பாவண்ணனின் சிறுகதைகள் : வடிவமும் ஆக்கமும் ((Structure and Fabrication)

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

க. நாகராசன்.


வீரியமான விதைகள் மண்ணிலிருந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டு செடியாகவும், கொடியாகவும் உருவெடுக்கின்றன. பூக்கவும் காய்க்கவும் செய்கின்றன. பல மாதங்களுக்கும், வருடங்களுக்கும் பின் முழு வளர்ச்சி பெற்று கிளைகளுடன் பல்கிப்பெருகி மரமாக விஸ்வரூபம் காட்டி தங்களை நிலைபெறச் செய்கின்றன. கனிகளை அளிக்கின்றன. அதன் மூலம் கணக்கில்லா விதைகளைத் தூவி புதிய உயிர்ப்புகளுக்கு வழி செய்கின்றன. உன்னதமான கலைப்படைப்பின் ‘கரு ‘, கூட ஓர் வகையில் வீரியமான விதைதான். கலைப்படைப்பில் அனுபவம் முன்னதாகவே முடிவு செய்யப்படுவதில்லை. அனுபவத்தை உணர்த்தும்போதுதான் கலைஞன் தன் அனுபவம் இன்னதென்பதை உணர்ந்து கொள்கிறான். கலைஞனின் இயக்கம் அகஉலகத்தைச் சார்ந்தது. ஆண்டுக்கணக்கில் அவனை பாதித்த விஷயங்கள் அகஉலகத்தில் அனுபவப் பதிவுகளாக புதைந்து கிடக்கின்றன. கலைஞனின் அகஉலகத்தின் அனுபவமும், புற உலகத்தின் காரணிகளும் இணையும்போது கலை வெளிப்படுகிறது. கலைஞனின் இயல்பூக்கம் அதற்கான கலைவடிவைத் தீர்மானித்துக் கொள்கிறது. வாழ்வுடனான நேர்மையான உறவு, ஆரவாரங்களைத் தோற்றுவித்துப் படிப்பவரைக் கவரவேண்டும் என்கிற நினைப்பின்மை, படைப்பில் அனுபவம் கரைந்துவிட்டிருக்கும் நேர்த்தி, இவையெல்லாம் கலைப்படைப்பின் தனித்தன்மைகளாகும். படைப்பாளனுக்கும், வாழ்வினுக்குமான தொடர்பே சிறுகதையாக பரிணமிக்கிறது. சிறுகதையும், கவிதையும் பல இயல்புகளில் ஒன்றுபடுகின்றன. கவிதையைப்போலவே சிறுகதையும் எதையும் விளக்க முற்படாது சொல்வதைவிட சொல்லாமல் உணரும்படிச் செய்வதையே இயல்பாகக் கொள்கிறது. சிறுகதையின் இலக்கணம் என்பது அதன் செறிவைப் பொருத்தது. தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே தெரிந்தெடுத்துப் பயன்படுத்துதல் சிறுகதையின் சிக்கன வடிவிற்கு வலு சேர்க்கிறது. படைப்புலக மனிதர்களின் எண்ணிக்கையில் காணும் சிக்கனம், மைய அச்சிற்குத் தொடர்பற்ற எதுவும் கதையில் இல்லாதது, உத்திகளின் மேலாதிக்கம் இல்லாமை, கதையில் இயல்பாகவே அமைந்து விட்டிருக்கும் செறிவு, இவையெல்லாம் ஒரு சிறுகதையின் ஆழத்தையும், அகலத்தையும் அதிகப்படுத்துகின்றன.

‘மகாபாரதம் ‘, ‘இலியட் ‘, போன்ற இதிகாசங்களும், ‘போரும் அமைதியும் ‘, போன்ற காவியங்களும் தங்களுடைய கதைகளுக்காக மட்டுமன்றி கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காகவும் என்றென்றும் நினைக்கப்படுகின்றன. கலைஞனின் அனுபவத்தை சற்றும் குறையாமல், முழுமையாக வாசகனிடம் கொண்டு சேர்க்கும்போது, சிறுகதையின் வடிவமும், கதைப்பின்னலும் கதைக்கருவிற்கேற்ப மாறுபடுகின்றன. எந்த உத்தியுடனும், வடிவத்துடனும் சொல்லப்பட்டால் சிறுகதை முழுமையாக மடைமாற்றம் அடையுமோ (Transformation), வாசகனை சென்று சேருமோ, அவைகளை பயன்படுத்துவது இன்றியமையாததாகிறது. படைப்பாளனின் அக உலகமும், அனுபவமும் சிறுகதையின் வடிவத்தையும், ஆக்கத்தையும் தீர்மானிக்கின்றன. எப்போதோ படித்த ஓர் சிறுகதை ஆண்டுகள் பல கழித்தும் வாசகனுக்கு மறக்காமல் இருப்பதும், பசுமையான உணர்வுகளை மனதில் பதியம் வைப்பதும், பல சமயங்களில் கதை கருவிற்காக மட்டுமின்றி கதையில் கையாளப்பட்ட வடிவத்துக்காகவும், செய்நேர்த்திக்காகவும் கூட அமையக்கூடும்.

