெட்டை பேட்டை ‘ சங்கிலி எதற்கு இருக்கிறது ?

7. விருது சமாச்சாரங்களில் கைதேர்ந்தவர் இருக்கிறார்கள். கமிட்டிகளில் நல்ல செல்வாக்கு பெற்றவர்கள். பெயர் சொன்னால் வம்பு. அப்புறம் ‘சாயாவனத்து ‘ வழியாப் போய் ‘சமுத்திரத்தில ‘ விழவேண்டியதுதான். அவர்களை கண்டு பிடித்து அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.

8. நீங்கள் ஏதாவது ஒரு ‘இசத் ‘தை சார்ந்து எழுதவேண்டும் அல்லது அவ்வாறு எழுதியிருப்பதாகச் சொல்லவேண்டும். சர்ரியலிசம், மிஸ்டிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம், எக்ஸ்டென்ஷியலிசம், பாயாசம் போன்ற பல இசங்கள் உள்ளன.இவை உங்களிடம் சரளமாக புழங்கவேண்டும். இன்னும் சில buzzwords தேவைப்படுபவர்கள் ‘ஜீரோ டிகிரிக்காரரை ‘ அணுகவும். (இம்மாதிரி ஜல்லியடி ஆசாமிகளிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்று Manual ஒன்றை யாராவது எழுதினால் நலம்.) அச்சடித்த சில நூறு காப்பிகளில் சிலவற்றை சிற்றிதழ்களுக்கு அனுப்பி வைக்கவும். அடுத்த வாரமே அந்த புத்தகத்தை வெட்டியும், ஒட்டியும் இரு கடிதங்களை வெவ்வேறு பெயரில் அனுப்பவும். இப்போது நம்முடைய தேவை ஒரு பொறிதான். கிளம்பி விட்டால் நாமே அதை ஊதி பெரிதாக்கி விடலாம். குறைந்தது ஒரு பத்திருபது பெரிசுகளாவது உங்கள் புத்தகத்தை கிழி கிழி என்று கிழித்தால்தான் உங்கள் படைப்பு தகுதிச்சுற்றுக்கே வரும்.

9. ‘இந்த புத்தகத்துக்கு ஏன் விருது குடுக்கலே ? ‘ என்று நீங்களே கேட்டால் உங்களுக்கு ‘தெரவுசு ‘ பத்தாது என்று அர்த்தம். கேளுங்கள். ஆனால் வேறு வேறு புனைப் பெயர்களில் கேளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த நாவலாசிரியர் பி.டி.சாமியாக இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. பித்யுத் பரூவா, திருவெள்ளாகோஷி பணிக்கர், அமோல் கோல்வால்கர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பெயர்களில் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்கும் தெரியவேண்டியதில்லை. விருது வேண்டும். அவ்வளவுதான்.

11. இவையெல்லாம் தாண்டி உங்களுக்கு விருது கிடைத்துவிட்டால், மறுபடியும் கூட்டம் போட்டு விருது கொடுத்தவனையே திட்டவும். ‘இவன் யார் எனக்கு விருது கொடுப்பதற்கு ? ‘ என்றெல்லாம் ‘கோக்குமாக்காக ‘ கேட்கவும். அப்படி செய்தால் அடுத்த விருதும் உங்களுக்கே!.

***

indscan@vsnl.net

icarus1972us@yahoo.com

Series Navigation

ஜெ.பி, சென்னை

ஜெ.பி, சென்னை