பாவண்ணனின் படைப்புலகம் ஆரவாரமற்றது, எளிமையான மனிதர்களும், அவர்களின் ஆசாபாசங்களும் நிறைந்தது. அவரின் கதைமாந்தர்கள் பெரும்பாலும் போலித்தனமற்றவர்கள். வாழ்வின் போக்கோடு தங்களுக்கு பிடித்தோ, பிடிக்காமலோ பயணம் செய்பவர்கள். பெரும்பாலும் அனுபவ வெளிப்பாடகவே பாவண்ணனின் சிறுகதைகள் அமைகின்றன. ஒரே வடிவத்தில், சலிப்பூட்டும் வகையில் கதையைச் சொல்லும் (Stereotype) அபாயகரமான விபத்தில் சிக்காமல் தனித்தன்மையோடு பல வடிவங்களையும், சோதனை முயற்சிகளையும் பாவண்ணன் தன் படைப்புகளில் நிகழ்த்திக் காட்டுகிறார்.

நினைவுகூருதல் (Flash back) என்பது புனைவுகளில் பயன்படுத்தப்படும் மிக வலிமையான உத்தி. கதைக்களன் ஆண்டுக்கணக்கில் பயணம் செய்ய நேரும்போது தேவையான சம்பவங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து சொல்வதற்கும், தேவையற்றதை விடுபடச் செய்வதற்கும் இந்த உத்தி பயன்படுகிறது. பக்க அளவில் பெரியதான கலைவடிவங்களுக்கு மிகப்பொருத்தமாக அமைகின்ற இந்த உத்தி, சில சமயங்களில் சிறுகதைக்கும் தேவைப்படலாம் இந்த உத்தியை பயன்படுத்தும்போது கூடுதல் செறிவையும், புதிய பரிமாணங்களையும் சிறுகதை பெற்றால், உத்தியை பயன்படுத்தும் நோக்கம் நியாயம் பெறுகிறது. பாவண்ணனின் ‘குரல்களும் ‘, ‘பயணமும் ‘, (Flash Back ) உத்தியால் புனையப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சில சம்பவங்களை நினைத்துப்பார்க்கும் வகையில் ‘குரல்கள் ‘, தொடங்குகிறது.

SSLCல் Fail ஆகிவிட்டு முனியாண்டி விலாஸ் ஓட்டலில் கோழி உரித்துத் தருபவனாக அறிமுகப்படுத்தப்படும் கதைசொல்லி, பெங்களூர் — சித்ரதுர்கா ஹைஸ்வேஸ்ல் தண்ணி இல்லாக் காட்டில் அமைந்துள்ள ஓர் அசைவ ஓட்டலுக்கு பணியாளனாக செல்லும்படி சூழ்நிலை அமைகிறது. அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்களே சிறுகதையாக உருவெடுக்கிறது. மக்கள் நடமாட்டமே சற்றும் இல்லாததும், அத்துவானக் காட்டில் அமைந்து அச்சத்தை ஏற்படுத்துவதுமான ஓட்டல் அமைந்துள்ள சூழல் அவனுக்கு பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்குகின்றன. இரவு நேரங்களில் வரும் லாரி டிரைவர்களே ஓட்டலின் வாடிக்கையாளர்கள். அந்த லாரி டிரைவர்களை முன்னிலைப்படுத்தி ஓட்டலுக்கு அருகே மெல்லத்துவங்கி விஸ்வரூபம் எடுக்கும் விபசாரத்தொழிலும், விலை மாதர்களும் அவனை மிகவும் பாதிக்கிறார்கள். ஓர் குறிப்பிட்ட தருணத்தில் அவன் உடலும், உள்ளமும் தணலாக கொதித்து காமத்தின் ஜ்உவாலை வீசத்தொடங்க, அதன் மூர்க்கம் தாங்காமல் எரியும் அடுப்பின்மீது தன்னை அறியாமல் மயங்கி வீழ்கிறான். காப்பாற்றப்பட்டு, பெங்களூர் வந்து சேர்ந்து, அந்தப்பணிகளிலிருந்து விடுபட்டு, நல்ல வாழ்க்கை அமையப்பெற்று, ஆண்டுகள் பல ஆகியும் கூட ‘குரல்கள் ‘, அவன் கனவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதோ நடந்த அனுபவங்களின் விவரிப்பே சிறுகதை. ஆண்டுக் கணக்காகியும் அந்த சம்பவத்தின் வடு மனதை விட்டு நீங்கவில்லை என்பது கதைக்கு செறிவைத் தருகிறது. Flash back உத்தியை கையாண்டதின் மூலம் இந்தச்செறிவு சாத்தியமாகிறது.

மிகவும் பாராட்டுக்களைப் பெற்றதும், நினைவுகூரத் தக்கதுமான பாவண்ணனின் ‘பயணமும் ‘, இவ்வகையில் எழுதப்பட்டதே. வாசலில் கத்தரிக்காய் நிறத்தில் நிற்கும் Kinetic Hondaவை பார்க்கும்போது அதற்கு முன் அங்கு நின்றிருந்த TVS champ, TVS50, சைக்கிள் பற்றிய நினைவுகளோடு, ஓர் பழைய சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ‘பயணம் ‘, சிறுகதை தொடங்குகிறது.

மன அழுத்தம் கூடும் போதெல்லாம், அதிலிருந்து விடுபடும் நோக்கத்தோடு நாள்கணக்கில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது கதை நாயகனின் வழக்கம். அதைப்போன்ற ஓர் சைக்கிள் பயணத்தில், விடாது பெய்த பெருமழையிலிருந்து தப்பிக்க ஓர் ஏழைச்சிறுவனும், அவனது ஏழை விதவைத்தாயாரும் வசிக்கும் குடிசையில் இருநாட்கள் தங்கவேண்டி நேர்கிறது. துடிப்பானவனாகவும், சைக்கிள் ஓட்டுவதில் பெரும் ஈடுபாடு காட்டுபவனாகவும் காட்சி அளிக்கும் சிறுவனை, தனது சிறுவயது பிம்பமாக கதைத் தலைவன் காண்கிறான். சிறுவனுக்கு நேர்த்தியாக சைக்கிள் கற்பித்தும், தனது சைக்கிளை அவனிடம்கொடுத்து நெடுஞ்சாலையில் ஓட்டச்செய்தும் அவனை மகிழ்விக்கிறான். இருவரும் பிரிய வேண்டிய தருணம் வருகிறது. கடைசியாக தன் மாமா வீடு அமைந்துள்ள தெருமுனைவரைக்கும் சைக்கிளை ஓட்டுவதற்கு அனுமதி பெற்று சைக்கிளில் தெருமுனையை அடைந்து தன் மகிழ்வை கைகளை ஆட்டி தெரிவிக்கிறான் சிறுவன். சைக்கிள் என்றென்றும் சிறுவனிடமே இருந்து அவனுக்கு மகிழ்வைத் தரவேண்டும் என்கிற கணநேர தீர்மானிப்பில் கிளம்பத்தயாராக இருக்கும் பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்கிறான் கதைத்தலைவன்.

மிக நேர்த்தியாக நெய்யப்பட்டிருக்கும் இக்கதை, எளிமையாகவும், மனதை நெகிழ்விப்பதாகவும் இருக்கிறது. ‘பயணம் ‘, எனும் தலைப்பு சைக்கிள் பயணத்தில் நேர்ந்த அனுபவத்தை விவரிக்கும் சிறுகதை எனும் பொருளைத் தருகிறது. இக்கதையை Flashback உத்தி இல்லாமல் சொல்லி இருந்தால் கூட எந்தக்குறையும் நேர்ந்திருக்காது. ஆனால் நினைவுகூரல் உத்தியினால் ‘பயணம் ‘, எனும் சொல்லுக்கு சைக்கிள் பயண அனுபவத்தைப்பற்றிய கதை என்பதையும் தாண்டி வாழ்க்கைப்பயணம் எனும் புதிய தளத்திற்கு செல்கிறது. வாழ்க்கையே ஓர் நீண்ட எல்லையற்ற பயணமாக விரிந்து அனுபவங்களின் தொடர்ச்சியாகவும், தொகுப்பாகவும் காட்சி தரும் புதிய சாத்தியபாடுகளை வெளிப்படுத்துவதின் மூலம் Flashback உத்தி புதிய பரிமாணங்களை சிறுகதைக்கு அளிக்கிறது.

பாவண்ணனின் கதைஉலகம் பெரும்பாலும் தர்க்கரீதியானவை. ‘பயணம் ‘, கதையையே அதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கதை சொல்லிக்கு ஏன் சைக்கிள் பயணத்தின் மீது ஈர்ப்பு ? என்கிற தேவைப்படாத ஓர் வினாவிற்கு கூட மேலதிகாரி ‘பெரிராமநாதனிடம் ‘, இருந்து தப்பிக்க என்கிற விடை தரப்படுகிறது. சிறுவனுக்கு ஏன் சைக்கிள் மீது இவ்வளவு மோகம் ? என்கிற வினாவுக்கு மாமாவீட்டில் இருக்கும் சைக்கிளை ஓட்டிப்பார்ப்பதற்குகூட சிறுவனுக்கு அனுமதி கிடைக்காது என விடை தரப்படுகிறது. தனது மாமா வீட்டின் முன் வேறொருவரின் சைக்கிளை ஓட்டிக்காட்டுவதற்கே இச்சிறுவன் இத்தனை மகிழ்ச்சி அடையும்போது அவனுக்கே சொந்தமாக அந்த சைக்கிள் தரப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான் என்கிற தர்க்கரீதியான கதைத்தலைவனின் சிந்தனையே சிறுகதைக்கு உச்சத்தைத் தருகிறது.

வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் வெளிப்படையாக தர்க்கரீதியால் விவரிக்க இயலாது. ‘நெருப்புத்திருவிழா ‘,வின் பைத்தியக்கார கிழவியையும், அவளுக்கு இழைக்கப்படும் அநீதியையும், மணியக்காரர் வீடு இறுதியில் எரிவதும் கதையில் ஓர் பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சிறுவனாகிய கதைசொல்லிக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். ஆனால் வாசகனுக்கு சிறுகதையை உள்வாங்குவதில் எந்தச் சிரமமும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிற கோட்பாட்டை பிரச்சாரநெடி சிறிதும் இல்லாமல் வாசகன் கதையிலிருந்து பெறமுடிகிறது. நெருப்பு திருவிழா, திரெளபதை அம்மன் கோயிலுக்கு என்று புறக்காரணிகள் கதையில் விவரித்தாலும் கூட, நெருப்புத் திருவிழா குறிப்பது துரோகத்தால் எரியும் பைத்தியக்கார கிழவியின் உள்ளத்தையும், அதன் விளைவுகளையும்தான் என்று பொருள் கொள்வது கதைக்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

சூழ்நிலைகளை இயல்பாகவும், விரிவாகவும் உருவாக்குவது கலைப்படைப்பின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. வாசகன் படைப்பினூடே பயணிப்பதற்கு சூழ்நிலை சித்தரிப்பு பெரிதும் துணை நிற்கிறது. மெளனியின் ‘அழியாச்சுடர் ‘, சிவன் கோயில் சந்நிதியும், ஜெயகாந்தனின் ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி ‘, இடுகாடும் நினைக்கும்போதே நம்முன் சித்திரங்களாக விரிந்து நம் நினைவில் என்றென்றும் பதிந்து இருக்கும் வல்லமை கொண்டவை. சூழ்நிலைகளை சித்தரிப்பதில் பாவண்ணனும் வல்லவராகவே காட்சி அளிக்கிறார். ‘நெருப்புத் திருவிழா ‘வின் திருவிழா வர்ணனைகள் நம் கண்முன் திரெளபதை அம்மன் கோயில் சூழலை உருவாக்கி நம்மையும் திருவிழா பார்க்க வந்த மனிதர்களுள் ஒருவராக மாற்றிவருகிறது. ‘தளை ‘, கதையில் சித்தரிக்கப்படும் காட்சிகள் ஒரு ரயில் நிலையத்து பிளாட்பாரத்தின் சூழலை மிக வலிவாக நம் முன் படைக்கிறது.

கதை முடியும்போது நாமும் பிளாட்பாரத்தில் நின்று வேதனையோடு கதைத்தலைவனை ரயிலில் அனுப்பும் வலியை உணர்கிறோம். ஒரு சிறந்த சிறுகதைக்குத் தேவையான செறிவையும், ஓட்டத்தையும், உணர்ச்சி பிரவாகத்தையும் ‘தளை ‘, தன்னுள்ளே கொண்டுள்ளது. வாழ்க்கை என்கிற ‘பொறியில் ‘, அகப்பட்டுத் தவிக்கும் மனித மனங்களைப்பற்றிய தீவிர சிந்திப்பைக் இக்கதை வாசகனிடத்தில் உண்டாக்குகிறது.

வாழ்க்கை சம்பவங்களுக்கு காரணங்களையோ, சிக்கல்களுக்கு தீர்வுகளையோ எப்போதுமே தந்துவிடமுடியாது. தெளிந்த ஆறுபோல, வாழ்க்கை அமைதியாக காட்சி அளித்தாலும், கண்ணுக்குத் தெரியாத சுழல்களையும், எரிமலைகளையும், பள்ளத்தாக்குகளையும், தன்னுள்ளே அடக்கி பல சமயங்களில் சூத்திரம் தெரியாமல் நம்மை விழிக்க வைக்கின்றது. ‘பாகம் ‘, சிவகாமிக்கும், ‘அரையும் அரையைச் சார்ந்த இடமும், ‘ கதை சொல்லிக்கும், ‘திசை தேடும் பறவை ‘, பேரனுக்கும், ‘ஏவாளின் இரண்டாவது முடிவு, ‘ ராஜ்க்கும், இந்த அனுபவங்களே நேர்கின்றன. ‘ஏவாளின் இரண்டாவது முடிவு ‘, சிறுகதை மிகச்சிறப்பான ஓர் வடிவச் சோதனை, Science fiction மற்றும் folk story உருவங்களில் முறையே முதல் பாதியும், பின் பாதியும் காட்சி அளிக்கின்றன. நழுவிவிட்ட மனிதாபிமான விழுமியங்களை குறிப்பதற்கு இந்தக் கலப்பு வடிவம் மிகப்பொருத்தமான ஒன்றே.

இதிகாச, புராண சம்பவங்களை தேர்ந்தெடுத்து அவற்றை நவீன சிறுகதைகளாக உருவாக்கம் செய்வது புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனத்தில் ‘, பிரபலமாகிய ஓர் உத்தி. சமீப காலங்களில், மிக நேர்த்தியுடன் பாவண்ணன் அதை கையாள்கிறார். ‘சாபம் ‘, சிறுகதை முதலாக துரியோதனன் இறுதி விவரிப்பு கதைவரை மிகச்சிறப்பாகவே அவர் கதைகள் வெளிப்படுகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரத்தயாராக இல்லாத, ஆணவம் கொண்ட ஓர் அரசி லட்ச கணக்கானோர் புனித நீராட குழுமியிருக்கும் சரயு நதியில் தனது தோழி ஊர்மிளையோடு நீராட முயலும்போது ஏற்படும் ஏராளமான பொதுமக்களின் மரணங்களையும், பாதிக்கபட்டவனின் எழுச்சியையும், அவன் அளிக்கும் சாபத்தையும் ‘சாபம் ‘, சிறுகதை விவரிக்கிறது. ‘சீதை ‘, ‘லட்சுமணன் ‘ என ஆள்வோரின் பிம்பங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளாகியும் மக்களுக்கு எதிராகவும், தன்னலம் மட்டுமே பிரதானம் எனும் நோக்கத்தை கைவிடத் தயாராக இல்லாததையும் இந்தப் புனைவு அழகாக சித்தரிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாராமல் பாமரனுக்கு ‘சாபமாகவே ‘ என்றென்றும் அமைகிறது.

சமீபத்தில் வெளியான பாவண்ணனின் ‘புதிர் ‘ ஒரு புதிய பரிணாமத்தை அவர் எழுத்திற்கு அளித்துள்ளது. புராண மாந்தர்களான பெரியாழ்வார் எனும் தனது மகளுக்கு நல்ல ஓர் வரன் பார்த்து மணம் முடித்து வைக்க வேண்டுமே என்று கவலைப்படும் தந்தைக்கும், ஆண்டவனையே பதியாக மனதால் வரித்துவிட்ட ஆண்டாள் எனும் பாசமிக்க மகளுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமே ‘புதிர் ‘, ஆக உருவெடுக்கிறது.

கடவுள் சந்நிதியில் ஆண்டாள் இரண்டறக் கலக்கும் ஆன்மீக அனுபவம் கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. பெரியாழ்வார் கண்முன் நிகழும் இந்த பரவச அனுபவம் வசிஷ்டாத்வைதத்தின் வெளிப்பாடே. ஓர் ஆன்மிக அனுபவத்தை கலை அனுபவமாக எழுத்தில் வடித்துள்ளதே பாவண்ணனின் மிகப்பெரிய வெற்றி. அந்தப் பத்தி இப்படித் தொடங்குகிறது. ‘குழப்பத்துடன் கருவறையின் பக்கம் திரும்பினார் பெரியாழ்வார். ஏதோ ஒரு ஒளி அவரை நோக்கி இழுப்பது போல் இருந்தது. அரங்கநாயகியின் மீது அந்த ஒளி இறங்கியது. கருவறையே ஒரு சுடராக மாறி அலைந்தது. வேகவேகமாக நெளியும் சுடர் மெல்ல அது தனிந்து நிலைப்பெற்று பொலிந்தது. கருங்கூந்தலுடனும் மஞ்சளாடையுடனும் ஒரு கையில் தாமரை பூவுடனும் மறு கையில் அபயமுத்திரையுடனும் வீற்றிருந்தது நாயகியின் கோலம். கருமை மின்னும் முகத்தின் கண்கள் திடுமெனத் திறந்தன. பெரும் ஒளி வெள்ளம். ஆண்டாள் முகம் அது. அதே கண்கள். அதே சுருள்முடி. அதே நெற்றி. அதே கன்னம். அதே குழைவு. கனவு காண்பது போல இருந்தது….. மறுகணம் எண்ணங்களின் ஓட்டம் தடைபட, அந்த உருவத்தின் தோற்றம் தந்த அதிர்ச்சியில் பேச்சு வராமல் உறைந்து நின்றார். அவசரமாக அருகில் திரும்பி பார்த்தார். மீண்டும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள் ஆண்டாள். அதே அவசரத்தோடு கருவறையைப் பார்த்தார். பரவசம் ததும்பும் ஆண்டாளின் முகமே அங்கும் தெரிந்தது. வெளியே மணி ஒலித்தது. உடனே உள்ளே மண்டப மணிகள் ஒலிக்கத் தொடங்கின. மங்கல இசை எழும்பியது. குருக்கள் குடலையிலிருந்து ஒவ்வொரு மலராய் எடுத்து கருவறையில் அர்ப்பணம் செய்யத் தொடங்கினார். மண்டபம் முழுக்க நாராயணகோஷம் எழுந்தது ‘. மிகக் கடினமானதும், வார்த்தைகளுக்கு உட்படாததுமான ஆன்மீக அனுபவத்தை, ஒருசிறுகதைக்குள், அதுவும் ஒருபத்திக்குள் பாவண்ணன் படைத்துக்காட்டியிருப்பது அவரது படைப்பாளுமையைக் காட்டுகிறது.

கதை சொல்லியை கதைக்கு உள்ளேயும், வெளியேயும் வைத்து பல வடிவங்களை வடித்தெடுக்கும் பாவண்ணன் பெரும்பாலும் தன் முயற்சிகளில் வெற்றியையே அடைகிறார். இறுதிப்பகுதியில் பிறழும் ‘தனிமரம் ‘, போன்ற ஒருசில கதைகளைத் தவிர்த்து பாவண்ணன் தனது சிறுகதைகளின் வடிவங்களையும், ஆக்கத்தையும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார். ‘அர்ஜ்உனன் தவம் ‘ , கதையின் கோபாலுவும், ‘ஈடு ‘கதையின் ‘மஞ்சுநாத் கொட்லகெரேவும் ‘, பயணம் கதையின் சைக்கிள் பையனும் நம் மனதை வியாபிப்பதற்கு காரணமுண்டு. அவர்கள் நாம் தினசரி சந்திப்பவர்கள், நம்முடன் வாழ்பவர்கள் ‘ இந்த எளிமையும், மனிதாபிமானமும்தான் பாவண்ணனின் மிகப்பெரிய பலம். ‘என் எழுத்தின் வழியே அன்பை முன் வைக்கிறேன். ‘ என ஓர் நேர்காணலில் கூறி இருந்தார் பாவண்ணன். அவரது சிறுகதைகள் வாசகனுக்கு பூரணமாக அதை உணர்த்துகிறது. அவருக்கு மட்டுமல்ல. எல்லா படைப்பாளர்களின் படைப்புகளுக்குமே இறுதி குறிக்கோளாக அன்பும், மனிதாபிமானமும் மட்டுமே இருக்கக்கூடும்.

Series Navigation

க.நாகராசன்

க.நாகராசன்